எழுத்தாளர் ரிஷி ரவீந்திரன்

15

Rishiraveendran

வல்லமை மின்னிதழில் ‘நிர்வாண நேனோ செகண்ட்ஸ்…’ என்ற புதிய தொடர் கதையை அமெரிக்காவில் வசிக்கும் ரிஷி ரவீந்திரன் எழுதத் தொடங்கியுள்ளார். இவரின் இயற்பெயர் ‘ரவீந்திரநாத் தாகூர்’. வங்கதேச எழுத்தாளரின் நினைவாக அவரைப் போன்றே இலக்கியத்தில் பேரும் புகழும் பெற வேண்டும் என்ற அவாவில் இவ்வாறு பெயரிடப்பட்டது. கிராமத்துக் கலாசாலையில் அது இரவீந்திரன் என உபாத்தியாயர்களால் மாற்றியமைக்கப்பட்டது, பின்னர் நம்பிக்கை கூகிள் குழுமத்தில் அது ரிஷி ரவீந்திரனாய் மாறியது.

அன்னையின் பெரிய சகோதரியால் இரண்டு மாதக் குழந்தையாகத் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர். இவரின் பெரியப்பா, சுதந்திரப் போராட்ட வீரர். இவர்கள் தர்ம நெறியை வாழ்க்கையாக அமைத்துக்கொண்ட தம்பதியர். அக்காலக் கட்டங்களில்  விநோபாவின் நெருங்கிய நண்பராகி, அவரது பூதான் இயக்கத்தில் ஈடுபட்டிருந்தார். கதாசிரியர் அங்கே யோகா, தவம் மற்றும் ஆன்மீகச் சூழலில் வளர்க்கப்பட்டிருந்தார். பல யோகியர்களுடன் நேரடித் தொடர்பு இருந்தது. இறுதியில் வேதாத்திரி மகரிஷி, ரவீந்திரனின் எல்லா வினாக்களுக்கும் ரவீந்திரன் படித்த பெளதிகத்திலேயே விடையளித்தார். அதைத் தொடர்ந்து, பெளதிகத்தில் தான் பெரிதும் மதிக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்குச் சமமான வேதாத்திரியின் பெளதிக அறிவினால் காந்தமென ஈர்க்கப்பட்டு, அவரிடம் பாடம் பயின்றவர்.

‘யார் குழந்தை…?’ என்ற நாடகத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். இதுவே பின்னர் இவரது நாடகங்கள் பிரபலமடையக் காரணாமாகியது. சிறு வயதிலிருந்தே கதை சொல்லும் கலையினால் காந்தமென மற்றவர்களைக் கவரும் திறமை கை வரப் பெற்றவராய் இருந்தார்.

பெளதிகத்தின் மீது தீராக் காதல். தான் பயின்ற அதே கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் அமர்ந்தபொழுது நடைபாதை நாடகக் குழு ஒன்றினைத் தொடக்கி, நாடகத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, தெருத் தெருவாய் நாடகத்தினை நடத்தினார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு அறிவியல் கண்காட்சிகள் பலவற்றை நடத்தினார். குழந்தைகளை வைத்து இவர் இயக்கிய ‘ஒரு டைரக்டர் படம் எடுக்கின்றார்…’, ‘ஒன் மோர் டாக்டர்…’ ஆகிய இரண்டு நாடகங்கள் சென்னைத் தொலைக்காட்சியில் 1995 தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சியில் ஒளிபரப்பாயின. தமுஎச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)வுடன் தன்னை இணைத்துக்கொண்டு, ‘கலை இரவு’ நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் சிறப்புறப் பங்காற்றியிருந்தார்.

‘வாழ்க்கைக்கு வள்ளுவம்’ என்ற தலைப்பில் சென்னை வானொலியில் இளைய பாரதம் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார். தான் வளர்ந்த சிவகாசி பின்புலத்தில் இருக்கும் குழந்தைத் தொழிலாளர் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட இவரது ‘பிஞ்சு’ என்ற சிறுகதை, 1997இல் சேவ் என்ற அமைப்பினரால் சிறந்த 16 சிறுகதைகளில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு ‘பிஞ்சுக் கரங்கள்’ என்ற சிறுகதைகள் தொகுப்பாக வெளியானது.

இவரது ‘உயர்வுள்ளல்’, ‘லயம்’, ‘பொம்மலாட்டம்’, ‘மெஷின்’ ஆகியக் கதைகள் குறிப்பிடத்தக்கவை. அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கட்டுரைகளும் எழுதிக்கொண்டிருக்கின்றார். இவரது ‘டிக்..டிக்..டிக்..’ என்ற நேர நிர்வாகக் கட்டுரைத் தொடர், ‘மலேசிய நண்பன்’ என்ற நாளிதழின் ஞாயிறு பதிப்பில் தற்சமயம் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இவர் பெளதிகப் பேராசிரியராய் இருந்தபொழுது மாணவர்கள் பலரின் தன்னம்பிக்கையை உயர்த்தி, சாதனைகள் பல படைத்திட உதவினார். அப்பொழுது (1989-93) ‘Creative Imagination’ என்ற பட்டறையையும் அக்கல்லூரி ஆங்கிலப் பேராசிரியர் ரவிபாபுவின் உதவியுடன் இந்தியப் பல்கலைக்கழகங்களில் இல்லாத ‘Decision Making Science’, ‘Progressive Making Science’ என்ற புதிய பாடங்களைத் தயார் செய்து, மாணவர்களுக்குச் சாதனைகள் புரியும் வண்ணம் சிறப்புப் பாடமாக தன்னார்வத்துடன் பயிற்றுவித்தார்.

பேராசானாய் இருந்தபொழுது இவர் எழுதிய Entrophy, Are We Alone…? (About ET) ஆகிய அறிவியல் கட்டுரைகள் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்தன. இவர் எழுதிய The Art of Excellence, Mind Engineering, The Art of Studying, A Complete Journey towards Truthful Truth ஆகிய தொடர் கட்டுரைகள் புகழ்பெற்றவை. அக்கட்டுரைகளில் The Art of Excellence, Mind Engineering ஆகியவற்றை நியூயார்க்கில் இருக்கும் ஒரு பதிப்பகம், விரைவில் புத்தகங்களாய் வெளியிட உள்ளது.

இந்தியாவிலும் அமெரிக்காவிலும் சுயமுன்னேற்றப் பயிலரங்குகள் பல நடத்தியிருக்கின்றார். தற்பொழுது அமெரிக்கா வாசம். ஆந்திரப் பல்கலையில் மேல்நிலை அறிவியலில் பெளதிகமும் சிறப்புப் பாடமாக தொழிற்சாலை மின்னணுவியலும் பயின்றுவிட்டு, சிறிது காலம் பேராசிரியர் பணி. அதன் பின்னர், NITIE, Bombay யில் கணிப்பானியல் கல்வி. தற்சமயம் மென்பொருள் பணி.

ஜூன் 2ஆம் நாள் பிறந்த நாள் காணும் ரிஷி ரவீந்திரன், அதே நாளில் இந்தத் தொடர் கதையைத் தொடங்கியுள்ளார். அவரை வல்லமை வாசகர்கள் சார்பில் வாழ்த்துகளோடு வரவேற்கிறோம்.

பதிவாசிரியரைப் பற்றி

15 thoughts on “எழுத்தாளர் ரிஷி ரவீந்திரன்

  1. வாழ்த்துகள் ரிஷி, தவறாமல் படிப்பேன் உங்கள் ‘நிர்வாண நேனோ செகண்ட்ஸ்…’ தொடரை.

  2. வருக! ரிஷி ரவீந்திரன். வல்லமை பெறுக. வல்லமை தருக.

  3. வல்லமையில் ரிஷியின் வல்லமை,
    மகிழ்ச்சி தரும் செய்தி.
    வாழ்த்துகள்.
    -சீதாலட்சுமி.

  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !
    தொடர்கதைக்கும் இன்றுதான் பிறந்த நாளா ?
    சிறக்க வாழ்த்துக்கள் .
    அன்புடன்
    சுகுமாரன்

  5. Gr8 Job Guru…,

    Though I am not able to read your thriller, I hope this will be a good one… Keep rocking Sir.

  6. வாழ்த்துக்கள் எனது இனிய நண்பர் திரு ரவீந்திரன் அவர்களுக்கு. தங்கள் சேவை தொடரட்டும். வாழ்க வளமுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *