திருசிற்றம்பலம்

பட்ட மங்கலம்

ஓர் பாண்டிய நாட்டு திருவாசக தலம்

pttmngklm2raja

நூ.த.முத்துமுதலி மயிலை

தி.ஆ.2044/விஜய ஆடி 12 ஞாயிறு

 

தமிழகத்து சித்தாந்த சைவநெறியின் பெருமறையாம் பன்னிரு திருமுறை 18000+ பாடல்களில் போற்றப்பட்ட 600க்கும் மேலுள்ள சிவவழிபாட்டிடங்கள் 1350 ஆண்டுகள் வரை பழமை உடையன எனும் மாண் பினால் இறை வழிபாட்டில் ஊக்கமுடையோர் வாழ்நாளில் ஒர் முறை சிலவற்றிற்காவது நேரடி வழிபடுதல் மரபெனக் கொண்டமை காண்கின்றோம். இக்கருத்தினிலேயே தென் இந்தியாவில் வாழ்வோர் வடகிழக்கு எல்லை இமயமலையில் உள்ள கயிலாயம் முதல் காசி போன்ற தலங்கள், ஈழத்திலுள்ள கேதீச்சரம் திரிகோணமலை எனும் தலங்களுக்கும் வடஇந்தியர் தென்கோடி இராமேசுவரம் வரை தீர்த்தங்கள் ஆட தெற்கே வருவதும் கண்கூடு.

தேவாரப் பாடல் பெற்றத்தலங்களாவன திருநாவுக்கரசர், திஞானசம்பந்தர் சுந்தரர் எனும் மூவர்முதலிகளால் இயற்றப் பெற்று தே-வாரம் எனும் இனிமைமிகு பண்ணிசை அமைக்கப்படவை முதல் ஏழு திருமுறைகளாக பகுக்கப்பட்டுள்ள 8274 பாடல்களில் குறைந்தது ஓர் பதிகமாவது பெற்றவை 276ஆகும். முழுபதிகம் ஏதும் கிடைக்கப் பெறாமல் இத்தேவாரப் பாடல்களின் ஊடே சிவனுறை கோயில் என குறிக்கப்படுவன, வைப்புத் தலங்கள் எனவும் அறியப்படுவன, 325 க்கும் மேலாகும் ஓர் வளர்தொடர் என ஆய்வாளர் வகுத்து வருவது

தேவாரக் காலத்து அடுத்து 1150 ஆண்டுகளுக்கு முன் இயற்றப் பெற்று எட்டாம் திருமுறையாக வைக்கப் பட்டுள்ள மாணிக்கவாசகரின் திருவாசகம்/திருக்கோவையார், தேவாரம் குறித்த சிலவற்றுடன் காட்டாத சில தலஙகளை போற்றியது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கல்லாடம், கவைத்தலை, குவைப்பதி, கொடிமங்கை, கோகழி, சந்திரதீபம், சாந்தம்புத்தூர், பட்டமங்கலம், பஞ்சப்பள்ளி, பாண்டூர், புன்னைத்துறை, பூந்துறை, பூவலம், பெருந்துறை, மணற்குன்று, வேலம்புத்தூர் என்பன அவை.

நாம் இங்கு காணவந்தது இதனில் ஒன்று பட்டமங்கலம். திருவாசகம் கீர்த்தித் திருஅகவல் குறிக்கும் ஓர் தலம், பாண்டி நாட்டு பாடல்பெற்றத் தலமாம் திருப்பத்தூருக்கு தெற்கில் காளையார்கோயில் என இந்நாள் வழங்கப்படும் மற்றோர் பாடல்பெற்றத் தலமாம் கானப்பேருக்கு இடையே கற்சாலையில்5 மற்றும் 20 கி மீ தூரத்தே நல்ல பேருந்து தடத்தினில் இந்நாள் தட்சணாமூர்த்தி கோயில் என வியாழன் எனும் கோள்சிறப்பு வழிபாட்டுக் கோயிலாக அப்பகுதி மக்களால் பெரிதும் போற்றப்படுகின்றது. தமிழக வைணவரின் பெருமறையாம் ஆழ்வார்கள் இயற்றிய 3892 பாசுரங்களிலுள்ள 108 இல்ஓர் திவ்யதேசமாம் திருக்கோட்டியூர் இதனுக்கு 5. கிமீ மேற்கே அமைந்துள்ளது.

 

வடக்கு வாயில்

pttmngklm1

 

இந்நாள் புதுமையாக மிகமிக நேர்த்தியான கருங்கற்சிற்பங்கள் மிளிறும் நல்கற்றளியாக நாட்டுக்கோட்டை சமூகத்தினரால் கிழக்கு நோக்கிய 5 நிலை கோபுரத்துடன் காணப்பட்டாலும் முன் ஓர் பழமையான கோவில் ஆகும் எனலாம். இங்குள்ள ஏழேழ் விழுதுகள் கொண்ட தென்முகக் கடவுளாம் தட்சணாமூர்த்தி எங்கும் அமரும் ஓர்ஆலமரம் சிறப்பானதாக போற்றப்படுவதைக் காணலாம். அதான்று பெரியதான தெப்பக் குளமும் மேற்காக உள்ளது. மிகத்தூய்மையாக தனியாரர் மேற்பார்வையில் பேணப்படும் இக்கோயில் தமிழ்மக்கள் தம் வாழ்நாளில் தவறாமல் ஒர் நாள் சென்று வழிபட வேண்டிய ஒன்றே என்றால் மிகையாகாது.

சிற்றூர் ஆனாலும் பல பேருந்து தடங்கள் திருப்பத்தூர், திருக்கோட்டியூர், கல்லல், ஆலங்குடி, என பல ஊர் களிலிருந்தும் செல்ல வாய்ப்புகள் மிகஎளிதாக உள்ளன. காரைக்குடி அருகுள்ள ரயிலடியாகும்.

 

பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு

அட்டமா சித்திகள் அருளிய அதுவும்

திருவாசக கீர்த்தித் திருஅகவல் (வரி 62-63)

தமிழகத்தே பட்டமங்கலம் என சில ஊர்ப் பெயர்கள் இருப்பதாக காணினும் இவற்றில் பாண்டிநாட்டில் அமைந்த மதுரைக்கு அருகு அமைந்த பட்டமங்கலமே பல திருவாசக வரிகள் காட்டும் திருவிளையாடல் தொடர்பினால் நன்கு பொருந்தும். மேலும் அருகுள்ள வாதவூரார் என வழங்கிய மாணிக்கவாசகரின் மதுரைப் பிணைப்பு நன்கே அறிந்த புராண வரலாறு. மணிவாசகரின் தொடர்புடைய மற்றொரு பெயர்பெற்ற தலம் ஆவுடையார்கோயில் என அறியப்படும் திருப்பெருந்துறையும் பாண்டிய நாட்டிலேயே அருகு அமைந்துள்ளது. உத்தரகோசமங்கை, ஓரியூர், கொடிமங்கை, என்பனவும் பாண்டிநாட்டில் அமைந்தவையே பல மதுரைத் திருவிளையாடல்கள் திருவாசக கீர்தித் திருவகவல் வரிகளிலேயே குறித்தல் காண்க.

 

“பட்ட மங்கையில் பாங்காய் இருந்(து) அங்கு
அட்ட மாசித்தி அருளிய அதுவும்” 8.2.62 – அட்டமா சித்திகள் செய்த படலம்

“கேவேடர் ஆகிக் கெளிறது படுத்தும்” 8.2.17 – வலை வீசிய படலம்

“பூவணம் அதனில் பொலிந்து இருந்து அருளித்
தூவண மேனி காட்டிய தொன்மையும்” 8.2.51 – மெய்காட்டிட்ட படலம்

“நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்” 8.2.36 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

“பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று” 8.2.392 – நரியைக் குதிரைஆக்கிய படலம்

“மதுரைப் பெருநல் மாநகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்” 8.2.45 – நரியைக் குதிரை ஆக்கிய படலம்

பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்” 8.2.47 – பிட்டுக்கு மண்சுமந்த படலம்

“தண்ணீர்ப் பந்தல் சயம்பெற வைத்து 8.2.58 – தண்ணீர்பந்தல் வைத்த படலம்

நல்நீர்ச் சேவகன் ஆகிய நன்மையும்”
“ஓரியூரில் உகந்(து) இனி(து) அருளி
பாரிரும் பாலகன் ஆகிய பரிசும்” 8.2.68 – விருத்த குமார பாலனாகிய படலம்

 

 

ஏழேழ்ழேழ் விழுது ஆல்

pttmngklm2alam

தெப்பக்குளம்

theppakkulam

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “பட்டமங்கலம்

  1. கோயில் பற்றிய செய்திகளோடு திருவாசகத்திலிருந்து மேற்கோள் காட்டி எழுதியிருப்பது மிகவும் இனிமை. நன்றி ஐயா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *