தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) (3)

3

திவாகர்

தேவன் ஒரு சகாப்தம் (1)

தேவன் ஒரு சகாப்தம் (2)

கதாநாயகன் முதன்முதலில் நூலகத்தில் கதாநாயகியைப் பார்க்கிறான் என்று சொன்னேன் இல்லையா.. இந்த லைப்ரேரியன் (நூலகர் என்றெல்லாம் தேவன் எழுதமாட்டார்) பற்றி முதல் பக்கத்திலேயே விமர்சிப்பார் பாருங்களேன்.. இவரைப் போல நிறைய ஆசாமிகளை நாம் வாழ்க்கையில் சந்தித்து வருகிறோம் என்றே நமக்குத் தோன்றும்.

கலாசாலை லைப்ரரியின் ஜன்னலைத் திறந்த லைப்ரேரியன் கோவிந்தராவின் பசிக்களை மிகுந்த முகத்தில் அனல்காற்று வீசியது. அதன் சிடுசிடுப்பு இன்னும் சற்று முதிர்ந்தது. எதிரே மலைப்பாம்பு போல் வளைந்து கிடந்த ரஸ்தாவில், ஜலம் அசைவது போன்ற பொய்த்தோற்றந்தான் தென்பட்டது.” ஒன்றரை மணிமுதல் இரண்டேகால் மணிவரை லைப்ரேரியன் சிற்றுண்டி வேளை.”

மேலும் அவரைப் பற்றி நமக்கு சுவை கூடச் சொல்கிறார். இந்தப் பசிவேளையில் லைப்ரரியில்

”எதைக் கேட்டாலும் இல்லைதான் அப்போது, யார் கேட்டாலும் கிடையாதுதான்.. பீரங்கி வாயிலே வெளிப்படும் குண்டின் உத்வேகம் இங்கே வெட்கிப் போகும்”

இப்படித்தான் கதையை ஆரம்பிக்கிறார் தேவன். இப்போதே இந்த லைப்ரேரியன் பற்றி சற்று தெரிந்திருக்கும்.. இப்படிப்பட்ட மகோன்னத வேளையில் நம் கதாநாயகி வரவு அங்கே நிகழ்கிறது.

”ஸார் ப்ளீஸ்! “ என்றது இனிமை ததும்பிய குரல். அவள்தான் பேசினாள்.

இருண்ட வானத்தில் பளிச்சிட்ட கொடி மின்னல் போல ஒரு புன்சிரிப்பை வருவித்துக் கொண்டு “என்ன?” என்றார் ராவ்ஜி. இந்த மகதாச்சரியத்தைக் காணும் பதம் பெற்ற ஆத்மா வேறொன்றும் இருந்தது.”

அந்த மாபெரும் ஆச்சரியத்தைக் கண்டவன் நம் கதாநாயகனே.. அதே போல நடராஜன் மணியை தேவன் வர்ணிக்கும்போது

குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும்,காதை அறுத்தாலும் அறுக்கும்’ என்கிறபடி மணி உதவி செய்கிறேன் என்றால் தாஸானுதாஸனாக இருப்பான். ஆளைக் கவிழ்ப்பதென்று சங்கல்பம் செய்துகொண்டால் மண்ணைப் போட்டு மூடிவிட்டுத்தான் உட்காருவான்.

அதே போல நடராஜன் ஜானகியோடு ரயில் பிரயாணம் செய்யும்போதும் தேவன் நமக்கு எப்படித் தெரிவிக்கிறார் பாருங்கள்.

(ரயில் பெட்டியில் நடராஜன்) ”உள்ளே நுழைந்ததும் ஆண் சிங்கம் பிடரியைச் சிலிர்த்துத் தலையைத் தூக்கிப் பார்ப்பது போல இருபக்கமும் பார்த்தான். பிறகு ஜானகி இருக்கும் திக்கை நோக்கி நடந்தான். ‘திக்திக்’ என்று அடித்துக் கொண்டது ஜானகியின் நெஞ்சம். மங்களம் அவனை வேல் விழிகள் கொண்டு கண்ணகி தேவியானவள் பாண்டியனை விழித்தது போல குரோதமாகப் பார்த்தாள்.”

இப்படி உவமையாகச் சொல்லிக் கொண்டு வருவதில் ஒரு சௌகரியம் வாசகர்களுக்குக் கிட்டி விடுகிறது. இந்தப் பாத்திரம் இப்படிப்பட்டது என்பதையும் வாசகர் மனம் உடனடியாக ஏற்றுக்கொண்டு விடுகிறது. வாசகர்களும் எங்கெல்லாம் அந்தப் பாத்திரம் வருகிறதோ அதற்கேற்றாற்போல தங்கள் மனநிலையை வைத்துக் கொண்டு படிக்கிற சௌகரியமும் ஏற்படுகிறது.

இன்னும் சில ‘தேவ’ உவமைகளை மட்டும் தருகிறேன்.

*****

கஷ்டப்படும் ஆத்மா கஷ்டப்பட்டே தீரவேண்டும் என்ற நியதியின்படி மங்களம் இல்லாதபோதும் கூட விச்ராந்தியாயிருக்க முடியாமல் இவர் பிடியில் திணறினான். (ஜகதீசன்)

******

வந்து சேர்ந்த நடராஜனுடைய ஆனந்தமும் திருப்தியும் முன்பு ராஜசூய யாகத்தை முடித்த யுதிர்ஷ்ட்ரனுக்கும் அச்வமேத யாதத்தை நடத்திய ராகவனுக்கும் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே

******

பொட்டை வெளியில் எரிக்கும் வெய்யிலில் நான்கு சொட்டு மழைத்துளிகள் போல் வந்த அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தான் (நடராஜன்).

******

துஷ்டனைக் கண்டால் தூர விலகுகிறதும், அது பயப்படுகிறது என்று துஷ்டன் எண்ணிக்கொண்டு கொக்கரிக்கிறதும் வழக்கமாக நடப்பதுதானே காலேஜில் நடராஜன் ஒரு காலத்திலும் சந்துருவை நெருங்கினவன் இல்லை.

******

பல்வரிசை காட்டிக் கைகொட்டி ஆர்ப்பரிப்பது போல சமுத்திர அலைகள் ஓயாது எழும்புவதும் குனிவதுமாக இருந்தன (திருச்செந்தூர்).

******

பகலிலேயே இருள் கவிந்திருக்கும் சுப்புரத்தினத்தின் கிருஹம்

இரவில் துஷ்ட மிருகத்தின் குகை போல காணப்பட்டது.(சந்துருவின் வீடு)

******

சூரியன் மாயவரம் வள்ளலார் கோயில் வீதியில் தினம் தினம் உதயமாகும்போது முதல்முதலாகப் பட்டுபுடவையை மடிசார் வைத்துக் கட்டிக்கொண்டு முன் வாசலில் அழகாக மாக்கோலம் போடும் ஒரு பெண்மணியைத்தான் பார்ப்பது வழக்கம். பார்த்தவுடன் உள்ளம் பூரித்துத் தன் கதிர்களைத் தெருவெல்லாம் வாரி இறைப்பான். அந்தப் பெண்ணும் அவனைப் பார்த்துப் பல்வரிசையைக் காட்டிவிட்டு, தன் வேலையில் முனைவாள் (இது மணியின் மனைவியைப் பற்றி உவமையோடு ஒரு அறிமுகம்)

*********

பெரிய சோம்பேறி; நாட்டுப்புறத்துப் பெருச்சாளி’ என்கிற நினைப்புடன் ஹரன் அவரைப் பார்த்தார். அவர் ஹரனை, ‘ஒன்றுக்கும் உதவாத உதியமரம், டெல்லியில் வளர்ந்ததனால் விறைக்கிறது’ என்ற பாவத்தில் பார்த்தார். (மணியின் தந்தை வீட்டில் நடராஜனின் தந்தை)

*******

தன் தலைக்கு மேல் முழங்கும் பேரிடிகளைப் பற்றிக் கலங்கியவாறு வரும்போது இடிகளுக்கிடையே தோன்றிய பாதை மீது ஒளி வீசி வழி காட்டும் மின்வெட்டுகளைப் போன்றதொரு சந்தர்ப்பமும் அவனுக்கு ஏற்பட்டது.

*******

சிவாக்ஞையின் பேரிலே ஆவிர்ப்பவித்த அக்கினி வீரபத்திரமூர்த்தியும், துஷ்டநிக்கிரகத்துக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட நரஸிம்ம ஸ்வாமியும் அப்போது அவருக்கு நிகராக முடியாது (ஹரனின் கோபம் பற்றி நடராஜன் நினைப்பது).

*******

சுக்குக் கஷாயத்தில் விடப்பட்ட விளக்கெண்ணையை விடியற்கால வேளையில் சிறுவர்கள் நோக்கும் அருவருப்புடன் ஜகம் கிழவரைப் பார்த்தாள்.

இந்த சுக்குக் கஷாய அனுபவம் சிறிய வயதில் எனக்கும் கூட ஏற்பட்டது உண்டு. ஊரிலே தாத்தாவின் இந்த சுகாதார ஏற்பாடு இப்போது நினைத்தாலும் ‘வயிற்றைக் கலக்கும்”.

’மிஸ் ஜானகியின்’ கதை எல்லோருக்கும் பிடிக்கும் கதை. மிகப் பெரிய திருப்பங்களோ, சோகமயமோ, அந்தக் கால படங்களில் வருவது போல வண்டி வண்டியாக வசனங்களோ இல்லாத கதை. இத்தனைக்கும் இது  எட்டு/பத்து நாட்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்து விவரிக்கப் பட்டிருக்கும் கதைதான் என்பதால்  விறுவிறுப்பாக போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இந்த எட்டு நாட்கள் கதையிலும் ஒரு சில பாத்திரங்களுக்கு ஆயுள் பூராவுமாக நடக்கிற சங்கதிகளை மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுவது என்பது தேவனுக்கு கை வந்த கலை. அதுவும் திருச்செந்தூரிலேயே கதை முக்கால்வாசி நடப்பதால், அங்கே அருளாட்சி புரியும் எந்தை முருகனைப் பற்றிய வர்ணனைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அள்ளி வழங்குவதில் தேவனுக்கு இணை தேவனேதான்.

தேவன் இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ என்று சொல்லப்படும் உத்திகளை மிக நயமாக இந்தக் கதையில் கையாண்டுள்ளார். சினிமாவில் இப்படி காண்பிப்பது மிகச் சுலபம். எழுத்தில் எப்படி காண்பிப்பது. தேவனின் கதைகளைப் படித்தால் அதன் லாவகம் தெரிந்து விடும்.

இந்த மிஸ் ஜானகியில் ஒரு நாயும் வரும். டைகர் என்ற பெயருடன் திருச்செந்தூர் கீழப்புதுத்தெருவில் ‘அநியாயமாக’  யாரையும் நுழையவிடாமல் அழிச்சாட்டியம் பண்ணும். நாயை மிக விசேஷமாக வர்ணனை செய்வார் தேவன். நாட்டிய மணி தெலுங்கு பங்காருவின் வீட்டில் பாதுகாப்புக்காக அவர் தந்தையால் வளர்க்கப்படும் டைகரின் பாவனைகளுக்கும் அதன் ‘உர்..உர்.. பாஷைகளுக்கு தேவன் விளக்கம் சொல்லும் அழகே அழகே.. (டைகர் என்ற பெயரை வைத்துக்கொண்டு பூனை போல இருக்கும் சுபாவம் அதனுடையதல்ல, கூடவே அன்று சிறிது விச்ராந்தியாக அவிழ்த்துவிடப்பட்டிருந்ததால் கீழப்புதுத்தெருவின் ஒரு கோடிமுதல் மற்றொரு கோடி வரை வாக்கிங் செய்துவிட்டு ஒரு முனையில் நின்று இந்த உலகத்தில் நாய் இனத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது)

இப்படிப்பட்ட டைகரின் ஒரு ருசிகரமான விளையாட்டை மட்டும் தேவன் எழுத்துக்களால் படித்து விட்டு நாம் மிஸ் ஜானகியை விட்டு விலகி கல்யாணியை சந்திப்போமாக.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) (3)

  1. மிஸ். ஜானகி கதையை நீங்கள் விவரித்திருக்கும் விதம்….அதில் தேவன் அவர்கள் அள்ளித் தெளித்திருக்கும் உவமைகளை அடுக்கியிருக்கும் பாங்கு…நெஞ்சைவிட்டு நீங்க மறுக்கின்றது. அடுத்து கல்யாணியைப் பற்றி என்ன எழுதப்போகிறீர்கள்… என்று அறிய இப்போதே ஆவல் பொங்குகின்றது…. அருமையான தொடர். நன்றி!

    -மேகலா

  2. ‘ஆனால் இந்த எட்டு நாட்கள் கதையிலும் ஒரு சில பாத்திரங்களுக்கு ஆயுள் பூராவுமாக நடக்கிற சங்கதிகளை மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுவது என்பது தேவனுக்கு கை வந்த கலை.’
    ~ சரியாக சொன்னீர்கள், திவாகர். தேவர்நாமா நன்றாக போய்க்கொண்டிருக்கிறது. எல்லாம் உமது கைவண்ணம். வாழ்க.

  3. ஆஹா!!! அபாரம்!!.  என் ஆதர்ச எழுத்தாளர்களுள் ஒருவர் திரு. தேவன். அநேகமாக எல்லாக் கதையையும் படித்திருக்கிறேன். மிஸ்.ஜானகியை கிட்டத்தட்ட பக்கத்துக்குப் பக்கம் மனப்பாடமே செய்து விட்டிருக்கிறேன். பேச்சுக்கு நடுநடுவே, அதன் வசனங்களை உவமை போல் உபயோகிப்பதும் வழக்கம். உதாரணமாக,

    ‘ஒருத்தன் இந்த வீட்டுக்குள் வந்துவிடுவானா, வந்தால் அவனுக்குத் திரும்பிப் போக வழி தெரிய வேண்டாமா?’

    ‘அஸ்வமேதயாகம் பண்ணிப்பிடறேங்கிறேள், நிறுத்திப்பிடறேங்கிறேள்’. 

    ‘கடிதாசிக்கணக்கை வைத்துகொண்டு, கல்யாணம் நிச்சயம் செய்யப்போகிறீர்களாக்கும்!!, இது தெரிந்தால் எங்கண்ணா தினம் ஒரு கார்டு போடுவானே’.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.  ஒரிஜினல் கதையை ‘பைண்ட்’ செய்து வைத்திருப்பதால், ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும், வரும் குறிப்புகளையும் ரசித்துப் படிப்போம்(அவசரம் என்றால் ஒரு தந்தி அடித்து வையுங்கள். ரொம்ப அவசரம் என்றால் கூடவே ஒரு கடிதாசியும் போட்டுவிடுங்கள்).

    அவரது எழுத்துக்களை தாங்கள் கையாண்டிருக்கும் லாகவம் மிக அருமை.  தங்கள் எழுத்துக்கள் அவரது எழுத்துக்களை மேலும் மேலும்   பெருமைப்படுத்துகின்றன. டைகரின் ருசிகரமான விளையாட்டு  என்று நீங்கள் சொல்லியிருப்பதை ஊகிக்க முடிகிறது. சஸ்பென்ஸை  நானும் ஏற்று ஆவலோடு காத்திருக்கிறேன். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *