முகில் தினகரன்

அந்த ஆஸ்பத்திரி வராண்டாவில் திரும்பிய திசையெல்லாம் கரை வேட்டி மனிதர்கள் குவிந்திருந்தனர். கல்லூரியில் படிக்கும் தொகுதி எம்.எல்.ஏ.வின் மகன் பைக் விபத்தில் ஏகமாய் அடிபட்டு எமர்ஜென்ஸியில் உயிருக்குப் போராடியபடி கிடக்க அவனது அரிய வகை ரத்தம் தேடி கட்சித் தொண்டர்கள் நாலாத்திசையிலும் அலையோ அலையென்று அலைந்து கொண்டிருந்தார்.

‘த பாருங்கப்பா…எம்.எல்.ஏ.வர்றதுக்கு எப்படியும் மதியம் ஆய்டும்…அதுக்குள்ளார எப்படியாவது ரத்தம் ஏற்பாடு பண்ணியாகணும்!” சற்று சீனியரான ஒரு கறை வேட்டி சொல்ல

‘ப்ச்…பசங்க காத்தால இருந்தே அதுக்காகத்தான் அலைஞ்சிட்டிருக்காங்க…கெடைக்கவே மாட்டேங்குது!”

திடீரென்று கூட்டத்தில் சலசலப்பு.

‘என்னடாது…தலைவர் இப்பவே வந்துட்டாரா?” கேட்டபடி சீனியர் கரை வேட்டி திரும்ப

எங்கிருந்தோ ஓடி வந்த ஒருவன் ‘அண்ணே….அதே குரூப் ரத்தத்தோட ஒரு ஆள் வந்திருக்கான்..தம்பிக்கு ரத்தம் தரச் சம்மதம்னு சொல்லுறான்!…ஆனா….”

‘என்னடா ஆனா?…பணம் கிணம் நெறைய எதிர் பார்க்கறானா?”

‘அதில்லைண்ணே….அவனைப் பார்த்தா ஆள் பரதேசி மாதிரி இருக்கான்…அவன் போய் நம்ம தலைவர் பையனுக்கு…..ஜீரணிக்க முடியலைண்ணே!”

அப்போது அங்கு வந்த மூத்த டாக்டர் ‘இங்க பாருங்கப்பா…வீ ஆர் டாக்டர்ஸ்…எங்களுக்கு உயிரைக் காப்பாத்தணும்கற கடமையிருக்கு….அதனால…நீங்க ‘யெஸ்…ஆர்  நோ” சொல்லுற வரைக்கெல்லாம் நாங்க காத்திட்டிருக்க வேண்டிய அவசியமில்லை…பேஷண்ட் கன்டிஷன் ரொம்ப சீரியஸாகிட்டிருக்கு!…ஸோ…நாங்க வந்திருக்கற அந்த நபரைச் செக் பண்ணப் போறோம்….ரத்தம் ஓ.கே.ன்னா…இம்மீடியட்டா ஆபரேஷனை ஸ்டார்ட் பண்ணப் போறோம்!”

 

கண்டிப்புடன் சொல்லி விட்டு நகர்ந்தார் டாக்டர்.  கரை வேட்டிகள் குழப்பத்தில் செய்வதறியாது நின்றன.

 

‘ரத்தம் பொருந்திடுச்சாம்….ஆபரேஷன் ஆரம்பிச்சிட்டாங்க!”

 

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு ‘ஆபரேஷன் சக்ஸஸ்…பையன் பொழைச்சிட்டான்” என்கிற தகவல் அங்கிருந்தோரையெல்லாம் மகிழ்ச்சி வௌ;ளத்தில் ஆழ்த்திய போது எம்.எல்.ஏ.வந்து சேர்ந்தார்.

வந்தவுடன் பிரத்யேக அனுமதி பெற்று தான் மட்டும் சென்று மகனைப் பார்த்து விட்டுத் திரும்பினார்.  நடந்தவற்றை டாக்டர் வாயிலாகவும் கட்சித் தொண்டர்கள் மூலமாகவும் தெரிந்து கொண்ட எம்.எல்.ஏ. ‘எங்கே அந்த மனிதர்?…நான் அவரை உடனே பார்க்க வேண்டும்!…என் மகனின் உயிரைக் காப்பாற்றிய அந்த மாமனிதரைப் பார்த்து ஏதாவது செய்யணும்!…என் குலக் கொழுந்தைக் காலனிடமிருந்து மீட்ட அந்தக் கோமகனுக்கு கோவில் கட்டா விட்டாலும்…கோமேதகத்தைக் கொட்டிக் கொடுக்கா விட்டாலும் குன்றி மணியளவு நன்றி காட்ட ஏதாவது செய்தாகணும்!” அரசியல்வாதி என்பதைத் தன் பேச்சில் அவர் நிரூபித்தார்.

‘அய்யா…அதோ அந்த மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்திட்டிருக்கார் பாருங்க?…அவர்தான்!’ சீனியர் கரை வேட்டி தன் சின்ஸியாரிட்டியைக் காட்டியது.

‘அடப்பாவிகளா…உதிரம் தந்து உதவிய உத்தமரை உதாசீனப்படுத்தி உச்சி வெயிலில் உட்கார வைத்து விட்டீர்களே இது நியாயமா?” கேட்டபடியே அந்த மரத்தடிக்கு விரைந்து அந்த மனிதரை நெருங்கி அவர் முகத்தைப் பார்த்த எம்.எல்.ஏ.வின் முகம் சட்டென்று மாறியது.

 

‘நீ…நீ…உன்னைய இதுக்கு முன்னாடி எங்கியோ பார்த்திருக்கேனே!”

 

‘என்ன எம்.எல்.ஏ.அதுக்குள்ளார மறந்திட்டியா?…சாலையோரமா நடந்து பள்ளிக்கூடம் போய்க்கிட்டிருந்த என் பத்து வயது மகனை வேகமா பைக்குல வந்து உன் மகன் இடிச்சுக் கொன்னப்ப….என்கிட்ட ‘கேசெல்லாம் வேண்டாம்…ஆயிரம் தர்றேன்…லட்சம் தர்றேன்”னு பேரம் பேசினியே?…மறந்திட்டியா?”

 

தன் கட்சித் தொண்டர்கள் மற்றும் அங்கு கூடியிருந்த பொது மக்கள் எதிரில் அந்த மனிதர் அப்படிப் பேசியதில் கோபமுற்ற எம்.எல்.ஏ. ‘என்னப்பா வம்பு பண்ணணும்னு வந்திருக்கியா?”

 

‘ம்ஹூம்….பிச்சை போட வந்தேன்…போட்டுட்டேன்…கௌம்பறேன்”

 

அவன் பேச்சு புரியாத எம்.எல்.ஏ. அவனை ஊடுருவிப் பார;க்க,

 

‘என் மகனைக் கொன்ன பயலுக்கு ரத்தப் பிச்சை போட வந்தேன்…போட்டுட்டேன்”

 

கரை வேட்டிகள் கோரஸாய் ‘டா….ய்!” எனக் கத்த

‘ச்சூ….கத்தாதீங்கய்யா….இனிமே உங்க தலைவரு பையன் வாழுற வாழ்க்கையே நான் போட்ட பிச்சைதான்…இது போதும்…காலம் பூராவும் உங்க எம்.எல்.ஏ. நொந்து சாக…”

சொல்லிவிட்டு நகர்ந்தவனை அவமானமாய்ப் பார்த்தார் எம்.எல்.ஏ.

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ரத்தப் பிச்சை

  1. முற்பகல் பிற்பகல் எல்லாம் பொய்யாகிவிட்டதே இந்த விஷயத்தில்!
    பிச்சைபோட்டவர் மாற்றிவிட்டார்.
    அருமையான பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *