தொல்லை காட்சி – பூஜா – சுருளி ராஜன்- வாணி ஜெயராம்

0
மோகன் குமார்
சீரியல் பக்கம்: கனா காணும் காலங்கள் – கல்லூரியின் கதை
எந்த சீரியலும் பார்ப்பதில்லை. ஆனால் சேனல் மாற்றும் போது சில அழகான பெண்மணிகள் கண்ணில் பட்டால், அங்கேயே சற்று இளைப்பாறுவது உண்டு. அப்படி தான் கனா காணும் காலங்கள் – கல்லூரியின் கதையில் அவ்வப்போது லேண்ட் ஆகிறேன்.
பூஜா என்ற டிவி நடிகை இதில் டீச்சர் ஆக வருகிறார். எந்த பூஜாவா? ஆமாங்க இந்த பூஜாக்கள் தொல்லை தாங்க முடியல.. ஏகப்பட்ட பேரு இருக்காங்க
ஜோடி நம்பர் சீசன் ஒன்னில் டைட்டில் ஜெயிச்சார் ; அப்புறம் வேற சில சீரியல் கூட நடிச்சார் போல ( என் மாமியாரை கேட்டால் ஒன்று விடாம அவர் நடிச்ச எல்லா சீரியல் பேரும் சொல்லுவாங்க )
இவருக்கு கல்யாணம் ஆன பின், ஒரேயடியாக கல்லூரி ப்ரபசர் ஆக்கிட்டாங்க. ம் கொடுத்து வச்ச பசங்க !
மறக்க முடியுமா- சுருளி ராஜன்
கேப்டன் நியூஸ் என்று ஒரு புதிய சானல் வருகிறது. (நம்ம கேப்டனின் டிவி தான். தேர்தல் சமயத்தில் பயன்படும் என துவங்கி உள்ளார் போல..)
அதில் ” மறக்க முடியுமா” என ஒரு நிகழ்ச்சி. மறைந்த நடிகர்கள், பாடகர்கள் பற்றி நினைவு கூர்கிறார்கள்.
நான் பார்த்த வாரம் – சுருளி ராஜன் பற்றி பேசினார்கள். 15 வருடம் தமிழ் திரை உலகை கலக்கிய சுருளி – ஒரு காலத்தில் கமல், ரஜினி, சிவாஜி என அனைத்து டாப் ஹீரோக்கள் படத்திலும் தவறாது இடம் பிடித்துள்ளார்.
1980- ல் தனது 40 வது வயதில் குடி பழக்கத்தால் அவர் இறந்துள்ளார். அந்த வருடம் மட்டும் அவர் நடித்த படங்கள் 50 ரிலீஸ் ஆனதாம். 82 ஆம் ஆண்டு வரை அவரின் பல படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருந்ததாம் !
இப்படி காரியரில் பீக்கில் இருக்கும் போது இறக்கும் நடிகர்கள் அரிது தான் என நினைக்கிறேன் ! அடுத்த வாரம் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா பற்றி என்று முன்னோட்டம் காட்டினார்கள். முடிந்தால் பார்க்கணும் !
பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி – 1
CNN IBN -ல் சாதித்த இந்திய பெண்களுக்கு பரிசுகள் தந்தனர் 
ஐஸ்வரியா ராய் மற்றும் கெளதம் கம்பீர் சிறப்பு விருந்தினர்களாக அனைவருக்கும் பரிசுகள் தந்து உரையாடினர்
கார்த்திகா என்கிற தமிழ் பெண் விருது கிடைத்து பேசும் போது ” நான் ஏழை தான். ஏழைகள் சிந்தனை சின்ன அளவில் தான் இருக்கும் என்கிறார்கள். அது தவறு. இந்த நாட்டின் பிரதமர் ஆகவேண்டும் என்பது என் கனவு.  மனிதர்களை தயவு செய்து அவர்கள் வைத்துள்ள பணத்தை வைத்தோ, அவர்களது பாலினத்தை  ( Gender  ) வைத்தோ எடை போடாதீர்கள்” என கம்பீரமாக பேசினாள். ” உன் அம்மாவிடம் ஏதேனும் பேசணுமா ? ” என ஐஸ்வரியா ராய் கேட்க ” அம்மா – உன்னால் தான் நான் படிக்க முடிந்தது. என்னை வீட்டில் வைக்காமல் படிக்க வைக்க அனுப்பிய முடிவை நீ தான் எடுத்தாய். அதற்கு நன்றி. அதனால் தான் நான் இன்று நிற்கிறேன் ” என்று தமிழில் பேசி அசத்தினாள். 

நெகிழ்வான  நிகழ்ச்சியாக இது இருந்தது 
பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி – 2
மெகா டிவி என்றொரு தொலைக்காட்சி இருக்கிறது (அப்படியா என்றெல்லாம் கேட்க கூடாது ) முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கே. வி.  தங்கபாலு நிர்வகிக்கும் இந்த டிவி யில் பெண்கள் தினத்தை முன்னிட்டு 5 ஆண்டுகளாக சாதனை பெண்களுக்கு விருது தருகிறார்களாம்.
இவ்வருடன் வாணி ஜெயராம் அவர்களுக்கு வாழ் நாள் சாதனையாளர் விருது  தர, அவரது அற்புத பாடல்களில் பலவற்றை காட்டினார்கள். அவர் இந்த 75 வயதில் மிக அருமையாக சில பாடல்களை பாடி காட்டினார். பாடல் வரிகளை தப்பு தப்பாக பாடும் இளம் தலைமுறை போலன்றி முப்பதுக்கும் மேற்பட்ட பாட்டுகளை மனப்பாடமாய் அடுத்தடுத்து பாடியது ஆச்சரிய பட வைத்தது
இந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததில்,  இதை வாசிக்கும் – உங்களுக்கு ஒரு கஷ்டமிருக்கு.. .. வாணி ஜெயராம் பாடல்கள் பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு எழுத ஆசை வந்துடுச்சு  (ஒடுங்க.. ஒடுங்க.. அது உங்களை நோக்கி தான் வருது )

டிவியில் வரும் சினிமா விளம்பரங்கள் 
என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு? ஒவ்வொரு சானலிலும் பத்துக்கும் மேற்பட்ட சினிமா விளம்பரங்கள் காட்டிய வண்ணம் உள்ளனர்.  மதில் மேல் பூனை, ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்கள் மிக அதிக முறை  காட்டினாலும், இன்னும் பெயர் நினைவில் வைத்து கொள்ள முடியாத எத்தனையோ படங்களும் கூட வருகிறது.

டிரைலர் பார்க்கவே கண்ணை கட்டுதே … நம்ம உண்மை தமிழன் மற்றும் கேபிள் போன்றோர் எப்படி தான் இந்த படங்களை பார்க்கிறார்களோ.. தமிழ் சினிமா இயக்குனர்கள் இவர்களுக்கு ரொம்பவே  கடமை பட்டுள்ளனர் !
பிளாஷ் பேக் : எதிரொலி (வாசகர் கடிதம்)

தூர்தர்ஷனில் வாசகர் எழுதும் கடிதங்களை ஒரு பெண்மணி வாசிக்க, நிலைய இயக்குனர் அதற்கெல்லாம் பதில் சொல்லுவார்.. குவிந்து கிடக்கும் கடிதங்களை பார்த்தால் பிரமிப்பா  இருக்கும். குறைஞ்சது ஆயிரம் லெட்டராவது கிடக்கும். ஏற்கனவே அவற்றை வாசித்து விட்டு, தங்களால் எதற்கு பதில் சொல்ல முடியுமோ அதை மட்டுமே அந்த பெண்மணி  வாசிப்பார். பலவும் ” அருமை; அற்புதம்; ” என்று இருக்கும். அரிதாய் சில சந்தேகங்கள் வர, அப்போ மட்டும் முகம் முழுக்க மேக் அப் போட்ட நம்ம நிலைய இயக்குனர் பதில் சொல்றேன் என அறுத்து தள்ளுவார். 

டிவி வந்த காலத்தில்  தூர்தர்ஷனில் வரும் எல்லா நிகழ்சிகளையும் பார்த்தாக வேண்டிய கட்டாயத்துக்கு பார்த்த நிகழ்ச்சி.. இன்னும் வருதா என தெரியலை !
சூப்பர் சிங்கர் கார்னர்
கடந்த வாரம் Zonal லெவலில் பெஸ்ட் பாடகர்களாக வந்தவர்கள்  பாடினார்கள். உண்மையில் அந்த கேட்டகரியில் பலரும் செம அட்டகாசமாய் பாடினார்கள் என்று தான் சொல்லணும்.
ஐந்து ஜட்ஜ்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசியவாறும், சிரித்தவாறும் கேட்கிறார்கள். நன்கு பாடுகிறார் என நாம் நினைக்கும் போதே தேவன் ரொம்ப சீக்கிரம் ரெட் பட்டனை அழுத்துகிறார். அவரை பார்த்துட்டு அடுத்த நொடி அடுத்து சுபா அல்லது சௌமியா ரெட் அழுத்திடுறாங்க. ஏன் செலெக்ட் ஆகலை என்பதற்கு காரணம் சொல்றோம் என நல்லா டிஸ்கரேஜ் பண்ணி அனுப்பிடுறாங்க.
பாடகர்களுக்கு பயிற்சி தருவது இருக்கட்டும்….விஜய் டிவி இந்த ஜட்ஜ்களுக்கு மனிதர்களிடம் எப்படி பேசுவது என கொஞ்சம் டிரைனிங் தந்தால் தேவலை !
படத்துக்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *