திவாகர்

ஆங்கில எழுத்தாளர்கள் பலர் கடந்த கால சரித்திர நாயகர்களை – குறிப்பாக இருபதாம் நூற்றாண்டு சரித்திரத்தில் இடம் பெற்ற தலைவர்களின் வாழ்க்கையை மிகச் சீரிய வகையிலும், மிக ஆழமாகவும் ஆராய்ந்து அதையே கதை போல எழுதி எத்தனையோ வாசகர்களை ஆச்சரியப் படுத்தியுள்ளார்கள். அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் இர்விங் வால்லஸ், இவர் எழுதிய கதை ஒன்றில் ஜெர்மனியின் ஹிட்லரைப் பற்றிய விவரங்களை மிக ஆராய்ந்து ஹிட்லர் 1945 இல் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் 1962 இல் இயற்கையாக இறந்ததாகவும், மனைவி ஈவா இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் எழுதி பரபரப்பு ஏற்படுத்துவார். அதற்காக அவர் கொடுத்த தரவுகள் மிகப் பலமான சான்றுகளாக கதையோடு ஒன்றி இருக்கும். இருந்தும் உண்மையில் அது கற்பனைதான் என்பதே உண்மை. நான் விரும்பிப் படித்த புத்தக்ங்களில் இது ஒன்று.

ஆனால் இந்தியாவில் இர்விங் வாலஸுக்கும் முன்பாகவே ஒரு எழுத்தாளர்  இதே போல தோற்றம் கொண்ட கதையை ஆங்கிலத்தில் எழுதினார். அவர்தான் பாரதிய வித்யா பவனின் ஸ்தாபகரான மறைந்த கே. எம். முன்ஷி. இவர் எழுத்தின் கதாநாயகன் வேறு யாருமல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக பாரத மக்களின் உணர்வோடு ஒன்று கலந்து புகழப்பட்டு வரும் மதுராபுரி மாயன் அந்தக் கண்ணபிரானே. ஆனால் புராணங்கள் வழியாகப் போகாமல் புராணங்களை ஒரு அடிப்படையாக மட்டும் வைத்துக் கொண்டு கண்ணன் எப்படி இந்த உலகுக்கு வந்திருப்பான், எப்படி சிந்தித்திருப்பான், எப்படி பாரதப் போரை முடித்திருப்பான் என்ற தீர்க்க சிந்தனையின் பேரில் ஒரு புத்தகம் எழுதினார். கிருஷ்ணா சீரிஸ் என்ற பெயரில் ஏழு புத்தக்ங்களாக அவரே வெளியிட்டார். இந்தப் புத்தகத்தில் கண்ணன் தெய்வீகப் பிறவி அல்லவே அல்ல. சாதாரண மானுடன். ஆனால் ஒவ்வொரு சாகசத்தையும் அவன் வெற்றியுடன் முடித்துக்கொடுக்கும்போது அவன் மகுடத்தில் மயிலிறகு ஒன்றொன்றாக ஏறும். மிக அருமையாக இப்படித்தான் நடந்தது என்பதை நமக்கு அடித்துச் சொல்வது போல ஒவ்வொரு அத்தியாயமும் இருக்கும். திரௌபதி சுயம்வரமும் அவள் ஏன் ஐவரை மணக்க ஒப்புக் கொண்டாள் என்பதையும் தன் பாணியில் இவர் விவரிக்க விவரிக்க, அட, அனைத்தும் சரிதான் என்றுதான் நமக்குத் தோன்றும்.
 
இந்த கிருஷ்ணா கதையைத் தமிழில் எழுதி வருகிறார் திருமதி கீதா சாம்பசிவம். வாரா வாரம் இவர் பிளாக்கில் வந்து கொண்டிருக்கிறது.http://kannanvaruvan.blogspot.in/ இந்த வார அத்தியாயத்தில் இயற்கையை வர்ணித்திருப்பார். எத்தனைதான் முன்ஷி ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் அந்த வர்ணனையைப் படிக்கும்போதே அந்த இடத்தையே நாம் உணர்வது போல ஒரு நினைவலை..

கண்ணன் கங்கையின் அகலத்தையும் அக்கரை வெகு தூரத்தில் தெரிந்ததையும் பார்த்து ஆச்சரியம் அடைந்தான்.  எத்தனை எத்தனை அதிசயங்களையும், அற்புதங்களையும், சரித்திரங்களையும் தன்னுள் அடக்கிக் கொண்டு இந்த நதி ஓடுகிறது என நினைக்க அவனுக்குப் பிரமிப்பாக இருந்தது.  சமுத்திரத்தில் எழுவது போலவே கங்கையிலும் அலைகள் எழும்பிக் குதித்து அடங்குவதையும், சில அலைகள் கரையோரத்தில் மோதித்திரும்புவதையும் பார்த்தான்.  வாழும் தெய்வமான இந்தக் கங்கையில் தான் எத்தனை நீர்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன!  அதோ, கங்கையில் நீந்திச் செல்லும் வாத்துக்கள்.  இதோ இந்தப் பகுதியில் அன்னங்கள் மிதக்கிறதைப் பார்த்தால் நீரின் பச்சையும், அன்னங்களின் வெண்மையும் சேர்ந்த வண்ணக்கலவை மனதை அள்ளியது.  ஆஹா, சித்திர விசித்திரமான மீன்கள், இங்கே தங்கள் வால்களைத் தூக்கிக் கொண்டு , எழும்பிக் குதித்து விளையாடுகின்றனவே!  படகு செல்கையிலேயே முதலைகள் தங்கள் முகத்தைத் தூக்கிக் கொண்டு சிறிய கண்களால் உற்றுப் பார்க்கின்றன.  படகுகள் அருகே வரும் சப்தம் கேட்டதும், துடுப்புகளின் ஓசை கேட்டதும் தங்கள் வாலால் தண்ணீரை அடித்துக்கொண்டு மூழ்கிப் போகின்றன.  விதவிதமான நீர்ப்பறவைகள் தலைக்கு மேலே பறந்து ஏதேனும் தின்னக் கிடைக்குமா எனப் பார்க்கின்றன.  அவைகளின் மதுரமான த்வனி காதுக்கு இனிமையாக இருக்கிறது.  இரு கரைகளிலும் அழகிய புடைவைக்குக் கரை போட்டாற்போல் கரும்பச்சை மரங்கள் அணி வகுத்து நிற்கின்றன.  அவற்றிலிருந்து  உதிர்ந்திருக்கும் வண்ண, வண்ண மலர்கள் ஆழ்ந்த பச்சைக்கரைப் புடைவையில் போட்ட ஜரிகைப் புட்டாக்கள் போலக் காட்சி அளிக்கின்றது.  மேலே பார்த்தால் ஆழ்ந்த நீலத்தில் தெரியும் வானமும், கரும்பச்சை நிற மரங்களும், அவற்றின் வண்ண, வண்ணமான மலர்களும், ஆழ்ந்த பச்சை நிறத்து நீரும் சேர்ந்து ஒரு இந்திரலோகத்தையே சமைத்துவிட்டதே.  தன் மனம் நிறையக் கண்கள் நிறைய அந்தக் காட்சிகளை உள்ளுக்குள் பதித்துக் கொண்டான் கண்ணன்.

எழுத்துப் பணிகளை ஆரவாரமில்லாமல் செய்து வருபவர்களில் எனக்கு மிகவும் பிடித்தவர் கீதாம்மா என நான் பிரியமுடன் அழைக்கும் திருமதி கீதா சாம்பசிவம். இவர் எழுத்துகள் அனைத்தும் ஆன்மீக சம்பந்தப்பட்டதாக இருப்பினும் விவரங்கள் ஏராளமாக சேகரிக்கப்பட்டு அதை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.அவைகளில் இவரது கடின உழைப்பு தெரியும். சிதம்பர ரகசியம் எனும் தல வரலாற்றினை மிக அருமையாக எழுதினார். பல சமயங்களில் எனக்கு ஆச்சரியம் வருவது உண்டு என்றால் அது இந்த கீதா சாம்பசிவம் அவர்களின் சில அயராத பணிகளைக் கண்டுதான். எல்லோருக்கும் சலிக்காமல் ஊக்குவித்து பின்னூட்டம் இடுவது, தன்னிடம் கிடைக்கப்பெற்ற எல்லாவற்றையும் கூர்ந்து படிப்பது (இது மிகவும் முக்கியம்),

ஆனாலும் சென்றவாரம் அவர் முன்ஷியின் கிருஷ்ணா அத்தியாயத்தில் இயற்கைக் காட்சிகள் எழுதிய விதம் என்னை  மிகவும் ஆர்வத்துக்குள்ளாக்கினதான். இந்த வார வல்லமையாளராக திருமதி கீதா சாம்பசிவத்தைத் தேர்வு செய்வதில் வல்லமையாளர் குழு பெருமை கொள்கிறது. வாழ்க அவரது எழுத்துப் பணி!

இந்த வார கடை பாரா: எனக்கு மிகவும் பிடித்த திருமூலர் பாடல். பாடலுக்கு உள்ளார்ந்த விளக்கத்தோடு கூடிய பொருளோடு வல்லமையில் வெளியிட்ட சுலோச்சனா அவர்களுக்கு நன்றி. https://www.vallamai.com/literature/articles/28444/

யாவர்க்குமாம் இறைவர்க்கோர் பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கோர் கையுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஓர் கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. திவாகருக்கு வாழ்த்துக்கள் முதலில்.

    கீதா சாம்பசிவம் நம் யாவருக்கும் தன் எழுத்துக்கள் மூலமாக அறிமுகமாகி, எனக்கு அரிசி உப்புமா காந்தல் கொடுத்த வகையிலும், நளபாகினியாக வலம் வந்த பிரபலம். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

    சுலோச்சனா அவர்கள் பதிவை பார்த்தேன். அருமை. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

  2. கீதாம்மாவுடைய வர்ணனைகள் அற்புதம்தான்! அவங்களை சிறப்பித்துச் சிறந்த வல்லமைக்குத்தான் வாழ்த்துகள் சொல்லணும் 🙂 சுலோச்சனா அவர்களுக்கும் வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *