அலெக்சாண்ட்ரியாவிலிருந்து அபு சிம்பல் வரை

0

சாகர் பொன்னியின்செல்வன்  

9. ரயில் போய் கப்பல் வந்தது.

 

எங்கள் ரயில் எட்டு மணிக்கு வரவேண்டியது ஒரு வழியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. கூட்டம் ஒரே கூட்டம் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் !  எங்கள் பெட்டியை கண்டுபிடித்து அதை நோக்கி எங்களையும் மற்றும் சில அமெரிக்க பயணிகளையும் மஹ்மூத் ஒரு வழியாக அழைத்துகொண்டு சென்றார்.

“இந்த இரவு சொகுசு ரயில் வண்டிகள் அயல்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமே, எகிப்தியர்கள் அதில் பயணிக்க முடியாது. தேவைக்கு ஏற்றவாறு வண்டிகளின் எண்ணிக்கை கூடுவதும் குறைவதும் உண்டு” என்றும் எடுத்துரைத்தார்.

அனைவரும் ஒரு வழியாக உள்ளே ஏறி எங்கள் இடங்களை கண்டுபிடித்து அமர்ந்தோம். இரண்டு படுக்கை கொண்ட அறைகளாக இருக்கைகள் அமைக்க பட்டிருந்தன; இரண்டு அறைகளுக்கு இடையே ஒரு சிறிய கதவும் இருந்தது. எனவே அந்த கதவை திறந்ததும் நாங்கள் நால்வரும் ஒரு அறையில் இருப்பது போல் அமைந்தது வசதியாக இருந்தது. அடக்கமாக அந்த அறைக்குள்ளேயே ஒரு சிறிய கைகழுவும் இடம் மற்றும் அலமாரியும் இருந்தது. குளிர்ச்சாதன வசதியும் சொகுசு கம்பளங்களும் இருந்தன.

பிள்ளைகள் இரண்டும்  உடனே படுக்கும் வசதிகளை(Berth) சோதிக்க ஆரம்பித்தனர் எவ்வளவு முயன்றும் அதை திறக்க முடியவில்லை இந்த சமயத்தில் நடத்துனர் வந்து ஒரு சாவி போட்டு அதை திறந்து சரி செய்தார். இருட்டில் வெளியே என்ன இருக்கின்றது என்று ஒன்றும் தெரியவில்லை.

oneஅரைமணிநேரம் சென்றதும் உணவு கொண்டு வந்தார். உணவு பயணசீட்டு கட்டணத்தில் அடக்கம் ஆனால் தண்ணீர் வேண்டும் என்றால் அதற்கு  தனி காசு ! விமானத்தில் தருவது போல அழகாக தட்டில் வந்தது உணவு என்ன ஒரே பிரச்சனை சைவ உணவு இல்லை. நல்ல வேலையாக சாதம் தனியாக குழம்பு வகைகள் தனி தயிர் தனியாக இருந்ததால் என் மனைவி சாப்பிட முடிந்தது. குழந்தைகள் மேல் படுக்கையில் படுக்க ஒரு வழியாக தூங்கினோம்.

ஐந்தரை மணிக்கு கதவு தட்டும் சப்தம் கேட்டு விழித்தேன்.  நடத்துனர் இன்னும் கால மணிநேரத்தில் உணவு அளிக்கப்படும், லக்சர் சுமார் ஆறரை ஏழு மணியளவில்போய் சேருவோம் என்றார்.

வெளியே பார்த்தால் அழகிய நீர்பாசன கால்வாய் ரயில் தடத்தை ஒட்டி ஓடியது. அதனை அடுத்து தாமரை மலர்களும் அழகாக கண்ணை கவர்ந்தன! அதனை தாண்டியதும் தென்னை மற்றும் பருத்தி தோட்டங்கள் சிறிது தூரம் தென்பட்டன அதை தாண்டியதும் எங்கும் மணல், பாலைவனத்தில் சோலை உருவாக்குவது எப்படி என்பதை அழகாக காட்டியது எகிப்து. ஆனால் இவற்றையெல்லாம் மறக்க செய்தது காலையில் உதித்த சூரியன், பாலைவனத்தில்  உதிக்கும் சூரியன் தென்னைமரங்களின் நடுவே கண்ணாமூச்சி ஆட்டம் கட்டுவது என்ன அழகு.

காலை உணவு முடித்து பக்கத்தில் தெரியும் காட்சிகளை பார்த்தவாறு ரசித்தோம். ஊர் என்பது நைல் நதி மற்றும் அதன் கிளை கால்வாய்யை ஒட்டியே அமைந்திருந்தது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று. பாலைவனத்தை எப்படி இந்த பழம்பெரும் நதி சோலையாகியிருக்கிறது என்று பார்க்கும்போது பிரமிப்பாக இருந்தது.

ஒருவழியாக எங்கள் சொகுசு துரித ரயில்வண்டி லக்சர் வந்து சேர்ந்தது. நாங்கள் இறங்கியதும் எங்களை எதிர்கொள்ள ஒரு இளைஞர் மெம்பிஸ் டூர்ஸ் என்ற அட்டையுடன் நின்றுகொண்டிருந்தார். ஐந்து குடும்பங்கள் மெம்பிஸ் டூர்ஸ் அமைத்த சுற்றுலா நிரலில் பயணிப்பது தெரிந்தது.மெல்ல ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த எங்களை அந்த காலை நேரத்திலேயே ஷாருக், அமிதாப்பச்சன் , கரீணா கபூர் என்ற அழைப்புகள் எதிர்கொண்டன.

நாங்கள் வெளியே வரும் நேரத்துக்கு மேலும் நான்கு மெம்பிஸ் டூர்ஸ் வழிகாட்டிகள் அங்கு வந்து சேர்ந்தனர். ஒவ்வருவரும் ஆளுக்கொரு வேனோடு வந்தனர். ஒவ்வொரு குடும்பமும் ஒருவழியாக வண்டிகளில் ஏறியவுடன் வண்டி எங்கள் சொகுசு படகு நோக்கி சென்றது. ஊர் பெரிதாக சொல்லிகொள்கிற மாதிரி இல்லை. சாலையோர குப்பைகள், தெருவுங்கும் சுவரொட்டிகள் மூளைக்கு மூளை கடையில் சாய் அருந்தும் மக்கள் என்று ஒரு சராசரி இந்திய சிற்றூர் கணக்காக இருந்தது லக்சர்.

ஒரு வழியாக நைல் நதிக்கரையை அடைந்தோம். வருசையாக அங்கே சொகுசு படகுகள் அணிவகுத்திருந்தன. எங்களை ஒரு படகு துறைக்கு அருகில் நிறுத்தினார்கள். படகு பெயர் வித்தியாசமாக இருந்தது.

“இது எங்கள் படகு இல்லையே நாங்கள் மொவேன்பிக் ராயல் லோடஸில் தங்குவதாக தானே ஏற்பாடு?” என்றேன்.

“ ஆமாம் அது மூன்றாவதாக நிறுத்தப்பட்டுள்ளது. நாம் இந்த இரண்டு படகுகளைத் தாண்டி அதை போய் அடைவோம்” என்றவாறு எங்களை அழைத்துக்கொண்டு படகு துறையை நோக்கி நடந்தார். நாங்கள் அவரை தொடர்ந்து சில படிகளில் கீழிறங்கி சென்றோம்.Untitled

சிறிய மரப்பாலம் படகுத்துறையிலிருந்து படகினையும் இணைத்து கிடந்தது. அதில் ஒருவர் பின் ஒருவராக நடந்து இல்லே சென்றோம். நாங்கள் நுழைந்தது முதல் படகின் வரவேற்பறை. எங்களை நேரே நடத்தி அழைத்து சென்றார் எங்கள் வழிகாட்டி.படகின் மறுபக்கத்தில் உள்ள கதவின் வழி நாங்கள் அடுத்த  படகினை அடைந்தோம். அதையும் இதுபோல தாண்டியதும் எங்கள் சொகுசு படகு ராயல் லோடஸ் எங்களை எதிர்கொண்டு அழைத்து.

மற்றைய இரண்டு கப்பல்களை விட எங்கள் கப்பல் மிகவும் கம்பீரமாகவும் சொகுசாகவும் காட்சியளித்தது. நான்கு அடுக்குகள், ஐந்து நட்சத்திர வசதிகொண்ட அறைகள் நீச்சல் குளம் என்று எல்லாவசதிகளும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கப்பலில் பதிவு செய்தபோது எங்கள் அறைகள் பதினொன்று மணிக்கு தான் தயாராகும் என்றார். மணியோ ஒன்பதரை தான் ஆனது. குழந்தைகளை வைத்து கொண்டு என்ன செய்வது என்று அவரிடம் கேட்கவே, சிறிது நேர யோசனைக்கு பிறகு உங்கள் இரு அறைகளில் ஒன்றை இப்போது தயார் செய்து கொடுக்கிறோம், மற்றது பதினொன்று மணிக்கு தயாராகும் என்றார்.

எங்கள் வழிகாட்டி நீங்கள் உங்கள் அறைக்கு சென்று ஓய்வெடுங்கள் நான் விடை பெற்றுகொள்கிறேன். உங்கள் புது வழிகாட்டி உங்களை பகல் உணவுக்கு பின்னர் சந்தித்து அறிமுகம் செய்துகொள்வார் என்று கூறி சென்றார். அடுத்த சில நாட்கள் எங்களது வாத்சலம் இந்த கப்பல் தான், உள்ளே எப்படி இருக்கிறது என்றறியும் ஆவலோடு எங்கள் அறை நோக்கி சென்றோம்.

படங்கள்: சாகர் பொன்னியின்செல்வன்

(தொடரும்)

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *