-விசாலம்

தமிழ்நாடு என்றாலே நம் கண்முன் நிற்பது கோயில்கள் தான்.கோபுர தரிசனம் கோடி நன்மை என்றும் கோடி புண்ணியம் என்றும் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அதுவும் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் பாதையில் ரயில் பிரயாணம் செய்ய  பல புகழ் பெற்ற கோபுரங்கள் வரும்..பிரயாணிகளில் பலர் தன் இருக்கையில் இருந்தபடியே கோபுரத்தைப்பார்த்தபடி கைக்கூப்பி கன்னத்திலும் போட்டுக்கொள்வார்கள். கும்பகோணத்தில் மிகப் பழைய கோயில்கள் அதிகமாகக் காணமுடிகிறது. வட நாட்டில் பல கோயில்கள் இருந்தாலும்  தமிழ் நாட்டைப்போல் இருப்பதில்லை.அங்கு இருக்கும் கோயில் சிலைகள் பளிங்கினால் செதுக்கப்பட்டுள்ளன. அதே போல் தரைகளும் மார்பிள் என்று சொல்லும் பளிங்குக் கற்களால் ஆனவை. இங்கு பல கோயில்களில் கர்ப்பகிரகத்தினுள் செல்ல அனுமதியில்லை.ஆனால் அங்கு அநேக கோயில்களில் பக்தர்கள் தங்கள் கைகளினாலேயே பூக்கள் வைக்கவும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யவும் அனுமதி உண்டு.

இங்கு இருக்கும் கோயில்கள் ஆகம சாஸ்திரப்படி கட்டப்பட்டுள்ளன. ஆகம சாஸ்திரத்தில்   கோயில் கட்டும் விதி, அதில் இருக்கும் சிலைகளின் வடிவங்கள், பிரகாரங்களின் அளவு, வாஸ்து என்று எல்லாமே சொல்லப்பட்டு அதைப் பின்பற்றியே  கட்டப்பட்டுள்ளன .

கோயிலின் வரைபடத்தில் கர்ப்பகிரகம் எப்படி இருக்க வேண்டும்  என்றும்  கூறப்பட்டிருக்கிறது. பலி பீடம், துவஜஸ்தம்பம், மற்ற சன்னதிகள், வசந்த மண்டபம், வாஹன மண்டபம் எல்லாமே எப்படி அமைக்கப்படவேண்டும் என்ற நியதிகள்  வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன. தவிர, அங்கிருக்கும் தெய்வத்தைக் குஷிப்படுத்த தகுந்த சமயத்தில்  இசை, நடனம்,  நாடகம் என்ற கலைகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. அறுபத்தினான்கு  உபசாரங்களில் இசையும் ஒன்று. நம் வீட்டில் பெரிய அளவில் எதாவது பூஜை நடந்தால் பூஜை முடியும் நேரம் சாம வேதம் ஓதிய பின் வாத்தியார்  பெண்களின்பக்கம் பார்த்து  “யாராவது ஒரு பாட்டு அம்பாளுக்கு பாடுங்கோ” என்பார். நானும் இதில் பங்கு பெற்றுக்கொள்வேன்.

இசையை  வெளிப்படுத்தும்படி பல சிற்பங்களும் கோயில்களில் காணமுடிகிறது. சரஸ்வதி தேவி வீணையுடன், கண்ணன் புல்லாங்குழலுடன், நடராஜர் கையில் உடுக்குடன், நந்திதேவர் மத்தளத்துடன்  எனப் பலவிதமான சித்திரங்களை நாம் பார்க்கிறோம் .

அவைகளில் சில கோயில் மண்டபத்தின்  மேல் சுவற்றில் மிக அருமையாக வரையப்பட்டுள்ளன. இந்தச்சித்திரங்களை ஒரு கயிற்றில் தொங்கியபடியே வரைந்திருக்க வேண்டும். சில சித்திரங்கள் ரம்பை ,ஊர்வசி நடனத்தை அழகாக விவரித்துள்ளன. நடராஜர், தில்லைக்காளி நடனம் சிதம்பரத்தில் தில்லைக்காளி கோயிலில் மிக  அழகாக வரையப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் உபயோகிக்கப்பட்டுள்ள வர்ணங்களும் இயற்கை  மூலிகையிலிருந்தே தயாரிக்கப்பட்டு வந்தது. ஒவ்வொரு கோயிலிலும் அங்கு அருள்பாலிக்கும் இறைவன், இறைவியைக்கொண்டு புராணங்களிலிருந்து பல கதைகள் சித்திரமாக வரையப்பட்டு நம்மை வியப்படைய வைக்கின்றன .

ஸ்ரீராம பட்டாபிஷேகம், கஜேந்திர மோட்சம், ஆண்டாள் திருமணம், தசாவதாரங்கள், ஆழ்வார்கள் சரித்திரம், போன்று வைஷ்ணவ கோயில்களிலும், சைவ கோயில்களில் நாயன்மார்களின் சரித்திரங்கள் சிவனின் திருவிளையாடல், மார்கண்டேய புராணம், அப்பர், சுந்தரர் திருநாவுக்கரசர் போன்றவர்களின் சித்திரங்களும் பார்க்க மிக பிரமிப்பாக உள்ளது. அவர்கள் இயற்றிய பாடல்களும்  ஓதுவார் மூலமாகப் பாடப்பட்டு வருகின்றன. முருகன் கோயில்களில் அருணகிரிநாதர் இயற்றிய  திருப்புகழை இன்றும் பக்தர்கள் பாடுகின்றனர். வைணவ கோயில்களில் பாசுரங்கள், திருப்பாவை, நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவைகள் இசையுடன் பாடப்படுகின்றன

கீதம், வாத்யம்,  நிருத்யம் என்ற மூன்று பிரிவுகளும்  கோயிலில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  முதலில் வருகிறது வேதம். அதில் முதலாக கண்டுப்பிடிக்கப்பட்ட  ஸ்வரம் மூன்று. அவை  ஸ ,ரி, நி,………இவையே  ஸ்வரித்தா, உதத்தா, அனுதத்தா என்ற பெயர் கொண்டவை .

வேதங்கள் சொல்லும் போது இந்த சுவரங்கள் தான் மேலும் கீழும் பேசும். இதைக்குறிக்க  சம்ஸ்கிருத எழுத்தின் கீழே, அல்லது மேலே  சிறு கோடுகள் இருக்கும். மேலே இரு கோடுகள் இருக்க அங்கு ” நீ” என்ற சுவரம் பேசும்.  பின்  சாம வேதத்தில் மேலும் ஓரிரு சுவரங்கள் சேர்க்கப்பட்டன.  இறைவனின் பூசையின் போது வேத வித்தகர்கள் மூலம் இன்றும் இவை ஓதப்பட்டு  வருகின்றன. வேதங்கள் எல்லாமே ஒரு நியதியுடன் ஸ்வரஸ்தானங்கள் பிசகாமல் சொல்ல வேண்டும். அதனால் எழும்பும் ஒவ்வொரு ஒலிக்கும் மந்திர சக்தி உண்டு. அவை காற்றுடன் கலந்து நல்ல அதிர்வலைகளை உண்டு செய்யும். மழை  பெய்யத்  தவறினால் வருண பகவானை அழைப்பது, வியாதி பரவுவதைத் தடுக்க  தன்வந்திரி பகவானை  அழைப்பது,  படிப்பு வரவில்லை என்றால் ஸரஸ்வதியைப் பிரார்த்திப்பது,  என்றெல்லாம் சூக்தம் என்ற பெயரில் சொல்ல அதன் நற்பலன் கைமேல்  கிடைக்கும்.

பக்தி வளர்ந்த காலத்தில் {   medieval period  .ல்} இசை,  பஜன் என்ற பெயரில் அதாவது  திவ்ய நாம சங்கீர்த்தனம் பாணியில் ஆரம்பித்தது. இது பாமர  மக்களுக்கு மிகவும் எளிதாக இருந்தமையால் பலரும் இதைப்பின்பற்றினர்  சங்கீத ஞானம் குறைவாக இருந்தவர்களும் கூட்டத்துடன் இதைப் பாட முன் வந்தனர். இந்தக் கோஷ்டி  கானம் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மஹராஷ்ட்ராவில்  துகாராம், நாம் தேவ் போன்றவர்களும் பல பஜன் பாடல்களை இயற்றி, பாடி, இறைவனுடன் கலந்தனர். பதினைந்தாம் நூற்றாண்டில் இந்த  பக்தி மார்க்கம்  எல்லா மாகாணங்களிலும் பரவியது.

அருணகிரிநாதரின் திருப்புகழ்  சைவ சித்தாந்தத்தைத் தழுவி 1367 பாடல்கள் கொண்டு எல்லா முருகன் கோயில்களிலும்  பாடப்பட்டது . இதன் சந்தங்கள் மிகவும்  அருமையாக அமைக்கப்பட்டுள்ளன.

இதேபோல் இசை பாடியே ஜோதியாகக் கலந்தவர்கள் பலர். பல வருடங்களாக பகுள பஞ்சமியன்று ஸ்ரீதியாகராஜர் சன்னதியில் பஞ்சரத்ன பாடல்களை பல இசைக்கலைஞர்கள் பாடி வருவதைக் காண்கிறோம். இதேபோல்முத்துசுவாமிதீட்சதர், ஸ்யாமாசாஸ்திரி, ஸ்வாதிதிருநாள், புரந்தரதாசர் கிருதிகளையும் கோயில்களில் கேட்கிறோம்.,

இன்றைய கால கட்டங்களில் கோயில்களில் சினிமாவில் பாடப்பட்ட பல பக்தி பாடல்களும் திருவிழாவில் இடம் பெருவதை நாம் பார்க்கிறோம். இந்த முறை நான் கோயம்பத்தூரில் மாரியம்மன் கோயிலுக்குச் சென்றிருந்தேன். ஏழு நாட்கள் தொடர்ந்து திருவிழா.  “மருதமலை மாமணியே முருகய்யா,”  “பழனியப்பா ஞானப் பழனியப்பா”, “ சிங்கார வேலனே”, என்ற பாடல்களும் திருமதி எல் ஆர் ஈஸ்வரி பாடிய மாரியம்மன் பாடல்களும்  அன்று  சித்திரை திருவிழாவில் பாடுவதை நான் கண்டு களித்தேன் . எல்லாமே திரு கண்ணதாசன் இயற்றிய பாடல்கள். சில பாடல்கள் சினிமாமெட்டில்  பாடுவதையும்  கேட்டேன்.

படத்துக்கு நன்றி: http://www.panoramio.com/photo/74277719

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *