நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-28

7

பெருவை பார்த்தசாரதி

மனித சமுதாயம் முன்னேறும் விதமாக வாழ்ந்து காட்டிய அறிவாளிகள், சாதனையாளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள், மாமேதைகள் இவர்களின் வெற்றி வழியைப் பின்பற்றிதான், பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், வாழ முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். பல்வேறு துறையில் சிறந்து விளங்கி ஒவ்வொரு நூற்றாண்டிலும், தோன்றி மறைந்த மாமேதைகள் பலர் பின்வரும் சந்ததியினருக்கு அன்புடன் வழிகாட்டினார்கள் என்கிறது வரலாறு. பயணம் தொடர பாதை முக்கியம் என்பதுபோல, வழிகாட்டுதல் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

“அன்பில்லாதவர்கள் தமக்காகவே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். பிறரிடத்தில் அன்புடையவர்கள் தமது வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணிக்கின்றனர்” என்கிறார் தோழர் விலாடிமிர் லெனின். பிறருக்கு வழிகாட்டுகின்ற பலர், ஒரு வகையில் அன்புக்குக் கட்டுப்பட்டவர்களாக இருந்திருந்திருக்கலாம் என்ற நோக்கில், லெனின் அவர்கள் இதைச் சொல்லி இருப்பார் போலும்….இதைப்பற்றிய சிந்தனையை மேலும் விரிவாக்கும்போது, ஒரு சில கேள்விகளும் நம் மனதில் எழுகின்றது.

நாம் எவ்வளவோ பேரிடம் அன்றாடம் பழகுகிறோம்.  அவ்வளவு பேரும் நம்மிடம் அன்பு செலுத்துகிறார்களா?…….

எல்லோரிடத்திலும் நம்முடைய சொந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்கிறோமே, உண்மையில் அவர்கள் எந்தக் கண்னோட்டத்தோடு அதைப் பார்க்கிறார்கள்?…….

சொந்த விஷயங்களை, பிறரிடம் அன்னியோன்யமாகப் பகிர்ந்து கொண்டாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்துவார்களா?….

பல மணி நேரங்கள் பொருமையாக நம்முடைய சொந்தக்கதை, சோகக்கதை இவற்றையெல்லாம் கேட்டவரிடமிருந்து, ஒரு சில நிமிடமாவது அன்பான, இரக்கமான ஆறுதல் வார்த்தைகளை எதிர்பார்க்கமுடியுமா?……..

ஏழையின் கூக்குரலை பணக்காரர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா?

அலுவலகத்தில் பொருப்பான உயர் பதவி வகிப்பவர்கள், என்றாவது ஒரு நாளாவது, சக ஊழியர்களுடைய துக்கத்தில் பங்கு கொண்டு, துன்பம் நேருகின்ற சமயத்தில், அன்பு செலுத்தி ஆறுதல் சொல்லி ஊக்கப்படுத்துபவர்கள் எண்ணிக்கையில் ஒரு சிலரே என்பது அனுபவத்தில் காணும் உண்மை.

இந்நாளில், நண்பர்களோ, உறவினர்களோ, ஒருவருக்கு ஒருவர்  சுகதுக்கங்களில் பங்கெடுத்துக்கொண்டு அவ்வப்போது அறிவுரையோ?……..ஆறுதலோ?……சொல்லிக்கொள்கிறோமா?…..

இத்தகய கேள்விகளுக்கு, இன்றளவும் பதில் தேடிக்கொண்டுதான் இருக்கிறோம்.

வெளியூரிலிருக்கும் மிக நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் இறந்து விட்ட செய்தி அறிந்தும்கூட உடனடியாகச் சென்று துக்கம் விசாரிப்பவர்கள் ஒரு சிலரே எனலாம். உடனடியாகச் சென்று  சோகத்தில் மூழ்கியிருக்கும் அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாமல், ‘ ஒரு முக்கியமான வேலை இருந்தது, உடனே போக நேரமில்லை’ என்று காலம் கடந்து வரும் பதிலே அநேகரிடமிருந்து வரும் பதிலாக இருப்பதை நம் அனுபவத்தில் காண்கிறோம்.

பொதுவாக மேலேழுந்த கேள்விகளுக்கெல்லாம் நம்முடைய உள்மனது என்ன பதில் தரும். ஆறுதல் வார்த்தை என்பது நம்மில் எத்துணை பேருக்கு உதிக்கிறது அல்லது உதவுகிறது. ஆறுதலோ அறிவுரையோ சொல்லி, தக்க சமயத்தில், யாருக்காவது நாம் நல் வழிகாட்டியிருக்கிறோமா?..பிறரால் கடும் துயரத்துக்கும், வேதனைக்கும் ஆளாகியிருக்கும் இருக்கும் ஒருவரது மனம் நொந்து போயிருக்கும் சந்தர்ப்பங்களில், ஆறுதல் சொன்னால், பாதிக்கப்பட்டவருடைய பலவீனமான இதயம் பலப்படும் என்பது மருத்துவத்தில் கண்டறிந்த உண்மை.

ஆறுதல் சொல்லக்கூடிய மனப்பக்குவத்தைப் பெற்றவனை, உதவும் எண்ணமுள்ளவனை ‘இளகிய நெஞ்சம் படைத்தவன்’ என்று சொல்வதில்லையா.   இதைத்தான் கவியரசு அவர்கள் அர்த்தமுள்ள இந்துமதத்தில் “இதயம் என்று எடுத்துக்கொண்டாலே ‘கனிந்த உள்ளம்’ என்ற பொருள் மறைந்தே இருக்கும். அவற்றில் இரக்க குணமும் இதயத்தை சார்ந்தே சொல்லப்படுகிறது. கல்நெஞ்சக்காரனை “இதயமில்லாதவன்” என்றே கூறுகின்றோம்” மேலும் நிரந்தரமற்ற நம் வாழ்வில் எவரும், எப்போதும் இல்லாமல் போகலாம், இப்படி இருக்கையில், ஒருவர்மேல் ஒருவருக்கு எதற்கு தேவையற்ற ஆதங்கங்கள், கோபங்கள், துவேஷங்கள்?……என்று மிக அருமையாக இதயத்தைப் பற்றி இதமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த வருடங்களில், ஒரு மூன்று நிமிட நேரத்திற்குள், ஆழிப்பேரலை (tsunami) பல ஆயிரம் பேர்களை அள்ளிக்கொண்டுசென்றபோது, எண்ணற்ற உயிர்கள் பலியாயின. இறந்த உடல்கள் அனைத்தையும் ஒரே இடத்தில்தான் எரியூட்ட முடிந்தது. பெற்றோர்களை இழந்த குழந்தைகள், சகோதரனை இழந்த சகோதரிகள் இப்படி பாதிக்கப்பட்டவர்களையெல்லாம் தூக்கி நிறுத்தி மறுவாழ்வு கொடுத்ததை உலகமே கண்ணுற்றதல்லவா?……ஒவ்வொரு மூலையிலிருந்தும் மற்றவர்கள் ஆறுதல் என்ற பலத்தைக்கொடுத்ததால்தான் இன்றும் பலர் உயிர் வாழ்கிறார்கள்.

உலகத்தில் நடக்கின்ற பலவிதமான கொடுஞ்செயலுக்கெல்லாம் ஆளாகி வருந்துகின்ற மனிதர்களுக்கு, ஆறுதல் ஒன்றே மறுவாழ்விற்கு உறுதுணையாக அமைகிறது என்பதே உண்மை.

திடீரென்று நிகழும் ஒரு அசம்பாவிதம், சட்டென்று முடிந்துவிடும் மரணம், எதிர்பாராத பேரதிற்ச்சி போன்றவைகளால் நம்முடைய மூளையில் ஒருவித அமிலம் சுரந்து, மூளையைச் செயலிழக்கச் செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இம்மாதிரி சந்தர்ப்பங்களில், தாங்கமுடியாத துயரத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மரணத்தைக் கூட சந்திக்க நேரிடுமாம். இதைத் தவிர்ப்பதற்கு ‘ஆறுதல்’ வார்த்தைகளும், சமாதானமும் அருமருந்தாகச் செயல்படும் என்பதும் உண்மை.

பட்டாசுத்தொழிற்சாலை, பள்ளிகள், திரையரங்குகள், இப்படி பலர் கூடும் இடத்தில் தொடர்ந்து ஏற்படும் தீவிபத்துகள் மற்றும் ரயில் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பொதுநலத்தொண்டு புரிபவர்கள், இரக்ககுணம் மிக்கவர்கள், பரிவு காட்டுபவர்கள் அன்றாடம் ஆறுதல் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள். இதிகாசங்களில் இறைவனுக்குக்கூட சில சந்தர்ப்பங்களில், தர்ம சங்கடமான நேரங்களில், ‘ஆறுதல் வார்த்தைகள்’ அவசியமானது என்பதைத் தெரிந்து கொள்வோம்.

சப்தரிஷிகளில், ப்ருகு மகரிஷிக்கு அக்னிதேவன் சகோதரனாவார். ஒரு சமயம், அவர் மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளைப் பாதுகாக்க அக்னிதேவனுக்குக் கட்டளையிட்டிருந்தார்.

ராட்சதன் ஒருவன், அவளை அபகரிக்கத் திட்டமிட்டான். மகரிஷி இல்லாத சமயத்தில், அக்னிதேவனையே தன் பேச்சுத்திறமையால் மடக்கி, அவளை அபகரித்துக் கொண்டான். ராட்சதனின் பிடியிலிருந்த மகரிஷியின் மனைவி, ஒருவாறு பலவந்தமாக தன்னை அவனிடமிருந்து விடுவிக்கும் தருணத்தில், அங்கே ஒரு அற்புதம் நிகழ்ந்தது. அவள் பிரகாசத்துடனும், பேரொளியுடனும் தோன்றிய ஒரு ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். பேரொளியின் கதிர்வீச்சைத் தாங்கமுடியாத ராட்சதன் சாம்பலானான். பேரொளியையும், பிரகாசத்தையும், சக்தியையும் ஒருங்கே பெற்ற இவனே “ச்யவனன்” என்ற பெயரால் அழைக்கப்பட்டான். இதனால்தானோ என்னவோ, ஆயுர்வேத மூலிகையால் ஆன, உடலைத் தேற்றுகின்ற பல வஸ்துக்களில் ஒன்றாகிய லேகியமும் இப்பெயருடன் இன்று வியாபாரமாகிக் கொண்டிருக்கிறது.

ஞானதிருஷ்டியினால், நடந்ததை அறிந்த ப்ருகு முனிவருக்கு, தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன்மீது அளவுகடந்த கோபம் உண்டானது. “அக்னிதேவனே நீ யாகங்களுக்கும், ஹோமங்களுக்கும் நற்தீயாகச் செயல்பட்டாலும்,  இனி நீ தீயசெயல்களுக்கும்  காரணமாகி, இழிந்த நிலையை அடைந்து, உன்னைக்கண்டாலே எல்லொரும் பயந்து ஓடுவார்கள். என்னுடைய மனைவியைக் காக்கத் தவறிய நீ இத்தகய நிலையை அடைவாய். அனைத்து ஜீவராசிகளும் உன்னை வேண்டும்போது மட்டுமே சேர்த்துக்கொள்வார்கள்!…..என்று சாபமிட்டார்.

பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய அக்னி இல்லாமல் உலகம் உய்ய முடியுமா?…நிலமையை அறிந்த படைப்புக் கடவுளான ப்ரம்மா, அக்னிதேவனுக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார். அவன் பெற்ற சாபத்தில் திருத்தம் பல செய்து, மனம் வருந்திய அக்னிதேவனுக்கு பின்வருமாறு ப்ரம்மா சமாதானப் படுத்தியதாக மகாபாரத்தில் ஒரு சிறிய சம்பவம் இடம் பெற்றிருக்கிறது.

“உலகம் இயங்குவதற்கு நீ மூலக்காரணமாதலால், உன்னால் அழியப் போகும் அனைத்துமே, இவ்வுலகத்திற்குத் தேவையானதாக இருக்காது. கர்மவினையால் அவதிப்படுபவர்கள் மட்டுமே தன்னுடைய உடமைகளையும், உயிரையும் உன்னால் இழக்க நேரிடும். மேலும், உலகில் இயங்கும் அனைத்துக்குமே நீ என்றும் உறுதுணையாக இருப்பாய். நீயல்லால் ஒர் அணுவும் இயங்காது. உயிர் இயங்க உயிராகவும், மறியாதைக்கு மறுபெயராகவும் விளங்குவாய்” என்று சொன்னதாக கதையில் வரும் இச்சிறிய சம்பவம் இக்கட்டுரைக்குப் பொருத்தமானதாக இருக்கும்.

இதிகாச உதரணங்களை சற்று நிறுத்திவிட்டு, இன்றய உலகில் நடந்த ஒரு சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.  ஒரு குடும்பத்திலே கூட கணவன் மனைவி இருவருமே ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு, இன்பம் வரும்போது பங்கிட்டுக்கொண்டு, துன்பத்தில் உழலும்போது ‘ஆறுதல்’ சொல்லி இன்பமயமான வாழ்க்கை முறையை எடுத்துக் கூறினால்தான் வாழ்க்கைப் பயணம் இனிதே நடக்கும் என்பதை இந்த நூற்றாண்டில் வாழ்ந்த மிகச்சிறந்த எழுத்தாளனின் வாழ்க்கை நமக்கு எடுத்துரைக்கிறது.

எழுதுவது, எழுதிக்கொண்டே இருப்பது என்பதைத் தவிர இவருக்கு வேறு எதுவும் தெரியாது. வேறு தொழில் தெரியாததால், எழுத்தை நம்பி வருமையிலே கூட வாடினார்.  தினமும் தாம் எழுதுவதை, எல்லாப் பத்திரிகைகளுக்கும் எழுதி எழுதி அலுத்துப் போய், வருமையின் எல்லைக் கோட்டிற்குச் சென்று, வாழ்க்கையை வெறுத்துவிட்ட நிலையில், இனிமேல் எந்தப் பத்திரிகையிலும் தன்னுடைய எழுத்துக்களுக்கு இடமில்லையா?..இனிமேல் குடும்பத்தை எப்படி நடத்துவது?…என்பதுபோல் மனைவியிடம் புலம்பிக் கொண்டிருந்தாராம். ஒரு பெண்ணைப்பற்றி கதை எழுத ஆரம்பித்து, மன சஞ்சலத்தால் அதை பாதியிலேயே நிறுத்தி இருந்தார். எழுதிய படைப்புகளையும் விட்டேறிந்தார், அவரது மனைவி அதைப் பாதுக்காத்து, அவருக்கு ஆறுதல் சொல்லியதோடு, தன்னம்பிக்கை அளித்து, அந்தக் கதையை முடிப்பதற்கு பேருதவி புரிந்தார். பிறகு ஒரு பத்திரிகை அலுவலகத்துக்கு, அவரது படைப்புகளை அங்கு அனுப்பி வைத்தார்.

சில நாட்கள் கழித்து, பத்திரிகை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது, முதல் முறையாக அவரது எழுத்துக்களைப் பிரசுரிக்கப் போவதாகவும் அதற்காக ஒரு சொற்ப சன்மானம் ஒன்றையும் சேர்த்து அனுப்பியிருந்தார்கள். அன்றே அவரது வாழ்வில் துளிர்விட ஆரம்பித்த, அந்த நம்பிக்கைதான், 1976 ல் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. அவர் எழுதிய “கேரீ ”  (carrie), என்ற நாவல், 1976 ல் சுமார் 50 லட்சம் பிரதிகள் விற்று அவரது வருமையைத் தொலைத்து, வளமையைப் பெருக்கியது.  அதன் பிறகு, கேரீ எடுத்த முடிவு என்ன தெரியுமா?. அனுதினமும் 1500 வரிகளாவது எழுதிவிட்டுத்தான் தூங்குவது என்ற தீர்மானமான முடிவுக்கு வந்தாராம். இதை எழுதும் போது இவ்வரிகள் அனைத்தும் ஒவ்வொரு எழுத்தாளர்களளின் மனதில் நீங்காத இடம் பெற வேண்டும் என்பதே என் விருப்பம். உற்சாகம், அன்பு, இரக்கம் இவை கிடைக்காமல் யாரும் எதுவும் சாதிக்கமுடியாது என்பதுபோல் இவரது வாழ்க்கை பிறருக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

திறமையான எழுத்துக்களை திகில் கதை மூலம் வெளிப்படுத்தி, உலகத்தில் அதிக அளவில் வாசகர்களைப் பெற்ற இவர், தன் வாழ்நாளில் சம்பாதித்த செல்வத்தின் பெரும்பகுதியை, பள்ளிக் குழந்தைகளுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் உதவும் வகையில் ஒரு பகுதியை எழுதி வைத்தார். எழுத்துக் கலையை ஊக்கப்படுத்துகின்ற பணிகளுக்கும் பெருந்தொகையை நன்கொடையாக அளித்தார். இவரது சரித்திரத்தைப் படித்து முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தோமானால், வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இவருக்குக் கிடைத்த அன்பும், ஆதரவும், ஊக்கமும், உற்சாகமுமே என்பதை அறியமுடியும். அவர்தான் ஸ்டீஃபன் எட்வின் கிங் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர், அவருக்கு சரியான தருணத்தில் ஊக்கமும், உற்சாகமும், அன்பும், பரிவும் அளித்த பெருமைக்குறிய அவரது மனைவி பெயர் தபிதா கிங்.

இந்தக் கட்டுரை வெளியாகும் இதேவாரத்தில் வெளியான, இன்னொரு செய்தியும் இக்கட்டுரையின் தலைப்புக்குப் பெருமை சேர்க்கிறது. அடையார் புற்று நோய் மருத்துவ மையத்தின் நிறுவனர் திருமதி டாக்டர் சாந்தா அவர்களுக்கு தமிழக அரசாங்கம் சர்வதேச மகளிர் தினத்தன்று “அவ்வையார்” விருது (2013) வழங்கி கெளரவித்து இருக்கிறது. ‘நாளை என்பதே நிச்சயம் இல்லை’ என்ற நிலையில், அனுதினமும் புற்றுநோயால் அவதியுறும் மக்களிடம், அன்பு, ஆறுதல், பரிவு, இரக்கம், பொதுநலம் மூலம் தம் வாழ்நாளை அற்பணித்தற்காக இந்த உயரிய விருது அவருக்கு பெயரையும், புகழையும் தேடித் தந்திருக்கிறது என்பதையும் இங்கே நினைவு கூறுவோம். ‘ராமன் மெகஸேஸே’ பரிசு பெற்ற இவருக்கு வழிகாட்டி (Rollmodels) என்று யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லையாகிலும், 78 வயது நிரம்பிய இவர் வாழ்வில் உயர்ந்ததற்கு, அகத்தூண்டுகோலாக அமைந்தவர்கள் நோபல் பரிசு பெற்ற சர் சி.வி. ராமனும், டாக்டர் சந்திரசேகர் அவர்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மிகச்சிறந்த கவிஞனாக, ஓவியனாக, சிற்பியாக, இலக்கியவாதியாக, எழுத்தாளனாக அமைவது பிறவியிலேயே என்று சொல்வது சம்பிரதாயமாக அமைந்துவிட்டாலும், தக்க சமயத்தில் ஊக்கமும், உற்சாகமும், அன்பும், ஆறுதலும், உழைப்பும், முயற்சியும் ஒன்று சேர்ந்துவிட்டால், ஒரு மனிதனுக்கு சாதனை படைப்பதற்கு உறுதுணையாகும் என்பதையே இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

 தொடரும்……….

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “நல்வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் – தொடர்-28

  1. அன்பும், இரக்கமும், துன்பத்தில் துவளும்போது ஆறுதலும் எல்லா மனித உயிர்களும் எப்போதும் எதிர்பார்ப்பவை. அத்தகைய உண்மையான அன்பும், மனித நேயமும் தற்போது மிகவும் குறைந்துவருகின்றது என்பதனையே (இன்றைய) சமூகத்தில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
    தக்க சமயத்தில் கிடைத்த உற்சாகத்தினாலும், ஊக்கத்தினாலும் சிகரம் தொட்ட எழுத்தாளர் ஒருவரின் உண்மைக் கதை முன்னேறத் துடிக்கும் அனைவருக்குமே ’ஊக்க மருந்து’ சாப்பிட்டது போன்ற தெம்பையும், மகிழ்ச்சியையும் தரும் என்பதில் ஐயமில்லை.
    தொடர்ந்து நல்ல சிந்தனைகளையும், கருத்துக்களையும் அள்ளி வழங்கி நல் வழிகாட்டும் திரு. பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு நன்றியும், பாராட்டுக்களும்!

    –மேகலா

  2. the articles presented in web site by Shri Peruvai Sarathi becoming a must to read.   though i am not frequently opening my mail box.  when ever i see mail my senses only throng to see what article is presented by you for us.   the articles speak of  reality and practicable.  my sincere thanks and i find no word appreciate the writer except finding way to adhere the things told.   well done sarathy keep it up.   best wishes.

  3. நல் வாழ்க்கை வாழ வழிகாட்டிகள் தொடரை எழுதிக்கொண்டிருக்கும் திரு பெருவை பார்த்தசாரதி அவர்கள் மிக பயனுள்ள ,வாழ்க்கைக்குத் தேவையான பல செய்திகளை இந்தத் தொடரில் அளிக்கிறார்

    அன்புடன் தமிழ்த்தேனீ

  4. படித்து முடித்ததும், நிஜமாகவே ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. ‘சுடர் விளக்கானாலும் தூண்டுகோல்’ ஒன்று தேவைப்படுவது நிஜம். அதை அழகாக விளக்கியது கட்டுரை. விலைமதிப்பில்லாத அன்பையும் ஆறுதலையும் வெளிப்படுத்தும் போது அவை பலமடங்காக நமக்குத் திரும்பக் கிடைக்கும் என்பது நிச்சயமான உண்மை. வாழ்வை அழகாக்கும் நல்ல பல அரிய கருத்துக்களைச் சொல்லும் திரு.பெருவை பார்த்தசாரதி அவர்களுக்கு மிக மிக நன்றி.

  5. அடுத்தடுத்த தொடரை எழுதுவதற்குத் தொடர்ந்து ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் மதிப்பிற்குறிய எழுத்தாளர்கள் திரு தமிழ்தேனீ ,  திருமதி மேகலா ராமமூர்த்தி, திருமதி பார்வதி ராமச்சந்திரன், வல்லமை வாசகர் திரு பாலச்சந்திரன் போன்றவர்களுக்கு நான் கடமைப் பட்டிருக்கிறேன்.  அடுத்த தொடரை எழுதத் தொடங்குமுன் இவர்களது கருத்துக்கள், எனக்கு மேன்மேலும் எழுதுவதற்கு உற்சாகம் அளிக்கிறது என்பதை நன்றியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

  6. நம்  வாழ்வை அழகாக்கும் பல செய்திகளை அகத்தூண்டுகோலாக வழிகாட்டும் பெருவைசாரதி அவர்களுக்கு மிக்க நன்றி.  தொடரட்டும்  நல் வாழ்க்கை வாழ வழிகாட்டிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *