அந்திவானமும், அவனும் அவளும் – 2

4

திவாகர்

நிறமோ, மழையை மடிமீது சுமந்துவரும் மேகங்களை நினைவூட்டுகிறது.. அந்தக் கண்கள்.. ஆகா.. உயர்ந்தவகைத் தாமரை மலர்கள் விரிந்த போது மேலும் செம்மையாகுமே.. அந்தப் பூக்களையும் விட அழகான சிவந்த கண்கள்.. கருடனின் தங்கநிறமான சிறகை விட ஒளி எங்கும் பரவ, மார்பில் கௌஸ்தூப மணி காலைச் சூரியனைப் போல சுடர் விட, பெருமாள் காட்சி அளிக்கிறார். அருகேயே அகலாமல் உள்ள மகாலக்குமி தன் ஒரு கையில் விரிந்த கமலத்தைக் காட்ட, மறு கையால் ஆசியளிக்க, அந்த அற்புதக் காட்சியை எப்படி விவரிப்பேன். இறைவா.. எப்படி விவரித்தால் இவள் முதலில் நம்புவாள்..

“என்ன யோசிக்கிறாய்.. ஏதாவது கதை அளக்கலாமா இந்தப் பெண்ணிடம் என்று யோசித்துப் பார்க்கிறாயோ.. பொய் சொன்னால் எனக்குத் தெரிந்து விடும்..”

ஏதோ ஒரு உத்வேகத்தில் அவளிடம் அங்கே அன்று நடந்ததை அப்படியே சொன்னான். அவன் கண்ணுக்கு அவள் சின்னப் பெண்ணாகத் தோன்றவில்லை.. ஆருயிர் நண்பன் ஒருவன், தன் நலம் விரும்பி, தன்னை எப்போதும் சீண்டிக் கொண்டிருக்கும் சகோதரி, தன்னை அரவணைத்துப் பாலூட்டும் தாயாகத்தான் நினைத்தான்..

“நான் மெய்யாகத்தான் சொல்கிறேன்.. என் இரு கண்களாலும் அந்தத் தாமரைச் செங்கணானைப் பார்த்தேனே” கெஞ்சினான் கிருஷ்ணா..

“ஓ.. பார்த்து விட்டாயா.. ஆனால் இது ஒன்றும் பெரிய விஷயமில்லையே.. நான் சொல்லவில்லை அப்போதே.. விண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தால் சற்று தீர்க்கமாகப் பார்த்தாலே அவன் தெரிய வருவான்.. அன்று உனக்கு அவன் தெரிந்ததால் அப்படி ஒன்றும் விசேஷமில்லை..”

”கண்ணம்மா! என் செல்லப்பெண்ணே!.. இப்படி ஒரேயடியாக எனக்குக் கிடைத்த தரிசனத்தை ஒன்றுமில்லாமல் செய்து விடாதே! விண்ணிலே எல்லாருக்கும் அந்தத் தரிசனம் கிடைத்து விட்டதா.. என் ஒருவனுக்கு மட்டும் ஏன் அப்படித் தெரியவேண்டும், நீயே சொல்லேன்..”

“அடடா. ஏன் இப்படி புலம்புகிறாய்? ஒன்று சொல்லட்டுமா.. நீ அவனை சரியாக தரிசனம் செய்யவில்லை என்று கூட சொல்வேன்.. சரி, நீ பார்த்த விஷ்ணுவின் மார்பில் என்ன கண்டாய்?

”அதுதான் சொன்னேனே.. கௌஸ்துபமணியைப் பற்றி..”

“நன்றாக உற்றுப்பார்த்தாயா?”

”பார்த்தேனே!”

”இல்லை பார்க்கவில்லை.. பார்த்திருந்தால் அங்கே லக்குமியும் உள்ளே இருப்பதை உணர்ந்திருப்பாய்.. இல்க்குமி அவன் மார்பில் குடி கொண்டவள் அல்லவா..!”

”ஆமாம்.. அது என்னவோ சரியானதுதான்.. ஆனால் அவள் ஏன் அவனுடன் கருடபக்‌ஷியில் பக்கத்தே அமர்ந்து  தரிசனம் தரவேண்டும்?”

சிரித்தாள் சின்னப்பெண். “அவள் மகா கருணையுள்ளவள்.. கௌஸ்துபமணியில் பார்க்க முடியாதவன் தனியாகவாவது பார்க்கட்டுமே என்று காட்சியளித்திருக்க வேண்டும்.. தமிழில் சொல்கிறேன்.. கேட்டுக் கொள்!”

ஆணையிடுவது போல வந்த குரலில் அடிபணிவதுபோன்ற நிலைக்கு ஆளானான்.. “அப்படி சொல் செல்லம்மா!”

இலக்குமியின் திருமார்பில் ஒளிரும்
ஆரத்தின் ஒளி நீயே உன் திருமார்பில்
ஒளிரும் கௌஸ்தப மணியின் ஒளி அவளே
ஒருவருக்கொருவர் உள்ளொளியாய் உள்ளேயே
ஒளிந்திருந்தும் இந்த மணிகளின் வழியே
தெள்ளத் தெளிவாய் வெளியே
தெரியும் விந்தையை என்னென்பேன்

அப்படியே உருகிப் போனான் கிருஷ்ணதேவன்.. யார் இந்தப் பெண்.. தெய்வமா.. மகாலட்சுமியா, தன்னை என்றும் காக்கும் குலதெய்வமா.. மகேசுவரன் பத்தினி மகாசக்தியா.. இல்லை இல்லை இவள் நம் திம்மராசுவின் பேத்திதான். அவரும்தான் எத்தனையோ சமயங்களில் மிக நேர்த்தியாக எத்தனையோ விஷயங்கள் சொன்னவர் ஆயிற்றே.. கனவிலிருந்து வெளி வந்தவன் போல மயக்க நிலையில் இருந்தான் கிருஷ்ணா.

”அதோ பார் செவ்வானம்.. மெல்ல மெல்ல அந்திவானம் வெள்ளையிலிருந்து செம்மைக்கு மாறி வரும் விந்தையைப் பார்.” அவள்தான் சந்தோஷமாக கையைத் தட்டிக் கொண்டே கூவினாள்.

அவளோடு சேர்ந்து அவனும் மேற்கே உயரப் பார்த்தான்.. ஆமாம் எத்தனை அழகிய வானம்.. ஆஹா வெண்மை நிறம் போய் பல நிறங்களாகக் கலந்து செம்மையில் முடிகிறதே.. இந்த வானத்தை ஏன் குருஷேத்திர பூமிக்கு ஒப்புவமையாக்கினாரோ அந்த தமிழ்க் கவிஞர்..

”இந்த செவ்வானத்தைப் பார்த்தால் உனக்கு என்ன ஞாபகம் வருகிறது..”

“ஓ அதுதானே ஏற்கனவே பேசினோமே.. யுத்தகளம் பற்றி”

அவள் சிரித்தாள்.. அந்த அந்தி மாலை நேரத்தில் அவள் கண்களில் கூட அந்த சிரிப்பின் மலர்ச்சியைக் கண்டான்.

“எனக்கு என்ன தோன்றுகிறது தெரியுமா?”

“சொல்லேன்..”வியப்பாகக் கேட்டான் கிருஷ்ணா.

“அந்த செங்கணான் விழிகள்தான் இந்த அந்தி வானம்.. நன்றாகப் பார்.. எப்படி சிறுகச் சிறுக விழித்து எழுகிறான் பார்.. வெண்மையானவை எல்லாம் நிறம் மாறி தன் கண்ணின் நிறத்துக்குக் கொண்டு வரும் அற்புதம் பார்த்தாயா.. தமிழில் கோதையின் பாடல் கேட்டதுண்டா..

”கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல்  விழியாவோ”.. என்று பாடினாளே.. பார்த்தாயா.. நீ அன்று பார்த்த தாமரைக் கண்ணானும் இவனும் ஒன்றுதானே..

கிருஷ்ணதேவன் மறுபடி அந்தி வானத்தைப் பார்த்தான். தான் முன்னம் பார்த்த விஷ்ணுவின் ரூபமும் கூடவே அவன் நினைவில் வந்தது.. ஆமாம். அவன் செங்கணான்.. ’அந்தி வானத்து செங்கண்ணா! நீ எப்படியெல்லாம் காட்சி தருகிறாய்.. நான் சாதாரண மந்த புத்தியுள்ள மானிடன் என்பதால் முழு உருக்கொண்டு நான் மனதில் வேண்டியதற்கேற்ப அன்று அர்ச்சாரூபத்தில்  ஸ்ரீதேவி சமேதராக காட்சி தந்தாய்.. அதை நானல்லவோ கர்வப்பட்டு அரிய விஷயமாக எடுத்துக்கொண்டு எல்லோரிடமும் பேசிக்கொண்டு வருகிறேன்.. இதோ இன்று இந்த தெய்வீகப் பெண் மூலம் இயற்கையாகவே உன்னைப் பார்க்க முடியும் என்ற எளிய தத்துவத்தைப் புரிய வைத்தாய்.. நீ எங்குதான் இல்லை.. எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் பரமாத்மாவே.. உன் கருணையை இவள் மூலம் தெளிய வைத்தாயே..’

கிருஷ்ணதேவன் இமைகளில் கண்ணீர் ததும்பியது.. நாம் திம்மராசுவைப் பார்ப்பதோடு மட்டுமல்லாமல் ஆண்டாளின் பாடல்களுக்காகத்தானே நாமே அவள் ஆசி பெற இந்த ஊர் வந்தோம்.. இறைவனே சமயம் பார்த்து இந்தப் பெண்ணை இங்கே அனுப்பினானோ.. பகவான் இயற்கையாகவும், தேவதேவனாகவும் காட்சி அளிப்பவன் மட்டுமல்ல, அவன் ’மனுஷ்ய ரூபிணே’ என்பது கூட எத்தனை சத்தியம்.. திம்மராசு மாமாவின் பேத்தியால் எத்தனை அறிந்து கொண்டோம்..

”அடடே.. நீ இப்படி யோசித்துக் கொண்டே இரு.. இதோ இருள் வந்துவிட்டது.. என்னை தாத்தா வீட்டில் தேடுவார்.. உனக்கென்ன குதிரை இருக்கிறது.. நீ பறந்து வந்து விடுவாய்.. நான் இப்படியே வயலுக்குள் குறுக்காகப் புகுந்து அல்லவா ஓடவேண்டும்.”

அவள் இனிய குரலைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவன் மனம் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டுக் கிடந்தததால் அவனிடம் இப்போது சலனம் இல்லை.. அவன் தலையசைத்தான்…

“பார்த்தாயா.. முதலில் பார்த்தபோது ஏதோ பெரிய மனிதன் போல வெளி வேஷம் போட்டிருக்கிறாய்.. ஒரே மாயவார்த்தை பேச்சுதான்.. குதிரையில் ஏறி வா, நான் வேண்டுமானால் நடந்து வருகிறேன்.. என்றெல்லாம் அழைத்தாய்.. இப்போது பார்.. மௌனியாகிவிட்டாய்.. ஒரு வார்த்தைக்குக் கூட என்னைக் குதிரையில் அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லவில்லை.. போகட்டும்.. எனக்கு வயலில் ஓடுவதெல்லாம் நித்தமும் பழக்கம்தான்.. நீ சொன்னாயே என்று நம்பி உன்னுடன் குதிரையில் இன்று வந்தால் நாளையும் இந்த ஆசை பெருகும்.. வேண்டாம்.. வேண்டாம்.. நீ மட்டும் நிதானமாக வா..”

கிருஷ்ணாவின் கண்கள் இன்னமும் கலங்கித்தான் கிடந்தன.. அவள் அதைக் கண்டு விட்டபின்னாலும் கூட சிரித்தாள்..

“ஒரு முக்கியமான விஷயம்.. என்னைப் பற்றி தாத்தாவிடம் கோள் மூட்டி விடாதே.. பிறகு நாளை என்னால் இங்கே வரமுடியாது.. விஷ்ணுவின் கண்களைக் காணவும் முடியாதபடி செய்யாதே.. அட, என்னைக் கண்டதாகவே பேசாதேயேன்..என்ன.. வரட்டுமா..

சொன்னவள் அவன் பதிலைக் கூட எதிர்பாராமல் குறுக்கே கிடந்த வயல்களின் ஒத்தையடிப் பாதையில் ஓடத் துவங்கியதும்தான் சற்று நினைவுக்கு வந்தான்..

“அட.. பார்த்துப்போ செல்லம்மா.. ஓடாதே.. ஓடாதே.. விழுந்து விடப்போகிறாய்”

பரிவுடனே வந்த வார்த்தைகள் காற்றில் கலந்து வீணாகிப் போனதுதான்.. அவள் ஓட ஓட  அவள் உருவமும் தன் கண்களுக்கு மறைந்ததோடு இருளும் சட்டென வருவது போல வந்துவிட்டதால் அவன் அவள் போகும் திக்கையேப் பார்த்துக் கொண்டிருந்தான்.. போகட்டும்.. திம்மராசு மாமாவுக்குதான் எத்தனை பாக்கியம்.. இவர் பிரதம அமைச்சராக இத்தனை வருடங்கள் நல்லாட்சி தந்து பரிபாலனம் செய்தார் என்றெல்லாம் புகழ்ந்தோமே.. அதுவா பாக்கியம்.. இல்லை.. இவளைப் பேத்தியாகப் பெற்றதுதான் அவர் பாக்கியம்.. அப்படி பாக்கியம் செய்த மகானைத் தான் காணப்போவதும் தான் செய்த முன்வினைப் பயனே..

குதிரையில் ஏறி மெல்லச் செல்லுமாறு அதைச் சிமிண்டினான்.. நிதானமாகவே செல்வோம்..அவள் போன பின்பு அங்கு செல்வோம்.. அதுதான் முறையும் கூட..இவளைப் பற்றி நாம் எதுவும் சொல்ல வேண்டாம்தான்.. ஆனால் மீண்டும் ஒருமுறை இந்த அழகிய கண்மணியைப் பார்க்கலாம் அல்லவா..

குதிரையும் சற்று நிதானமாகவே நடந்ததுதான்.. ஆனாலும் தூரம் அதிகமில்லை என்பதால் ராஜபாட்டை பிரிந்து ஊருக்கு செல்லும் வழியாகக் குறுகி வழிவிட்டது.. இருள் படர்ந்தாலும் அங்கே தெரிந்த அந்தக் கோயிலின் கோபுரத்தில் ஒவ்வொரு நிலையிலும் வைக்கப்பட்டிருந்த பெருந்தீபங்கள் அதன் உயரத்தை அழகாகக் காண்பித்ததோடு, அந்தக் கோபுரத்தின் அழகையும் உயர்த்திக் காண்பித்தன. சமீபத்தில் கட்டப்பட்ட நெடிதுயர்ந்த கோபுரம்.. பகலில் பார்க்கவேண்டுமே இதன் அழகை..’ என்று மனதில் நினைத்துக் கொண்டவன் கோயில் அருகே குதிரையை நிறுத்தினான்.. கோயிலுக்குள் செல்லாமல், கோயில் அருகாமையில் உள்ள அந்தக் குடிலுக்குள்தான் அவன் காலடிகள் பட்டன..

பெரிய குடில்தான்.. இந்த மூன்று வருடத்தில் எத்தனையோ முறை வந்துவிட்டோம்.. திம்மராசு மாமா இந்தக் கோயில் அருகேதான் இருக்கவேண்டும் என்று பிடிவாதமாக இருந்து கட்டிக் கொண்ட குடில் இது.. பகலில் வெளியிலிருந்து பார்த்தால் குடிசை போலத்தான் இருந்தாலும் உள்ளே அதன் தெய்வீகத்தைப் பார்த்து யார்தான் பரவசப்படமாட்டார்கள்..

அவன் உள்ளே நுழைந்ததுமே எதிர்வந்து அழைத்துக்கொண்டார் திம்மராசு..

“நேற்றே வருவாய் என்று காத்திருந்தேன் கிருஷ்ணா, அப்படித்தான் செய்தி வந்தது.. இருக்கட்டும்.. மதுரையில் நண்பர்களைப் பிரிந்து வருவது சற்று கஷ்டம்தான்.. அதுவும் கூடவே அல்லுடு ராமராஜுவும் வந்திருக்கிறான் என்று சொல்லிவிட்டுத்தான் சென்றான் உன்னுடைய ஆள். அவனிடம் சற்று எச்சரிக்கையாகவே இருக்கச்சொல்.. அச்சுதன் இப்போது எங்கே இருக்கிறான்?”

சடசடவென கேள்விகள் கேட்ட தன்னுடைய முன்னாள் முதன்மை அமைச்சரை முதலில் பாதம் தொட்டுப் பணிந்தான் கிருஷ்ணா.. திம்மராசு இப்போதெல்லாம் அரசியல் அதிகம் பேசுவதில்லை என்றாலும் மாமாவுக்கு என்றும் தங்கள் குலத்து நலன் முக்கியம் என நினைப்பவர் ஆயிற்றே..

“தம்பி அச்சுதன் காளஹத்தி கோபுரத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறான் இல்லையா.. அங்குதான் தற்சமயம் வாசம்.. அல்லுடுவைப் பற்றி நன்றாகவேத் தெரியும்.. சிறுவயது அல்லவா.. சற்று துள்ளும்தான்.. மதுரையில் நாகம நாயகனுக்கும் செஞ்சி வையப்ப நாயகனுக்கும் சில சண்டைகள்.. அச்சுதன் பக்கத்தில் இருந்தால் சண்டையிட்டிருக்கமாட்டார்கள்.. இருவருமே அவனுக்கு நண்பர்கள்.. அல்லுடு ராமராஜு துடுக்கால் இருவருக்கும் கோள் மூட்டி விட்டான்.. நான் சற்றுப் பேசி சரிசெய்து விட்டுதான் வந்தேன். மாமா! தாங்கள் இல்லாத விசயநகரம் எனக்கு தலைநகரம் இல்லை.. தலைவலி நகரம்.”

“ஓ.. அதை விடு, சென்ற மாதம் ஸ்ரீகாகுள நிகழ்ச்சியை நினைத்து நினைத்து நெஞ்சம் குளிர்ந்து கொண்டிருக்கிறேன்.. அதைப் பேசு.. அரசியலே வேண்டாமென்றுதானே இங்கே வந்தேன்.. வா.. உட்கார்ந்து பேசுவோமா..” என்ற திம்மராசு, சட்டென ஞாபகம வந்தவராக ”இல்லை.. இல்லை.. இரவுப் பூசைக்குக் கோயிலுக்குள் சென்று திரும்பாவிட்டால் என் பேத்திக்குக் கோபம் வந்து விடும்.. வா.. முதலில் அங்கு போவோம்.. ஆனாலும் பிரயாணக் களைப்புடன் இருப்பாய்.. ஏதானும் சத்தன்னம் அருந்துகிறாயா” என்றவர் அவன் பதிலுக்குக் காத்திராமல் குடில் உள்ளே சமையல்கட்டுக்குச் சென்றுவிட்டார்.. சென்றவர் உடனடியாகத் திரும்பவும் வந்தார். கிருஷ்ணாவுக்கு விஷயம் புரிந்தது. உதட்டில் ஒரு மென்னகை கூட வந்தது. சுட்டிப் பேத்திதான் முழுவதும் தின்றுவிட்டு ஏப்பம் விட்டுதான் அங்கே பாறைக்கு வந்தாள் என்ற விஷயம் இவருக்கு எப்படித் தெரியும்..

“உனக்கு அதிர்ஷ்டமில்லை கிருஷ்ணா! மதியம் நைவேத்தியம் செய்துவிட்டு, நானும் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு மீதியில் பாலை சற்று அதிகமாகவே ஊற்றி வைத்தேன்.. இப்போது பார்த்தால் சத்தன்னப் பானையில் ஒரு பருக்கை கூட இல்லை.. இந்தப் பூனைகளின் தொல்லை சில சமயங்களில் தாங்கமுடியவில்லை கிருஷ்ணா.. போகட்டும் அவைகளுக்கென பிரத்தியேகமாக யாராவது உணவிடுவார்களா.. என்ன.. பூனையும் தெய்வ ரூபம்தானே.. கோயில் மடைப்பள்ளியில் உனக்குப் பிரத்தியேகமாக சுடச் சுடச் செய்து வைக்க வைத்தால் போயிற்று..”

கிழவர் முகம் சற்று வாட்டமாக வைத்துக்கொண்டு பேசினாலும் அந்தச் சமயத்திலாவது சட்டியில் உள்ள சத்தன்னத்தைத் தின்று விட்டது அவர் பேத்திதான் என்பதைச் சொல்லலாமா என்று யோசித்தான்.. வேண்டாம், அது தவறு.. குழந்தைக்குப் பசித்திருக்கும்.. பாவம்..

கொடுத்து வைத்தவள்.. இல்லை இல்லை.. இவர்தான் கொடுத்து வைத்தவர். எப்படிப்பட்ட தெய்வ குணம் படைத்தவள் அவள்.. ஆமாம்..எங்கே அவள்.. இன்னுமா வரவில்லை.. வந்திருப்பாள்.. கோயிலுக்குள் போயிருப்பாள் போலும்.. மாமாதான் சொன்னாரே..

இருவரும் பேசிக்கொண்டே பக்கத்திலே உள்ள ஆலய கோபுரத்தருகே வந்தனர். உயரமான அந்தக் கோபுரத்தை கழுத்தை உயர்த்திப் பார்த்தான்.

“காளஹஸ்தி காலி கோபுரத்தைக் கூட அச்சுதன் இப்படித்தான் உயரமாகக் கட்டி வருகிறான்.. தலைநகரம் திரும்புமுன் அங்கே செல்லவேண்டும்..”

“கிருஷ்ணா, இந்தக் கோபுரம் வந்த கதை தெரியுமா.. ஆண்டாள் பிரத்தட்சயமாக வந்து தனக்கு வேண்டுமெனக் கட்டிக் கொண்டது இந்த கோபுரம், இதற்கு நானே சாட்சி!”

இந்த சம்பவம் கிருஷ்ணதேவன் கேள்விப்பட்டதுதான்.. இருந்தும் இவர் வாயால் இன்னொருமுறை சொல்லட்டுமே..

முப்பது வருடங்களுக்கு நானும் நரசிங்கராஜாவும் இங்கே உள்ள பாண்டியமன்னரின் மறைவுக்காக வந்திருந்து திரும்பிக் கொண்டிருக்கிறோம்.. இந்த வழியாகத்தான் வந்தோம். இதோ இந்த இடங்களெல்லாம் புதர்களும் முட்செடிகளும், பாழடைந்த இடிபட்ட மண்டபங்களும் சிலந்தி வலைகள் எங்கெங்கும் காணப்பட நரசிங்கர் அதிர்ந்துபோய்விட்டார். இந்த ஊர் கேட்பாரற்றுக் கிடந்தது. ஊரில் கோயில் இருந்தும், வேளா வேளைக்கு பூஜை இருந்தும் பாழடைந்த மதில்கள், கோயில் சிலைகள் என எல்லாமே பழமையாக இருந்ததைப் பார்த்த நரசிங்க ராஜா மிகவும் வருத்தப்பட்டு ஏதாவது செய்யவேண்டும்..என்று சொல்லிக்கொண்டே இந்தக் கோயிலுக்குள் நுழையாமல் ஊரைக் கடந்துவிட்டோம். இந்த ஊர் எல்லையில்தான் அந்த அதிசயம் நடந்தது.”

திம்மராசு பூர்த்தியாக பழைய நினைவுகளில் மூழ்கிப் போய்விட்டார். அவர் மனம் அந்தப் பழைய காட்சியில் நினையாக நங்கூரம் பாய்ச்சி நின்றுவிட்டது போலும். கிருஷ்ணாதான் கேள்வி கேட்டான்..

“கேள்விப்பட்டதுதான்.. இருந்தும் சொல்லுங்களேன்..”

“கிருஷ்ணா.. நீ கேள்விப்பட்டதை விட நேரடியாக அனுபவித்தால்தான் அந்த மகிமை புரியும்.. சென்ற மாதம் கங்கர்களுடன் நடந்த போரின் கடைசி நாளன்று காலை உனக்குக் காணக்கிடைக்காத காட்சி கிடைத்ததே.. அதை நீ உணர்ந்து சொல்லும்போதுதான் அதன் மகிமை எனக்கே புரியும்..”

“ஆமாம்.. உண்மைதான் மாமா!”

”நாளைக் காலை இந்த ஊரைப் பகலில் பார்த்தாயானால் இதன் புதுமையையும், இந்தக் கோயிலில் புனிதத்தையும் பார்த்து ஆச்சரியப்படுவாய்.. ஆனால் அன்று அப்படியில்லை.. கோபுரம் இல்லாத அனாதைக் கோயிலாக இருந்தது. ஒருகால கட்டத்தில் இந்தக் கோயிலிலா விஷ்ணுசித்தர் பூசை செய்து வந்தார் என்ற கேள்வி வரும்.. ஏன் எங்களுக்கே விஷ்ணுசித்தர் நினைவு கூட அன்று வரவில்லை.. அப்படிப்பட்ட நிலையில்தான் ஊர் எல்லையில் எங்கள் ஆண்டாள் எங்கள் குதிரைகளுக்கு முன் நின்று நிறுத்தினாள்..”

(அடுத்த பகுதியில் நிச்சயமாக முடியுமென நினைக்கிறேன்)

படங்களுக்கு நன்றி : kothairangan.blogspot.com and Flikr

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அந்திவானமும், அவனும் அவளும் – 2

  1. குழந்தையாய் வந்துக் குதூகலித்தவள் தேவத்திருமகளோ?
    பழங்கதைப் பேசிடும் பாட்ட‌ன்தான் பெரியாழ்வாரோ‌
    ?சுழன்றிடும் சிந்தையுள் எத்தனைக் கேள்விகள்
    ?வழங்கியவரே அறிவார்! விடைக்கெனக் காத்திருக்கிறேன்!

  2. முடிக்காதே திவா. தொடர்ந்து எழுது தொடர்கதையாக எழுது. அற்புதம். விசாகை மனோகரன்.

  3. இதோ இன்று இந்த தெய்வீகப் பெண் மூலம் இயற்கையாகவே உன்னைப் பார்க்க முடியும் என்ற எளிய தத்துவத்தைப் புரிய வைத்தாய்.. நீ எங்குதான் இல்லை.. எல்லாவற்றிலும் நிறைந்திருக்கும் பரமாத்மாவே.. உன் கருணையை இவள் மூலம் தெளிய வைத்தாயே..//

    கண்ணீர் பொங்க வைத்த வரிகள். நிதர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *