நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)

முனைவர். தேமொழி
எழுத்தாளர், முன்னாள் சமூக திட்ட ஆய்வாளர்
கலிஃபோர்னியா, அமெரிக்கா

திரு. வையவன் நடத்தும் சென்னை “தாரிணி பதிப்பகம்” திரு. சி. ஜெயபாரதன் அவர்களின் “சீதாயணம் நாடகத்தை” ஒரு நூலாக வெளியிட்டுள்ளது. ஜெயபாரதன் அவர்கள் இணைய தமிழ் வாசகர்களுக்கு மிகவும் அறிமுகமானவர். விண்வெளி ஆய்வுகள், இயற்பியல் விளக்கங்கள் போன்றவற்றைத் தவறாமல் தாங்கி வருபவை அவரது அறிவியல் கட்டுரைகள். சீதாயணம் நாடகமும் முன்பு திண்ணை இணைய இதழில் தொடர்ந்து வெளியானதுதான்.

“சீதாயணம்” என்னும் ஓரங்க நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற மாந்தர் அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராமபிரானைத் தேவ அவதாரமாகக் கருதாமல் சராசரி நிறைகுறைகளுடன் கூடிய ஒரு மனித குலப் பிரதிநிதியாக அறிமுகப் படுத்துகிறார் நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்கள். கானக ஆசிரமத்தில் வால்மீகியின் அடைக்கலத்தில் வாழ்ந்த கோசல அரசி சீதை, வால்மீகி முனிவருக்கு தன் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்டது சீதாவின் பரிதாப வரலாறாக சித்தரிக்கப் பட்டுள்ளது இந்த நூலில்.

நூலாசிரியரின் அறிவியல் பின்புலம் சொல்லப்படுவதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்வதை விடுத்து, ஆராய்ந்து உண்மையை அறியும் ஆர்வத்தை அவருக்கு வழங்கி இருக்கிறது. அது நம் இலக்கிய உலகத்திற்கு கிடைத்த ஒரு அரிய வரமாகிவிட்டது.

நம் மூதாதையர், வாழ்வில் யாராக இருந்தாலும் துன்பத்தை தவிர்க்க முடியாது, அதனை ஏற்று வாழ வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை; தந்தை சொல் தட்டாத ஒரு தனயனை, ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்ந்த கணவனை வைத்து மக்களுக்கு அறிவுரை சொல்ல கதை புனைந்திருக்கலாம். அதற்கு அக்காலத்தில் வாழ்ந்த அரசனின், அவன் மனைவியின் வாழ்வையும் உதாரணமாகக் காட்ட உத்தேசித்திருக்கலாம். இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் போல ஒரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இலக்கியமே இராமாயணம்.

கடவுள் சொன்னார் என்று சொன்னால்தான் மக்களைக் கவர முடியும் என்று நினைத்து நாளடைவில் கதாநாயகன் கடவுளாகிப் போனது நிகழ்ந்திருக்கிறது. இந்தக் காலத்தில் நாம் பேட்டை போக்கிரிகளை எதிரிகள் என சித்தரிப்பது போல, தீய செயல் செய்தவனை அரக்கனாக சித்தரிப்பதையும் அக்கால மக்கள் செய்து உண்மைக் கதையை உருமாற்றிக் கொண்டே வந்து விட்டார்கள். அதை நூலாசிரியர் அழகாக விளக்கி, இயற்கையில், வரலாற்றில் எது சாத்தியம், எது நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கொடுத்த விளக்கம் மிக அருமையானது. குரங்குச் சேட்டைகள் நீக்கப்பட்டு, அரக்க உருவங்கள் வேடம் களையப்பட்டு எளிதில் நம்பும் ஒரு நிகழ்ச்சி நூலாசிரியர் ஜெயபாரதன் அவர்களால் முன்னிறுத்தப் பட்டுள்ளது. இம்முயற்சி மகிழ்ச்சியைத் தருகிறது.

இக்காலம் வரை படைக்கப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் ஆண்களினால் இருந்ததால் நிகழ்வுகள் அவர்கள் கண்ணோட்டத்தில் கூறப்பட்டது இதுவரை. எல்லாவற்றிலும் மேலானது, அதனை நீக்கி நூலாசிரியர் புரட்சி செய்து பாதிக்கப் பட்ட பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து கூறும் பொழுது சீதையின் வாழ்க்கையின் வேதனை நிறைந்த வரலாறு மனதை வருத்துகிறது. ஒரு அரசகுமாரிக்கு வாழ்வில் என்ன ஒரு சோதனை. அத்துன்பத்திலும் தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்கவில்லை அவள். தன் தாய்வீடு செல்வதைத் தவிர்த்தும், விரும்பாத கணவனை வெறுத்து ஒதுக்கி குழந்தைகளுக்காக வாழ்வதும் சீதையின் மேல் மதிப்பை பன்மன்டங்கு உயர்த்துகிறது. அந்த சாதனையைப் பார்க்கும் பொழுது தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த இராமனிடம் பரிவு சிறிதும் வரவில்லை. இராமன் ஒரே மனைவியுடன் வாழ்ந்ததும் பெரிய சாதனையாகத் தோன்றவில்லை. மனைவிக்காக இராமன் முடி துறந்திருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. அக்காலப் பெண்களின் வாழ்க்கை ஆதரவற்று, அவர்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருந்ததை அனைவரும் அறிந்திருந்தாலும், இக்காலத்திலும் பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை என்பதே கசப்பான உண்மை.

நூலாசிரியர் துணிச்சலுடன் இராமன் கடவுளின் அவதாரம் எனக் கருத என்ன ஆதாரம் என்று குறிப்பிடுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. அத்துடன் இராமன் மதத்திற்கு செய்த தொண்டு என்ன என்பதைக் கேள்வியாகக் கேட்பது மேலும் சிந்திக்க வைக்கிறது. அந்தக் கேள்வியின் அடிப்படையில் சிறிதும் யோசனைன்றி கலவரங்களை மதங்களின் பெயரினால் நிகழ்த்திக் குளிர்காயும் சுயநலம் மிகுந்த மதவாதிகளை அடையாளம் காட்டுகிறார். இதுபோன்ற மதத் தீவிரவாதிகளினால் மதசார்பற்ற கொள்கையுடைய இந்தியாவிற்கு ஏற்படும் ஆபத்தை உணர்த்துகிறார். ஜெயபாரதன் அவர்களது இந்த தேசத் தொண்டு போற்றுதலுக்கு உரியது.

சீதாயணத்தை ‘பெண்ணியக் கல்வி’ (Women’s studies) பாடப் பிரிவின் பாடத் திட்டத்தில் தமிழகம் இணைக்க முற்பட வேண்டும். அரசு கல்லூரிகளின் மாணவியர் கலைநிகழ்சிகளில் இந்த நாடகத்தை நடத்திக் காட்ட வேண்டும் (மதச் சார்புள்ள கல்லூரிகளில் நிகழ்த்தினால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்ற அச்சம்தான் அரசு கல்லூரிகள் எனக் குறிப்பிடச் செய்தது). கலைஞர்களில் துணிச்சலுள்ளவர்கள் (மிகவும் குறைவு என்பது வருந்தத் தக்கது) சீதாயணத்தை தங்கள் கலைநிகழ்சிகளில் மேடையேற்றலாம்.

“ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை!”

நூலில் வரும் சீதையின் கூற்று இது. இதுபோல சீதையின் மனநிலையில் இருந்து நூலாசிரியர் ஜெயபாரதன் சிந்தித்ததைப் போல எத்தனை பேரால் சிந்திக்க முடியும்?
பெண்களின் சார்பில் ஜெயபாரதன் அவர்களது சீதாயணம் படைப்பினைப் பாராட்டி, விழிப்புணர்வு கொண்டு வரும் அவரது இலக்கிய முயற்சிக்கு தலைவணங்கி நன்றி நவில்கிறேன்.

http://jayabarathan.wordpress.com/seethayanam/ (சீதாயணம் நாடகம்)

சீதாயணம் (நாடகம்): விலை ரூ: 70, பக்கங்கள் : 76
கிடைக்குமிடம்:
Mr. S. P. Murugesan (Vaiyavan)
vaiyavan.mspm@google.com
Editor Innaiyaveli
Dharini Pathippagam
1. First Street, Chandra Bagh Avenue,
Mylapore, Chennai : 600004
Phone: 99401-20341

Share

About the Author

தேமொழி

has written 282 stories on this site.

themozhi@yahoo.com

2 Comments on “நூல் மதிப்புரை – சீதாயணம் (நாடகம்)”

 • ஜெயஸ்ரீ ஷங்கர்
  ஜெயஸ்ரீ ஷங்கர். wrote on 12 December, 2012, 18:59

  அன்பின் முனைவர்.தேமொழி அவர்களுக்கு,

  “சீதாயணம்” என்னும் திரு ஜெயபாரதன் அவர்கள் எழுதிய நாடகத்தை படித்து தங்களின் கருத்துக்களை மிகவும் அழகான முறையில் வெளிப்படுத்தியதற்கு மகிழ்வடைகிறேன்.

  ஒரு புத்தகம் வெளிவந்து அது படிக்கபெற்றதும் அதை  படித்தவர் ரசித்து எழுதிய  “நூலுக்கான மதிப்புரை” தான் அந்த நூலை எழுதிய எழுத்தாளருக்குக் கிடைக்கும் கேடயம். தங்களின் அழகான பதிப்புரை அதற்குச் சான்றாக உள்ளது.

  பெண்களின் சார்பாக “சீதாயணத்தின்”  சாரத்தை   மதிப்புரையைப் படித்ததும்..தாங்கள் அதைப் படைத்த விதம் கண்டு பாராட்டுகிறேன்.

  அழகான ஒரு சீதாயணக் காவியத்தைப் ஒரு பெண்ணின் மனநிலையைக் கொண்டு படைத்து காலங்காலமாகப் பெண்ணின் நிலையை உணர்த்தி இனிமேலாவது இது போன்ற நிலைமை மாற வேண்டும்  என்னும் எதிர்பார்போடு பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் எழுதப் 
  பட்ட நாடகம் எனலாம்.

  திரு.ஜெயபாரதன் அவர்களின் அறிவியல் புத்தகங்கள், கவிதைப் புத்தகங்களுக்கு நடுவில் ரத்தினம் போன்ற படைப்பாக “சீதாயணம்” திகழ்கிறது.

   “சீதாயணம்” புத்தகம் என்னிடமும் இருப்பதால் படிக்க விருப்பம் இருப்பவர்கள்  புத்தகம் வேண்டுமென்றால் என்னிடமும் தெரிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். அனுப்பிவைக்க சித்தமாக இருக்கிறேன்.

  S.Jayashree Shankar,
  Mobile:9043021423.

  சீதாயண புத்தகத்தைப்  பற்றிய விளக்கங்களோடு தங்களின் கருத்துக்களை ஆசிரியரைப் பாராட்டி வல்லமையில் பதிவு செய்ததற்கு மிக்க நன்றி.

  அன்புடன் 
  ஜெயஸ்ரீ ஷங்கர்.

 • தேமொழி
  தேமொழி wrote on 13 December, 2012, 9:02

  அன்பு ஜெயஸ்ரீ,
  நூல் மதிப்புரை கட்டுரைக்கு நீங்கள் வழங்கிய அருமையான கருத்துரைக்கு நன்றி.
  …தேமொழி

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.