மேகலா இராமமூர்த்தி

சைவத் திருமுறைகளைப் பன்னிரெண்டாகப் பகுத்துள்ளனர் அருளாளர்கள். அவற்றில் பன்னிரெண்டாம் திருமுறையாக இடம்பெற்றிருப்பது சேக்கிழார் பெருமான் அருளிய ”பெரியபுராணம்” என்றுப் பரவலாக அறியப்படும் “திருத்தொண்டர் புராணம்” ஆகும்.

இத்திருத்தொண்டர் புராணம் மற்ற திருமுறைகளிலிருந்து பெரிதும் மாறுபட்டது. எவ்வாறெனின், மற்ற பதினோரு திருமுறைகளும் தங்கள் உள்ளங்கவர் கள்வனான சிவனைப் பற்றிய பாடல்களையும், அவனை அடைவதற்குரிய வழிகளான யோகம், இயமம், நியமம், தந்திரம் போன்றவற்றைப் பற்றியே அதிகம் குறிப்பிட்டிருக்க, சேக்கிழாரோ இவற்றினின்று முற்றிலும் மாறுபட்டு நேரடியாகத் தென்னாடுடைய சிவனைப் பாடாமல் அவன்பால் பக்தி கொண்டு முக்தியடைந்த அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாற்றையும், அவர்தம் ஈடில்லாச் சிவபக்தியையும், தொண்டையும் புகழ்ந்தேத்தியுள்ளார். நாயன்மார்கள்பால் அவர் கொண்டுள்ள எல்லையில்லா பக்தியையும், காதலையும் இஃது புலப்படுத்துகின்றது எனலாம்.

நம்பி ஆரூரராகிய சுந்தரர் இயற்றிய நூலான ’திருத்தொண்டத் தொகை’யை அடிப்படையாக வைத்து இத்திருத்தொண்டர் புராணத்தைச் சேக்கிழார் இயற்றியுள்ளார் என்பது அவர் கூற்றாகவே திருத்தொண்டர் புராணத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் விரித்துக் கூறப்பட்டுள்ள அறுபத்துமூன்று நாயன்மார்களின் வரலாறும் அற்புதமானவை; அவர்தம் ஈடு இணையற்ற சிவநேசத்தையும், தன்னலமற்ற சிவத்தொண்டையும் சொல்பவை. அதில் ஒரு நாயனார் (பூசலார்) இறைவனுக்காகத் தன் மனத்திலேயே கோயில் எழுப்பினார்; மற்றொருவர் (சிறுத்தொண்டர்) இறைவன் கேட்டான் என்பதற்காகத் தன் மகனையே கொன்று பிள்ளைக்கறி சமைத்தார். இன்னொருவரோ (காரைக்காலம்மையார்) பேயுருக் கொண்டு சிவபக்தி செலுத்தி இறைவனின் இணையடிகளின் அருகிலேயே எப்போதும் அமர்ந்திருக்கும் அருளைப் பெற்றார். இப்படி நாயன்மார்கள் அனைவரின் பெருமையையும் போற்றிப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாள்களும், தாள்களும் போதா.

ஆகவே, இத்தகைய ஈடில்லாச் சிவநேசச் செல்வர்களில் யாரைப்பற்றி எழுதுவது என யோசிக்கும் வேளையில், அனைவர் உள்ளத்தையும் ஒருசேரக் கொள்ளை கொண்ட – ஆறே நாளில் இறைவனின் பரிபுரண அன்பிற்குப் பாத்திரமான, சிவனையன்றி வேறு யாரையும் சிந்திக்காத, எத்தகைய பூசை முறைகளையோ, நியமங்களையோ அறியாதவராயினும் தன் ஒப்புவயர்வற்ற இறைக்காதலால் காளத்தியப்பனின் இதயத்தில் நீங்கா இடம்பெற்றுவிட்ட, கள்ளம் கபடமற்ற ஓர் பாமரச் சிவபக்தர் நம் கண்முன் வந்து நிற்கின்றார். மனிதருள் மாணிக்கமான அச்சிவநேசரின் வரலாற்றைச் சிந்திப்பதே இக்கட்டுரையின் நோக்கம். (அவர் வரலாற்றை அறிந்திராதவர் இரார். ஆயினும் சிவநேசச் செல்வர்களின் வரலாற்றையும், அவர்களைப் பற்றிய செய்திகளையும் மீண்டும் ஒருமுறை எண்ணி மகிழ்வதில் தவறில்லைதானே?)

இனி அவர் வரலாற்றிற்குச் செல்வோம்….

 

திருக்காளத்தி (காளஹஸ்தி என்று இன்று நாம் அழைக்கின்ற ஆந்திராவிலுள்ள பகுதி) மலையின் வடக்கே சோலைகளும், பூக்கள் நிறைந்த குளங்களும் உள்ள இயற்கை எழில்கொஞ்சும் ஓர் குறிஞ்சி நிலப்பகுதி, அதன் பெயர் ‘பொத்தப்பி நாடு’ என்பதாகும். அங்கே மதில்களால் சூழப்பட்ட ’உடுப்பூர்’ என்றொரு அழகிய ஊர். குன்றவர் என்றும் வேட்டுவர் என்றும் குறவர் என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் குறிஞ்சி நில மக்கள் நிறைந்த பகுதி அது. அங்கு வாழ்ந்துவரும் வேட்டுவச் சிறுவர்கள் அச்சம் என்பதனையே அறியாதவராய்ப் புலிக்குட்டிகளோடும், யானைக் கன்றுகளோடும் விளையாடிக் கொண்டிருப்பர். சிறுமியரோ பெண் மான்களோடு விளையாடிக் களித்திருப்பர். இக்காட்சியைச் சேக்கிழார்,

”வன்புலிக் குருளை யோடும் வயக்கரிக் கன்றினோடும்
புன்தலைச் சிறுமகார்கள் புரிந்து உடன் ஆடல்அன்றி,
அன்பு உறு காதல் கூர அணையும்மான் பிணைகளோடும்
இன்பு உற மருவிஆடும் எயிற்றியர் மகளிர் எங்கும்.”  என வியந்து கூறுகின்றார்.

இத்தகைய வீர வேடர்குல மக்கள் நிறைந்து வாழ்ந்துவந்த அப்பகுதிக்குத் தலைவனாய் விளங்கியவன் வீரமும், ஆற்றலும் நிரம்பிய “நாகன்” என்பான். அவனுடைய வாழ்க்கைத் துணைவியின் பெயர் ”தத்தை”. பல வருடங்கள் கடந்த பின்பும் இல்லறத்தின் பயனாகிய மக்கட்பேறு இல்லாத காரணத்தினால் பெரிதும் வருத்தமுற்றிருந்த அவ்விருவரும் தங்கள் குலதெய்வமான செவ்வேள் முருகனுக்கு நேர்த்திக் கடன்கள் செலுத்தியும், குரவைக் கூத்தாடியும், திருவிழா எடுத்தும் மக்கட்பேறு வேண்டித் தொழுதனர்.

பின்பு, குறிஞ்சிக் கோமானாகிய முருகனின் அருளாலே தத்தை ஓர் அழகான ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அதுகண்ட குறவர் குடியினர் தம் தலைவனுக்கு மகப்பேறு கிடைத்த மகிழ்ச்சியில் மணிகளையும், முத்துக்களையும் இரவலர்க்கு வாரி வழங்கி ஆனந்தக் கூத்தாடினர். நாகனும் அளவிலா ஆனந்தம் கொண்டு ’ஓர் கரிய மலையானது காள மேகத்தை (கரிய மேகம்) மேலே கொண்டு தாங்கியது போல’த் தன் புதல்வனை வாரி அணைத்துக் கொண்டான். அக்குழந்தை தூக்குவதற்குத் திண்ணென்று (கனமாக) இருந்தபடியால் இவனைத் ’திண்ணன்’ என்றழைப்போம் என்று நாகன் தன் மகனுக்குப் அப்பெயரைச் சூட்டி மகிழ்ந்தான். அத்தெய்வக் குழந்தையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து தளர்நடைப் பருவம் அடைந்தது. கங்கையினும் புனிதம் வாய்ந்த தன் திருவாய்நீர் ஒழுக மழலைமொழி பேசி அன்னையையும், தந்தையையும் மகிழ்வித்தது. இவ்வாறு அருமையாக வளர்க்கப்பட்டுவந்த திண்ணன் பன்னிரெண்டு வயது அடைந்ததும் சிலைத் தொழில் என்று அழைக்கப்படும் வேடுவர் குலத்தொழிலாகிய ‘வில்வித்தை’ கற்பதற்கு நல்ல முகூர்த்தம் குறிக்கப்பட்டது. பொதுவாக வில்வித்தைப் பயிற்சியை மாணாக்கர் முதன்முதலில் ஆரம்பிப்பதற்கு முன் அவ்வில்லிற்குச் செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்து பின் அம்மாணாக்கரின் கையில் வில்லைக் கொடுத்துப் பயிற்சியை ஆரம்பிப்பது வழக்கம். அதனை ’வில்விழா’ என்று வேடுவர்கள் விமரிசையாய்க் கொண்டாடுவர். அத்தகைய வில்விழாவை நடத்தித் திண்ணனின் விற்பயிற்சிகள் அவ்வேடர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

வில்வித்தை, மற்றும் பிற கருவிகளைக் கையாளுதல் ஆகியவற்றில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுத் தன் பதினாறு வயதிலேயே மாவீரராய் விளங்கினார் திண்ணனார்.

அவர் வாலிபப் பருவம் எய்திய காலத்தில் அவருடைய தந்தையான நாகன் முதுமைப் பருவத்தை அடைந்தான். அவனால் முன்புபோல் கொடிய காட்டு விலங்குகளான புலி, கரடி போன்றவற்றை வேட்டையாடி அழிக்க இயலவில்லை. அவை வேட்டுவர்களின் தினைப்புனங்களையெல்லாம் அழிக்கத்தொடங்கின. அதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான அம்மக்கள் தங்கள் தலைவனான நாகனிடம் இதுபற்றி முறையிடவே, அவனோ, ”நான் மூப்படைந்துவிட்டதனால் இனிமேல் என்னால் வேட்டையாட இயலாது. ஆகவே, என்னருமை மகனாகிய திண்ணனை நீங்கள் இனித் தலைவனாய்க் கொள்ளுங்கள், அவன் உங்களுக்கு உதவுவான்” எனக் கூறினான். வில்லேந்திய வேடர்களும் மகிழ்ந்து அதனை ஏற்கவே, உடனே நாகன் தன் மகனான திண்ணனை அழைத்து அவனை வேட்டைக்கு அனுப்ப முடிவு செய்தான். இஃது அவனுடைய கன்னிவேட்டையாதலால் (முதல்முறை வேட்டைக்குச் செல்வது) காடுவாழ் தெய்வங்களுக்கெல்லாம் படையலிட்டான். வேடர் குலத்துக்கே உரிய பல்வேறு அணிகலன்களும், வீரக்கழலும், பாதத்திலே செருப்பும் அணிந்து, தந்தையின் தாள்பணிந்து வேட்டைக்குக் கிளம்பினார் திண்ணனார். பெரிய வேடர் கூட்டமும் அவருடனே சென்றது.

யானைகள், பன்றிகள், கொடிய புலிகள் போன்ற விலங்குகளைக் காட்டிடைக் கண்டு அவைமீது அம்புமழை பொழிந்து அவற்றைக் கொன்றனர் வேடர்கள். ஆயினும் அவர்கள் எல்லா விலங்குகளையும் கொல்லவில்லை. குறிப்பாக யானைக் கன்றுகளையும், மற்ற விலங்குகளின் சிறிய குட்டிகளையும், கர்ப்பம் தரித்திருக்கும் பெண் விலங்குகளையும் அக்கொலைத் தொழில் வேடர்கள் கொல்லவில்லை என்கிறார் பெரியபுராண ஆசிரியர். இஃது கொலைத்தொழிலிலும் நேர்மையையும், (மறக்)கருணையையும் அவ்வேட்டுவர்கள் கடைப்பிடித்தனர் என்பதனையே காட்டுகின்றது.

ஆண்சிங்கத்தைப் போன்ற வீரம் பொருந்திய திண்ணனாரும், மற்ற வேடர்களும் வேட்டையாடிக் கொண்டிருக்கும் வேளையில் திடீரென்று காடே அதிரும்படியான குரல் எழுப்பிக் கொண்டு ஓர் காட்டுப்பன்றி அங்கே ஓடியது. அதனைப் பிடிக்கும் ஆவலில் திண்ணனார் வெகுவிரைவாக அதனைத் தொடர்ந்து ஓடவே மற்ற வேடர்கள் அவர் எங்குச் சென்றார் என அறியமுடியாமல் திகைத்து நின்றனர். ஆயினும் விடலைப் பருவமுடைய ’நாணன், காடன்’ என்ற பெயர்களைக் கொண்ட இரு வேடர்கள் மட்டும் அவரைப் பிரியாது தொடர்ந்து சென்றனர். அந்தப் பன்றி வெகுதூரம் ஓடிக் களைத்துக் கடைசியில் திண்ணனார் கையில் சிக்க அவர் அதனை இரு துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார்.

வெகுநேரம் வேட்டையாடியதால் மிகுந்த களைப்பும், பசியும் அவர்களை வாட்டவே கொன்ற அப்பன்றியை வதக்கி உண்டு நீரருந்திச் செல்லலாம் என முடிவு செய்தனர். நல்ல நீரானது அவர்கள் நின்றிருந்த இடத்திற்குச் சற்று அருகில் உள்ள “திருக்காளத்தி மலை” அடிவாரத்திலேயுள்ள “பொன்முகலி” ஆற்றில் கிடைக்கும் என்று நாணன் கூறவே அங்குச் சென்றனர்.

அந்தக் குன்றைக் கண்டவுடன் திண்ணனார், ”நாம் இக்குன்றில் ஏறுவோம்” என்று கூறவே உடன் வந்திருந்த நாணன்,”ஐயனே நீ அங்கே சென்றால் நல்ல காட்சியையே காண்பாய், ஏனெனில் இக்காளத்தி மலைமீதில் ’குடுமித் தேவர்’ (கானவர்கள் காளத்தியப்பரை குடுமித்தேவர் என்றே அழைத்துள்ளனர்) இருக்கின்றார்; நாம் அவரைக் கும்பிடலாம்” என்றான்.

இவ்வார்த்தைகளைக் கேட்டவுடனே திண்ணனார் மிகுந்த ஆர்வம் கொண்டு ”உடனே நாம் குன்றின் உச்சிக்குச் செல்லவேண்டும். இப்போதே குடுமித் தேவரைக் காண என் உள்ளம் துடிக்கின்றது” என்றார். பின்பு, காடனிடம் ”பன்றி இறைச்சியை வதக்குவதற்கு வேண்டிய தீயை நீ இங்கு மூட்டுவாய்” என்று மலையடிவாரத்திலேயே அவனை விட்டுவிட்டுத் திண்ணனாரும், நாணனும் மலையின் மேல் உள்ள இறைவனைக் காண விரைந்து சென்றனர். திங்களைத் தன் சடையில் அணிந்த இறைவனைத் திண்ணனார் காணுவதற்கு முன் குடுமித் தேவரின் கருணைநோக்குத் திண்ணனார் மீது பட்டது. அதன் பயனாய் அன்பு வடிவாகவே மாறினார் திண்ணனார் என்று மனம் நெகிழ்ந்து கூறுகின்றார் சேக்கிழார்.

காளத்திநாதரைக் கண்டதுதான் தாமதம், விரைந்து ஓடித் தன்கையில் இருந்த வில் நழுவி விழுந்தது அறியாராய் அவரை (இறைவனை) ஆரத்தழுவி, தம் உடலிலுள்ள மயிர்க்கால்கள் எல்லாம் சிலிர்க்க, வெகுநேரம் உச்சிமுகந்து நின்றார் திண்ணனார். ”இம்மலையில் நீவிர், ஒரு துணையும் இல்லாது தனியாக உள்ளீரே…! நான் என் செய்வேன்” என்று கண்ணீர் பெருக்குகின்றார்.

பின்பு, நாணனைப் பார்த்து, ”இந்தக் குடுமித்தேவர் மீது பச்சிலையுடனே பூவும் பறித்து இட்டு, நீரையும் வார்த்து வைத்திருப்பவர் யார்?” எனத் திண்ணனார் வினவ, ”அது எனக்குத் தெரியும், முன்பு ஒருமுறை உன் தந்தையோடு நாங்கள் இங்கே வேட்டைக்கு வந்திருந்தபோது ஒரு பார்ப்பான் குடுமித் தேவரைக் குளிர்ந்த நீரால் ஆட்டி, பச்சிலையும், பூவும் சூட்டி, உணவு உண்பித்துச் சில மொழிகளும் (மந்திரங்களும்) சொன்னதை நான் கண்டேன். இன்றும் அவனே இதனைச் செய்திருக்க வேண்டும்” என்றான் நாணன்.

அதுகேட்ட திண்ணனார் குடுமித்தேவரை வழிபடும் முறை இதுதான் போலும் என்று எண்ணிக் கொண்டார். பின்பு, காளத்தியப்பனைப் பார்த்து, ”தனியாக இருக்கும் உமக்கு உண்பதற்கு வேண்டிய இறைச்சியை யார் தருவார்? நீர் பசியோடு அல்லவா இருப்பீர்?” எனக் கவலையுற்றுக் குடுமித் தேவருக்கு வேண்டிய இறைச்சியைக் கொண்டுவருவதற்கு மிகுந்த விருப்பம் கொண்டவராய் அங்கிருந்து அகன்று செல்கின்றார் திண்ணனார். ஆனால் இறைவனைப் பிரியவொட்டாமல் அவர்மேல் கொண்ட அளவற்ற காதல் தடைசெய்யவே சிறுது தூரம் சென்றவர் விரைந்து வந்து இறைவனைக் கட்டிக்கொள்கிறார்; மீண்டும் சிறிது தூரம் செல்லுவார்; திரும்பவும் காதலோடு இறைவனை நோக்கி நிற்பார்; நாதனே! நீர் உண்பதற்குகந்த நல்ல இறைச்சியை நானே கொண்டுவருகின்றேன் எனச்சொல்லி ’கன்றினையீன்ற தாய்ப்பசு கன்றினை நீங்கிச் செல்வதுபோல் செல்கின்றார்’ திண்ணனார் என்று அவருடைய மனப் போராட்டத்தை அழகாய்க் காட்சிப்படுத்துகின்றார் தெய்வச் சேக்கிழார். இங்கு திண்ணனார் தன்னைத் தாயாகவும், இறைவனைத் தன் சேயாகவும் எண்ணுவதுபோல் சேக்கிழார் பாடல் அமைத்திருப்பது ரசித்து மகிழத்தக்கது.

”போதுவர்; மீண்டுசெல்வர்; புல்லுவர்; மீளப் போவர்;
காதலின் நோக்கி நிற்பர்; கன்றுஅகல் புனிற்றுஆப் போல்வர்
நாதனே! அமுது செய்ய நல்லமெல் இறைச்சி நானே
கோதுஅறத் தெரிந்துவேறு கொண்டுஇங்கு வருவேன் என்பார்.”

 

திண்ணனாரும், நாணனும் மலையடிவாரத்திற்குச் சென்றனர். அங்கே இவர்களுக்காகக் காத்திருந்த காடன் “தாங்கள் சொல்லியபடி தீமூட்டி வைத்துள்ளேன், நீவிர் திரும்பிவர ஏன் இவ்வளவு காலதாமதம்?” என வினவுகின்றான். இறைக் காதலிலேயே மூழ்கியிருந்த திண்ணனார் காதில் அவன் கூறிய எதுவுமே விழவில்லை. நாணனே காடனுக்குப் பதில் சொல்கின்றான், “அங்கே குடுமித் தேவரைக் கண்டதிலிருந்து அவர்பால் மாறாத அன்பு கொண்டவனாய் ”மரப்பொந்தைவிட்டு நீங்காத உடும்பு போல” அவரை அணைத்துக்கொண்டு வரவே மறுத்துவிட்டான், இப்போது கூட அவருக்கு இறைச்சி கொண்டு போவதற்காகவே வந்துள்ளான்; நம் குலத்தின் தலைமைப் பொறுப்பையெல்லாம் விட்டுவிட்டான்” என்று கூறுகின்றான். பொதுவாகவே ஒருவர் ஒரு பொருளை இறுகப் பற்றிக்கொண்டுத் தர மறுத்தால் நாம் அதனை ‘உடும்புப் பிடி” என்று சொல்வோம். ஏனெனில் உடும்பு ஒன்றைப் பற்றிக் கொண்டால் எளிதில் விடாது. அதுபோலவே இங்குத் திண்ணனாரும் குடுமித் தேவரை உடும்பு போலப் பற்றிக் கொண்டார். அவரைவிட்டு விலக இனி இந்த வேடர்குலத் தோன்றலால் இயலாது என்பதனை இவ்வுவமை வாயிலாய் நமக்குத் தெளிவாய்ப் புலப்படுத்துகின்றார் சேக்கிழார்.

அங்குஇவன் மலையில் தேவர் தம்மைக்கண்  டணைத்துக்கொண்டு
வங்கினைப் பற்றிப் போகா வல்உடும்பு என்ன நீங்கான்;” என்பது சேக்கிழார் வாக்கு.

பின்பு, பன்றியைத் தாமே சுவைபட வதக்கி அதன் சுவையை அறிவதற்காக அதனை வாயிலிட்டுமென்று நன்றாகவும் சுவையாகவும் இருக்கும் பகுதிகளை இறைவனுக்காக எடுத்துவைத்து மீதமுள்ள பகுதிகளை வீசி எறிந்தார் திண்ணனார். இதனைக் கண்ட மற்ற இரு வேடர்களும் “சரிதான், இவனுக்கு இறைவன் மீது மையல் முற்றிவிட்டது, இல்லையென்றால் தன் பசியையும் மறந்து, நம் பசியையும் நினையாது, இறைவற்குத் தானே சுவைபார்த்த ஊன் தசைகளை இவ்வாறு எடுத்து வைப்பானா?” என்று தமக்குள் பேசியவாறே “இனி நாம் செய்வது ஒன்றுமில்லை; ஊருக்குச் சென்று இதுபற்றி நாகனிடம் தெரிவித்து இந்தத் தெய்வ மயக்கத்தைத் தெளிவிக்கும் தேவராட்டியையும் அழைத்துக்கொண்டு வருவோம்” என்றவாறு அங்கிருந்து அகன்றனர்.

அவர்கள் போனதையே அறியாத திண்ணனாரோ கருமமே கண்ணாகக் கொண்டு ஓர் இலையில் சமைத்த ஊனையும், இறைவனைத் திருமஞ்சனம் (அபிடேகம்) செய்வதற்கு வேண்டிய நல்ல நதிநீரை வாயிலும் எடுத்துக்கொண்டு, அவர்மேல் சூட்டுதற்கு வேண்டிய நறுமணம் மிக்கப் புதுமலர்களைத் தம் முடியில் செருகிக் கொண்டு இறைவன் பசியோடிருப்பார் என எண்ணிக் கவலையோடு அவரைக்காண விரைந்து செல்கின்றார்.

குடுமித் தேவரின் தலையில் சூட்டப்பட்டிருந்த பூக்களை எல்லாம் தம் செருப்பணிந்த காலினாலே தள்ளித் தம் வாயிலிருக்கும் தூய ஆற்றுநீரை ’அன்பினையே உமிழ்வதுபோல்’ இறைவன் தலைமேல் விட்டார் திண்ணனார். பின்பு, ”மிகவும் சுவைபொருந்திய கொழுப்பினையுடைய தசைகளையெல்லாம் உமக்காகத் தேர்ந்தெடுத்துச் சமைத்துக் கொண்டுவந்துள்ளேன், தேவரே! அமுது செய்து அருளுங்கள்!” என்று இறைச்சிப் படையலிட்டு இறைவனை வேண்டுகின்றார்.

சிறிது நேரத்தில் பகலவன் மேற்கே சென்று மறைய அந்திவானை இருள் கவ்வியது. இரவு முழுவதும் தூங்காது இறைவனைக் கண்போல் காத்து நின்றார் கருங்கடல் போல் தோற்றங்கொண்ட திண்ணனார். மறுநாள் காலை புலரத்தொடங்கியது. புள்ளினங்கள் கீதமிசைத்தன. இறைவனுக்கு வேண்டிய உணவைக் கொண்டுவருவதற்கு விரும்பிய திண்ணனார் குடுமித் தேவரைத் தொழுது அங்கிருந்து நீங்கினார்.

அவ்வேளையில் விடமுண்டகண்டனாகிய காளத்திநாதனுக்குத் தினமும் சிவாகம விதிப்படி பூசை செய்துவரும் ’சிவகோசரியார்’ என்னும் முனிவர் இறைவனின் திருமஞ்சனத்திற்குரிய தூயநீரையும், புதிதாகப் பறித்த மலர்களையும், மற்ற பூசைப் பொருள்களையும் எடுத்துக்கொண்டு அங்கு வந்தார். இறைவன் திருவடிகளில் இறைச்சியும், எலும்பும் இருப்பதனைக் கண்டு தீயை மிதித்தவர்போல் அலறி ”இந்த அநுசிதத்தைச் செய்தவர் யார்?” என்று வருந்தினார். ”இப்பக்கம் உலவும் வேடர்களே இந்தத் தகாத செயலைச் செய்திருக்கவேண்டும்” என்று எண்ணிக் கண்ணீர் விட்டார்.

அங்கு கிடந்த அசுத்தங்களையெல்லாம் திருஅலகால் (துடைப்பம்) நீக்கிப் பின் ஆகம முறைப்படி பூசனைகள் செய்து இறைவனைத் தொழுது தம் தவச்சாலைக்குப் போனார். பின்பு திண்ணனார் அங்குவந்து வழக்கம்போல் குடுமித்தேவரை ஆரத்தழுவி, ”தேவரே! நேற்று கொணர்ந்த ஊன்கறியினும் சுவைமிக்க ஊனை இன்று தேன்கலந்து கொண்டுவந்துள்ளேன்” எனக் கூறி அவருக்குத் தன் வாய்நீரினால் அபிடேகம் செய்து, தலையில் தரித்திருந்த பூக்களைக் காளத்தியப்பனின் தலையில் அன்புடன் சூட்டிப் பின்பு இறைச்சியைப் படையலிட்டார். இரவு முழுவதும் உறங்காமல் இறைவனைக் காவல் காப்பதும், பகலில் வேட்டையாடிக் காளத்தியப்பனுக்கு சுவைமிகுந்த ஊன்உணவு கொணர்வதுமாய் இருந்தார் திண்ணனார்.

காலையில் பூசை செய்வதற்கு வரும் சிவகோசரியார் இறைவன் திருமுன்பு இருக்கும் இறைச்சித் துண்டுகளை மிகுந்த வேதனையோடு அப்புறப்படுத்திவிட்டு வேதமுறைப்படி இறைவனை பூசித்துச் செல்வார். இதற்கிடையில் நாணனும், காடனும் திண்ணனைப் பற்றி நாகனிடம் தெரிவிக்க அவன் பெருங்கவலை கொண்டு உணுறக்கம் துறந்து குறிசொல்கின்ற தேவராட்டியையும் அழைத்துக்கொண்டு காளத்தி மலைக்கு விரைந்தான். ஆயினும் இவர்களுடைய மந்திரம், மாயம் ஒன்றினாலும் திண்ணனாரின் மனத்தை மாற்றவியலாமல் போகவே மிகுந்த மனச்சோர்வோடும், வருத்தத்தோடும் அங்கிருந்து சென்றான் நாகன்.

திண்ணனார் தொடர்ந்து தாமறிந்த வகையிலே எம்பெருமானாரை பூசிக்க, சிவகோசரியாரோ சிவாகம விதிப்படி இறைவனை பூசித்ததோடல்லாமல், ”இத்தகைய அநுசிதச் செயல்களைப் புரிந்துவரும் தீயோரை இறைவா நீ ஒழித்தல் வேண்டும்” என்றும் விண்ணப்பித்தார். எம்பெருமானார் அன்றிரவே சிவகோசரியாரின் கனவில் தோன்றி “நீ இத்தகைய செயல் செய்பவனைக் கொடிய வேடுவன் என்றெண்ணாதே! அவனுடைய நற்செயல்களை நான் உனக்கு உரைக்கின்றேன் கேள்!” எனக் கூறி, ”அவனுடைய வடிவம் முழுவதுமே என்மீதான அன்பு வடிவமாகும். அவன் அறிவெல்லாம் என்னை அறியும் அறிவின்றி வேறில்லை. அவன் செய்வதெல்லாம் எனக்கு இன்பம் தருவதாகவே இருக்கின்றன” என்று திண்ணனுக்கு நற்சான்று வழங்குகின்றார் காளத்தியப்பர்.

அவனுடைய  வடிவுஎல்லாம் நம்பக்கல் அன்பு; என்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவு; என்றும்
அவனுடைய செயல்எல்லாம் நமக்குஇனிய வாம்; என்றும்
அவனுடைய நிலைஇவ்வாறு; அறிநீ என்றுஅருள் செய்வார்.”  என்கிறார் சேக்கிழார் பெருமான்.

அதுமட்டுமா? அவன் வாயுமிழும் நீர் எனக்குக் கங்கைநீரினும் புனிதமானது; திருமாலும், அயனும், மற்றுள்ள தேவர்களும் எனக்குச் சூட்டுகின்ற எம்மலரும் இவ்வன்பன் தன் தலையிலிருந்து எனக்குச் சூட்டும் மலருக்கு ஒப்பாகாது; வேதியர்கள் வேள்விசெய்து எனக்குத் தரும் அவிப்பலியைவிட, நன்கு வெந்துளதா? எனச் சோதித்து இவ்வேட்டுவன் எனக்கு ஊட்டும் ஊன் உணவு மிக்க சுவையுடைத்து” என்ற காளத்திநாதன், அவன் மெய்யன்பை நாளைக்கு உனக்குக் காட்டுகின்றேன் மறைந்திருந்து பார்” எனச் சிவகோசரியாரிடம் சொல்லி மறைந்தார்.

இதனைக் கேட்டபின்பு கனவுகலைந்து விழிப்புநிலைக்கு வந்த சிவகோசரியார் இவ்வற்புதத்தைக் காண எழுந்த பேராவலுடனும், சிறிது பயத்துடனும் எப்போது பொழுது விடியும் என்ற எதிர்பார்ப்போடு உறங்காது விழித்திருந்தார்.

பொழுது விடிந்தவுடனே விரைந்து சென்று காளத்தியப்பனுக்குச் செய்யவேண்டிய நித்திய பூசைகளை முடித்துவிட்டு இறைவனின் பேரன்புக்குப் பாத்திரமான அவ்வேடர்குல ஏந்தலையும், அவன் மெய்யன்பையும் காண வேண்டி இறைவன் திருமேனிக்கு அருகிலிருந்த மரங்களின் பின்னே ஒளிந்திருந்தார்.

இறைவன் மீது கொண்ட அளவற்ற காதலால் காளத்தி மலையிலேயே தங்கிவிட்ட திண்ணனார் ஐந்து நாட்கள் கழிந்த ஆறாம்நாள் காலையில், வழக்கம்போல் தனித்து வேட்டையாடிக் குடுமித் தேவருக்கு வேண்டிய இறைச்சி உணவை எடுத்துக்கொண்டு விரைந்து வந்துகொண்டிருந்தார். அப்போது அவர்முன் தீய சகுனங்கள் தென்படுகின்றன. அதனால் மிக்க கவலையுற்ற அவர், ”என் அத்தனுக்கு (அப்பன்) என்ன நேர்ந்ததோ அறியேனே!” என்று கவலையோடு விரையும் வேளையில் திண்ணனின் ஒப்பற்ற அன்பைச் சிவகோசரியார்க்குக் காட்ட எண்ணிய இறைவன் தன் கண்களில் ஒன்றில் குருதி வழியுமாறு செய்தார். இதனைத் தூரத்தில் வரும்போதே பார்த்துப் பதைபதைப்போடு அருகில் வந்த ’கருமுகில்’ போன்ற திண்ணனார், ஈசனின் கண்ணில் வழிந்த செங்குருதி கண்டு அபிடேகத்திற்காகக் கொண்டுவந்த நீர் வாயிலிருந்து கீழே வழியவும், ஊனுணவும், வில்லும் கீழே விழவும், தலையில் செருகியிருந்த பூசைக்குரிய மலர்க்கொத்து கீழே விழவும், தாமும் வீழ்ந்து அரற்றினார். ”யார் செய்தனர் இக்கொடிய செயலை?” என்று சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கே வேறு விலங்குகளோ, வேடர்களோ தென்படாதது கண்டு திகைத்தார். அண்ணலின் பாதம் பற்றிக்கொண்டுக் கதறினார். பின்பு காட்டிற்கு ஓடிச்சென்று அங்கே பல்வேறு மருந்து மூலிகைகளைப் பறித்துக் கொண்டு வந்து காளத்தியப்பரின் கண்களில் அவற்றின் சாற்றைப் பிழிந்தார். ஆயினும் குருதி நிற்காமல் முன்போலவே கொட்டிக்கொண்டிருந்தது கண்டு, இக்குருதியைத் தடுப்பது எவ்வாறு? என்று சிந்தித்த வேளையில் “ஊனுக்கு ஊனே உற்றநோய் தீர்ப்பது” என்ற பழமொழி அவர் நினைவுக்கு வந்தது.

”இற்றையின் நிலைமைக்குஎன்னோ இனிச்செயல் என்று பார்ப்பார்;
உற்றநோய் தீர்ப்பதுஊனுக்கு ஊன்எனும் உரைமுன் கண்டார்.”  என்கிறார் சேக்கிழார்.

 

உடனே சற்றும் யோசியாது அம்பினால் தன் வலது கண்ணை அகழ்ந்தெடுத்து காளத்தியப்பனுக்குப் பொருத்தவே, அதுவரை ஆறுபோல் பெருகிவந்த குருதி உடனே நின்றது. அதனைக் கண்ட திண்ணனார், ”என் ஐயனின் கண்ணில் வழிந்த குருதி நின்றுவிட்டது; என் மருத்துவம் பலித்துவிட்டது” என்று ஆனந்தக் கூத்தாடினார். ஆயினும், இவருடைய அளவிலாப் பேரன்பை உலகிற்குக் காட்டவிரும்பிய காளத்தியப்பன் தன்னுடைய இடது கண்ணிலிருந்து இப்போது குருதி வழிய விட்டான். என்னே ஈசனின் திருவிளையாடல்! அஞ்சவில்லை அந்த மறவர்குல மாணிக்கம். ”இதோ இன்னொரு கண் இருக்கின்றது; அதனையும் என் அத்தனுக்காகத் தந்து அவருடைய துயர் களைவேன்” என்றெண்ணினான். ஆனால், ”இந்தக் கண்ணையும் நான் இழந்தபின்பு இறைவனின் குருதி வழியும் கண்ணை என்னால் அறிய இயலாது. ஆகவே, இப்போதே ஓர் அடையாளமாய் என் இடதுகாலை அவ்விடத்தில் ஊன்றிக்கொள்கின்றேன். பின்பு என் கண்ணை அவ்விடத்தில் அப்புவதில் சிரமம் இருக்காது” என்று எண்ணித் தன் இடது காலை இறைவன் இடது கண்ணில் ஊன்றித் தன் இடது கண்ணையும் அம்பால் அகழ்வதற்காய் கண்ணில் வைத்தார். அதனைக் கண்டு நெக்குருகிப் போன ஈசனார் அம்பைப் பிடித்திருந்த திண்ணனாரின் கையைத் தடுத்து, ”கண்ணப்ப நிற்க!” என்று மூன்றுமுறை கூறினார். இவற்றையெல்லாம் கண்டு மிரண்டு போயிருந்தார் மாமுனிவராகிய சிவகோசரியார். அப்போது வானிலிருந்து தேவர்கள் பூமாரிப் பெய்தனர்.

இந்த ஈடு, இணையற்ற சிவபக்தனின் பெருங்காதலில் உள்ளம் நெகிழ்ந்திருந்த கண்ணுதற்கடவுளார், திண்ணனின் கையைப் பற்றி, ”கண்ணப்ப! எப்போதும் நீ என் வலப்பக்கத்திலேயே இருப்பாயாக” எனப் பேரருள் புரிந்தார். தன் கண்ணென்றும் பாராது அதனை அகழ்ந்தெடுத்துக் காளத்தியப்பனுக்கு அப்பியதால் திண்ணனார் அன்றுமுதல் ’கண்ணப்பன்’ என்ற திருநாமம் பெற்றார். அப்பெயரை ஈசனாரே அவர்க்கு அளித்தார் என்பதனால் அப்பெயரே இன்றளவும் நின்று நிலைபெற்றுவிட்டது.

இந்நிகழ்ச்சியை “நக்கீரதேவ நாயனார்” (சங்ககால நக்கீரர் அல்ல) பதினொன்றாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள “திருக்கண்ணப்ப தேவர் திருமறம்” என்ற பகுதியில்,

நில்லுகண் ணப்ப நில்லுகண் ணப்பஎன்
அன்புடைத் தோன்றல் நில்லுகண் ணப்ப”

எனக் கூறி, இறைவன் கண்ணப்பனைத் தடுத்தாட்கொண்டதாகக் குறிப்பிடுகின்றார்.

தன்னேரில்லா இச்சிவபக்தனின் இறைக்காதல் இவருக்குப் பின் வந்த பிற சிவனடியார்களாலும் வியந்து பாராட்டப்படுகின்றது.

சான்றாக, பட்டினத்து அடிகள் தன் பாடலில்,

”வாளால்மகவரிந் தூட்டவல் லேன்அல்லன்; மாதுசொன்ன
சூளால்இள மைதுறக்கவல் லேன்அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடந்து அப்பவல் லேன்அல்லன் நான்இனிச்சென்(று)
ஆளாவ தெப்படி யோதிருக் காளத்தி யப்பருக்கே?”

”என்னால் பிள்ளையை அரிந்து இறைவற்கு ஊட்ட இயலாது (சிறுத்தொண்டர்); மனைவியின் சபத்திற்காக இளமை இன்பத்தைத் துறக்க இயலாது (திருநீலகண்ட நாயனார்); இறைவன் மீது கொண்ட அளவிலாக் காதலால் ஆறே நாளில் என் கண்ணை இடந்து அப்பவும் வல்லவன் அல்லேன் (கண்ணப்ப நாயனார்); நான் எப்படிக் காளத்தியப்பனின் அருளுக்குப் பாத்திரம் ஆவேன்?” என்று மிகுந்த வருத்தத்தோடு புலம்புகின்றார்.

கல்மனதையும் கசிந்துருகச் செய்யும் திருவாசகத்தை இயற்றிய மணிவாசகப் பெருந்தகை, அதில் இடம்பெற்றுள்ள “திருக்கோத்தும்பி” எனும் பகுதியில் வரும் பாடலில் கண்ணப்பன் செலுத்திய அன்புக்கு ஈடான ஒன்றை என்னிடத்தில் காணாத போதிலும் என்னையும் ஆட்கொண்டு எனக்குக் கருணை செய்தவன் சிவபெருமான் என்று ஈசன் தன்அடியார்பால் கொண்டுள்ள பேரன்பினைப் புலப்படுத்திச் செல்கின்றார். இதோ அப்பாடல்….

”கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
சுண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ.”

சிவனடியார்களும், சாமானியர்களும், ஏன்…சித்தத்தைச் சிவன்பால் வைத்த அனைவருமே மெய்சிலிர்த்துப் போற்றும் இணையில்லாச் சிவபக்தர் கண்ணப்ப நாயனார். அவரைப்போல் ஓர் தன்னலமில்லாத் தொண்டனைக் காண்பது அரிதினும் அரிது.

ஆகவே, நாமும் ’அன்பே சிவம்’ என்பதனை உணர்ந்து இறைவனின் திருவைந்தெழுத்தை நாளும் ஓதி அவனுடைய இணையடிகளை ஏத்திப் பணிவோம். ஈசனின் அருளுக்குப் பாத்திரமாவோம்.

திருச்சிற்றம்பலம்

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இணையற்ற இறைக்காதல்!

  1. கண்ணப்ப நாயனார் புராணத்தைக் கவின்பொங்கத் தந்திருக்கிறீர்கள். தம் கண்களையே இறைவர்க்கு ஈந்த சொல்லவொண்ணா அன்பின் பெருமை, கண்களை குளமாக்கி உள்ளத்தை பண்படுத்துகிறது.  கட்டுரையின் சொற்சுவை, பக்தியின் அமுதூறி மேன்மேலும் இனித்தது. 
    மகாபாரத அர்ஜூனனே கண்ணப்ப நாயனாராக அவதரித்ததாகவும், முற்பிறவியில் பாசுபதாஸ்திரம் வேண்டி சிவ பூசனை செய்ததன் பலனாகவே சிவபக்தனானதாகவும், இப்பிறவியில் எதனையும் எதிர்பாரா அன்பை இறைவர்க்கு அர்ப்பணித்ததால் சிவசாயுஜ்யம் அடைந்ததாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதை உண்டு.
    ‘அன்பே சிவம்’ என்பதை உணர்த்தும் புராணத்தை அற்புதமாகத் தந்திருக்கிறீர்கள். எழுத்தாளர் மேகலா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்,பாராட்டுக்களும்.

  2. நுதற்கண் கொண்டவனின் நூதனச் சோதனையில்,
    வலக்கண் வழங்கிக், காலால் இடறி,
    இடக்கண் பறிக்கத் துணிந்தவன் அன்பால்,
    அகக்கண் குளிர்ந்து ஆட்கொண்டான் அம்மையப்பன்!
    இறைமணம் கமழும் அழகான நடை. வாழ்த்துக்கள்.

  3. வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் அழகாக வழங்கியுள்ள எழுத்தாளர் திருமதி. பார்வதி இராமச்சந்திரன், கவிஞர் திரு. சச்சிதானந்தம் ஆகியோர்க்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    –மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *