ராமஸ்வாமி சம்பத்

statue-alexander-great-skopje-26348088

மாசிடோனிய மக்களும் அரசாங்க அதிகாரிகளும் மகத்தான திக்விஜயம் செய்து நாடு திரும்பிய அலெக்சாண்டருக்கு ஒரு மாபெரும் வரவேற்பினை ஏற்பாடு செய்திருந்தனர். தலைநகர் எங்கும் வெற்றித் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

‘மாவீரன் அலெக்சாண்டர் வாழ்க’ எனும் மக்களின் கோஷம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மாவீரன் எனும் வார்த்தையை எப்போது கேட்டாலும் கையசைத்து பெருமையாக ஏற்றுக் கொள்பவன் இப்போது அதைக்கேட்டதுமே முகம் சுளித்தான். தன் அந்தரங்க தளபதியை அழைத்து அந்த கோஷத்தை நிறுத்த ஆணையிட்டான். தளபதிக்கு ஒன்றும் புரியவில்லை. ‘இது மாமன்னருக்குப் பிடித்த கோஷம் அல்லவா? அவரிடம் என் இந்த மாற்றம்?’ என வியந்தான். அவன் குழப்பத்தை புரிந்துகொண்ட அரசன், அவன் காதில் “நான் இன்னும் மாவீரன் ஆகவில்லை. அவ்வாறு ஆனதும் நானே சொல்கிறேன். அப்போது மக்கள் இந்த கோஷத்தை முழங்கட்டும். அதுவரை நான் வெறும் மன்னன் மட்டுமே” என்றான்.

மகாராணியான அன்னை ஒலிம்பியா அந்த வரவேற்புக்  குழாத்தின் முன்னணியில் இருந்தாள். அடிபணிந்த தன்மகனை வாரி அணைத்துக் கொண்டாள். “மகனே! உன் தந்தையார் பிலிப் மாமன்னர் இன்று இருந்திருந்தால், அளவிடர்க்கரிய ஆனந்தத்தை அடைந்திருப்பார்” என்று கூறி அவன் அருகில் நின்றிருந்த ரொக்ஸானாவைப் பார்த்து வியப்புடன் ”யார் இந்த பேரழகி?” என்று வினவினாள்.

“என் வணக்கத்திற்குரிய அன்னையே! இவள் பெயர் ரொக்ஸானா. இவள் எனக்கு பாரசீக நாட்டில் கிடைத்த போர்ப்பரிசு.  தங்கள் ஒப்புதலுடன் இவளை மணம்புரிய விரும்புகிறேன்” என்றான்.

மலர்ந்த முகத்தோடு ஒலிம்பியா ரொக்ஸானாவை அணைத்துக் கொண்டு. “இந்த சுட்டிப் பெண் உனக்கு எல்லாவகையிலும் ஏற்றவள்தான்” என்றாள்.

சில நாட்களுக்குப் பின், அலெக்சாண்டர் ரொக்ஸானா திருமணம் வெகு விமரிசையாக நடந்தது. மாசிடோனிய மக்களும் மிக்க மகிழ்ச்சி கொண்டனர். புதுமண தம்பதிகள் ஆனந்த அலைகளில் திளைத்தனர்.

இல்வாழ்க்கை இப்படி ஒருபுறம் மகிழ்வாக இருந்தாலும் அலெக்சாண்டரின் மனத்தில் ஆன்மீக பலம் பெறுவதில் கொண்ட நாட்டம் நாளுக்கு நாள் தீவிரமாகியது. ஆசுதோஷர் கற்றுக் கொடுத்த தறிகெட்டு ஓடும் மனத்தை அடக்கும் தியானப் பயிற்சிகளை தினம் இருமுறை செய்து வந்தான். நாளடைவில் மனம் அவன் வழிக்கு வந்தது. ஆன்மா பலம் பெற்றது. பிறவியின் பயனை வெகு விரைவில் புரிந்து கொண்டான்.

மாசிடோனியா திரும்பிய நாளிலிருந்து அலெக்சாண்டரின் அன்னை, உற்றார், உறவினர் மற்றும் நெருங்கிய அரசாங்க ஆலோசகர்கள் அவனது நடை, உடை, பாவனையில் பல மாற்றங்களைக் கண்டனர். அவனது ராஜ நடையில் கம்பீரம் இருந்தது, கர்வம் இல்லை. அவனது உடை பகட்டாக இல்லை, எளிமையாகவும் மரியாதைக்குரியதாகவும் இருந்தது. அவன் பாவனைகளும் போற்றத் தக்கவையாக மாறி இருந்தன. முன்போல் அவனுக்கு இப்போது முன்கோபம் வருவதில்லை. பேச்சிலும் ஆணையிடும் போதும் ஆணவம் காணப்படவில்லை. மற்றவர் கூற்றுக்கு செவிமடுத்து மதிப்பு கொடுக்கும் தன்மையை அவனிடம் கண்ட அவர்கள் ‘இது என்ன புதுமை?’ என வியந்தனர். ஆச்சர்யம் அடைந்த அன்னை ஒலிம்பியாவின் கேள்விக்கு, அலெக்சாண்டர் ”இது பரத கண்டத்தின் மகத்துவம்” என்றான். ஆசுதோஷ முனிவரின் அறிவுரைகளையும் அவளுக்கு விவரித்தான்

நாடு திரும்பிய நாளன்று அரண்மனையில் அவனுக்குச் ஒரு சிறப்பு விருந்தினை ஒலிம்பியா ஏற்பாடு செய்திருந்தாள். வழக்கம் போல் அலெக்சாண்டரின் மெய்க்காப்பாளர்கள் தங்கள் சேவையைத் துவங்கினர். அவர்களை நோக்கி ”இனி நீங்கள் நான் புசிக்கும் உணவையோ அருந்தும் தண்ணீரையோ மதுபானத்தையோ மருந்தினையோ முன் ருசி பார்க்க வேண்டிய அவசியமில்லை. என் உயிரைக் காத்துக் கொள்வதற்காக உங்கள் உயிரைப் பணயம் வைப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை” என்றான்.

“அப்படியானல் எங்களை பதவி நீக்கம் செய்கிறீர்களா” என்று ஏக்கத்தோடு அவர்கள் கேட்டனர்.

“கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வேறு உயர்ந்த பதவிகளை அளிக்கிறேன்” என்று அவர்களுக்கு உறுதி கூறினான்.

images0000நாட்கள் உருண்டோடின. முனிவரின் உபதேசப்படி, அலெக்சாண்டர் ஒற்றர்கள் மூலமும் மாறுவேடம் தரித்து தானே மக்களிடையே கலந்தும் அனைவர் குறைகளையும் கண்டறிந்து அவற்றிற்குத் தீர்வு கண்டு அவர்களை மகிழ்வித்தான். மாசிடோனிய மாமன்னனின் நல்லாட்சியை அவன் வெற்றி கொண்ட நாடுகளின் பிரஜைகளும் போற்றிப் புகழ்ந்தனர்.

ஒருநாள் புருஷோத்தமன் தன் உடன்பிறவா சகோதரியைக் காண மாசிடோனியத் தலைநகருக்கு வந்தான். அலெக்சாண்டரும் ரொக்ஸானாவும் ஒலிம்பியாவும் மிக்க மகிழ்ச்சி கொண்டனர்.

 

“மாவீரரே! மன்னிக்க வேண்டுகிறேன். என்னால் உங்கள் திருமணத்திற்கு வருகை தர முடியாமல் போய்விட்டது. முனிவர் ஆசுதோஷர் தன் ஆசிகளை தங்களுக்கு வழங்கச் சொன்னார்” என்று சொல்லி அவர் கொடுத்து அனுப்பியிருந்த பழங்களை ரொக்ஸானாவிடம் சமர்ப்பித்தான்.

அலெக்சாண்டர் திகைப்புடன், “போரஸ், நீயா என்னை ‘மாவீரன்’ என அழைக்கிறாய்!” என்றான்

“ஆம் மாவீரரே! ஆன்ம பலம் பெற்ற தாங்கள் மஹா வீரர் தான். நான் வரும் வழியில் உங்கள் வெண்கொற்றக் குடையின் கீழ் உள்ள நாட்டுமக்கள் பலரை சந்தித்துப் பேசினேன். எல்லாரும் உங்களை ஏகமனதாக ’நீங்கள் ஒரு மாவீரன் மட்டும் அல்ல. ஒரு உத்தம அரசனும் கூட’ எனப் புகழாரம் சூட்டுகிறார்கள். இது உங்கள் ஆன்மீக பலத்திற்குக் கிடைத்த வெற்றி” என்று கூறிய புருஷோத்தமனை அலெக்சாண்டர் ஆலிங்கனம் செய்து கொண்டான்.

“போரஸ், இது என் வெற்றி மட்டும் அல்ல. உன்னுடையதும் கூட. ஆசுதோஷ முனிவரை உன்னால் அல்லவோ நான் சந்திக்க முடிந்தது. அந்த மெய்சிலிர்க்கும் சந்திப்பால் அல்லவா என் வாழ்க்கை நெறி மெருகேறி இருக்கிறது. அவர் ஆசிகளால் அல்லவா ‘உத்தம அலெக்சாண்டர்’ எனும் என் உள்ளத்துக்கு உகந்த பட்டம் எனக்கு இன்று கிடைத்திருக்கிறது” என்று மகிழ்ச்சியோடும் கண்ணீர் சொரியும் கண்களோடும் அவன் பகர்ந்தான்.

‘வெறும் முரட்டு பலத்தினால் பெறமுடியாத பெருமையை ஆன்மீக பலம் வெகு எளிதாக எனக்குப் பெற்றுத் தந்துவிட்டது!’ என்ற மன நிறைவையும் அடைந்தான் உத்தமன் அலெக்ஸாண்டர்.

தொடரும்.

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “உத்தமன் அலெக்ஸாண்டர்!…(8)

  1. ஆன்மீகத்தின் பலனை அலக்சாண்டர் மூலமாக உண்ர்த்தியது மிகவும் அருமை திரு ராமஸ்வாமிசம்பத் அவர்களே

    அன்புடன்தமிழ்த்தேனீ

  2. அலெக்ஸாண்டர், தான் கற்றுக் கொண்ட பாடங்களை மறக்காமல் பயிற்சி செய்து, மக்கள் போற்றும் மாவீரனாகவும், உத்தமனாகவும் திகழ்வதை அழகுற எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி ஐயா.

  3. ஆன்மபலமே பெரும் பலம் என்பதை அழகுற எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். நல்லதொரு அரசன் எவ்விதம் நடக்க வேண்டுமென்பது தெளிவாகப் புலப்படுகிறது. ஒவ்வொரு பகுதியும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம். மனமார்ந்த நன்றிகள்.

  4. தமிழ்த்தேனீ ஐயா அவர்களுக்கும் என் சின்னப்பெண் கவிநயாவிற்கும் மிக்க நன்றி.
    அன்புடன்
    ஸம்பத்

  5. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி திருமதி பார்வதி ராமச்சந்திரன் அவர்களே!
    அன்புடன்
    ஸம்பத்

  6. மாவீரன் அலெக்ஸாண்டர் பற்றிய பல புதிய தகவல்களை அறியக் கொடுக்கிறீர்கள். நன்றி ஐயா! தங்களது மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

  7. அன்புள்ள திரு. சச்சிதானந்தம் அவர்களே!
    தங்கள் மின் மடலுக்கு மிக்க நன்றி.
    என் மின் அஞ்சல் முகவரி:
    ramaswami.sampath@gmail.com rpt ramaswami.sampath@gmail.com
    வணக்கத்துடன்
    ஸம்பத்

  8. தாமதமாய் வந்திருக்கேன்.  இப்படி ஒரு நிகழ்வு அலெக்சாண்டர் வாழ்வில் நிகழ்ந்தது குறித்து அறியவே இல்லை.  என்றாலும் பரத கண்டத்தின் ஆன்மிக பலம் குறித்துச் சொல்லி இருப்பது மகிழ்வைத் தந்தாலும் இன்றைய நிலையை நினைத்து மனம் பதறவும் செய்கிறது 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *