செய்திகள்

கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு

 

2012 திசம்பர் 16 ஞாயிறு

 

அன்புடையீர்,

வணக்கம். நமது தமிழ்மொழி தொன்மையும் வரலாற்றுத் தொடர்ச்சியையும் உடைய ஒரு செம்மொழி. இலக்கிய , இலக்கணச் சிறப்புகளைப் பெற்ற தமிழ், இன்று அறிவியல், தொழில்நுட்பங்களுக்கும் ஏற்ற ஓர் அறிவியல் மொழியாக வளர்ந்துள்ளது.

 

இன்றைய மின்னணு காலத்தில் கணினி உட்பட அனைத்து மின்னணுக் கருவிகளிலும் இடம் பெற்ற ஒரு மொழியாகவும்  தமிழ்மொழி வளர்ந்தோங்கி நிற்கவேண்டும். செல்பேசி முதல் கணினிவரை அனைத்துப் பயன்பாட்டுக் கருவிகளிலும் தமிழ் பயன்படுத்தப்படவேண்டும்.

 

இதற்கான பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படவேண்டும். தமிழையே செல்பேசி முதல் கணினிவரையிலும் பயன்படுத்தவேண்டும் என்ற உணர்வு முதலில் தமிழ் மக்களிடையே வளரவேண்டும். அப்போதுதான் மின்னணுக் கருவிகளை உருவாக்குகிற நிறுவனங்கள் தங்களது கருவிகளில் தமிழ்ப் பயன்பாட்டிற்கான வழிவகைகளைச் செய்யும். அதற்கான மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வரும்.

 

மின்னணு உலகில் இந்தி உட்பட பல் மொழிகளும் மின்மொழிகளாக வளர்ந்துகொண்டிருக்க, அம்முயற்சியில் தமிழ் பின்தங்கியுள்ள்து. இன்றேனும் தமிழ் மின்மொழியாக வளர்த்தெடுக்கப் படவில்லை  என்றால், எதிர்காலத்தில் தமிழினம் உரிமைமுதற்கொண்டு, பல இன்னல்களைச் சந்திக்க நேரிடும். எனவே தமிழை ஒரு மின்னணுமொழியாக வளர்த்தெடுப்பதின் தேவைபற்றிய விழிப்புணர்வு  மக்களிடையே வளரவேண்டும். கணினித்தமிழ் வளர்ச்சிக்கான குறிப்பான பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்த நோக்கத்தில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாடு வரும் 2012 திசம்பர் 16 ஆம் நாள் ஞாயிறன்று சென்னையில் நடைபெற உள்ளது.

 

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்  மலேசியா, சிங்கப்பூர், கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் இம்மாநாட்டில் பங்கேற்க உள்ளார்கள். தமிழ்வளர்ச்சிக்கான இம்முயற்சிக்கு  அனைவரும் ஒத்துழைத்து, மாநாட்டை வெற்றியடையச் செய்யும்படி அன்புடன் வேண்டுகிறோம். 

 

இடம் :  இலயோலா கல்லூரி , கல்வியியல் அரங்கம், சென்னை

நாள்  :  (2012) திசம்பர் 16 ஞாயிறு  காலை 9.30 முதல் மாலை 6 மணிவரை

 

மாநாட்டுச் செய்திகளுக்கான வலைப்பூ : kaninithamilvalarccimaanadu.blogspot.com

 

தொடர்புக்கு:  ந. தெய்வ சுந்தரம் ( மேனாள் தமிழ்மொழித்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்) செல்பேசி :  9789059414  மின்னஞ்சல் : ndstamilcomputing@hotmail.com

 

Share

Comment here