திவாகர்

உலகில் மாற்றம் ஒன்றே நிரந்தரம் என்று எத்தனையோ பேர் எத்தனையோ முறை சொல்லிவிட்டுச் சென்றாலும் சமூகம் மட்டும் அந்த வார்த்தைகளை ஏற்க மறுப்பது ஏன் என்று எனக்கு எப்போதும் புரியவில்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் எத்தனையோ சம்பிரதாயங்கள் தோன்றி நிலைத்து மறைந்து போகும் வாழ்க்கையில் நாம் இன்னமும் சில வேண்டாத பழக்கங்களை, சம்பிராதயம் எனும் பெயரில் கைவிடாமல் கையோடு வைத்திருப்பதும், அதனால் ஒரு கொடுமையான மனத் திருப்தியடைவதும் மிகவும் விநோதமான செயலாகத்தான் இருக்கிறது.. அவற்றில் ஒன்றுதான் இந்த கைம்பெண்ணுக்கு அவள் கணவன் மரணத்தோடு இழைக்கப்படும் அநீதி.

கணவன் இறந்த பத்தாம் நாள் கைவளை ஒடித்தல், தாலியறுப்பது, குங்குமப் பொட்டழிப்பது போன்ற தீய பழக்கங்கள் நகர வாழ்க்கையில் தற்சமய சூழ்நிலையில் காண்பது அரிது என்றாலும் குக்கிராமங்களிலும், சிறிய, பெரிய ஊர்களிலும் இந்த வழக்கம் இன்னமும் இருப்பதைக் கேள்விப்படும்போதெலாம் மனம் அந்த மரணித்தவனுக்காக அனுதாபப்படுவதை விட அவன் மனைவிக்காக பரிதவிக்கிறது. கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் இப்படி நிர்ப்பந்திப்பதில் மூத்த பெண்ணினத்தோர்தான் அதிகம் என்ற உண்மை மேலும் நம்மைச் சுடுகிறது. இப்படிப்பட்ட வழக்கங்கள் நாடு முழுவதும் சட்டம் போட்டு தடை செய்யப்படவேண்டும். மனிதன் மனம் மாறினால்தான் உண்டு என்று சொல்வதை விட சட்டம் என்பது செயல்படுத்தும்போது இவை கண்டிக்கப்படுவதோடு தண்டிக்கப்படுபவை என்று மகாஜனங்களுக்குப் புரிந்தால் நிச்சயம் இதற்காகப் பயப்படுவார்கள் என்ற உண்மையும் புரியும்.

பெண்கள் இடுகாடு வரை சென்று தகனமிடும் செயலை சென்னையில் (பெசண்ட் நகர்) என் தந்தையார் இறந்தபோது கண்டதுண்டு. சுடுகாட்டில் யாரும் இதை ஆச்சரியமாகப் பார்க்காமல் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டார்கள். ஆண் வாரிசு இல்லாத பட்சத்தில் பெண் வாரிசும் இதைச் செய்யலாம் என்ற மனப்பாங்கு நகரமக்களிடையே வளர்ந்து வருவதையே இது காட்டுகிறது. நகர வாழ்க்கையில் சில நல்லவைகளும் இருக்கின்றன, அதே சமயம் இது நகரத்துப் போக்கு என்று புறந்தள்ளாமல் எல்லா இடங்களிலும் மக்கள் இந்த மாற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல விஷயங்களுக்காக காலத்தின் தேவைக்கேற்றவாறு நாம் மாறாவிட்டால் எப்போது மாறப்போகிறோம்..

இந்த  சமூக வேறுபாட்டை முன்னிறுத்தி நல்லதொரு கவிதையை வல்லமை குழுவில் பகிர்ந்துள்ளார் கவிஞர் வித்யாசாகர்.

ஒவ்வொன்றாய் உதிர்கிறது நினைவுகள்
எடுத்துக் கோர்த்த இடத்தில் – இறுதியாய்
வந்துவிழுந்தது அவரின் மரணம்..

மரணம்; பெரிய மரணம்
இல்லாதுப் போவது மரணமா?
பிறகு ஈரமில்லாது திரிகிறார்களே நிறையப்பேர்
அவர்களென்ன பிணமா?

பிணமாகத் தான் தெரிந்தார்கள் அவர்கள்
அவரின் மரணத்திற்குப் பின் அவளின்
பொட்டழிக்கும் பூவறுக்கும் ஒரு நிரந்தர புன்னகையைப் பறிக்கும்
மனிதர்களிடம் ஈரமெங்கே யிருக்கும் ?

உடன்கட்டையை மட்டும் உதறிவிட்டு
இன்னும் உயிரோடு கொல்லும் விதவைக் கோலத்தை
பூணும் இரவொன்று உண்டு; அது ஒரு கொடூர இரவு

கணவன் போனதற்கு நிகராக
பூவும் பொட்டும் போகும் கணம்
இன்னொரு மரணமென்று எண்ணி
அவளுக்காக நானுமழுதேன்;

என் கண்ணீரும்
அவளின் கண்ணீரும் இன்றில்லாவிட்டாலென்ன
நாளையேனும் இச்சமூகத்தைச் சுடும்;

சுடட்டும் சுடட்டும்
சுட்டப்பின் தாலியறுப்பதை நிறுத்திக்கொள்ளட்டும் இச்சமூகம்

அதன்பின் –
விதவையில்லா மண்ணில் நடக்கும் அவள்
அவளுக்கு வேண்டாமெனில் அவளாகவே அன்று
பொட்டினைக் கலைத்துக்கொள்வாள்..
பூவை அறுத்துக்கொள்வாள்..
உயிரைக் கூட விட்டுமாய்ப்பாள்,

அது; அவளது உரிமை!!

கவிஞர் வித்யாசாகர் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமைக் குழுவினர் சார்பில் தேர்ந்தெடுக்கப்படுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருக்கு நம் வாழ்த்துகள்.

கடைசி பாரா: திரு வெ. சா அவர்களின் நினைவுச் சுவட்டில் https://www.vallamai.com/paragraphs/29089/  ‘அறுபது ரூபாய் படுத்திய பாடு’ படித்ததில் நான் ரசித்த இந்த வரிகள்..

சுற்றியிருந்த ஜன்னல்கள் எத்தனையோ அத்தனையையும்  திறந்தால் அது காட்டும் உலகம் தேடுபவர்களுக்கு மாத்திரமே காட்சி தரும் ஒன்றாக இருந்தது. அந்த ஜன்னல்கள் எதையும் திறக்காது, ஜன்னல்களையோ மூடியிருக்கும் அதன் கதவுகளையோ காணாது, தன் இருந்த அறைக்குள் தனக்குப் பழக்கமான பாளையங்கோட்டையையோ, மன்னார்குடியையோ விருத்தாசலத்தையோ உருவாக்கி அதனுள் தம் ஆயுளைக் கழித்த பெருந்தகைகள

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்!

  1. வித்யாசாகருக்கு என் பாராட்டுகள். ஏற்கனவே தெரிவித்து தான். மறுபடியும். திரு. வெ.சா. அவர்களுக்கு வணக்கM.
    இன்னம்பூரான்

  2. மரணம் அனைவரும் சந்திப்பதுதான் வயதைப்போருத்தே அதன் துக்கம் அமைகிறது . கொடுமையிலும் கொடுமை இளமையில் விதவையாவது அத்தனை கொடுமை. அதை கருவாக்கி வந்த கவிதை அருமை.

  3. திரு. திவாகர் ஐயாவின் வரிகளுக்கிடையே மிளிரும் கவிதையின் வேரிலிருந்து மணக்கிறேன்.. அதற்கான நன்றி.

    திரு. இன்னம்பூரான் ஐயா அவர்களின் முழு உணர்விலிருந்து பெரும் பாராட்டிதாக அறிவேன்; அதற்கும் நன்றி.

    உடனிருந்தாரின் மரணத்திற்குப் பின்னான தருணம் வலி மிக்கது. அதிலும் கணவனின் மனைவியின் நிரந்தரப் பிரிவென்பது பாதி மரணத்திற்கு ஈடே. பின்பும் வேதனையுறும் பெண்; அதிலிருந்து காக்கப்பட வேண்டியவள். அதை முன்மொழியும் திரு. தனுசு அவர்களுக்கும் நன்றி.

    எழுதுபவன் மரணத்தோடு முடிந்துப் போகிறான். மீண்டும் எழுத்து அவனை எழுதாத் தருணத்திற்குமாய் உயிர்ப்பிக்கிறது. அவனை மீண்டும் உயிர்ப்பித்த நன்றி அந்த எழுத்துக்களைச் சேகரித்த, பத்திரப்படுத்திய, வாசிப்போருக்குக் கொண்டுசென்றுக் கொடுத்த பெரியோர்களுக்கே மானசீகமாய் சொல்லப்படுகிறது. எனக்கான அதுபோன்ற நன்றிகளும் வல்லமையினை, வல்லமையின் ஆசிரியரை, இவ்விருதின் தேர்வுக்குழுவை, எனை வாசிப்போரைச் சாரும்..

    நன்றியுடன்..

    வித்யாசாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *