இந்த வார வல்லமையாளர்!

திவாகர்

சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து

திருவாசகத்து சிவபுராணத்தில் மாணிக்கவாசகர் இந்தக் கடைசி நான்கு வரிகளில் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்’ என்பதை மிகவும் ஊன்றிப்பார்த்தால் புரியும், நாம் பாடும் பாடலின் பொருளை நாம் சரியாக அறிந்துகொள்ளவேண்டும் என்பதில் எத்தனை முனைப்பாக இருக்கிறார் என்பதும் தெரியவரும்.

வடமொழியில் பாடப்படும் வேதத்தின் சாரமாகவே தமிழில் கொடுக்கப்பட்டதுதான் தேவார திருவாசகமும், திவ்வியப்பிரபந்தங்களும் என்பதை நம் முன்னோர்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் சொல்லி வந்தனர்தாம். வடமொழி வேதங்கள் அவ்வளவு சுலபமாக அறியப்படுபவை அல்ல. அப்படியே வேதங்களை நாம் செவிவழியாகப் பயின்று அதை சரியானபடி படித்தாலும் பாடினாலும் அதன் பொருள் நிச்சயமாக நாம் அறிந்ததுதானா என்ற கேள்வி கூட வரும். இதனால் எல்லாம் வேதங்களுக்கும் வேதப் படிப்புக்கும், வேத ஞானத்துக்கும் நாம் எதிர்மறையாகப் பேசப்போவதில்லை. வேதங்களின் நாயகன் இறைவன் என்பதும் அந்த வேதமானது நம் சனாதன தர்மத்தின் ஆணிவேர் என்பதும் பாரத ஆன்மீக வரலாற்றில் பன்னெடுங்காலமாகவே போற்றப்பட்டு வந்ததுதான். இங்கு நாம் சொல்ல வந்த கருத்து கூட கையிலே வெண்ணெயிருக்க நெய்க்கலைவானேன், என்பது மட்டுமே

ஈழத்தைச் சேர்ந்தவரும், வடமொழியில் தேர்ந்து, பைபிளையும் பயின்றவருமான தமிழ்ப் புலவர் சாமிநாதசர்மா, தேவாரத்தை பல்வேறு வகையில் வேதங்களின் மூலக் கருத்தோடு இணைத்து நூறாண்டுகளுக்கு முன்பாகவே நூல் படைத்திருக்கிறார். மானிடராய பிறந்த ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல் தேவாரம் என்று எழுதுவதோடு வேதத்தின் பொருளை அறிந்து கொள்ள தேவாரம் பாடல்களைப் பொருளுணர்ந்து படித்தால் போதுமானது என்பார்

பொருளுணர்ந்து பாடவேண்டும் என்கிறபோது, அதுவும் தேவாரப் பாடல்களை ஆழமாக உள்வாங்கி, உணர்ந்து பாடும்போதே அந்தப் பாட்டில் பொருள் நமக்கு சாதாரணமாகவேப் புரியும். சில சமயங்களில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமான பொருள் தரும் கட்டங்களும் வரும். அதில் ஒன்றுதான் அப்பர் சுவாமிகள் பாடிய ’நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ என்ற ஒரு அருமையான தேவாரப் பாடல். இதன் ஆழமான பொருளை திரு லோகநாதன் அவர்கள் சமீபத்தில் ஒரு மடலில் தந்துள்ளார். அந்தப் பாடலின் விளக்கத்தை அவர் மொழியில் கீழே தந்துள்ளோம்.

வேதங்களிலிருந்து ஒரு சுலோகமும் அறியாதவனும் பல நாடுகளின் நல்ல ஞானியாக எழுந்துள்ளான். இவ்வாறு கோயில்களே இல்லாத பண்பாடுகளிலும் நல்ல ஞானிகள் உண்டு ஆக அனைவருக்கும் பொதுவாகிய ஓர் சாதனம் தான் யாது?
இங்குதான் நம் அப்பர் பெருமான் உதவுகின்றார்.

இறைவன் தான் யார்க்கும் குடி அல்லாதவன் அவனை நெருங்கினால்தான் அகத்தே ஞனபிரகாசம் தானே மலர்ந்திடும் ஞான அந்தகாரத்தைத் தரும் ஆணவ இருளும் உயிரை நெருங்காது.

தான் யார்க்கும் குடியல்லாத சங்கரனின் நெருக்கத்தை, தான் யார்க்கும் குடியலாத் தனமையே வளர்க்கும், ஒவ்வொரு ஆன்மாவின் சுயத்தை மீட்கும் அதன் சுதந்திரத்தை வளர்க்கும் ஓர் போதனாமுறையே ஈட்டித் தரும்.

அடிமைத் தனத்தை வளர்க்கும் எந்த சமய சாதனமும் பயனின்றி விழும், பண்பாட்டின் சிதைவுக்கும் அழிவுக்கும் வித்திடும்.

அதுதானே இப்பொழுது தமிழ் மக்களிடையே நடந்து கொண்டிருக்கிறது?

காவி உடுத்தி சாமியாராகத் திரியும் பெரும்பாலோர், அடியார்கள் அனைவரும் தனக்கே அடங்கி அடிமையாகி இருக்க வேண்டும் தன்னையே இறைவனாக நினைத்து தனக்கே உடல் பொருள் ஆவி அனைத்தையும அர்ப்பணிக்க வேண்டும் என்றல்லவா நினைக்கின்றார்கள்?

இவரகட்கு ஏற்ப பெரும்பாலான மக்களும் இவ்வாறு ஒருவனுக்கு அடிமைப் பட்டு கிடத்தலையே விரும்பி அதுவே தக்க வழி என்று நினைத்து தன் சுயத்தை வளர்க்காது இப்பேற்ப்பட்ட சாமியாரகட்கும் இழக்கின்றார்கள்.

அடிமை படுத்துபவன் உள்ளத்திலும் அடிமைப் படுகின்றவன் உள்ளத்திலும் ஆண்டவன் இருக்க மாட்டான் என்பதோடு அங்கே ஆணவ மலத்தை விரட்டும் ஞானப்பிரகாசமும் சுடராது.

பண்பாட்டு வீழ்ச்சியின் முதன் படியே இப்படிப்பட்ட சுயத்தின் இழப்புதான். இன்றையத் தமிழர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இதனை நினைக்க மிகவும் வேதனையாகவும் இருக்கின்றது.. இதனால்தான் போலும் உலகிலேயே முதன் முதலில் மனித சுயத்தைப்பற்றி மிக ஆழமாக சிந்தித்து முழங்கிய அப்பர் பெருமானின் “நாம் யாருக்கும் குடி அல்லோம்” எனும் பாடல் போற்றுவாரின்றி வாளே கிடக்கின்றது. இளமை காலத்திலேயே எனை ஈர்த்து எனை சைவன் ஆக்கிய அந்தப் பாடலை இங்கு தருகின்றேன்– அனைவர் உள்ளதிலும் அது ஆழப் பதிய.

961.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் சங்கவெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்று மீளா ஆளாய்க்
கொய்ம்மலர் சேவடி இணையே குறுகி னோமே

ஓர் சிறிய நாட்டின் தலைவனாக இருக்கும் யாருக்கும் அடிபணிந்து அந்நாட்டின் குடியாக இருக்கமாட்டோம், அவ்வாறுசெய்யுங்கால் தண்டித்து கொலை நோக்கோடு வந்தாலும் நமனை அஞ்சோம்; பலவித தண்டனைகள் கொடுத்து வாழ்க்கையைநரகமாக்கினாலும் இடர்படோம் , நடுங்கவுஞ் செய்யோம்; எச்சூழ்நிலையிலும் மனங்குழையாது ஏமாப்புடனேயே இருப்போம்,எவ்வகையான பிணியும் அறியோம் என்பதின் பணிவோம் அல்லோம்; யாது நடந்தாலும் அது இன்பமே எந்நாளும் துன்பமில்லை. இவ்வாறு நாம் இருப்பதற்கு காரணம் தாம் யார்க்கும் குடியல்லாத சர்வ சுதந்திரத் தன்மையான அர்த்தநாரீ வடிவத்துவெண்குழையோர் காதில் அணிந்திருக்கும் சங்கரனை நம் தலைவராய்க் கொண்டு, அவனுக்கே மீளா ஆளாய் நின்று அவனது மலர்களைப் போன்ற சேவடிகளைத் தொழுவதற்கே நாம் குறுகினோம் என்பதால் என்றறிக

தேவாரப்பாடல்கள் இப்போது முழுமையான பொருளில் தேவாரம் தளத்தில் கிடைக்கின்றன என்பது சிவன் அவன் திருவருள்தான். அதனுடன் திரு லோகநாதன் போன்றோர் இப்படிப்பட்ட ஆழமான பொருளையும் சேர்ந்து நமக்குத் தருவது என்பதும் நமக்கு கூடுதலான இன்பம்தானே.

இந்தவாரத்தில் ஒரு இனிய பாடலுக்கு விளக்கமளித்த திரு லோகநாதன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழு தேர்ந்தெடுக்கின்றது. அவருக்கு நம் வாழ்த்துகள்.

http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-12-01-20-30-58/2008-12-01-20-31-36/2008-12-01-21-38-40 வல்லமையாளர் திரு லோகநாதன் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த தளத்திற்குச் செல்லுங்கள். நன்றி.

கடைசி பாரா: சாந்தியின் ‘காகிதக் குறிப்புகள்’ லிருந்து

அற்புதமானதாகவோ சாதாரணமாகவோ
ஏதேனும் ஒரு
கிறுக்கலையாவது பரிசளிப்பது மிக நன்று.
அதை
வெறுமையாகவே விட்டுச்செல்வதை விட.

திவாகர்

திவாகர்

நாடகக் கலைஞர், எழுத்தாளர்.

Share

About the Author

திவாகர்

has written 148 stories on this site.

நாடகக் கலைஞர், எழுத்தாளர்.

7 Comments on “இந்த வார வல்லமையாளர்!”

 • பார்வதி இராமச்சந்திரன்
  பார்வதி இராமச்சந்திரன். wrote on 6 May, 2013, 19:16

  இந்த வார வல்லமையாளர் திரு.லோகநாதன் அவர்களுக்கும், கடைசிபாராவில் இடம்  பிடித்த ‘அமைதிச்சாரல்’ திருமிகு.சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

 • மேகலா இராமமூர்த்தி
  மேகலா இராமமூர்த்தி wrote on 6 May, 2013, 19:44

  இவ்வார வல்லமையாளர் திரு. லோகநாதன் அவர்களுக்குப் பாராட்டுக்கள்!
  கடைசிப் பாராவில் இடம்பெற்ற கவிஞர் சாந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

 • பழமைபேசி wrote on 7 May, 2013, 2:07

  வல்லமையாளருக்கும் கவிஞருக்கும் வாழ்த்துகள்!!

 • தனுசு
  தனுசு wrote on 7 May, 2013, 9:44

  வல்லமையாளர் திரு லோகநாதனுக்கு வாழ்த்துக்கள். மேற்குறிப்போடு வந்த கவிதையும் நன்று. வாழ்த்துக்கள்.

 • சாந்தி மாரியப்பன்
  அமைதிச்சாரல் wrote on 7 May, 2013, 19:01

  கடைசிப்பாராவில் இடம் தந்த திவாகர்ஜிக்கும் கவிதையைப் பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்..

 • சச்சிதானந்தம் wrote on 7 May, 2013, 21:24

  இந்த வார வல்லமையாளர் திரு.லோகநாதன் அவர்களுக்கும் “காகிதக் குறிப்புகள்” வழங்கிய திருமதி.சாந்தி மாரியப்பன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

 • முனைவர் ப. பானுமதி
  ஆதிரா wrote on 11 May, 2013, 11:08

  இவ்வார வல்லமையாளர் திரு. லோகநாதன் அவர்களுக்கும் 
  கடைசிப் பாராவில் இடம்பெற்ற கவிஞர் சாந்தி அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்!

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.