பெருவை பார்த்தசாரதி

images1966 ஆம் வருடம் கவிர் வாலி இயற்றிய ‘கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் கண்ணன் பிறந்தான்’ என்ற அருமையான திரையிசைப் பாடல் இன்று அனைவரது நினைவுக்கும் வரும். வருஷம் தோறும், ஆவணி மாதம், கிருஷ்ணபட்ச அஷ்டமி தினத்தை, கண்ணனின் அவதாரத் திருநாளாகக் கொண்டாடுகிறோம். அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டப் பிறந்த கண்ணனின் பிறந்த நாளன்று வல்லமை வாசகர் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கிருஷ்ணாவதார நோக்கமும், கிருஷ்ணலீலைகளும் யாவரும் அறிந்ததே. இதைப் பற்றிச் சொல்லாதவர்களும், எழுதாதவர்களும் கிடையாது என்றே கூறலாம். ஸ்ரீகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று, கிருஷ்ணாவதாரத்தில் நடந்த ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பற்றி அனைவரும் அறிந்திருந்தாலும், வித்தியாசமான கண்ணோட்டத்தில் அதன் உட்கருத்தை மட்டும் ஆறாய்வோம்.

வசுதேவருக்கும், தேவகிக்கும் பிறந்த ஆறு குழந்தைகளை கம்சன் மிகவும் கொடூரமாக, முறட்டுத்துத்தனமாக, எப்படிக் கொன்றான் தெரியுமா?……அந்தப் பிஞ்சுக்குழந்தைகளின் இருகாலைப் பிடித்து உயரே சுழற்றி, அதன் தலையை சுவற்றில் அடித்துக் கொல்வானாம்.

ஆறு குழந்தைகளை கொன்றபிறகு, ஏழாவது முறையாக தேவகியின் வயிற்றில் ஆதிசேடனுடைய அம்சம், கர்ப்பமாக வந்து தங்கியது. பகவான் துஷ்டர்களை அழிக்கும் பொருட்டு திருஅவதாரம் செய்யவேண்டிய காலம் நெருங்கி விட்டதை உணர்ந்து, மாயையை அழைத்து, பின் வருமாறு கட்டளையிடுகிறார்.  ‘நீ தேவகியின் வயிற்றில் வளரும் கருவை எடுத்து,  வசுதேவரின் முதல் மனைவியான ரோகினியின் வயிற்றிக்கு மாற்றி விடு, அதற்கு பதில் நான் தேவகியின் வயிற்றில் அவதாரம் செய்வேன்’ என்கிறார். அதேநேரத்தில் நந்தகோபரின் மனைவி யசோதையின் வயிற்றில் நீ பெண்ணாகப் பிறக்கவேண்டும்.  ஆண்டவன் கட்டளை அல்லவா, இந்த மாற்றம் ஒரு சில நொடியில் நடந்துமுடிந்ததை மானுடர்கள் ஒருவரும் அறிகிலர். கம்சனின் பயத்தால் தேவகியின் கர்ப்பம் கலைந்துவிட்டது என்று, மக்கள் தினமும் கம்சனை நிந்திக்கத் தொடங்கினர்.

சில நாட்களுக்கு பிறகு தேவகி எட்டாவது முறையாக கருவுற்றாள் என்ற செய்தி அறிந்த கம்சன், முதலில் அவளையே கொன்றுவிட எண்ணுகிறான். அதன்பிறகு, பெண் கொலை, சகோதரி கொலை, கர்ப்பிணி கொலை என மூன்று கொடும்பாவங்களும் சேர்ந்து கொள்வதால் இந்த எண்ணத்தை கைவிடுகிறான். இந்த நேரத்தில்………

இனிநடக்கப்போவதெல்லாம் ஆண்டவன் கட்டளையாயிற்றே!…..அதன்படிதான் எல்லாம் அரங்கேரவேண்டும். அப்போது மீண்டும் ஒரு மாற்றம் நிகழ்கிறது.  வசுதேவர் தேவகிக்குப் பிறந்த தெய்வக்குழந்தையை கோகுலத்து யசோதையிடம் விட்டு விட்டு, யசோதையிடம் இருக்கும் பெண்குழந்தையை மதுராபுரி தேவகிக்கும் ஒரே நேரத்தில் மாற்றம் செய்கிறார்.

images (2)கண்ணிமைக்கும் நேரத்தில், மாற்றங்கள் சட்டென முடிவடைகிறது, பின்னர் கம்சனுக்கு எட்டாவது குழந்தை பற்றிய விஷயம் தெரிவிக்கப்பட்டவுடன், அவன் வாளை உறுவிக்கொண்டு, தேவகியின் கூச்சலைப் பற்றி கவலைப்படாமல், குழந்தையின் இரு கால்களைப் பற்றி, ஒரு சுழற்று சுற்றி ஓங்கி சுவற்றில் அடிப்பதற்க்கு முன்னால், மஹாசக்தியின் அம்சமல்லவா அந்த மாயக்குழந்தை,  கம்சனின் கைநழுவி வானத்தில் ஓரிடத்தில் நின்று,  “ஏ மூடனே, என்னை உன்னால் கொல்லமுடியாது, தெரிந்தோ, தெரியாமலோ எனது காலை பிடித்துவிட்டாய், காலைப்பிடித்தவனை நான் ஒருபோதும் கொல்லமுடியாது, எனது காலைப்பிடித்தால் அது சரணாகதிக்குச் சமம், அதனால் உன்னை மன்னித்துவிடுகிறேன். மேலும் ‘உன்னை கொல்வதற்கு ஒருவன் ஒருத்திக்கு மகனாய்ப் பிறந்து, வேறொருத்தியிடம் மகனாய் வளர்ந்து வருகிறான்’ என்று கூறி மறைகிறாள்”.

இச்சொல்லைக் கேட்டபிறகு, கம்ஸனுக்கு மரணபயம் வந்து, அந்த  மரணபயமே கம்சனின் பாதி உயிரை எடுத்து விடுகிறதாம். மரண பயம் என்பது மரணத்தை விடக்கொடியது. இந்த பயமே, பலரை வாட்டி, வதைப்பதை நாம் எல்லோரது அனுபவத்திலும் காணலாம். மரணத்தை மனிதன் மறந்தாலும், அது நம்மை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொண்டிருக்குமாம்.

ஆங்கிலப் படங்களில் வரும் சில மெய்சிலிர்க்கும் காட்சியைப் பார்த்திருக்கிறோம். படம் மிகச் சுவாரஸ்யமாகப் ஓடிக்கொண்டிக்கும்போது, வில்லனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு, அனைவரையும் கொடுமைப் படுத்தி, உலகை அழிக்க சவால் விட்டுக் கொண்டிருப்பான். இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாக கதாநாயகன் மிகச்சாதாரணமா, கண்ட்ரோல் ரூமை அடைந்து, அதன் மூலம் வில்லனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதைப்போல்……

images (1)இறைவன் உலகில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். வசுதேவர், குழந்தையாகிய பகவானைத் தலையில் கூடையில் வைத்து எடுத்துச் செல்வதற்காக எத்தனிக்கும்போது,  வசுதேவருடைய கைவிலங்குகள் மற்றும் கால்விலங்குகள் அவரை அறியாமலேயே கழன்று விலகும், சிறைக்கதவுகள் தானாகத் திறக்கும். வழிப்பயணத்தின் போது, ஆதிசேஷன் துணையாகவும், தனது படத்தை விரித்து குடையாக மழையிலிருந்து பகவான்சிசுவைப் பாதுகாப்பான், யமுனைநதி தனதுயிரைப் பிடித்து நிறுத்தி, நீரைப் பிரித்து,  தானே வழிவிடுவாள், இச்சம்பவத்தின் போது எல்லாமே மாயையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். வசுதேவர், யாதொரு கவலையும் இல்லாமல், இறைவன் இட்ட கட்டளையை இச்சையுடன் நிறைவேற்றுகிறார்.

இறைவனைச் சரணாகதி அடைந்து, அவனே கதி என்பதை ஏற்றுக் கொண்டால், மற்றதெல்லாம் நாம் நினைத்தபடி நடக்கும் என்பதுதான இந்நிகழ்ச்சியின் நீதி. 5000 வருடங்களுக்கு முன்பே இந்த மாற்றங்கள் நிகழ்ந்த போது, ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். வசுதேவரின் கை மற்றும் கால் விலங்குகள் எப்படி தாமாக விலகியதோ, பகவானைச் சரணந்தவர்களிடம், பிறப்பு, இறப்பு, வாழ்க்கை போன்ற துன்பங்கள் அனைத்தும் தாமாக விலகிவிடும். நித்தமும், அனுதினமும் கண்ணனைத் தியானிப்பவர்களுக்கு பிறவித் துன்பம் இல்லை என்பதுதான் கண்ணனின் பிறவித் தத்துவம். இந்நிகழ்ச்சிகளைக் கூர்ந்து படித்து கிரகித்துக் கொள்வதின் மூலம், இதன் உட்பொருள் அறியமுடியும்.

இந்நிகழ்ச்சிகளின் உட்கருத்தைப் படம்பிடித்துக் காட்டுவது போல, சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஆண்டாள் திருப்பாவையில் உள்ளடக்கிய 25 வது பாசுரத்தில் மிக அழகாகப் பாடியதைப் பார்போம்:-

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

பொருள்:

தேவகிக்கு மகனாய் பிறந்து அதே இரவில், யசோதையின் மகனாய் ஒளிந்து வளர்ந்துவர, அதைப் பொறுக்காது உன்னைக் கொல்ல நினைத்த, கம்ஸனின் வயிற்றில் நெருப்பாக நின்றாய்!, எங்கள் குறை தீர்க்கும்படி உன்னைப் பிரார்த்தித்து, வந்தோம், நாங்கள் விரும்பியதைத் தருவாயானால், லக்ஷ்மி தேவி விரும்பும் உன் குணச்செல்வத்தையும், உன் வீரத்தையும் நித்தமும் பாடி வருத்தம் நீங்கி மகிழ்ந்து கொண்டே இருப்போம்.

images (3)இந்தப் பாசுரத்தில் அடங்கிய எண்ணற்ற தத்துவங்களைப் போல், மேலும் பல மகிமைகளையும், உட்கருத்துக்களையும் கிருஷ்ணாவதாரத்தின் அடிப்படைத் தத்துவம் உட்பட பல தகவல்களை, ஸ்ரீமத் பாகவதத்திலுள்ள,  பத்தாம் ஸ்கந்தத்தில் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இச்சம்பவத்தைப் போல் வெண்ணெய் திருடுதல், ராஸ நடனம் புரிந்து கோபியர்களின் உடைகளைக் களவாடுதல், புல்லாங்குழலில் கிருஷ்ணகானம் போன்ற கண்ணனின் ஒவ்வொரு லீலைகளுக்குள்ளும் பல உண்மைத் தத்துவங்கள் அடங்கி இருக்கிறது.

கிருஷ்ண ஜெயந்தியன்று பாகவதம் முழுவதும் படித்தால் நலம்தரும், முடியாதவர்கள் பகவத்கீதை படிக்கலாம், அதுவும் முடியாதவர்கள் கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்த கிருஷ்ணலீலைகளுள் ஒன்றையாவது படித்தால் அதைவிடப் புண்ணியம் வேறொன்றுமில்லை என்பது, நமது பூர்வாச்சார்யர்கள் மற்றும் மஹான்களின் கருத்தாகும்.

“ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து”

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “கண்ணனின் கட்டளை!…

  1. ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தை அருமையாக விவரித்திருக்கிறீர்கள். தாங்கள் கூறியது போல்,

    ////முடியாதவர்கள் கிருஷ்ணாவதாரத்தில் நிகழ்ந்த கிருஷ்ணலீலைகளுள் ஒன்றையாவது படித்தால் அதைவிடப் புண்ணியம் வேறொன்றுமில்லை என்பது, நமது பூர்வாச்சார்யர்கள் மற்றும் மஹான்களின் கருத்தாகும்.//

    என்பதால் கிருஷ்ணலீலைகளுள் ஒன்றையாவது படிக்கலாம். ஸ்ரீமந் நாராயணீயம், ஸ்ரீமத் பாகவத சாரம் என்பதால் ஏதேனும் கிருஷ்ணாவதாரப் பகுதியில், ஏதேனும் ஒரு தசகம் படிக்கலாம் என்றும் கூறுகின்றார்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  2. ஜெய் ஸ்ரீமன் நாராயணா!

    மாம் ஏகம் சரணம் வ்ரஜ! என்னை ஒருவனையே சரணடைந்துவிடு உன்னை தளைகளிலிருந்து விடுவிக்கிறேன் என்றான் அந்த பார்த்தனின் சாரதி.

    அதை இந்த பார்த்தனுக்கு பகன்றுரைத்த சாரதியே உம் பெருமை நீண்டு வளர் ஸ்ரீபட்டாபிராமர் அனுக்ரஹம் பண்ணட்டும்.
    ப்ரமாதமா இருக்கு இந்த கட்டுரை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *