மதுரையம்பதியில் கால்மாற்றி ஆடும் நடராஜப் பெருமான்

0

சு.ரவி

வணக்கம், வாழியநலம்,

பாண்டிய மன்னனுக்காக, மதுரையம்பதியில் கால்மாற்றி, வலதுகால் தூக்கி ஆடும்

நடராஜப் பெருமான்

பார்க்க, படிக்க, ரசிக்க….

ஆலவாய் அழகா, ஈசா!

ஆடலுக் கரசே!கையில்

சூலமும் தழலும் ஏந்தும்

சுந்தரா!அகிலம் வாழ

ஆலமுண் டமர்ந்த தேவா!

அடியவர் உயிரைக் காத்துக்

காலனைக் கடிந்தாய் அன்று!

கழலிணை பணிந்தேன் இன்று!

வானுயர்   மதில்கள் சூழும்

மதுரையின் வேந்தே!கையில்

மானொடு மழுவும் தாங்கி

மன்றினில் ஆடும் ஈசா!

மீன்விழி  மங்கை நேசா!

ம்ருத்யுவை உதைத்த பாதா!

நானுனை வேண்டிக் கொள்வேன்

நலமெலாம் பொழிந்து காப்பாய்

அமரரும் அஞ்சும் நேரம்

அஞ்சலென் றபயம் தந்தோய்!

டமருகம் கையில் தாங்கித்

தாண்டவம் ஆடும் தேவா!

நமனணு  காமல் அன்று

நம்பியைக் காத்தாய்! மீனாள்

உமையொரு பாகா, காப்பாய்!

உனதடி சரணம் ஐயா!

வைகையின் அலைகள் சூழும்

வளமிகு மதுரை ஆளும்

மைவிழி மீனாள் மேவும்

மன்னனே, சொக்க நாதா!

கையினால் பாசம் வீசும்

காலனிங் கணுகா  வண்ணம்

செய்கைகள் ஓயும் போது

சடுதியில் காப்பாய் அப்பா!

வலதுகால் தூக்கி ஆடும்

வண்ணமே! வார்சடைமேல்

நிலவொடு கங்கை பொங்க

நிர்த்தனம் செய்யும் தேவா!

புலனெலாம் ஒடுங்கும் நேரம்

புகல் எமக் காரும் இல்லை!

நலம் காக்க வேண்டும் உனையே

நம்பினோம் அம்மையப்பா!!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *