அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை

0

சாகர் பொன்னியின்செல்வன்

8. தென் திசைப் பயணம்.

அல் ஹுசைன் மசூதி படம் : சாகர்

sa 1

எகிப்தின் மிகவும் புராதனம் வாய்ந்த அங்காடிகளில் ஒன்று கான் அல் கலிலி (Khan el Khalili Bazaar)அங்காடி. துருக்கியில் இஸ்தான்புல்லில் உள்ள எகிப்திய அங்காடி மிகவும் பழமை வாய்ந்தது, அதனைப் பார்த்து நாங்கள் பிரமித்தது இப்போது நினைவுக்கு வந்தது. இந்த அங்காடியினைத் துருக்கிய அங்காடி என்றும் அழைத்தனர். இந்த அங்காடி 14ம் நூற்றாண்டில் மல்முக் வம்சத்தினரால் கட்டப்பட்டது. மல்முக் வம்சத்தினர் துருக்கிய ஓட்டமன் பேரரசர்களின் ஒருவகை அடிமை வம்சத்தினர்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்து புழங்கும் இந்த முக்கிய ஸ்தலம் சமீபத்தில் வன்முறையாளர்கள் மற்றும் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இருமுறை பலியானது. மேல்நாட்டுப் பயணிகள் அதிகம் வரும் இந்த இடம் என்பதால் 2005 மற்றும் 2009ல் இந்த அங்காடி தற்கொலை படை தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளானதில் பல உயிர்கள் பலியானது வருந்தத்தக்கது. இவற்றைத் தொடர்ந்து எகிப்திய சுற்றுலா வருவாய் குறைந்ததும் குறிப்பிடத்தக்கது.

சிறிது நேர தூரம்தான் என்றாலும் நாங்கள் வந்து சேர்வதற்கு ஐந்தரை மணி ஆகிவிட்டது. எங்கள் ரயில் எட்டு மணிக்கு எனவே எங்களால் அங்கு சிறிது நேரம்தான் செலவிட முடிந்தது.

சென்னையில் உள்ள தியாகராயநகர் அங்காடிகளை போல் ஒரே கூட்டம். எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணக் காவலர் வேறு.வண்டியை விட்டு இறங்கியவுடன் கண்ணில் முதலில் தென்பட்டது அல் ஹுசைன் மசூதி(Al Hussain Mosque) தான். கைரோவின் மிக புராதான மசூதிகளில் ஒன்று இந்த பெரிய மசூதி . முஹமது நபியின் பேரர் முகம்மது ஹுசைன் இப்ன் அலியின் (Mohamad Hussain Ibn Ali) தலை இங்கு அடக்கம் செய்யபட்டிருப்பதாகவும் அதனால் இது இஸ்லாமியரின் புனித தளங்களில் ஒன்று என்று மஹ்மூத் கூறினார். 1154ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மசூதி 19ம் நூற்றாண்டில் புதுபிக்கபட்டுள்ளது. இந்த முசூதியில் உள்ள மற்றொரு புனித பொருள் உலகில் உள்ள பழமையான குரான்களில் ஒன்றாகும். இந்த புனித ஸ்தலத்தில் முஹம்மது ஹுசைனின் மகத்துவத்தை விளக்குவதாகச் சொல்லும் ஒரு சலவைக் கல், “ஹுசைனும் நானும் ஒன்று, என்னை விரும்புவர்கள் அவரையும் விரும்புவர்” என்று பறை சாற்றுவதகவும் கூறினார்.

அந்திவேளை தொழுகை நேரம் என்பதால் எங்களால் உள்ளே போகமுடியவில்லை.அடுத்ததாக நாங்கள் அங்காடிகளுக்குள் நுழைந்தோம். எங்கு பார்த்தாலும் எகிப்து தேச கலைப்பொக்கிஷங்கள், சிறியதாகவும் பெரியதாகவும் கண்களைக் கவர்ந்தன. பிரமிடுகள், எகிப்திய கடவுள் சிலைகள், ஸ்பின்க்ஸ் உருவங்கள் மற்றும் ஒபெளிஸ்க் எனப்படும் நீண்ட தூண்கள் என்று பலவிதமான பொம்மைகள். .

சிலை வழிபாடு இல்லாத இஸ்லாம் மதம் போற்றும் நாடான எகிப்தில் இவ்வளவு விதமான சிலைகள்! இந்த சிலைகளையும் பண்டை எகிப்திய கோவில்களையும் கலையாகவும் அன்னிய செலாவணி ஈட்டும் நல்ல வியாபாரம் என்ற வகையில் புரிந்தமையால் இவற்றை எகிப்தியர்கள் நல்ல முறையில் உபயோகித்துக் கொண்டனர்.

மீண்டும் ஷாருக், அமிதாப்பச்சன் , கரீணா கபூர் என்ற அழைப்புகள் எங்களை எதிர்கொண்டன. காந்திஜி என் கடையில் வாங்கினார் நீங்களும்தான் வாங்குங்களேன் என்ற வியாபார தந்திரம் வேறு. ஹோரஸ், ரா, போன்ற கடவுள் பொம்மைகளை ரசித்துவிட்டு மெல்ல நகர்ந்தோம்.

எகிப்திய பருத்தி ஆடைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை, அந்த ஆடைகளின் சிறப்பு அதன் மென்மை தன்மை, இந்தப் பருத்தி ஆடைகளில் பண்டை எகிப்திய ஓவியங்களையும் கோவில்களையும் வரைந்தும், அச்சு செய்தும் விற்றனர். கிளியோபட்ரா (Cleopatra), ஹத்ஷேபுட்(Hatsheput) , ராமேசெஸ் (Rameses) போன்ற எகிப்திய ராஜவம்சதினர் மற்றும் பிரமிட் மற்றும் எகிப்திய கடவுள் வடிவங்கள் பெரும்பாலாகக் காணப்பட்டன!

அரபிய தேசங்கள் என்றாலே ஜீணிகள் கொண்ட அற்புதவிளக்கு மிகவும் பிரசித்தம் இங்கேயும் அதுபோல வண்ண வண்ண வகைவகையான அற்புத விளக்குகள்.என்ற விளக்கில் எந்த ஜீணியோ?!

கடைக்கடையாக பார்த்தவரே நடந்து போனதில் நேரம் போனதே தெரியவில்லை. மஹ்மூத் வந்து எங்களை அழைத்தும் தான் ரயிலுக்கு நேரமானது தெரிந்தது.

காண் அல் கலிலி அங்காடி

படம்: விக்கிபிடியா.

sa 2

அரைமணிநேர பயணத்தில் கிஸா ரயில் நிலையம் வந்து சேர்ந்தோம். அப்துல் அங்கே எங்களுக்காகக் காத்திருந்தார். மஹ்மூதிடம் விடை பெற்றுக்கொண்டு நாங்கள் எங்கள் தென் திசை பயணத்தினை எதிர்நோக்கி உள்ளே சென்றோம்.

உள்ளே எங்கு பார்த்தாலும் தமிழ். கூட்டம்கூட்டமாக இந்தியர்கள். என் மனைவி உடனே அவர்களில் சிலரைப் பார்த்து விசாரித்துப் பேசி வந்துவிட்டார். அவர்கள் எல்லாம் சென்னையின் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் என்றும் அணிவரும் எங்களைப் போலவே லக்சொருக்கு செல்கின்றனர் என்றும் அறிந்துகொண்டார். அவர்கள் ஒரு முழு சொகுசுப்படகையும் தனியாக ஏற்பாடு செய்திருந்தனர்.

ரயில் வரும் நேரம் ஆனது! மெல்ல ஒரு வண்டி ரயில் நிலையத்துக்குள் வந்தது. ஒரு வருடம் குளிக்காத பிச்சைக்காரனைப் போல் ஒரே அழுக்கு. எல்லா ஜன்னல்களும் உடைந்து பார்க்கவே பயமாக இருந்தது. எங்கள் பயத்தை உணர்ந்தது போலவோ என்னவோ அப்துல்,

“இது சாதாரண வண்டி, உங்கள் ரயில் சொகுசு வண்டி அது இன்னும் சிறிது நேரத்தில் வரும்” என்றார்.

“எவ்வளவு நேரத்தில் வரும்” என்று வருண் “கேட்க வரும் நேரத்தில் வரும்” என்று அவர் பதிலளித்தார்.

எங்களைப் போலவே இன்னும் சில குடும்பங்களும் ரயிலுக்குக் காத்திருந்தன. அவற்றில் சில மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிகளோடு காத்திருந்தனர். அப்துல் என்னிடம் ஒரு கைப்பேசியைக் கொடுத்தார். எங்களை லக்சொரில் மற்றொரு மெம்பிஸ் துணைவர் எதிர்கொண்டு அழைத்துச் செல்வார் என்றும் சொன்னார்.

பேசிக்கொண்டேயிருக்கும்போது மெல்ல எங்களைத் தெற்குநோக்கி அழைத்துச் செல்ல அஸ்வான் நோக்கிச் செல்லும் சொகுசு துரித ரயில்வண்டி வந்து சேர்ந்தது.

(தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *