ஷைலஜா

 

இன்று(24-5-2013)) சுவாதி நட்சத்திரம் ! நரசிம்ம ஜயந்தி!

அன்று ஸ்ரீரங்கம் அரங்கன் கோயிலில் ஒரே ஆரவாரம்! ‘ஆதிகவியான வால்மீகியின்  இராமாயண காவியத்தை  தமிழில் செய்து அரங்கேற்றத் துணிந்த இந்தக் கம்பன் என்பவன் யாராம்?” என்று  ஒருவருக்கொருவர் வியப்பும் திகைப்புமாகக் கேட்டுக்கொண்டனர்.

திருவரங்க  நகரம்  அந்த நாளில் தமிழிலும் வடமொழியிலும் தேர்ந்த பண்டிதர்களைக்கொண்டிருந்தது. அங்கே தங்களது புலமைக்குப்பாராட்டு கிடைப்பதை விரும்பாத புலவர்களே இல்லை.

இங்கு தனது இராமாயணக்காதை அரங்கேறுவதே தனக்குச்சிறப்பு என்று கம்பன் நினைத்தான்.

கம்பனின் கதையைக்கேட்டுத்தான் பார்க்கலாமே  என்று சிலர் ஆர்வமுடன் முன்வந்தனர். அவர்களின் முயற்சியில்

அரங்கன் கோயிலில்  பிராட்டியாரின் சந்நிதி முன்பாக இருக்கும் நாலுகால் கல்மண்டபத்தில்  அரங்கேற்ற ஏற்பாடுகள் ஆயத்தமாயின.

வால்மீகியான  தெய்வ மாக்கவி மாட்சி தரிக்கவே  இதை நான் புனைந்தேன்  என்றான். கம்பன்.

பிறகு இராமாயணக்காதையை  தான் இயற்றிய பாடல்களுடன் கூற ஆரம்பிக்கிறான்.

பல புலவர்களும், கதை கேட்பவர்களும், அமர்ந்திருக்கும் அந்த இடத்தில்  அப்போது, யுத்த காண்டம் அரங்கேற்றம் ஆரம்பிக்கின்றது.

”விபீஷணன்  ராவணனுக்கு  எவ்வளவோ அறிவுரைகள்  கூறினான்  காமத்தில் மதி இழந்த இராவணன் அவைகளைப்பொருட்படுத்தாமல் விபீஷணனை இகழத்தொடங்கினான்.

“விபீஷணா! மானுடர் வலியர் என்றாய்! ஏன்…? அச்சமோ? அவர்பால் அன்புமோ உனக்கு? கூனியின் சூழ்ச்சியால் அரசிழந்து வனம் புகுந்து என் சூழ்ச்சியால் தன் மனைவியை இழந்தும் கழிந்துபோகா உயிரைச் சுமந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வலைமையை உன்னைத்தவிர யார் மதிப்பர்? அவனோ என்னை வெல்லுவன்?’ என்று  கத்தினான் .

“மனம் வருந்திய விபீஷணன்,”அண்ணா!! நீர் இராமன் என்னும் நாராயணனைக் கேவலமாய் நினைக்கவேண்டாம். ஒப்புயர்வில்லாத வீரர்கள்  அந்த நாராயணனைப்  பகைத்து அழிந்து போயிருக்கின்றனர் அத்தகையவர்களில் ஒருவன் தான் இரணியன் என்பவன்.” என்று சொல்லி இரணியனின்  வரலாற்றையும் கூறினான்.

இப்படி  கம்பன் கூறும்போது,  சில பண்டிதர்கள் திகைத்தனர்.

உமக்கு நரசிம்மாவதாரம் எழுத ஆசையிருந்தால், தனியாக எழுதிவிடலாமே! இங்கு எதற்கு இதைச் சேர்க்க வேண்டும்?” என்று சீறினார்  ஒருவர்.

மற்றவர்.” ஆமாம்! இதை ஒப்புக் கொள்ள முடியாது! அனைத்தும் தவறு “ என்று பொங்கி எழுந்தார். புலவர்களே! அமைதி! கம்பர் என்ன சொல்கிறார் என்று முதலில் கேட்கலாம்! கம்பரின் ராமாயணம் முடிவதற்குள் இறைவனின் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றால், இந்த ராமாயணம் காப்பியமாக அனுமதிக்கப் படாது. அதுவரையில் நாம் பொறுமை காக்க வேண்டியது அவசியம். கம்பரே! நீர் தொடரும்!”  என்று அவைத்தலைவர் அனுமதி அளித்தார்.

பெருமூச்சுடன், கம்பர் தொடர்ந்தார்

நசை திறந்து இலங்கப் பொங்கி, ‘நன்று நன்றுஎன்ன நக்கு;
விசை திறந்து உருமு வீழ்ந்தது என்னவே, தூணின் வென்றி
இசை திறந்து, உயர்ந்த கையால் எற்றினான்; என்றலொடும்;
திசை திறந்து, அண்டம் கீறிச் சிரித்தது செங்கட் சீயம்
!

அவ்வளவுதான்….

ஒரு புலவர் (வேகமாக எழுந்து,” புலவரே!  பாடலை மீண்டும் படியுங்கள்!” என்றார்

கம்பர் படிக்க, புலவர் பொருள் கேட்க, கம்பர் பாடலை விளக்கினார்.

சிரித்தது செங்கட் சீயம்” என்கிறீரே! எங்காவது சிங்கம் சிரிக்குமா? நீர் கேட்டதுண்டா? அவையில் யாராவது இதைப் பார்த்ததுண்டா?”

அவையில் சிரிப்பு!;

கம்பர், இந்தச் சிரிப்பையும் கிண்டல் பார்வைகளையும் பொருட்படுத்தாமல் அடுத்த பாடலை  ஆரம்பித்தார்.

அவைத் தலைவர்  இப்போது,”புலவரே! அவர் கேள்விக்கு விளக்கமளித்து விட்டு, அடுத்த பாடலுக்குச் செல்லுங்கள்!” என்றார்   உத்தரவிடும் குரலில்.

கம்பர்  திகைத்தார்.தன்னிலை மறந்து காவியம் எழுதும் போது கடவுளின்  ஆணையாக வந்த சொற்களை  கடவுளே அறிவார்! .அபிராமி பட்டருக்கும் இதே நிலைதானே ஏற்பட்டது?

அவையில் பலத்த சிரிப்பொலி …

“மாட்டிக்கொண்டான் கம்பன் …அவன் ராமாயணக்காதை  முற்றிலும் அரங்கேற்ற சாத்தியமே இல்லை இனி!  “

முணுமுணுத்து மகிழ்ந்தது ஒருகூட்டம்.

திடீரென்று அவர்களின் பலத்த சிரிப்பையும் மீறி, ஒரு சிரிப்பு! அனைவரையும் நடுங்க வைக்கும் சிரிப்பு! எல்லோரும், சிரிப்பு வந்த திசையை நோக்குகின்றனர்)

 கம்ப மண்டபத்தின்  மிக அருகில்  கல்படிக்கட்டுகள் கொண்ட  மேட்டுப் புறத்திலே உள்ள சந்நிதி கோபுரத்திலிருந்து ஒரு அதிர்வு உண்டானது. பூகம்பமோ என மக்கள்  நிமிர்ந்து அச்சத்துடன் பார்த்தனர்.

ஆ! நரசிம்மர்  திருக்கரம் உயர்த்தி உரக்கச்சிரிக்கிறாரே!

ஒருக்கணம்தான் எல்லாம்!

திகைப்பும் பயமுமாய்  கண்டவர்களுக்குக்  காட்சி தந்து மறைகிறார் நரசிம்மப்பெருமான்.

“கம்பனே!  உன்  கவிதையை  யாம் ஏற்றுக்கொண்டோம்! வால்மீகியின் கவிதையைப்போல  நின் கவிதையும் என்றும் மக்கள் மனத்தில் நிலைத்து வாழட்டும்” என்பதாகக்கையை உயர்த்தி  ஆசி கூறி வாழ்த்தினார். அடுத்த கணம்  உயிர்பெற்ற சிலை மறுபடி சிலையானது.ஆனால்  தூக்கிய திருக்கரம் தூக்கியபடியே இருந்தது.

அனைவரும் மெய்சிலிர்த்தனர் .  கம்பனைப்போற்றி   வணங்கினர்.

இன்றும் அரங்கன் கோயிலில் அந்த கம்ப மண்டபம் இருக்கிறது ! அதற்குப் பக்கத்தில் சற்றே எதிரே அந்த மேட்டழகிய சந்நிதியும் இருக்கிறது !தூக்கிய திருக்கரமுடன்    தம்மைக் காணவரும் பக்தர்களுக்கு   இன்றும் அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார் அன்று  கம்பனைக்காத்த நம் பெருமான் நரசிம்மன்!

‘ஆடிஆடி அகம் கரைந்து இசை

பாடிப்பாடிக் கண்ணீர்மல்கி எங்கும்

நாடிநாடி, நரசிங்கா என்று

வாடி வாடும் இவ் வாள்நுதலே. ‘

படத்திற்கு நன்றி ;

http://rammesh.kaaninilam.com/tlogs/srirangam/kambarMandap.htm

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “சிரித்தது செங்கட் சீயம்!….

  1. அரங்கனின் நிலம்          புவியின் அற்புதம் 
    அரங்கனின் சயனத்       தரிசனம் அற்புதம்
    அரங்கனின் சீமாட்டி      அழகின்  அற்புதம்
    அரங்கனின் நாமமோ    அமுதினும் அற்புதம்
    ஆங்கே 
    எம்முதற் கவியரங்கம்  காணவைத்து
    தம்முதற் அருளரங்கம் பாடவைத்து
    நம்பெருமாள் ஆட்கொண்டான் எமை
    தும்புவான் நான்நினைத்தக் கால்
    – சத்தியமணி

  2. அருமையான இலக்கிய வரலாற்றுச் செய்தியைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  3. அருமை அக்கா. கம்பரின் காரணமாக அவையில் இருந்த அனைவருக்கும் தரிசனம் கிடைத்ததே. என்ன புண்ணியம் செய்தனரோ! பகிர்வுக்கு மிக்க நன்றி.

  4. அன்பு ஷைலஜா நானும் இந்தக் கம்ப மண்டபத்தையும்  நரசிம்மரையும் கண்டிருக்கிறேன். மிகவும் பவர்புல் நரசிம்மர் தான் அருமையான பகிர்வு 

  5. கருத்து கூறிய கவிநயா விசாலம் சச்சிதானந்தம் மற்றும் சத்தியமணி ஆகியோருக்கு மிக்க நன்றி..ஊரில் சில நாட்கள் இல்லாத காரணத்தால் அருமையான ஊக்கமளிக்கும் இந்தப்பின்னூட்டங்களுக்கு தாமதமாக என் பதிலை அளிக்கவேண்டியதாயிற்று.

  6. அருமையான பகிர்வு. பக்தருக்கு தெய்வம் பரிந்து வந்து அருள் செய்யும் என்பதற்கு இதை விடவும் என்ன அத்தாட்சி வேண்டும்?. மிக்க நன்றி அக்கா!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *