கனவுத் தொழிற்சாலையின் கன்சல்டன்டாக நான்

பேரா. நாகராசன்

கன்சல்ட்டன்ட் என்று நான் என்னைச் சொல்லிக் கொண்டால் அது இன்சல்ட்தான் ஆனாலும் தொழிற்துறையில் அந்த வார்த்தை மட்டும்தான் அப்போது என் வேலையைக் குறிக்க ஓரளவு உதவி செய்தது. என் கல்வியும் நான் பெற்ற மதிப்பெண்களும் எனக்கு ஒரு சாதாரண வேலையைக்கூட வாங்கித் தராது என்பதை மற்றவர்களைவிட நான் தெளிவாக அறிந்திருந்தேன். ஆனாலும் சிவகாமிப்பாட்டி மட்டும் ஒரு மாற்றுக்கருத்தை எனனைப்பற்றி முன்மொழிந்து கொண்டிருந்தார்.  கண்ணில் பூவிழுந்து பார்வை சரியில்லாதபோதும் என் கைரேகையைப் பார்ப்பதில் குறியாக இருப்பார்.  அவர் மட்டுமே என் கையில் உள்ள மேடுகளும் ஆழமாய்ப் பதிந்த கோடுகளும் நான் ஒரு மாதிரியான அறிவாளியாக் வருவேன் என்று கட்டியம் கூறுவதாகச் சொல்வார்.  படிப்பென்னவோ விஞ்ஞானம் கல்வியியல் உளவியல் என்று கூட்ஸ் வண்டி அடிக்கடி பாதை மாறுவதுபோல் மாறி நான் படித்த பல்கலைக் கழகத்திலேயே நான் மாணவராக இருந்தபோது புகழ்ந்துபேசிய ஒருவர் துணைவேந்தராக வந்தபோது என்னை ஆசிரியராக்கியது.  அவரே வெறி பிடித்தவர் போன்று எனக்குப் பதவி உயர்வு கொடுத்து என்னை நானே நம்பமுடியாத உயரத்தில் தக்க வைத்தார்

எனக்கு எளிதாக வந்த திறன் ஒன்று உண்டென்றால் அது நலிந்த நிறுவனங்களை விலைக்குவாங்கி விற்பது பற்றி ஜக்கம்மா குறி சொல்வதுபோல் அருள்வாக்குச் சொல்வது.  எந்த நிறுவனங்கள் இந்த வேலைக்குச் சரிப்படும் என்று என்னால் உடனே கண்டுபிடிக்க முடிந்ததால் அவ்வாறு வாங்கி விற்பது லாபகரமாக் இருந்ததால் எனக்கு நல்ல மார்க்கெட் இருந்தது.  அப்படி ஒரு வாங்கி விற்கும் கன்சல்டன்சியில் நான் ஒருவரைச் சந்தித்தது என்னைக் கனவுத் தொழிற்சாலையில் கொஞ்சகாலம் குப்பை கொட்ட வைத்தது. தமிழ்த் திரை உலகம் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குழுவின் ஆதிக்கத்துக்குக் கட்டுப்பட்டு வளர்ந்த தொழில்.  முதலில் ஸ்டூடியோ சொந்தக்காரகள் கையில், பின்னர் பெரிய கதாநாயகர்களின் கைக்குள், அதன்பின் வட்டிக்குப் பணம் கொடுக்கும் ஃபைனான்சியர்கள் கையில் அப்புறம் தொழிநுட்பம் தெரிந்த இயக்குநர் குழுவின் கையில் என்று மாறி மாறி வந்துள்ளது.  ஒரு காலத்தில் திரை உலகைத் தன் ஆளுமைக்குள் வைத்திருந்த குடும்பம் இனிமேல் ஸ்டுடியோ நடத்தத் தன்மானம் இடங்கொடுக்கவில்லை என்று கருதி அவர்களின் ஸ்டுடியோவை விலைக்கு விற்கவந்து அது தொடர்பாக வாங்குபவருடன் இந்தக் குறிசொல்லும் பணியால் தொடர்பு ஏற்பட்டது.  வாங்கியபின் அதன் வளர்ச்சிக்கான திட்டங்கள் உத்திகள் தீர்மானம் செய்யும் நிலையில் எனக்கு ஒரு வாய்ப்பு அங்கே கிடைத்தது

ஆராய்ச்சி மாணவனாக இருந்தால் அடிமை வேலை செய்ய வேண்டும் என்பது பல்கலைக் கழகத்தில் எழுதப்படாத விதி.  அப்படியாகத்தான் எனக்குக் கிடைத்த வேலை ஆராய்ச்சி சஞ்சிகளைப் பதிப்பித்து விற்று வருமானம் ஈட்டுவது.  மூன்று சஞ்சிகளைப் பதிக்கும் வேலையைத் தொடங்கி அதன் வடிவமைப்பு விற்பனை என்று நானாவித வேலையையும் செய்து பழகிக் கொண்ட எனக்கு என்பலம் என்னவென்று ஒருநாள் தெரிந்தது.  சக ஆய்வு மாணவர் ஒருவன் என்னுடைய வழிகாட்டியான பேராசிரியத் தலைவர் என்னை வெளியேற்ற ஏற்பாடு செய்துவருவதைச் சொன்னார்.  வழிகாட்டிக்கும் ஆய்வு மாணவனுக்கும் உள்ள உறவு பலசரக்குக் கடைச் செட்டியாருக்கும் பொட்டலம் கட்டும் இளைஞனுக்கும் இடையே உள்ள உறவு போன்றது.  செட்டியார் எச்சரிக்கை எத்திராஜராகப் எதிர்க்கடை வராதவாறு வேலை செய்பவர்களுக்குப் பொட்டலம் கட்டுவது தவிர எந்த வேலையையும் கற்றுக்கொடுக்க மாட்டார்.  அப்படியே அவரைத் தாண்டிக் கற்றுக் கொண்டவனையே விட்டால் வினை என்று கூலியில்லாத வேலையாளாக மாற்றி மருமகனாக ஆக்கிக்கொள்வார்.  இங்கு நான் வெளியேற்ற்ப்படும் நிலையில் முன்யோசனை இல்லாமல் என் சக ஆய்வாளரிடம் இந்த மடம் இல்லையென்றால் எனக்கென்ன கவலை இங்கிருந்து நேராக எந்தப் பத்திரிக்கை வாசலில் நின்றும் நான் ப்ரூஃப் ரீடர் வேலைக்கு வந்திருக்கேன் என்று சொன்னால் அப்படியே தூக்கிட்டுப் போயிடுவாய்ங்க தெரியுமா என்று ஆண்டுக் கணக்காக ஆய்வு என்ற பெயரில் நான் செய்த புரூஃப் ரீடர் வேலையைச் சொல்ல அவர் என்னுடைய பேராசிரியரிடம் போட்டுக் கொடுக்க அதனால் என் வழிகாட்டி என்னை வெளியே போக முடியாதபடி செய்துவிட்டார். அதுமூலம் நான் பத்திரிக்கையில் ஒரு வேலையை உருப்படியாகச் செய்யமுடியும் என்று எண்ணத் தோன்றியது

எனது நண்பரின் புதிய முயற்சியில் அவர் முன் எடுத்த ஒரு திட்டம் சினிமாத் துறையில்  ஒரு வாரப் பத்திரிக்கை தொடங்குவது.  அந்தக் காலகட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து தமிழகம் திரும்பும் சூல்நிலையில் அவரை ஆசிரியராகக் கொண்டு இந்தப் பத்திரிக்கையை நடத்தவேண்டும் என்பது அவரின் இந்த முயற்சிக்கு அடிப்படையாக அமைந்தது பத்திரிக்கையைத் தொடங்கி வடிவமைத்து உருவாக்கி வெளிவிடும் வேலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது.  ஆராய்ச்சி மாணவனாக இருந்தபோது சென்னை அரசினர் தோட்டத்தில் வசித்துக்கொண்டு கால் இடறிக்கீழே விழுந்தால் ஒரு தியேட்டர் படியில் விழவேண்டும் என்ற சூழலில் ஆய்வறிக்கைக்காக அல்லும் பகலும் நேரம் செலவழித்ததால் ஒரு திரைப்படம்கூடப் பார்த்ததில்லை.  ஒருமுறை என் சகஆய்வு மாணவரின் காதல் திருமண வரவேற்புக்காக இடம் புக் செய்ய ஒரு ஹோட்டலுக்குச் சென்றிருந்தேன்.  வாசலில் ஏகப்பட்ட கூட்டம் என்னவென்று தெரியாமலேயே வரவேற்பாளரிடம் சென்று பணம்கட்டிவிட்டுத் திரும்பி வந்தால் கூட்டம் என்னைப் பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்ப்பதுபோல் பார்த்தது.  ஏணிப்படி ஏறுமாறாக என்று கேடடதற்கு உன் அருகில் ரிசப்சனில் நின்றது யார் தெரியுமா  என்று கேட்டது கூட்டம். ஐயா தெரியாதய்யா என்று சொன்னேன்.  நீயெல்லாம் தமிழ்நாட்டில் பிறந்ததே ஒரு பெரிய பாவம் என்று சலித்துக்கொண்ட ஒரு பெரிசு பையா அதுதான் இந்தியத் திரை உலகின் கனவுக் கன்னி அவரைப் பார்க்க நாங்கள் இங்கே கூடியிருக்கிறோம் என்று சொன்னார்கள்.  இந்த இரண்டு நிகழ்வுகளுமே திரைத்துறையைப்பற்றிய என் பாண்டித்துவத்தைப் பறைசாற்றும்.

எப்படியோ போடப்போகும் பணம் 5 லட்சம் வந்தால் வரட்டும் போனால் போகட்டும் நான் கவலைப்படமாட்டேன் நீங்கள் நடத்துங்கள் உங்கள் நாடகத்தை என்று சொல்லிவிட்டார் நண்பர். நன்குபடித்துப் பட்டம் பெற்ற எழுத்தாற்ற்ல் மிக்க கணினிப் பயன்பாடு தெரிந்த தலைமை ஏற்கவும் தலைமையின்கீழ்ப் பணி செய்யவும் விழைவுள்ள ஆறுபேரை ஆசிரியக்குழுவாக அமைத்து இந்திய அளவில் தலை சிறந்த இயக்குனர் நடிகர்களை அழைத்துவந்து நேருக்குநேர் சந்திப்பு பேட்டி என்று பயிற்சி அளித்து ஒவ்வொரு வாரமும் ஒருவர் தலைமையில் மற்றவர்கள் குழுவாகப் பணி செய்து பத்திரிக்கையைக் கொண்டுவரும் அளவுக்குப் பயிற்சி அளித்துப் பத்திரிக்கையின் வெள்ளோட்டமாக மூன்று மாதங்கள் பத்திரிக்கையை முழுமையாக அச்சிட்டு தெரிந்தெடுத்த சிலருக்கு அனுப்பி அவர்களின் கருத்துக் கேட்டு இறுதியில் ஐந்து நிமிட விளம்பரப்படம் ஒன்றை சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் ஆகியோரின் வாழ்த்துக்களுடன் உருவாக்கி அந்தப் பத்திரிக்கை வெளியானது.  கவிஞர் கண்ணதாசன் அவர்கள் நாடுதிரும்பாமல் அமெரிக்காவில் உயிர் துறந்தார்.  அவருக்கென்று ஆரம்பித்த பத்திரிக்கை என்பதால் வேறு  யாரையும் ஆசிரியராகப் போடாமல் அந்தப் பத்திரிக்கை பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடந்தது.

அந்தப் பத்திரிக்கையின் ஆல் இன் அழகுராஜாவாக ஆல் ரவுண்டராக நான் இருந்த காலத்தில் ஒரு பெரிய அச்சுக்கூடத்தில் ஸ்டாப் தி பிரஸ் என்று அச்சிடுவதை நிறுத்தும் அதிகாரத்துடன் பவனிவந்து திரை உலகம் தொடர்பான ஒரு பெரிய தரவுத் தளத்தினை உருவாக்கி (திரை உலகக் கிசுகிசுவும் உள்ளடக்கம் ஆனால் வெளியிட்டதில்லை) புலனாய்வுக் கட்டுரை நம்பகமான் தகவல் என்று அது தரமான திரை உலகச் செய்திகளுடன் பல ஆண்டுகள் வெற்றிகரமாக நடக்க அடித்தளம் அமைத்தேன்.

அந்தப் பத்திரிக்கை மூடப்படும்வரை பெண்களைக் காட்சிப்பொருளாகவோ கவர்ச்சிப் பொருளாகவோ காட்டாமல் ஒரு படத்தில் தாரகையாகி சிவப்பு விளக்கு வெளிச்சத்தில் மறைந்த கதாநாயகிகள் மரணப் படுக்கையில் வெளி உலகின் பார்வையில் இருந்து மறைந்து இருந்த மாபெரும் நடிகையைக் கண்டுபிடித்து வெளி உலகுக்குக் கொணர்ந்து அவரின் இறுதி ஆசையை நிறைவேற்றியது என்று மங்கையருக்கு ஒருசில நற்பணிகள் செய்தது இந்நாளின் என்னுடைய மலரும் நினைவுகளாகக் கருதலாம்.

படத்திற்கு நன்றி உதயன்.

பேரா. நாகராசன்

பேரா. நாகராசன்

சென்னைப் பல்க்லைகழகத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிபவர். பன்முக நாயகர். பல்கலை வித்தகர்.

Share

About the Author

பேரா. நாகராசன்

has written 11 stories on this site.

சென்னைப் பல்க்லைகழகத்தில் 25 ஆண்டுகளாக பணிபுரிபவர். பன்முக நாயகர். பல்கலை வித்தகர்.

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.