நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்கப் பெண்கள்  எல்லாவற்றிலும் ஆண்களுக்குச் சமமாகத் தாங்களும் செயல்பட  வேண்டும் என்று நினைக்கிறார்கள்.  இப்போது ராணுவத்திலும் ஆண்களோடு சமஉரிமை வேண்டும் என்று கேட்கிறார்கள்.  ஆண்களுக்குத் தரப்படும் எல்லாப் பதவிகளும் இவர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமாம்.  ஆண்கள் செய்யும் எல்லா முரட்டு வேலைகளையும் (பெரிய பளுக்களைத் தூக்குவது இதில் ஒன்று), செய்வது, ஈவு இரக்கமற்று எதிரிகளைக் கொல்வது, சண்டையில் சகாக்கள் அடிபட்டு வேதனையால் துடிப்பதையும் உயிருக்குப் போராடுவதையும் பார்த்து மனதைக் கல்லாக்குவது என்று ஆண்கள் செய்யும் எல்லாவற்றையும் இவர்களும் செய்ய வேண்டுமாம்.  இதற்காக இராணுவத்தில் எல்லா வேலைகளையும் பெண்களுக்கும் கொடுக்க வேண்டும் என்ற விதியை ராணுவ அமைச்சர் அமுகலுக்குக் கொண்டுவந்திருக்கிறார்.  சம உரிமைகளுக்காகப் போராடுவதற்கு ஒரு எல்லையே இல்லையா?  நான் எப்போதும் கூறுவதுபோல் இயற்கை  பெண்களையும் ஆண்களையும் ஒன்றாகப் படைக்கவில்லை.  ஆணின் உடம்பிற்குள்ள பலம் பெண்ணின் உடம்பிற்கு இல்லை.  பெண்ணால்தான் பிள்ளை பெற முடியும்.  சம உரிமை வேண்டும் என்பதால் ஆண்களையும் பிள்ளை பெறும்படி இவர்களால் பணிக்க முடியுமா?

மேலும் இராணுவத்தில் பணிபுரியும்  பல பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுகிறார்கள்.  ஆண்களுக்கும் இந்தக் கொடுமை நடக்கிறதாம்.  இருந்தாலும் இப்படிப் பெண்கள்  தேவையில்லாமல் ஆபத்திற்குத் தங்களை உட்படுத்திக்கொள்ள  வேண்டுமா?

எனக்குத் தெரிந்த ஒரு  பெண் ஒரு டிபார்ட்மெண்ட் கடையில் மெத்தைகள் விற்கும் பகுதியில் மேனேஜராக வேலைபார்க்கிறாள்.  இவள் மேனேஜர் என்பதால் மெத்தைகளை  இவளே தூக்க வேண்டியதோ நகர்த்த  வேண்டியதோ இல்லை.  ஆனாலும்  குழந்தை பெற்றுக்கொண்ட  ஒன்றரை மாதங்களிலேயே வேலைக்குச் சேர்ந்து (அதற்கு மேல் விடுமுறை இல்லை) கனமான மெத்தைகளைத்  தூக்குகிறாள்.  தன்னால்  இனியும் இந்த மாதிரி வேலைகளைச்  செய்ய முடியும் என்பதைப் பிறருக்கு எடுத்துச் சொல்வது போல் இருக்கும் இவள் செய்யும் வேலை

குழந்தை பெறுவது மட்டுமில்லை, அதன் பிறகு கொஞ்ச காலத்திற்காவது பாலூட்டி வளர்க்க வேண்டியது பெண்ணின் கடமை ஆகிறது.  இந்தக் கடமையையும் ஆண் சேர்ந்து சுமக்க வேண்டும் என்கிறார்களா?  பாலுறவுச் சுதந்திரம் வேண்டும் என்று கேட்டதால் இன்று சமூகத்தின் தூண்களில் ஒன்றான குடும்பம் என்ற அமைப்பு வலுவிழந்து போயிருக்கிறது.  இப்போது இராணுவத்தில் பணிபுரிய விரும்புவதால் இந்த அமைப்பு இன்னும் வலுவிழக்கும் என்று ஏன் இவர்கள் உணரவில்லை?  மேலும் பல ஆண் போர்வீரர்களே இராணுவத்தில் பணிபுரியும்போது அங்குள்ள கோரங்களைப் பார்த்துவிட்டு மனவியதியால் (Post traumatic disorder) பாதிக்கப்படுகிறார்கள்.  சிலர் இந்த வியாதியின் காரணமாக கொலைகாரர்களாகவும் மாறுகிறார்கள்.  ஆண்களே இவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டால் பெண்கள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவார்கள்?  பெண்கள் தங்கள் புத்திசாலித்தனத்தை உபயோகித்துச் செய்யக் கூடிய வேலைகள் எத்தனையோ இருக்கின்றன.  இராணுவத்தில் சில வேலைகள் பெண்களுக்கு மறுக்கப்படுவதால் பெண்களுக்கு ஆண்களோடு சம வேலைவாய்ப்புகள் இல்லையாம்.  அதனால் போராடித் தங்கள் உரிமைகளைப் பாதுகாத்துக்கொண்டார்களாம்!  அமெரிக்கா செல்லும் திசை சரியில்லை என்று நான் நினைப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.  இராணுவத்தில் எந்த வேலைக்கும் பெண்களும் நியமிக்கப்படலாம் என்ற விதியும் அந்தக் காரணங்களில் ஒன்று.

சில தினங்களுக்கு முன் வந்த ஒரு செய்தி பெண்கள் குற்றம் புரிவதிலும் ஆண்களோடு தங்களுக்குச் சமஉரிமை வேண்டும் என்று கேட்பது போல் இருக்கிறது.

டெலவேர் என்னும் மாநிலத்திலுள்ள லிங்கன் என்னும் ஊரைச்  சேர்ந்த மார்கரெட் ஸ்மித் என்னும் 89 வயதான மூதாட்டி வரப் போகும் ஈஸ்டர் பண்டிகைக்காக தன் வீட்டிற்கு வரப் போகும் உறவினர்களுக்குப் பரிசுகள் வாங்கக் கடைக்கு தன் பியூக் காரில் சென்றார்.  இவர் உயரம் 4’ 11” தான்.  தாட்டியான உடம்பில்லை.  காரின் ஸ்டியரிங்கைப் பிடித்து ஓட்டுவதற்கு டிரைவர் இருக்கையின் மீது ஒரு தலையணைய உயரத்திற்காக வைத்திருந்தார். வழியில் ஒரு இடத்தில் ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்று எண்ணி அந்தக் கடையின் முன் உள்ள கார்கள் நிறுத்துமிடத்தில் காரை நிறுத்தினார்.

இவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்ப்போம். லிங்கன்  ஊரின் ஸ்லாட்டர் நெக் என்னும்  தெருவில் பெற்றோரின் பன்னிரெண்டு குழந்தைகளில் ஒருவராக மார்ச் 1924-இல் பிறந்தார்.  தந்தை தொழிற்சாலையில் வேலைபார்த்ததோடு விவசாயமும் செய்துவந்தார். பெரும்பான்மையாக கருப்பு அமெரிக்கர்கள் வாழும் இடம் ஸ்லாட்டர் நெக்.  அவர்கள் வீடு, நிலம், பள்ளி எல்லாம் அங்குதான்.  அவர்கள் இறைவனை வழிபடும் சர்ச் கூட அங்குதான் இருக்கிறது. அங்குள்ள பள்ளியிலேயே பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பிலடெல்பியாவிற்குப் போய் முடி அலங்காரம் செய்யும் படிப்பை முடித்துவிட்டு மறுபடி ஸ்லாட்டர் நெக்கிற்கே திரும்பி அங்கு ஒரு அழகு நிலையத்தைத் துவங்குகிறார்.  முதல் திருமணம் விவாகரத்தில்முடிந்தது; இரண்டாவது கணவர் இளவயதிலேயே இறந்துவிட்டார்.  மூன்றாவது கணவரோடு 42 வருடங்கள் வாழ்ந்தார்.  2010-இல் அவர் இறந்துவிட்டார்.

எல்லோரிடமும் மார்கரெட் அன்பாகப் பழகுவார்.  சர்ச்சில் பாட்டுப் பாடுவார். தன்னார்வத் தொண்டு செய்வார்.  இவருடைய அழகு நிலையத்திற்கு பல மைல் தொலைவிலிருந்து வருபவர்களும் உண்டு.  உள்ளூரில் இவருக்கு நல்ல பெயர்.  பத்து வருடங்களுக்கு முன் தொழிலிருந்து ஓய்வு பெற்றார். பக்கத்து வீட்டுக்காரர் இறந்து போனதும் அவருடைய பூனையை மிகவும் அன்போடு வளர்த்து வந்தார்.

கார் நிறுத்துமிடத்தில்  காரை நிறுத்தியிருந்த இவரை இரண்டு இளம் பெண்கள் – வயது 15,14 – அணுகி நகரின் அடுத்த கோடிக்குப் போக வேண்டும் என்றும் தங்களை அவர் அவருடைய காரில் கூட்டிச் சென்றால் பனம் கொடுத்துவிடுவதாகவும் கூறினர்.  முதலில் தயங்கிய மூதாட்டி பின் அவருக்கே உரிய இரக்க சுபாவத்தினால் அவர்களைத் தன் காரில் கொண்டுவிடுவதாகவும் ஆனால் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் கூறி அவர்களைத் தன் காரில் ஏற்றிக்கொண்டார்.  அந்தப் பெண்கள் மீது இரக்கம் காட்டியதுதான் அவர் செய்த பெரிய தவறாகப் போய்விட்டது.

காருக்குள் ஏறியவுடனேயே  கார்ச் சாவியை மூதாட்டியிடமிருந்து  பறித்துக்கொண்ட அந்த இரு  பெண்களும் மூதாட்டியை கார் டிக்கிக்குள் தள்ளிப் பூட்டிவிட்டு காரை ஓட்டத் தொடங்கினர். இடையில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி டிக்கியைத் திறந்து மூதாட்டியிடமிருந்த 500 டாலர் பணத்தைப் பறித்துக்கொண்டு மறுபடி டிக்கியிலேயே வைத்துப் பூட்டினர்.  அவரிடமிருந்த செல்போனையும் பறித்துக்கொண்டனர்.  இரண்டு நாட்கள் நாற்பது டிகிரி குளிரில் ஆகாரமும் இருதய வியாதிக்கும் இரத்த அழுத்தத்திற்கும் தேவையான மருந்துகளும் இல்லாமல் அந்த டிக்கியில் காலம்கழித்த அவரை மறுநாளைக்கு மறுநாள் டிக்கியிலிருந்து விடுவித்து ஒரு கல்லறைத் தோட்டத்தில் விட்டுவிட்டு அந்தப் பெண்கள் ஓடிவிட்டனர்.

எங்கிருக்கிறோம் என்பதே தெரியாமல்  மூதாட்டி வெறும் கால்களோடு அந்த மண் ரோட்டில் தவழ்ந்து வந்துகொண்டிருந்ததை நல்ல வேளையாக ஒரு பெண் பார்த்து அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்.

ஒரு மூதாட்டியை இப்படி வஞ்சித்து  அவரிடமிருந்து பணத்தைத் திருடி,  அவரை டிக்கியில் இரண்டு நாட்கள் இருக்கும்படி செய்து, பட்டினி போட்டு அரக்கத்தனமாக ஆள் நடமாட்டமில்லாத ஒரு கல்லறைத் தோட்டத்தின் அருகில் அம்போ என்று விட்டுவந்த இந்த அரக்க அமெரிக்கப் பெண்களை எதில் சேர்ப்பது?  இவர்கள் ஆண்களுக்கு நிகராகக் குற்றம் புரிகிறார்களா?

இந்தியாவில் இப்படிப்பட்ட வக்கிர நடத்தை கொண்ட பதின்ம வயதுப் பெண்களை சமூகம் உருவாக்காது  என்று நினைக்கிறேன்.

அமெரிக்கப் பெண்கள் தங்கள் உடல் அமைப்பை மீறி இயற்கை எல்லையைத் தாண்டினால் அது அமெரிக்காவின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்று நினைக்கிறேன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “அமெரிக்கப் பெண்கள்

  1. பெண்கள் எல்லா வேலைகளையும் ஆண்களுக்கு நிகராகச் செய்யவேண்டும் என்று கிளம்புவது அவர்களின் பக்குவமற்ற, அறிவு முதிர்ச்சியற்ற தன்மையையே காட்டுகின்றது.

    கல்வியிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவது, உடலுக்கும், உள்ளத்திற்கும் தீங்கு நேராத, பாதுக்காப்பான சூழலில் பணிபுரிவது, குடும்பம் என்ற கோயிலைக் கட்டுக்குலையாமல் காப்பது, அனைத்திற்கும் மேலாகப் பெற்ற குழந்தைகளைப் பேணி வளர்த்து அவர்களை நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் ஆக்குவது போன்றவற்றில் பெண்கள் தங்கள் திறமையைக் காட்டுவதே வீட்டிற்கும், நாட்டிற்கும் (அது எந்த நாடாயினும்) நல்லது.

    அதைவிடுத்து, போர்க்களத்திற்குச் செல்வேன்; போரிட்டு வெல்வேன் என்று சூளுரைப்பதெல்லாம் சற்று ‘over’ தான். கட்டுரையாசிரியர் குறிப்பிட்டதுபோல் உலகப் போர்களில் (World War I & II) கலந்துகொண்டு அங்கே நிகழ்ந்த கோர மரணங்களைக் கண்டு கடுமையான மனநோய்க்கு (Post-Traumatic Stress Disorder) ஆளான ஆண்கள் (veterans) பலரைப் பற்றிய குறிப்புகளை நான் என் பணி நிமித்தமாக அடிக்கடி எழுதுவதுண்டு. அவர்கள், அந்த கோரக் காட்சிகள் இன்றும் தங்களைப் பயமுறுத்துவதாகவும், தூங்கவிடாமல் செய்வதாகவும் மனநல மருத்துவர்களிடம் முறையிடுவதும், கண்ணீர் விடுவதும் நம்மை மிகுந்த மனவேதனையில் ஆழ்த்துவதாயிருக்கும்.

    ஆகவே, பெண்களே! போர்க்களத்திற்குச் செல்லும் ஆசையை விடுத்து ஆரோக்கியமான குடும்பத்தையும், சமூகத்தையும் அமைக்கப் பாடுபடுங்கள்!!

    …மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *