சு. கோதண்டராமன்

குழந்தையை அழைத்துக்கொண்டு
பொம்மை வாங்க
கடைத்தெருவுக்குப் போனேன்.

“இந்தக்கடையில் வாங்கலாம்பா”
“வேண்டாம்மா,
இது வேறே ஜாதிக்காரன்
நடத்தற கடை.”

“இதுப்பா?”
“இதுவும் அப்படித்தான்.”

பல கடைகளைத்தாண்டி
என் ஜாதிக்காரர் நடத்தும்
கடையைக் கண்டுபிடித்தேன்.
அங்கு பல சேல்ஸ்மென்.

இவர் நெற்றியில்
நாமம் போட்டிருக்கிறார்,
வேண்டாம்.

இவர் நெற்றியில் கரிக்கோடு
வேண்டாம்.

இதோ இவர்கள் எல்லாம்
என்னைப் போலவே
விபூதி பூசியிருக்கிறார்கள்.

இவர் தெலுங்கு பேசுகிறார்,
இவர் மலையாளம்,
இதோ இவர்கள்
என்னைப்போலவே
தமிழ் பேசுகிறார்கள்.

“என்ன ரேஞ்சுலே பொம்மை வேணும் சார்?”
என் கையில் பத்து ரூபாய் இருந்தது
நூறு இருநூறு என்கிற
பொம்மை எல்லாம்
எனக்குக் கட்டுபடி ஆகாது.
அஞ்சு ஆறு ரூபா பொம்மை எல்லாம்
என் கௌரவத்துக்கு
குறைச்சல்.

“பத்துப் பதினஞ்சு ரூபாயிலே எடப்பா”
பேரம் செய்து
ஒன்றிரண்டு குறைச்சுக்கலாம்
ஒன்று இரண்டு பணம் குறைந்தால்
கடன் சொல்லிக்கலாம்.

பொம்மை உற்பத்தி ஆன தேதிக்கும்
என் குழந்தை பிறந்த தேதிக்கும்
பொருத்தம் இருக்கிறதா என்று பார்த்து
“இந்தப் பொம்மை அழகாயில்லை,
வேண்டாம்.
இது வேலைக்காரன் பொம்மை,
வேண்டாம்.
இது வியாபாரி பொம்மை,
வேண்டாம்.”

அப்பா ! கடைசியில் கிடைத்தது,
ஐ.டீ இஞ்சினீயர் பொம்மை.
இதை விற்பவர்
நல்ல குடும்பத்தைச்
சேர்ந்தவர்கள் தானா என்பதை
விசாரித்து,
திருப்தி அடைந்து,
பேரம் பேசி,
ஒரு வழியாக பொம்மையை வாங்கி,
கையில் எடுத்துக்கொண்டு பார்த்தால் —  

குழந்தையைக் காணோம் !

குழந்தை, குழந்தை !
ஐயோ என் குழந்தை !
தேடினேன், தேடினேன்.

கடைசியில் ஏதோ ஒரு கடையில்
இதுவரை நான் ஒதுக்கி வந்த
பொம்மைகளில் ஒன்றை
கையில் வைத்துக்கொண்டு
குழந்தை சிரித்துக் கொண்டிருக்கிறாள்

குழந்தை ஆசைப்பட்டது என்று
கடைக்காரர்
இனாமாகக்  கொடுத்து விட்டார் போலும்

 பொம்மை என்பதற்குப் பதிலாக மாப்பிள்ளை என்று வாசிக்கலாமா ?

உங்கள் இஷ்டம்.                                                                                                                                   

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *