செண்பக ஜெகதீசன்ifish

 

வேண்டற்க வென்றிடினுஞ் சூதினை வென்றதூஉந்

தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.

                                      -திருக்குறள்- 931 (சூது)

 

புதுக் கவிதையில்…

 

துடிக்கும் புழுவது தூண்டிலில்,

கிடைத்தது உணவெனப் பாய்ந்தே

எடுத்து விழுங்கிடும் மீனுக்கு

எமனும் அதுதான்..

 

இதுதான் கதை

வென்றிடுதல் சூதாட்டத்தில்

என்பதுவும்..

 

அதனால்,

வேண்டாம் வேண்டாம்

சூதாட்டம்-

வென்றாலும் வேண்டாம்…!

 

குறும்பாவில்…

 

சூதினிலே வெற்றியது,

மீன்பிடிக்கும் தூண்டிற்புழுதான்..

மறந்திடு சூதை…!

 

      மரபுக் கவிதையில்…

 

தூண்டிற் புழுவை இரையெனவே

துரத்திப் பிடித்து விழுங்கியேதான்

மாண்டு போகும் மீனினமே,

மண்ணில் மனிதன் கதையிதுதான்,

வேண்டாம் இந்தச் சூததுவும்,

வெற்றி யதிலே வருவதெல்லாம்

தூண்டிற் புழுவின் வடிவினிலே

வந்திடும் துன்பம் மறவாதே…!

 

லிமரிக்…

 

வேண்டாம் சூதாட்டம் எழு

உன்னையே ஏற்றிடும் கழு,

வென்றாலும் வதையிது

வெற்றியின் கதையிது-

மீன்விழுங்கும் தூண்டில் புழு…!

 

கிராமிய பாணியில்…

 

தோத்தாலும் செயிச்சாலும்

தோதுப்படாது சூதாட்டம்,

தாதகப்பஞ் சொல்லக்கேளு

தருமராசா கதயக்கேளு..

 

சூதுலதான் செயிச்சாலும்

சோகப்படாது ஒருநாளும்,

தூண்டுலுல புழுவப்பாத்து

தூண்டுலோட தின்னமீனு

துடிச்சிச்சாவும் கததானே..

 

அதாலே,

தோத்தாலும் செயிச்சாலும்

தோதுப்படாது சூதாட்டம்,

வேதனயா சென்மத்துக்கும்

செத்தமீனு கதவேண்டாம்,

தாதகப்பஞ் சொல்லக்கேளு

தருமராசா கதயக்கேளு…!

 படத்துக்கு நன்றி

   http://www.clipartof.com/portfolio/anortnik/illustration/fish-caught-on-a-fishing-pole-92573.html

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “குறளின் கதிர்களாய்…(7)

  1. கிராமிய பாணியில்… சூது என்பதை பாண்டவர்கள் கதையுடன் ஒப்பிட்டு அறிவுறுத்துவது போல அமைத்தது அருமையான ஒப்புமை, நன்று.

    அன்புடன் 
    …..  தேமொழி 

  2. குறளின் கதிர்கள் எப்போதும் போல் பட்டொளி வீசுகின்றன. கிராமிய பாணி, அசத்தல். மரபுக் கவிதையில்,

    ////வெற்றி யதிலே வருவதெல்லாம்
    தூண்டிற் புழுவின் வடிவினிலே
    வந்திடும் துன்பம் மறவாதே…!///

    ‘சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்பதை அழகுற எடுத்துணர்த்தும் வரிகள். வாழ்த்துகள்.

  3. குறளொளியில்
    இந்த வாரம் சூதாட்டம்.
    அனைத்து வகை கவிதைகளிலும்
    சென்பக ஜெகதீசனின் எழுதுகோல் போடுது கரகாட்டம்.

  4. ‘குறளின் கதிர்கள்’ தொடர்ந்திட
    தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்திவரும்
    திருவாளர்கள், தேமொழி, பார்வதி இராமச்சந்திரன்,
    தனுசு ஆகியோருக்கு மிக்க நன்றி…!

  5. கிராமத்து பாணி நெஞ்சில் பசுமரத்து ஆணி போல் நிலைத்து நிற்கிறது. நன்றி.

  6. திரு.சச்சிதானந்தம் அவர்கள் வழங்கிய
    கருத்துரைக்கு நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *