திவாகர்

சென்னை ஏர்போர்ட் பகல் நேரத்தை இந்திய பிரயாணிகளுக்கும் இரவு நேரத்தை வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கும் பிரித்துக் கொடுத்துத் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதாக அதற்கு ஒரு நினைப்போ என்னவோ. அதுவும் பகலை விட ராத்திரி நேரம்தான் ரொம்ப பிஸி போலும்.. ஒருவேளை சென்னையில் உள்ள மக்கள் ஏதோ பொருட்காட்சியைப் பார்ப்பது போல பார்க்க வருகிறார்களா இல்லை மெய்யாகவே இத்தனை பேரும் பிரயாணிகளா என்று ஆச்சரியப்படவைக்கும்தான். அதுவும் அந்த பல்நாட்டு விமானநிலையம் இருக்கிறதே அது அந்த இரவு நேரத்தில் சந்தைக் கூடம்தான். எத்தனை விமானங்கள்.. எத்தனை அலுவலர்கள்.. விதம் விதமான அலங்காரத்தில் உதடு ஒட்டாமல் விரித்துக்கொண்டே உள்ளே செல்லும் விமானப் பணிப்பெண்கள்..தங்கத் தமிழ்நாட்டில் இந்தியில் கறாராகப் பேசி அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே விட மறுக்கும் காவலாளிகள்.. பலவிதமான எண்ணக் கலவைகளுடனே மனதில் ஆவல் பொங்க வந்திருக்கும் பிரயாணிகள்.. கனவு, இன்பம், பரபரப்பு, போராட்டம், துன்பம் கடமை என பலவித உணர்ச்சிக்கலவையைத் தாங்கி வரும் பிரயாணிகள் கூட்டம்

அட, இந்த பிரயாணிகளுடன் கூடவே வரும் உறவுக்கார ஜனங்களைப் பார்க்கவேண்டுமே.. பிரயாணிகளில் முக்கால்வாசிப் பேர் துபாய் போன்ற அரபு நாடுகள் போலும்.. அப்படித்தான் அவர்கள் பேசும் விதத்தில் தெரிந்தது கூட..

“இவங்கள்லாம் துபாய்’ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு இங்கே குடும்பம் காப்பாத்தறாங்க இல்லே.. நன்றிக்கடனா அத்தனை உறவுகளும் வழியனுப்ப வந்திருக்கும்மா”

அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களைக் காண்பித்து தன் மகளிடமும் சொன்னான்.. அந்த மகள் இவனை ஏதோ மாதிரி பார்த்தாள். தன் அம்மாவிடம் கோள் மூட்டினாள்.

”அம்மா! என்னம்மா இப்படி பே’ன்னு அப்பா எல்லாரையும் அரக்கப் பரக்க பாத்துண்டிருக்கார்.. எப்படிம்மா இத்தனை வருஷமா தாங்கினே..”

”அது ஒரு சோகக்கதைதான்.. என்னாத்துக்கு இப்போ அதை ஞாபகமூட்டறே.. அவர் கிடக்கார்.. உன் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் ஜாக்கிரதையா வெச்சுக்கோ”

அந்த மகள் மறுபடியும் சலித்தாள். “ஐயோ உனக்கு அப்பாவே பரவாயில்லே.. எத்தனை தரம் சொல்வே.. பாஸ்போர்ட் டிக்கெட் இந்த கேட்’ல காட்டறதிலேருந்து கையிலேயே வெச்சுக்கணும்.. எனக்குத் தெரியாதா?

ஆனாலும் இவர்கள் அந்த இடத்திலேயே நின்றிருந்தனர் “இன்னும் எத்தனை நேரம் இங்கேயே நிக்கறது.. எனக்கு காலை வலிக்கறதும்மா! உள்ளே வுடுவானா’ன்னு கொஞ்சம் கேளும்மா”:

”போப்பா.. மூணுமணிநேரம் முன்னாடி அவன் உள்ளேயே விடமாட்டான்.. எதுக்கு அவன்கிட்டே போய் ஹிந்தி’ல திட்டு வாங்கணும்..”

“அப்போ உன்னைத் தமிழ்லேயே நல்லா திட்டலாமா?”

”ஐய்யோ கடவுளே! நீங்க ஏன் இப்படி வெளில வந்தாலும் இவகிட்டே வாயைக் கொடுக்கறீங்க..” அம்மாவின் சொல் மகளை மேலும் கோபமாக்கியது.

“அப்ப..நான் வாயாடின்னு பட்டம் கட்டறியா அம்மா!.. இதுக்கு என்னை வீட்’லயே டாடா காட்டி அனுப்பிச்சுருக்கலாம்.. ஏர்போர்ட் வரை வந்து ஏன் மானத்தை வாங்கறீங்க. ச்சே.. மூடையே ஸ்பாயில் பண்றீங்க!.”

“இப்ப, என்னடி சொல்லிட்டேன் இவ்வளோ கோபம் வரது.. வெளியூர் போறே.. உனக்கு கோபம் கூடாது..”

”ஆமாம்.. கோபம் கூடாதுதான்” என்ற அப்பாவையும் கோபம் குறையாமல் பார்த்தாள். அப்பா உடனே சமாதானப் படுத்தினார்.

”சரி.. சரி.. நாம் இங்க இவ்வளோ தூரம் வந்து உன்னை சமத்தா வழி அனுப்பவேண்டாமா.. நம்மளை வுடு.. அதோ அங்கே பார்.. அந்தம்மா எப்படிக் கேவி கேவி அழறாங்க.. பாவம் இப்போ போற புருஷன் எப்போ வருவானோ.”.

”அதெல்லாம் சரிப்பா.. பட் எதுக்கு ஏர்போர்ட் வரை வந்துட்டு அழணும்.. ரெடிகுலஸ்.. இப்போ மாடர்ன் உலகத்துல அழுகை எல்லாம் ஒரு ஓல்ட் ஃபேஷன்..”

அம்மாவுக்கு கோபம் குறையவில்லை. “அதுக்காக உன்னையும் உங்கப்பாவும் மாதிரி உணர்ச்சியே இல்லாம ஜனங்க எல்லா இடத்துலேயும் இருந்துடுவாங்களா..”

அவள் உடனே சண்டைக்கு மறுபடியும் மல்லுக் கட்டினாள்.. “இப்போ நான் சொல்றதுல என்ன தப்பு பாக்கறே.. இதோ பார்.. இவங்க.. ஐ மீன்.. துபாய்க்கு இந்த ரெண்டு மூணு மணி நேர பிரயாணம்தான்.. கைல எப்பவுமே மொபைல் போன்.. சதா பேசிட்டே இருக்கறமாதிரி வசதி வந்தாச்சு.. இதுக்கே இப்படி சீன் காமிக்கறாங்களே.. நானெல்லாம் கிட்டத்தட்ட 30 மணிநேரம் பிரயாணம் பண்ணனும்.. மூணு ஏர்போர்ட் டிரான்சிட் பண்ணனும்.. நான் எவ்வளோ சீன் காமிக்கணும்.. என்னப்பா அங்கேயே பாக்கறியே நான் சொல்றதை சரின்னு சொல்லேன்”

அப்பா சிரித்தான். “ஆமாமா.. ஆனா பாவம்மா.. புருஷன் பெண்ஜாதி இல்லையா.. அப்படித்தான் இருக்கும்.. அங்கே பாரு ஒரு கும்பலே கூட்டம் போட்டு கண்ணைக் கசக்கிண்டு இருக்கு.. இதெல்லாம் தமிழ்நாட்டுல சகஜம்மா.. அந்தக் கிழவன் கூட பாரேன் சந்தடி சாக்குல கண்ணைத் துடைச்சுக்குறான்..”

அப்பாவின் சிரிப்புக்கு மகளும் பதில் சொல்வது போல சிரித்தாள். “நிஜம்மா இந்த ஏர்போர்ட் ஒரு சினிமா தியேட்டர்தான்பா.. சினிமா’ல சோகக் காட்சியெல்லாம் வரச்சே நம்ம ஜனங்க அழுவாங்க இல்லே அதே மாதிரிதான்..”

”அதேதான்.. ஒருத்தர் ஊருக்குப் போறார்னா டீசெண்டா வழி அனுப்பி வெக்கணும்.. ஒரு பூங்கொத்து அப்படி இப்படி கொடுத்து” அப்பா சிரித்துக்கொண்டே தலையாட்டினான்.

”ஐய்யோ போதுமே அப்பாவும் மகளும் இங்கே சிரிச்சது.. அப்பறம் இங்கே ஏதோ காமெடி சீன் நடக்கறது’ன்னு நினைச்சு ஜனங்க எல்லாம் நம்மளை சினிமா பார்ப்பாங்க.. வுடுங்க.. டைம் ஆயிடுத்து.. உள்ளே வுடுவான் போல அந்த கடங்காரன்.. உங்க ஏர்போர்ட் டிக்கெட்டையும் அவளோட டிக்கெட்டையும் அவன் மூஞ்சி நேரா காமிங்க.. அப்பதான் உடனே உள்ள வுடுவான்.”

உள்ளே சென்றவர்கள் மகளை மட்டும் கவுண்டருக்கு அனுப்பி வைத்தார்கள். அவள்: அங்கிருந்து தன் கைபேசியில் ‘அப்பா ஒரு கிலோ ஜாஸ்தியா யிருக்கு.. எதை எடுக்கறது..”

அவன் உடனடியாக மனைவியைத் திட்டினான். “இதுக்குதான் நான் அப்பவே தலையாலே அடிச்சுகிட்டேன்.. கண்ட கண்டதையெல்லாம் பேக் பண்ணாதே’ன்னு.. பாரு இப்போ எக்ஸ்ட்ரா லக்கேஜ்.. மறுபடியும் பாக்கேஜ் எல்லார் முன்னாடியும் ஓபன் பண்ணனும்”

அதற்குள் மறுபடியும் அவள் கைபேசியில் பேசினாள். “அப்பா.. டோண்ட் வொர்ரி, அவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்களாம்..” அப்பா மௌனமாய் கையை ஆட்டினான். “என்னவாம்” மனைவி அதட்டினாள்.

அவன் அசடு வழிந்தான்.. “இல்லே ஒரு கிலோல்லாம் பரவாயில்லையாம்”.

மனைவி உடனே சண்டையைத் துவங்கிவிட்டாள். “அவசரபுத்தி உங்களை விட்டுப் போகவே மாட்டேங்குதே.. ஒரு நிமிஷத்துல என்னவெல்லாம் என்னைத் திட்டிப்புட்டீங்க.. நான் இதை அவ்வளோ ஈஸியா விடப்போறதில்லே.. எனக்குத் தெரியாதா யார் யார் எந்தந்த ஏர்லைன்ஸ் எவ்வளோ அக்செப்ட் பண்ணிப்பாங்க’ன்னு..”

“இரு.. இரு” இந்த சின்ன விஷயத்தை பெரிசுபடுத்தாதே.. இதோ பார் உன் மகள் வராள். சிரிச்சமூஞ்சியோட வழியனுப்பி வையேன்..”

“ஆஹா.. எனக்கு சிரிச்ச மூஞ்சியில்லே’ன்னு எனக்கு நல்லாவே தெரியும்..அதைக் கூட உங்க மகளுக்கு நீங்களே செஞ்சுடுங்க.”.

”என்னம்மா.. இன்னும் ஏதாவது சண்டை போடறீங்களா.. இப்போ சினிமால ஃபைட் சீனாக்கும்.. ஒண்ணு தெரியுமா.. வெளிலே இருக்கற கூட்டம் மாதிரி உள்ளே இல்லே.. ஸோ.. ஆடியன்ஸ் உங்க ஃபைட் சீனுக்கு ரொம்ப குறைவுதான்….

”’நல்லா சொன்னே போ’..என்று சொல்லிவிட்டு ஹஹ என்று கொஞ்சம் கத்தி சிரித்த அப்பாவை விசித்திரமாகப் பார்த்தாள் மகள்.

“அப்பா.. நான் போகறச்சே ஏன் இப்படி சிரிச்சு பயமுறுத்தறே.. அப்புறம் ப்ளேன்’ல தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் நீ இப்ப சிரிச்சயே ஒரு சிரிப்பு, அது என்னை தூங்க வுடாதுப்பா”

அம்மாவும் கொஞ்சம் சிரித்தாள். ”ஜாக்கிரதையா போயிட்டு வாடா தங்கம்..”

“இம்மிகிரேஷன முடிந்ததும் ஒரு கால் கொடுத்தாள். பாதுகாப்பு முறைகள் முடிந்ததும் இன்னொரு கால் கொடுத்தாள்.

”சரிப்பா! நீங்க கிளம்புங்க! இரண்டு மணிநேரம் போல ஆகும்.. நான் பாத்துக்கறேன்..”

”பரவாயில்லேம்மா..விமானத்துல ஏறி உட்கார்ந்ததும் சொல்லு, அப்பவே போறோமே. வீட்டில போயி என்ன பண்ணப்போறோம். உங்கம்மா வேற கர்புர்’னு இருக்கா.. அதுக்கு இங்கயே இருக்கோம்..” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவளும் கொஞ்சம் சத்தமாக சிரித்ததாக காதில் கேட்டது.

இவர்களைப் போல ஒரு சிலர் உள்ளே வந்து வழி அனுப்பினாலும் அவர்கள் கண்களில் துக்கமும் ஒரு சேர இருந்ததை கவனிக்கவே செய்தான்.. ’உலகம் ரொம்ப சிறுசு.. என்பதை எப்போதுதான் இவர்கள் உணரப்போகிறார்களோ’ என்று மனைவியிடம் சொல்லி வருத்தப்படுவதைப் போல முகத்தை வைத்தான். அவள் இவனைச் சீண்டாமல் ஏர்போர்ட் முழுதும் பார்த்துக் கொண்டு கண்ணால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு மணிநேரம் போகவேண்டுமே என்பதாகக் கவலைப் பட்டாளோ என்னவோ..

இரண்டு மணிநேரமும் கழிந்தது. மகள் கைபேசியும் ஒலித்தது. “என்னம்மா.. ப்ளைட்’ல உக்காந்திட்டியா?”

“இதோ போகணும்பா.. ஆமாம்ப்பா.. நான் எதுக்காக இவ்வளோ தூரம் பிரயாணம் செஞ்சு என்ன சாதிக்கணும்னு போறேன்’னு இவ்வளோ நேரம் நினைச்சுப் பார்த்தேன்..பா.. ஒண்ணுமே விளங்கலே.. எதுக்காகப்பா உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் இப்படி தனியா போகணும்.. அப்பா எனக்கு இப்போ மனசெல்லாம் உங்க ரெண்டு பேரோடயே இருந்துடலாம்’னு தோணறது..” அவள் குரல் உடைந்திருந்ததைக் கவனித்ததும் இவனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது..

“ஆமாம்மா.. நாங்க எதுக்கு உன்னை இப்படி கம்பெல் பண்ணி அனுப்பணும்.. நாம் இப்படியே அப்பப்ப சண்டை போட்டுண்டு ஜாலியா கமெண்ட அடிச்சுண்டு இருக்கவேண்டாமா.. நீ எதுக்காக போகணும்..” அவன் குரலும் கம்மியது..

“அப்பா…” அவள் அழுதது போல அவனுக்குக் கேட்டது..

“என்னம்மா..”

“நான் போகலேப்பா.. நான் உங்களோடயே வந்துடறேன்பா..” என்றவளின் கேவி அழும் சப்தம் கேட்டு அப்பாவுக்கு கண்ணில் நீர் பொங்க ஆரம்பித்து விட்டது. இதைக் கவனித்த அம்மா அந்த போனை சட்டென்று அவனிடமிருந்து பிடுங்கினாள். மகள் அம்மாவிடமும் அதையேதான் கேட்டாளோ.. அந்த அழுகைக் குரல் அம்மாவையும் தொற்றிக் கொண்டது.

“நீ வந்துடுறா செல்லம்..அழாதே அழாதே.. அம்மா நான் இருக்கேன்.. பரவாயில்லே.. என்ன பெரிய படிப்பு வேண்டிக்கிடக்கு.. அங்க போய் படிக்கறதை இங்கேயே படிக்கமுடியாதா என்ன?..நீ முதல்ல அழுகையை நிறுத்தும்மா”

“இல்லேம்மா.. நான் இப்போ உள்ளே இருக்கேன்மா.. எல்லாத்தையும் உதறிவிட்டு வரமுடியாது..”:

“அப்ப ஒண்ணு பண்ணு.. போனவுடனே அங்கே நிலைமையைப் பாரு.. பிடிக்கலேன்னு வெச்சுக்க, உடனே புறப்பட்டு வந்துடு, என்னடா செல்லம்..”

“சரிம்மா.. நீ அழாதே.. போனை அப்பாகிட்டே கொடு”

”என்னம்மா”

“அப்பா! அம்மாகிட்டே நான் இல்லாத சமயத்துல சண்டை போடாதேப்பா..”

”சரிம்மா.. நீ வந்தவுடனே உன் முன்னாடியே சண்டை போடறோம்.”

சட்டென மகள் சிரித்த சப்தம் அம்மாவுக்கும் கேட்டது போலும். மெல்ல புருஷன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

பதிவாசிரியரைப் பற்றி

11 thoughts on “பிரிவு ஒரு தொடர்கதையோ

  1. ஹ்ம்ம்ம் … கதையின் தலைப்பு மிக்க நன்று! கதை நிகழ்ச்சிகள் உண்மையின் அடிப்படையில் தொடங்கி எங்கெங்கோ போகிற மாதிரி இருக்கே! The characters represent a typical brahmin family — all high-strung driven by enormous nervous energy! ஆனாலும், இளைய மகளை இப்படி அலுப்பும் எரிச்சலும் உள்ள ஒருத்தியாகப் படைத்திருக்க வேண்டாம்! 🙂 அப்படியே அவள் இருந்தாலும் … முதல்முறை திரும்பிவரும்போது அயல்நாட்டுப் பட்டறிவு அவளை எப்படிப் பட்டை தீட்டியிருக்கும் என்பதைப் பார்ப்பீர்கள்; இன்னும் 2~3 மாதங்களிலும், பின்வரும் ஆண்டுகளிலும் இதே மகளையும் தாயையும் தந்தையையும் வேறு முறையில் கதைப்படுத்தும் நிலை வரும்! காத்திருக்கவும்! 🙂  

  2. What a lovely story! கதை மிக யாதர்த்தமாக உள்ளது ..எல்லோரும் அனுபவித்துதான், ஆனால் எவ்வளவு அழகாக் எழுதி இருக்கீர்கள் நீங்கள். ரொம்பவும்
    ஆச்சரியம்மாக இருக்கு. நீங்கள் எழுதிய விதம் அப்படியே அந்த சூழ்நிலையை படம் பார்ப்பது போல் இருந்தது. உங்கள் கடைகளை ஆவலுடுன் எதிர்பார்க்கும் உங்கள் விசிறி சுகுணா

  3. Excellent. It is always a challenge between our love and the so called progress or prosperity. Most of the times the love is compromised in the end. 

  4. //”சரிம்மா.. நீ வந்தவுடனே உன் முன்னாடியே சண்டை போடறோம்.”

    சட்டென மகள் சிரித்த சப்தம் அம்மாவுக்கும் கேட்டது போலும். மெல்ல புருஷன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.//

    ஆனாலும் பொண்ணுக்குக் கோபம் ஜாஸ்தி தான்.  ஆனாலும் இது அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்துட்டுப் போனதன் எதிரொலியோனு தோணும் அளவுக்கு அப்படியே எங்க வீட்டில் நடக்கும் கதையாகவே இருக்கிறது.  கடைசி பஞ்ச் டச்சிங்!  ஆனாலும் பொண்ணு படிச்சுட்டு வந்தப்புறமும் இதே போல் இருக்கணும்னு வேண்டிக்கறேன். :))))))

  5. உறவும் ஒரு தொடர்கதை  
    பிரிவும் ஒரு தொடர்கதை 
    நடுவினில் ஒரு சிறுகதை (இதுபோல்)
    தருவதோ   பல விடுகதை

  6. Enjoyed the storyline. Very good narration. the last line is punch
    Thanks, but give us more and more often.

  7. சொந்த வாழ்க்கையில் நடந்ததை ஒரு கதை போல் சொல்வது ஒரு தனி கலை. அதில் நீ கைதேர்ந்தவனாகி விட்டாய். அது வெண்டைக்காய் சமையலாகட்டும், மகள் அமெரிக்கா செல்வதாகட்டும். (இனி சசி பாடு திண்டாட்டம் தான்).

  8. சாந்தினி, ராஜம் அம்மா, சுகுணா கண்ணன் மூவருமே ஆசிரியர்கள். ஆசிரியர்களிடமிருந்து கிடைத்த ‘வெகுமதி’க்கு நன்றி!! திருவாளர்கள்
    ராஜி முத்துகிருஷ்ணன், வசந்த், சத்தியமணி, ஸ்ரீதேவி, கீதாம்மா ஆகியோருக்குநன்றி

    மனோ – சொந்தக் கதையோ, வந்த கதையோ, எந்தக் கதைக்கும் ஒரு சிறு பொறிதான் தேவை.  ரசித்தமைக்கு நன்றி!!

  9. விமான நிலையத்துக்குப் போய் ஒரு அருமையான குடும்பத்தைச் சந்தித்து வழி அனுப்பின நிறைவைத் தந்த கதைக்குப் பாராட்டுக்கள்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *