சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

ஒரு குழந்தையின் மீது பெற்றோர்கள் கொண்டிருக்கும் அன்பிற்கு இணையாக எதையுமே காட்டிவிட முடியாது. ஒரு தந்தையாகட்டும் அன்றித் தாயாகட்டும் குழந்தையின் நலனே அவர்களின் மனதில் மேலோங்கி நிற்கும் என்பதே பெரும்பான்மையாக நாம் காணக்கூடியதாக இருக்கும் உண்மையாகும்.

பத்துமாதம் தன் வயிற்றிலே சுமந்து பிரசவ வேதனையை இன்பவலியாய்த் தாங்கி ஈன்றெடுத்த தன் இனிய மகவை கண்ணின் மணியாய்க் காத்து வளர்ப்பதே ஒரு தாயின் முக்கிய கடமையாக இருக்கும். அது போல மனையாளின் கருவிலே உருவாகும் குழந்தைக்கு உயிர்கொடுத்த நாள் முதல் அக்குழந்தையை இப்பூமித்தாயின் மடியிலே தவழவிடும் நாள்வரை காத்திருந்து அக்குழந்தையின் நல்வளர்ப்பு ஒன்றே தனது முன்னைய கடமையாகக் கொள்வதே தந்தையின் பண்பாகும்.

இத்தகைய ஒரு சூழலிலே !

அக்குழந்தையின் நலத்திற்கு தந்தையின் அதிகாரமா? அன்றித் தாயாரின் அதிகாரமா துணை போகப் போகிறது எனும் ஒரு கேள்வி எழுந்து தாயும், தந்தையும் சட்டத்தின் முன்னால் மோத வேண்டிய ஒரு நிலை ஏற்படுவது உலகத்தில் யாருக்குமே வரக்கூடாத ஒன்று என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருப்பதற்கு இடமில்லை.

ஒரு ஆடவனுக்கு மனைவியையோ அன்றி ஒரு மங்கைக்கு மணாளனையோக் கொடுப்பதில் காலத்திற்கு பங்கு இருப்பினும் அதில் சம்பந்தப்பட்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் ஏதாவது ஒரு வித பங்கு இருப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் எப்படிப்பட்ட ஒரு குழந்தை எவருக்குப் பிள்ளையாகப் பிறக்கப் போகிறது என்பதிலோ அன்றி அக்குழந்தை எத்தகைய நலம் வாய்ந்ததாக இருக்கப் போகிறதோ என்பதை நிச்சயிப்பதில் பெற்றவரின் பங்கோ அன்றி அக்குழந்தையின் பங்கோ பூஜ்ஜியம் தான்.

அப்படி இவ்வார மடலிலே சக்தி என்னதான் கூறப்போகிறான் ? என்று எண்ணத் தலைப்பட்டு விட்டீர்கள் போல் தெரிகிறது. இதோ விடயத்திற்கு வருகிறேன்.

7 வயதே நிறைந்த ஒரு சிறுவனை கடத்திச் சென்று மறைத்து வைத்ததாக குற்றம் சாட்டப்பட்டு தேடிக் கண்டு பிடிக்கப்பட்ட தாயும் அந்தச் சிறுவனும் பற்றிய ஒரு மனதைத் தொடும் குறிப்பே இம்மடலாகும்.

எதற்காக ஒரு தாய் தனது மகனைக் கடத்தி மறைத்து வைக்க வேண்டும் ? கேள்வி எழுவது சகஜமே !

“சலி(Sally)” எனும் நியூசிலாந்து நாட்டிலே பிறந்த பெண் 1999ம் ஆண்டு  “ஒலிப் பொறியியல் (Sound Engineering)” கற்பதற்காக இங்கிலாந்து வந்தார். அவரின் இங்கிலாந்து வாழ்க்கையில் அடுத்த வருடமே “பென் ரொபேட்ஸ்(Ben Roberts)” என்பவரிடம் மனதைப் பறிகொடுத்தார்.

மேற்கத்திய வாழ்வில் சகஜமாக நடக்கும் நிகழ்வாக காதலர்கள் ஒன்றாக வாழும் முறைக்கேற்ப ஒன்றாக வாழ்க்கை நடத்திய இவர்களுக்கு ” நியொன்(Neon) ” எனும் ஆண்குழந்தையும் “எலக்ட்ரா (Elektra)” எனும் பெண் குழந்தையுமாக இரட்டைக் குழந்தைகள் 2005ம் ஆண்டு பிறந்தன.

அதைத்தொடர்ந்து இவர்கள் 2009ம் ஆண்டு மணமுடித்தவர்கள் அதே மேற்கத்திய வாழ்வின் சகஜ நிகழ்வான மண்முறிவுக்கு 2011ம் ஆண்டு உட்பட்டார்கள்.

அவர்களின் ஆண் குழந்தையான நியோன் இவ்வருட சமகாலப் பகுதியில் தொடர் தலையிடிக்குள்ளாகியதாலும், கழுத்துப் பகுதி வீங்கியதாலும் பல பரிசோதனைகளுக்குள்ளாக்கப்பட்டு க்ழுத்துப் பகுதியில் ஒரு புற்று நோய்க்கட்டி இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டு அதை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சைக்குளாக்கப்பட்டு அக்கட்டி முற்றாக அகற்றப்பட்டது.

ஆனால் அதன் பின்புதான் பிரச்சனையே ஆரம்பமானது.

அச்சத்திர சிகிச்சையைத் தொடர்ந்து மேலும் அப்புற்று நோய் திரும்பாமலிருப்பதை உறுதிப்படுத்துவதற்காக “ரேடியோ கதிர்வீச்சு சிகிச்சை ( Raditherapy)” எனும் சிகிச்சைமுறைக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்று புற்று நோயில் முன்னனி வகிக்கும் வைத்தியத்துறை டாக்டர்களினால் தீர்மானிக்கப்பட்டது.

சட்டரீதியான காரணங்களுக்காக பெயர் குறிப்பிட முடியாத டாக்டர் ஒருவர் இச்சிகிச்சையைப் பற்றி இத்தாய்க்குப் புரிய வைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது “உனது மகனின் மூளை இக்கதிர்வீச்சினால் எரிக்கப்படப் போகிறது (Your son`s brain is going to be fried)  என்று கூறியதைச் செவிமடுத்த அத்தாய் தன் மகனை இத்தகைய ஒரு சிகிச்சைக்குள்ளாக்க முடியாத மனோநிலைக்குத் தள்ளப்பட்டார்.

பிரிந்துவாழும் கணவனோ வைத்தியர்களின் ஆலோசனைக்குட்பட்டு தன் மகனின் நல்வாழ்க்கைக்கு இச்சிகிச்சை அவசியமானது என்பதை ஏற்றுக் கொண்டு அவர் இச்சிகிச்சையைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டார்.

டாக்டர்களின் கருத்துப்படி இச்சிறுவனின் உயிருக்கு 80 வீதமான உத்தரவாதத்தை இந்தச் சிகிச்சையே அளிக்கும் என்று கூறப்படுகிறது.

தன் மகனை இந்த அதீத சிகிச்சையில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அவரை அழைத்துக் கொண்டு தலைமறைவான இடத்திற்குச் சென்று விட்டார் அந்தத்தாய்.

சரி இச்சிறுவனுக்கு இச்சிகிச்சையை அளிக்காவிட்டால் அவரின் உயிருக்கு உத்தர்வாதம் இல்லை என்று கூறப்படுகிறதே அதை எப்படி அந்தத்தாய் ஏற்றுக் கொண்டாள் எனும் கேள்வி உங்களுக்கு எழுவது சகஜமே

தன்னுடைய மகனின் புற்றுநோய்க் கட்டிதான் அகற்றப்பட்டு விட்டதே “கதிர்வீச்சு” சிகிச்சையைத் தவிர்ந்த மாற்றுச் சிகிச்சைகளின் மூலம் மகனின் உயிரைப் பாதுகாக்கலாம் என்று வேறு சில டாக்டர்கள் தனக்குக் கொடுத்த ஆலோசனையின் படி தான் நடந்து தனது மகனின் உயிரைக் காத்துக் கொள்வேன் என்பதுவே அந்தத்தாயின் வாதமாக இருந்தது.

ஆனால் தந்தையின் சம்மதத்தோடு இச்சிறுவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை அத்தியவசியமானது என்பதன் அடிப்படையில் கோர்ட்டு மூலமாக உத்தரவு வாங்கிக் கொண்டு அந்தச் சிறுவனையும் தாயையும் கண்டுபிடித்து தம்மிடம் ஒப்படைக்கும் படி சம்பந்தப்பட்ட வைத்தியசாலை போலிஸின் உதவியை நாடியது.

விளைவு !

“ஈஸ்ட் கிறீன்ஸ்டட்” எனும் இடத்தில் நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருந்த அந்தத் தாயும் , மகனும் போலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டார்கள்.

நீதிமன்றத்தில் அந்தத்தாய் ஆஜாராகும் போது தந்தையுடன் ஹாஸ்பிட்டலில் அந்தச் சிறுவன் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டான். தந்தையிடம் இருந்து அனுப்பப்பட்ட குறுஞ் செய்தி நீதிமன்றத்தில் படிக்கப்பட்டது.

“எனது மனைவியைப் போல எனக்கும் எனது மகனுக்கு அளிக்கப்படவிருக்கும் கதிர்வீச்சைப் பற்றிய ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. இத்தகைய சிகிச்சை இல்லாமலே எனது மகனின் உயிருக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய சான்றுகளை எனது மனையாய் எனக்கு காட்டி நிரூபிக்க முடியுமானால் நான் அவளது வாதத்தை ஏற்றுக் கொள்கிறேன். இல்லையானல் வைத்தியர்களின் பரிந்துரையை ஏற்றுக் கொள்வதை விட வேறு வழி இல்லை ” என்பதுவே அது.

இவ்வழக்கை இருவாரங்களுக்கு ஒத்தி வைத்த நீதிபதி தனது உரையில்,

“எந்தப் பெற்றோராலும் எண்ணிப்பார்க்க குடியாத, எந்தப் பெற்றோரும் எதிர்கொள்ளக்கூடாத ஒரு நிலையில் நீங்கள் இருப்பதை நானறிவேன் . இந்தத் தாயோ அன்றித் தந்தையோ தமது மகனின் வாழ்வை முன்னிருத்தியே தமது தீர்மாங்களை எடுத்திருக்கிறார்கள் என்பதில் எதுவித ஜயமுமில்லை. தாய்க்கும், தந்தைக்கும் குறிப்பாக இருவருக்கும் இடையில் தத்தளிக்கும் அந்த 7 வயதுச் சிறுவனுக்கும் மனதில் எழும் உணர்வலைகளை எப்படி விபரிப்பது என்றே தெரியவில்லை. இந்த்க் குடும்பத்தின் மீது திணிக்கப்பட்ட இக்கட்டாய அழுத்தத்தை நன்கு உணர்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை, தாய், மகன் இந்த உறவில் அல்லாடும் உள்ளங்களில் அலையாடும் கருத்துக்களில் பாகுபாடு இருக்கலாம் ஆனால் அவர்கள் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பிலும், அக்கறையிலும் பாகுபாடு இருக்க முடியுமா?

அச்சிறுவனின் நல்வாழ்வை மனதில் கொண்டு தம் எண்ணங்களில் தாம் கொண்டுள்ள நம்பிக்கையை இறுகப் பற்றியிருக்கும் இந்தப் பெற்றோர்கள் இருவரில் யாரையாவது குற்றம் கூறிவிட முடியுமா?

பாசத்தின் வலுவைச் சட்டத்தினால் நிர்ணயித்து விட முடியுமா?

சிலவேளைகள் , சில நேரங்கள் தோள்களின் சுமையை விட உள்ளத்தின் சுமைகள் கனக்கும் என்பதன் அர்த்தம் கொஞ்சம் புரியத்தான் செய்கிறது.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்

(படம் – நன்றி “டெய்லி டெலிகிராப்”)

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *