இன்னம்பூரான்

 போற்றி! போற்றி! தேவகுமாரா! போற்றி! போற்றி!

அவரொரு அதிசயப்பிறவி. அவனியில் அவரைப்போல் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. என் அகக்கண்ணுக்கு மட்டும் புலப்பட்ட தேவதூதர்கள் புஷ்பக விமானத்தில் வந்திறங்கி சைத்ய உபசாரங்கள் பல செய்து, அனாயாசமாகவல்லவோ அவரை சுவர்க்கலோகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஜனவரி 9, 2013; அன்றைய தினம் வழக்கம் போல்த்தான் பொல பொலவென பொழுது விடிந்தது. அவரும் சகஊழியர்கள் எல்லாரையும் கனிவுடன், கட்டித்தழுவி குசலம் விசாரித்தார். அது பல வருடங்களாக  அவருடைய அன்றாட வாடிக்கை. பிறகு தன்னுலகம் சுற்றி வந்தார். அவருடைய நண்பர்கள் பல இனங்களை சார்ந்தவர்கள். உக்ரம், வக்ரம், மக்கார் எல்லா குணாதிசயங்களும் உண்டு, அவர்களிடம். அவர் சம்பந்தப்பட்டவை, யாவரும் நேசிக்கப்பட்டவர்கள். அவர்களும் அவரவது பலவீனங்களை உதறி விட்டு, அவருடைய அரவணைப்பை அனுபவிப்பார்கள். பிரஹாரம் சுற்றிய பிறகு, வந்தபின், வழக்கம்போல் சொற்பமான காலை உணவு. ஒரு குட்டித்தூக்கம். அதுவே நீளாதூக்கம் ஆகி விட்டது, சார்! துக்கம் தாங்காமல் என் மனம் தேம்பித் தேம்பி அழுகிறது. ஏன்? உலகமே அழுகிறது.

மனித ஜன்மங்களே! மனித நேயம் என்று புத்தகங்கள் எழுதி, சொற்மாரி பெய்து, அதைப் பொய்த்து, நடமாடுகிறீர்களே! இந்த தேவகுமாரரின் பெயர் ஆர்னி. அவர் ஒரு கம்பீரமான பூனை. லிண்டன் மிருகக்காட்சி சாலையில் அவர் தான் செவிலித்தாய். சிங்கக்குட்டிகளும், புலிக்குட்டிகளும், குரங்குக்குட்டிகளும் அவரால் தான் பேணி வளர்க்கப்பட்டன. அவற்றின் கூடைக்குள் நுழைந்து, கட்டித்தழுவும் போது, அவை அன்னையின் அரவணைப்பின் சுகம் உணர்ந்தன.

எனக்கு நேரடியாகத் தெரிந்த உண்மை நிகழ்வு ஒன்று. ஒடிஷாவின் ஸிமிலிபால் பிராந்தியத்தில், ‘கைரி’ என்ற புலிக்குட்டி ஒரு வீட்டு செல்லப்பெண்ணாக வளர்ந்தாள். செவிலித்தாய் ப்ளாக்கி என்ற நாய். கைரியின் உருவத்தில் ஒரு சின்ன பின்னம் அளவு சைஸ். ஆனால், கைரிக்கு ப்ளாக்கியிடம் தான் பயம். ஒரு நாள் ப்ளாக்கிக்குக் குட்டிகள் பிறந்தன. கைரிக்கு அவற்றுடன் விளையாட ஆசை.  வாசற்படியில் வந்து கெஞ்சுகிறாள். அனுமதி டினைய்ட்! தன்னுடைய கூர்நகங்களை உள்ளிழுத்துக்காட்டி கெஞ்சுகிறாள். அனுமதீட். அப்பப்பா! என்ன விளையாட்டு! போங்கள்! அதுவல்லவோ தெய்வீகம்!

சார்! இனி மேல்  எந்த மனிதன் உக்ரமாகவும், வக்ரமாகவும், மக்காராகவும் நடந்தால், மிருகத்துடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள், சார்! ப்ளீஸ்.

இன்னம்பூரான்

29 01 2013

பி.கு: சோம்பல் இருந்தால் கூட, அதை முறித்து விட்டு, உசாத்துணையிலிருக்கும் ஆர்னியின் சித்திரத்தைக் க்ளிக்கி, ஒரு கும்பிடு போடுங்களேன்.

உசாத்துணை:

http://www.bbc.co.uk/news/uk-england-cambridgeshire-21244346

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *