திவாகர்

புடவை

ஹெல்லோ.. இங்கே என் பக்கத்துலே யார் இருக்கான்னு சொல்லு..

”யாரு…”

சும்மா கொஞ்சம் யூகிச்சுதான் பாரேன்.. சரியா சொல்லிட்டியானா நீயே பேசலாம்.. நான் வேணுமின்னா ஒரு ஆப்ஷன் தரேன்.. இவங்க பேரோட முதல் எழுத்து ‘எஸ்’ ல ஆரம்பிக்கும்.. கண்டுபிடி பார்ப்போம்.. .

“ஜோக்கா?.

“சேச்சே.. ரொம்ப ஈஸியான பேரு.. இன்னோரு க்ளூ கொடுத்தேன்னா சட்’னு சொல்லிடுவே.. ஹி.. ஹி.. ஹே..

”ஏன் இப்படி வழியறீங்க.. நீங்க கல்யாணத்துக்குப் போனீங்களா இல்ல க்விஸ் போட்டி ஏதாவது நடத்தப் போனீங்களா.. உங்க மொபைலை சுத்தி ஒரே சப்தமா கேக்குது.. உங்க போன்’ல உங்க பேச்சே சரியா கேக்க மாட்டேங்குது.. முதல்லே மண்டபத்தை விட்டு கொஞ்சம் சத்தமில்லாத இடமா போய் நின்னுண்டு அங்கேயிருந்து கூப்பிடுங்க..”

ஹல்லோ.. சரி.. சரி.. அப்படியே.. ஹி..ஹி.. இட்’ஸ் ஓகே.. ஷ்யூர்.. ஷ்யூர்.. ஹி..ஹி.. ஐ வில்..!

—————————————-

ஹல்லோ.. இப்போ நல்லா கேக்குதா..

ஐய்யோ.. ஏன் இப்படி கத்தறீங்க.. மெதுவாப் பேசுங்க.. நல்லாவே  கேக்குது..

ஒருவேளை கேக்கலையோ’ன்னு கொஞ்சம் சத்தமா பேசிட்டேன்.. இந்த இடத்துல அவ்வளோ யாரும் கிடையாது..

சரி, சரி,, யாருகிட்டே நான் பேசணுன்னீங்களோ, அவங்ககிட்ட லைனைக் கொடுங்க..

அது வந்து அங்கேயே யாரோ பார்த்துக் கூப்பிட்டாங்களா.. அங்க போயிட்டா..

போயிட்டாளா.. யார் அது..

அதுதான் உன் சினேகிதி சுமா.. அவதான்.. அவளும் இந்த கல்யாண மாப்பிள்ளையும் ஆபீஸ் கொல்லீக்ஸ்.. படு ஸ்டைலா எங்கிட்டே வந்து ஹெல்லோ சொல்லிட்டு ’உன்கிட்டே பேசி ரொம்ப நாளாச்சு’ ன்னு சிரிச்சாளா.. அதுதான் உனக்கு போன் போட்டேன்..

சுமாவா, இதுக்குதான் இவ்வளவு  ஆர்ப்பாட்டம் பண்றீங்களா.. அவ கிடக்க்கிறா.. வேணுமின்னா அவளே பேசுவா.. அது சரி, கல்யாணத்துக்கு உங்க தங்கை வந்தாளா..

ஓ.. வந்தாளே.. புருஷனோட வந்திருக்கா..

“என்ன கலர்..’

என்ன நீ.. அவ கலர் உனக்குத் தெரியாத மாதிரி கேக்கறே.. என்னை விட…”

“ஐய்யோ அழகே.. ஏன் குறுக்கே கெக்கேபிக்கேன்னு பேசறீங்க.. என்ன கலர் புடவையைக் கட்டிண்டு  வந்தா’ன்னு கேக்க வந்தேன்..

“அடடே.. நான் சரியா கவனிக்கவே இல்லே..’

“ஓ.. இந்த சுமா வந்தாளே.. அவ..”

“அதுவா.. ஒருமாதிரி வயலெட் கலர்’ல சின்னச் சின்ன பூ டிசைன் போட்டது.. கொஞ்சம் க்ராஸா இருந்தாலும்..”

”அதுதான்.. எதை கவனிக்கணுமோ அதை கவனிக்காதீங்க.. போன மாசம் அங்கே இருக்கறச்சே நான் ஒரு அரக்கு கலர்’ல பார்டர் வச்ச பட்டுப்புடவை வாங்கி உங்க தங்கைக்குக் கொடுத்தேன்.. ஞாபகம் இருக்கா.. மெடீரியல் டிஸைன்’லாம் தனியாப் போட்டுக்கொடுத்த புடவை..”

”தெரியுமே.. அவ கூட ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு, ’யாரு எடுத்தது.. அண்ணா செலக்‌ஷனா’ன்னு கேட்டா.. நீ மூஞ்சியைத் தூக்கிட்டு நீயே செலக்ட் பண்ணின விஷயத்தைச் சொன்னியே..”

”சரி சரி.. உங்களுக்கு வர வர தேவையில்லாத விஷயம் எல்லாம் நல்லா நினைவுல இருக்கு.. அந்தப் புடவையை அவ கட்டியிருக்காளா’ன்னுதான் கேட்டேன்..”

“ஏன் அப்படி கேக்கறே..”

“இல்லே.. பெரிசா ஆஹா ஓஹோ’ன்னு அந்தப் புடவையைப் பிடிச்சுப் போய் இனிமே எந்தக் கல்யாணமானாலும் இந்தப் புடவைதான் கட்டிக்கப்போறேன்’னு குதிச்சாளே.. அதுக்காகத்தான் கேட்டேன்.. சும்மா வேஷம் போட்டாளோ’ன்னு”

”ச்சே.. பாவம்.. அவ  குழந்தை.. ரொம்பப் பிடிச்சுப் போயி அப்படி குதிச்சிருப்பா.. அவளுக்கு ஒண்ணு பிடிச்சுப் போச்சுன்னா அப்படித்தான் சின்னக் குழந்தையிலேர்ந்து குதிச்சுண்டிருப்பா..”

”குதிக்கட்டும் குதிக்கட்டும்.. கீழே விழாம குதிச்சா சரி..”

“இப்ப என்னாச்சுன்னு இந்த நக்கல் பண்றே?”

”ஆஹா.. உங்க தங்கையை இப்ப ஏதாவது குத்தம் சொல்லிட்டேனா.. ஒரேயடியா பரிஞ்சுண்டு வரவேணாமே. புடவை வாங்கிக் கொடுத்தது நானு.. அதான் கேட்டேன்..”

”அவ நிச்சயம் நீ வாங்கிக் கொடுத்த புடவையைத்தான் கட்டிண்டு வந்துருப்பா.. நான் அவ புருஷன்கிட்டே ஏதோ பேசிண்டே இருந்தேன்னா.. நான் இந்த விவகாரத்தை மறந்துட்டேன்..”

”அதுசரி, கல்யாணத்துல எல்லார்கிட்டேயும் நான் ஏன் வரலே கேட்டாங்களா..”

”ஓ.. எல்லாரும் கேட்டாங்களே.. உன்னால் வரமுடியலே’ன்னு சொன்னவுடனே கல்யாணப்பொண்ணு ரொம்ப வருத்தப்பட்டா.. அவ கண்ல தண்ணியே வந்திருச்சு தெரியுமா..”

அப்படியா?

யெஸ்.. நிஜமா.. மனசு எனக்கு உருகிப்போச்சுன்னு  வெச்சுக்கோயேன்..

“ஆஹா.. ஹோமப்புகைப் பக்கத்துல  ரொம்ப நேரம் இருந்தா  எல்லாருக்குமே அவங்க கண்ணுங்க அழறா மாதிரிதான் இருக்கும்.. சரி வுடுங்க..

“அப்படிங்கறே.. இருக்கலாம்.. மாப்பிள்ளை கூட கண்ணைக்  கசக்கிகிட்டேதான் இருந்தான்.. ஒருவேளை அவனுக்கும் கூட  வருத்தமோ’ன்னு நினைச்சுட்டேன்..ஹி.. ஹி..”

“ஐய்யோ சமத்தே.. சரி சரி.. உங்க தங்கை அந்தப் பக்கம் இருக்காளா;ன்னு ஒரு நோட்டம் விடுங்களேன்..

“அட நான் கிட்டதட்ட வெளில  இங்கே வாசல்ல இருக்கேன்.. எப்படிப் பாக்கறது.. உள்ளே  மறுபடியும் போய் பார்த்துட்டு வேணா போன் பண்ணட்டுமா..”

“இதுக்குன்னு நீங்க ஒண்ணும் மறுபடியும் போகவேணாம்.. எப்படியும் வெளியே வந்துட்டீங்க இல்லே.. வீட்டுக்கு வந்துடுங்க”

“ஏன் ரொம்ப கோபமாப்  பேசறே.. அட.. நாம பேசிக்கிட்டே இருக்கோமா.. அதோ, தங்கையே  இங்க வந்துண்டுருக்கா பாரு.. அவகிட்டேயே பேசறியா..”

“ஒண்ணும் வேணாம்.. புடவை விஷயம் மட்டும் சீக்கிரம் சொல்லிட்டு போனை வையுங்க..”

நீ எப்பவுமே தப்பாதான்  கணக்குப் பண்ணுவே.. என் தங்கைக்கு  நீன்னா உசுரு தெரியுமா… கல்யாணத்துக்கு புடவைன்னு  கட்டினா நீ வாங்கித்தந்த புடவைதான் அவ நிச்சயம் கட்டுவா. ஆனா பாரு..

”என்ன ஆனா.. ஊவன்னா.. அந்தப் புடவைதானா அதுன்னு அவ கிட்டக்க வரதுக்குள்ளே நல்லாப் பார்த்து சீக்கிரம் சொல்லுங்களேன்..”

”அது.. அது.. வந்து.. என்னவோ தெரியலே.. இன்னிக்குன்னு பார்த்து சல்வார்’ல வந்துருக்கா.. இங்கேயிருந்து ஆபீஸ் போறாளோ என்னவோ.. என்னன்னு விசாரிக்கிறேன்.. இல்லே நீயே பேசறியா..

ஒண்ணும் வேணாம்.. போனை வையுங்க…

ஹெல்லோ.. ஹெல்லோ.. ஹெல்லோ..

படத்திற்கு நன்றி:

http://us2guntur.com/html/sarees.html

பதிவாசிரியரைப் பற்றி

14 thoughts on “மொபைல் டாக் ஷோ – 4

  1. மனிதர்களின் மனத்தைப் படம்பிடிக்கும் கதை.
    பெண்கள் பெண்களே, ஆண்கள் ஆண்களே, twain shall never meet.
    கண்ணைக் கசக்கியதையும் ஓமப் புகையையும் பொருத்தினீர்களா?
    மாமியை நினைத்ததைப் பொருத்தினீர்களா? 
    தமிங்கிலமாகி நின்றாய் வாழி,
    தமிழாகி நின்றாய் வாழி,
    படைப்பாற்றல் செழிப்பே வாழி.

  2. Good Story Sir

    Enjoyed the humour 

    A small doubt: 

    Translation of the word ‘Comment”  –  மறுமொழி   –  Correct ??

  3. எனக்குப் பிடித்த ஹலோ நகைச்சுவைத் தொகுப்பினை வழங்கிய திவாகர் அவர்களுக்கு நன்றி.

    ….. தேமொழி

  4. அழகான நகைச்சுவை. அன்றாட வாழ்வியல் சம்பவங்களில் இழையோடும் இயல்பான நகைச்சுவையை, எடுத்து, அழகு மிளிரத் தொடுத்து தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  5. அருமை திவாகர். பெண்களின் குணத்தை அப்படியே சித்தரித்திரிக்கின்றாய். தொடரட்டும் உன் கைபேசி உரையாடல். மனோகரன்

  6. Pennin manathai padiththu, avangalukku pidiththa maathiri ezhuthi irukkireerkaL.

    ஹோமப்புகைப் பக்கத்துல ரொம்ப நேரம் இருந்தா எல்லாருக்குமே அவங்க கண்ணுங்க அழறா மாதிரிதான் இருக்கும்
    super

    Sridevi

  7. ரசித்துப் படித்து கருத்துப் பதித்த நல்லிதயங்கள் அனைத்துக்கும் என் மனமார்ந்த நன்றி!

    அன்புடன்
    திவாகர்

  8. ஹ;லோ   ஹ;லோ    என்ன திவாகர்ஜி      பெண்களை  அப்படியே    படம் பிடிக்கிறீர்கள்?  சரி  சமயம் கிடைக்கும் போது ஆண்களையும் படம் பிடித்து போடுங்கள் .பேலன்ஸ்  வேண்டாமா ?    இன்னொரு ஹலோ எப்போ ? காரடையான்
    நோம்பு வருகிறதே  ,,,,, 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *