தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – 4

4

திவாகர்

தேவன் ஒரு சகாப்தம் – (3)

ஆந்திர நாட்டியமணி பங்காரு முந்தைய நாளிரவு தன் காதலனுடன் ஓடிப்போவதாக திட்டமிட அதற்கு உதவுவதற்கு நடராஜனின் உதவியை நாடினாலும், அந்த உதவி கிடைக்காமல் போக, விஷயம் தெரியாத பங்காரு வேறு வழியில்லாமல் வீட்டை விட்டு ஓடி நடராஜனின் வீட்டில் வந்து ஒதுங்குகிறாள். நடராஜனும் அவன் நண்பன் மணியும் வீட்டுக்குள் வந்து அந்தப் பெண்ணை சமாதானப்படுத்தி அனுப்பி வைக்க முயல்கின்றனர். அதே சமயம் டில்லியிலிருந்து கோபத்துடன் அப்பா ஹரன் மகனைத் தேடிக்கொண்டு  நடராஜன் வீட்டுக்கு வர, பதட்டப்படும் நண்பர்கள் பங்காருவை சமாதானப்படுத்தி அவளை பீரோவுக்கு பின்னால் ஒளிந்து கொள்ள வைத்து அப்பாவை கொல்லைப்பக்கம் உள்ள கிணற்றடிக்குக் குளிப்பதற்காக அனுப்புகிறான் நடராஜன். இந்த பங்காருவை அப்பா வருவதற்குள் எப்படியும் வெளியேற்றவேண்டுமே என்ற கவலையில் அவளை வெளியே வரச்சொல்லிப் பேச முயலும்போது மறுபடியும் அறைக் கதவு திறந்துகொள்ள இந்தமுறை அரக்கப்பரக்க உள்ளே வருவது வில்லங்கம் செய்யும் நாகநாத ஐயர்தான். இனி நடப்பதை தேவன் கை மூலம் பார்ப்போம்.

வாசலுக்கு வெளியே வள்வள் என்று நாய் குரைப்பது, உர்..உர்.. என்று உறுமுவதும், அதைத் தொடர்ந்து, சீ சீ, சட், பு..’ என்று யாரோ கத்துவதும் முன்னோக்கி ஓடிவருவதும் கேட்டது. சற்றும் எதிர்பாராத வகையில் நாகநாதய்யர் உளறி அடித்துக்கொண்டு பஞ்சகச்சம் ஐந்து பக்கங்களில் பறக்க உள்ளே ஓடி வந்தார்; அவர் கால்களை நோக்கி எழும்பிக் குதித்துக் கொண்டு ‘டைகர்’ பின் தொடர்ந்தது. இந்தக் காட்சி தென்படுவதற்கு முன்பே ‘பங்காரு’ மின்னற்கொடி போல, பீரோவுக்குப் பின்னால் தனது யதாஸ்தானத்துக்குள் சென்று பதுங்கிக் கொண்டுவிட்டாள். அதைக் கவனித்த நடராஜனும் மணியும் தலைக்கொரு நீண்ட பெருமூச்சு விட்டுக்கொண்டு, மேலே நடக்கவேண்டியது என்ன வென்று கவனிக்கத் தலைப்பட்டனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாகநாதய்யர் இங்கே எப்படி வந்து சேர்ந்தார் என்ற காரண காரியங்களைச் சாவகாசமாக ஆராய்ச்சிச் செய்வதற்கு வைத்துக்கொண்டு, அடுத்த ஐந்தாறு நிமிஷங்களில் நடந்ததோர் அகோரமான யுத்தத்தை நாம் வர்ணித்துதான் ஆக வேண்டும். டைகரின் உண்மைச் சொரூபத்தை நாகநாதய்யரும் நடராஜனும் அறிவார்கள். மணி அறியமாட்டான். அறிந்திருந்த நாகநாதய்யரே அதன் வாலையும் மிதித்து அலட்சிய பாவத்துடன் வந்து விட்டதாலேயே ’டைகரின்’ கடுங்கோபத்துக்கு ஆளாகி, இப்போது ஓடி வரும் நிலைக்கு வந்தார். எந்த வீட்டுக்குள் காலை வைக்கக்கூடாது என்று பிரதிக்ஞை செய்திருந்தாரோ அங்கேயே வரவும், யாருடன் முகாலோபனமே வைத்துக்கொள்வதில்லை என்று விரதம் கொண்டிருந்தாரோ, அவனிடமே அடைக்கலம் புகுந்து கொள்ளவேண்டிய அவசியமும் அவசரமும் நேர்ந்து விட்டன அவருக்கு!

‘டைகர்’ தன் வாயைத் திறந்து சிவந்த நாக்கையும் இரு வரிசைப் பற்களையும் காட்டி உ..ற்..ற்.. என்று வல்லின ‘ற’னா போட்டுத் தன் கோபத்தை வெளியிட்டது. பிறகு பாய்ந்தது. மனிதனுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படும் காலத்தில் அசாத்தியமான காரியங்களையும் யத்தனிப்பான் என்பதற்கு அத்தாட்சியாக – இலங்கையை நோக்கி ஆஞ்சநேயப்பெருமான் கடல் தாண்டியதையும் லேசாக ஞாபகப்படுத்தியவாறு, நாகநாதய்யர் அங்கிருந்த மேஜை மீது தாவினார். அந்த அற்ப மேஜை கனமற்றதாகையால் இவ்வளவு கனத்த மனிதரைத் தாங்கமாட்டாது பின்னால் வந்த ‘டைகர்’ மீது சாய்ந்து வைத்தது.

“யாரப்பா இவர்கள்”? என்றான் மணி

“இரண்டு பேர்களுமே நம் விரோதிகள்தான்!” என்று நடராஜன் ஒதுங்கி, தற்காப்புக்காக ஒரு தலையணையைத் தூக்கிக்கொண்டான்.

முதுகில் அடி வாங்கிக்கொண்ட டைகர் கீழே விழுந்து விட்ட நாகநாதய்யரைப் பழி வாங்கியே தீருவதென்ற வைராக்கியத்துடன் அவர் பின்புறத்தை நோக்கிப் பாய்ந்தது. தக்ஷணமே நடராஜன் வீசிவிட்ட தலையணையால் ஓர் அடியும் வாங்கிக்கொண்டது.

 

நாகநாதய்யர் சுற்றி சுற்றி ஓடினார். ஒரு போது நடராஜன் பின்னாலும், மறுபோது மணியின் பின்னாலும் ஒண்டினார். சோழனைப் பற்றிய பிரம்மஹத்திபோல் டைகர் எங்கேயும் விடாமல் துரத்தியது. ’உற் உற்’ என்று தன் பாஷையில் பேசி அவர் வயிற்றைக் கலக்கியது. மணி ஒரு கட்டை மணையை எடுத்துக் குறிபார்த்து டைகரின் மீது வீசினான். அப்போதே யமலோகத்தில் யமஸதஸில் யமக் கணக்கணான சித்திரகுப்தன் வேகமாக நோட்டைப் புரட்டினான். யம ஜூரர்களான பன்னிரண்டு க்ஷபணாள்களும் ஆஜராகத்தான் இருந்தார்கள். எனினும் ‘டைகரின்’ ஆயுள் தீரவில்லை என்று சித்திரகுப்தன் தலையை ஆட்டிவிட்டான். கட்டைமணை குறி தவறி  சுவரில் ‘படீரென்று’ இடித்து, டைகரின் கோபத்தையும் பயங்கரத்தையும் தூண்டிவிட்டது. மேலும் அதிவேகமாக அது துரத்த, நாகநாதய்யர் துரிதமாக ஓட, பழைய நாடகமே துரித காலத்தில் நடைபெறலாயிற்று. ஆனால் ஒரு பெருச்சாளியை ஓர் அறையில் பூட்டிச் சுற்றுச் சுற்றி விரட்டினால் எத்தனை நாழி அதன் பலம் தாங்கும். நாகநாதய்யருக்கு பெரும் சோர்வு பிறந்தது. முன்னொரு காலத்தில் தமக்கு இருப்பதாக் நினைத்த ‘பிளட்பிரஷர்’ இப்போதே வந்துவிட்டதாக எண்ணி, கஜேந்திரன் ‘ஏ ஆதிமூலமே!” என்று கத்தியது போல், ‘ஹே திரிபுரசுந்தரி! இனித் தாங்காது! என்னை நீ ஏற்றுக்கொள்ளடீ” என்று கதறிவிட்டுத் தொப்பென்று கீழே உட்கார்ந்துகொண்டு பெருமூச்சு விடலானார்.

நிராயுதபாணிகளான நடராஜனும் மணியும் இரு மூலைகளில் செயலற்று நின்றார்கள்.

‘டைகர்’ ஒருமுறை சுற்றிலும் பார்த்துக்கொண்டு தயங்கியது. தனது வெற்றி என்று கர்ஜனை செய்தது. மறுகணம் நாகநாதய்யர் குரல் வளையை நோக்கி அதி உத்ஸாகத்துடன் பாய்ந்தது. சித்திரகுப்தன் மறுபடி நோட்டைப் புரட்டினான். யம ஜூரர்களும் மறுபடி தொண்டையைக் கனைத்து விட்டுக்கொண்டார்கள். ஆனால் இப்போதும் முன் போலவே தலையை ஆட்டிவிட்டான் யமக்கணக்கன்.

“ஆச்சு! நாகநாதய்யர் காரியம் தீர்ந்தது!” என நான்கு ஆத்மாக்கள் நினைத்தபோது பீரோவின் மறைவிலிருந்து சாக்ஷாத் திரிபுரசுந்தரியே போல் வெளிப்பட்டாள் ‘பங்காரு’.

“ஏய்! டைகர்.. சீ.. போகிறாயா.. என்ன!” என்று அதட்டினாள். சினிமாக் காட்சிகளில் ஓங்கின கை ஓங்கினபடி நிற்பதை மணியும் நடராஜனும் பார்த்திருக்கிறார்கள். இங்கே பாய்ந்த நாய் பாய்ந்தபடியே நின்றுவிட்டதை தத்ரூபமாகக் கண்டார்கள். டைகருக்கு ஷாக் அடித்திருந்தது. காண்பது நிஜமா, கேட்பது உண்மையா என்று அது பிரமித்தது. “நீ போ! போய்விடு!” என்றாள் பங்காரு. சப்தநாடியும் அடங்கியதாக, டைகர் சடேலென்று திரும்பியது. வாசலை நோக்கி நகர்ந்தது.

அறுபது வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட நகைச்சுவையும் திகிலும் கலந்த இந்த ரசமயமான் நிகழ்ச்சியின் வர்ணனை இன்னமும் தேவனின் வாசக ரசிகர்களுக்கு விருந்துதான். இந்த நிகழ்ச்சியில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பாகக் காண்பித்திருப்பார் தேவன். வாழ்க்கையின் எந்த சந்தர்ப்பத்திலும் எந்த நிலையிலும் எந்த ஆபத்திலும் யாரேனும் நினைவு வைத்துக்கொண்டு ஆண்டவனை நோக்கிக் கூவினால், அவன் கயவனாக இருந்தாலும் கூட ஆண்டவன் பேதம் இல்லாமல் வந்து ரட்சிப்பதாக ‘பங்காரு’ பாத்திரத்தின் மூலம் நம் அனைவருக்கும் உணர்த்துகிறார் பாருங்களேன். நாகாநாதய்யர் இதன் பின்னரும் கீழ்மையாகச் சென்று தன்னைக் காப்பாற்றிய பங்காருவையே அவள் தந்தையிடம் காட்டிக் கொடுப்பதோடு சபையிலும் கேவலமாக நிந்திப்பார் என்பது வேறு விஷயம். கேவலமான எண்ணம் கொண்ட மாநிடர் திருந்துவதில்லை என்பதற்கும் கடவுளின் கருணைக்கும் என்ன சம்பந்தம்.. ராவணனும் விபீஷணனும் கடவுளைப் பொறுத்தவரை ஒன்றுதானே..

தேவனுக்கு தெய்வ பக்தி அதிகம். முருகன் அவருக்கு ஆத்மார்த்த தெய்வம் என்றால் அம்பிகை அவர் என்றென்றும் கொண்டாடும் தெய்வம். அந்த அம்பிகை தன்னையே வணங்கிகொண்டு தன்னையே அண்டி வருபவர்களைக் கைவிடுவதில்லை என்பதை வெகு அழகாக தன் ‘கல்யாணி’ கதையில் காண்பிப்பார். கடைசியில் வேறு வழியில்லாமல் கல்யாணியை கைது செய்துதான் தீரவேண்டும் என்று வரும் போலீஸ்காரர்களை அப்படி செய்யவிடாமல் திரும்பிப் போக வைப்பதும் அம்பிகையின் அருளாகவே காட்டுவார் தேவன்..

மனது சரியாக நல்ல நகைச்சுவை கதை படிக்கவேண்டும் என்று விருப்பம் உள்ள இளைஞர்களுக்கு நான் சிபாரிசு செய்வது முதலில் ‘கல்யாணி’ கதையைத்தான். கல்யாணியின் கதையில் வரும் பாத்திரங்கள் யாவும் நமக்குத் தெரிந்தவர்களாக இருப்பதாக பட்டிருந்தால் அதற்கு தேவனைத்தான் வெகுவாகப் பாராட்டவேண்டும். கல்யாணியின் பாத்திரங்கள் அனைவரும் காலாகாலத்துக்கும் எங்காவது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான். இப்போதும் பல குடும்பங்களில் கல்யாணியைப் போன்றோர்களும், சுந்தரம் நரசிம்மன் போன்றோர்களும் இருப்பதை நானே கவனித்திருக்கிறேன். மனித மனங்களை மிகத் திறமையான முறையில் படித்திருந்த தேவனால் மட்டுமே இத்தகைய பாத்திரங்களை அமைக்கமுடியுமோ என்னவோ.. இருந்தும் கல்யாணியையும் சற்று கேட்போமே.. சொன்னது சரிதானா’ என?

(தொடர்ந்து வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – 4

  1. ஆஹா, இப்போத் தான் ரசிச்சுப் படிச்சு முடிச்சேன். மறுபடியும் இங்கே.  திகட்டாத நகைச்சுவைன்னா தேவனுடையது மட்டுமே.   கல்யாணியிலும் சுந்தரம் போலீஸ் ஸ்டேஷனில் விசாரணையின் போது நடந்துக்கறதை விவரிச்சு எழுதுங்க.  சிரிப்பை அடக்க முடியாது.  அதோடு நாக லக்ஷ்மியை நாக சர்ப்பம்னு சொல்வது.  நாகலக்ஷ்மி “கட்டால போறவனே”  எனத் திட்டுவதையும் கோபம் அதிகமாகிப் பேச்சு வராமல், “கட்டால,  “கட்” என நாக லக்ஷ்மி தடுமாறுவதையும் அழகாகக் கண் எதிரே தோன்றும் சம்பவங்களாக விவரித்திருக்கும் அழகும். மிக நேர்த்தி! :)))))

  2. தேவன் அவர்களின் கதைகளை இந்தத் தலைமுறையினரும் அறிந்து கொள்ள இத்தொடர் பேருதவியாக இருக்கும் என்றே எண்ணுகின்றேன். ஆசிரியர் திவாகர் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.
    தேவனின் கதைகளை இணையம் வழியாகப் படிக்க வாய்ப்புளதா? இருந்தால் அருள்கூர்ந்து தெரிவிக்கவும். நன்றி!

    –மேகலா

  3. டைகரும் நாகநத ஐய்யரும் போடும் சிரிப்பு நாடகம்,தேவனின் கைவண்ணம்
    ,
    அவர்து எழுத்தை மீண்டும் நீங்கள் தருவது மிகவும் மகிழ்ச்சி. நன்றி.
    சிரிக்க மாட்டேன் என்பவர்களையும் சிரிக்கவைத்துவிடும்.அற்புதமான கலஞரை
    படிப்பது நெகிழ்ச்சியும் கூட.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *