சச்சிதானந்தம்

இறை வணக்கம் 

 

ஐயமற்று உள்ளத்தில் மைய மிட்ட,

ஐங்கரனுக் கன்பொழுகக் கவிதை யிட்டு,

வையகத்தைக் காத்து நிற்கும் கானகத்தை,

மையமாக வைத்தினிய கவிதை செய்வோம்!                                    1

 

எளிதினும் எளிய கவிதை சொல்லி,

இனிதினும் இனிய குறவன் கதையைப்,

புதிதினும் புதிய முறையில் சொல்லப்

புதியவன் முயற்சிக்கு முருகன் துணை!                                                  2

 

நன்றியைச் சொல்லி நெகிழ்வ தற்காக,

ஒன்றியென் மனதில் உன்னை நினைத்தேன்,

இன்றியுன் கருணை, கவிதைகள் ஏது?

சண்முகன் உன்னால் பண்களைச் செய்தேன்!                                  3

 

பரமனை வணங்கிக் குறவனைப் பாடப்,

பாமரன் செய்யும் முயற்சி இது,

ஓமெனும் மந்திரம் பயின்றவன் அருளால்,

பாவெனும் மந்திரம் பழக வந்தேன்!                                                         4

 

குறிஞ்சி வணக்கம்

நானிலத்தில் முதல் நிலம்,பொங்கும்

பாநயத்தைத் தரும் நிலம்,உயர்

மாமலைகள் அதன் பலம்,அடர்

கானகமாய் வளர்ந்திடும்,குறிஞ்சிக்கு வணக்கம்!                               5

 

குமரன் முகமெனக் குளிர்ந்த குறிஞ்சியை,

விமலன் சடையென விரிந்த குறிஞ்சியை,

கமழும் நறுமணம் நிறைந்த குறிஞ்சியை,

மமனம் குவித்து வணங்கிடு வோமே!                                                      6

 

ஓரறிவு உயிர்கள் முதல், உயர்

ஆறறிவு மனிதன் வரை, வாழப்

பேருருவம் எடுத்து நின்று காக்கும்

கானகத்தைக் கரம் கூப்பித் தொழுவோமே!                                        7

 

தமிழ் வணக்கம்

பயிற்சி இல்லாதவன் செய்திடும் முயற்சியில்,

முயற்சியின் பலனாய் நவின்றிடும் நவிற்சியில்,

பிழை இருந்தால் பெரும்பிழை பொறுத்தருள்க,

பைந்தமிழே செந்தமிழே காத்தருள்க!                                                        8

 

சொற்பிழை பொருட்பிழை இன்சுவை கெடுக்கும்,

தளை தட்டும் கவிப் பிழை,

இலக்கண விதிகளை மீறிடும் பெரும்பிழை,

எப்பிழை இருப்பினும் பொறுத்தருள் தமிழே!                                    9

 

முன்னோர் வடித்த நூல்களில் இருந்து,

மேன்மை பொருந்திய கற்பனை நயங்களை,

மென்மை நிறைந்த சொற்றொடார் வழங்களை,

மனமறியாமல் கையாண்டிருந்தால் ஏற்றருள் தமிழே!            10

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “குறவன் பாட்டு – 1

  1. ‘குமரன் முகமெனக் குளிர்ந்த குறிஞ்சி’ யைப் பாடித்
    தொடங்கும்
    குறவன் பாட்டு, நல்ல ஆரம்பம்..
    தொடரட்டும்…!

  2. அருமையான தொடக்கம் சகோதரரே!!. குறிஞ்சி நிலக் கடவுளின் அருள் குறையாது  கிட்ட மனமார வேண்டுகிறேன். தித்திக்கும் தமிழில் முத்தான கவி மழை பொழிய முருகனருள் வித்தாகும் நிச்சயம்.
    தொடருங்கள்.. தொடருகிறேன்…

  3. @ திரு.செண்பக செகதீசன்,

    தங்களது வார்த்தைகளுக்கு நன்றி.

    @திருமதி.பார்வதி இராமச்சந்திரன்,

    தொடர்ந்து தாங்கள் அளித்துவரும் உற்சாகமூட்டும் பின்னூட்டங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

  4. வணக்கப் பாடல்களே களை கட்டுகிறது, ஆர்வம் மேலிடுகிறது, தொடருங்கள் கவிஞரே….. 

    அன்புடன்
    ….. தேமொழி 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *