இப்படியும் சில மனிதர்கள்! – 3

0

தஞ்​சை ​வெ.​கோபாலன்

நான் முன்பே சொல்லியிருந்தபடி என் நண்பன் சாமிநாதனின் மகள் திருமணம் கும்பகோணம் மகாமகக் குளக்கைரையில் அமைந்துள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்தது. சாமிநாதன் குடும்பத்தோடு நானும் என் குடும்பத்தாரும் ஒரு வாரம் முந்தியே கும்பகோணம் வந்து விட்டோம். அங்கு சாமிநாதனின் அப்பாவுக்கு ரெட்டி ராயர் குளம் வீதியில் ஒரு வீடு இருந்தது. அது பெரிய வீடு. எங்கள் குடும்பத்தாரும் அவர்களோடு தங்கிக் கொண்டு கல்யாண ஏற்பாடுகளைச் செய்து வந்தோம்.

திருமணத்துக்கு இரண்டு  நாள் முந்தைய  நாள்தான் மண்டபத்தை எங்களுக்குக் கொடுத்தார்கள். அங்கு போய் மண்டபத்தைச் சுத்தம் செய்து, சாமான்களைக் கொண்டு போய் அங்கு இறக்கிவிட்டு, சமையல்காரர்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு அங்கேயே இரவு தங்கி விட்டோம். திங்கட்கிழமை முகூர்த்தம். நாங்கள் வெள்ளிக்கிழமை மாலை அங்கு போய்விட்டோம். அன்று இரவே சாட்டை வெங்கட்டராமன் குழுவினர் சமையலுக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். அவர்கள் வந்ததுதான் தெரியும், மளமள வென்று அவர்கள் வேலையைத் தொடங்கிய வேகத்தை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தப் பக்கத்தில் மிகவும் பிரபலமானவர் சாட்டை வெங்கட்டராமன். உட்கார்ந்த இடத்தில் இன்ன சமையலுக்கு இத்தனை பேருக்கு இவ்வளவு சாமான் என்று அவர் இட்ட உத்தரவை ஏற்று பணியாளர்கள் வேலை செய்தார்கள். கல்யாண இனிப்பு, பருப்புத் தேங்காய் ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளை அவர் செய்து கொண்டிருந்தார்.

அன்று இரவு நானும் சாமிநாதனும் மறுநாள் காலையில் ரயிலில் வந்து சேரும் சம்பந்திகளை எப்படி வரவேற்பது, தங்கவைப்பது, அவர்கள் செளகரியங்களை யார் யார் கவனித்துக் கொள்வது என்பதையெல்லாம் பேசி முடிவு செய்தோம். சாமிநாதனின் மைத்துனர்கள் இரண்டு பேர் முதல் நாளே மாயூரம் சென்று அங்கு மயூரா லாட்ஜ் சேகரைப் பார்த்து சனிக்கிழமை காலை சென்னையிலிருந்து வரும் ரயிலில் வரும் நபர்களுக்கு இட்லி, பொங்கல், வடை, காபி சப்ளை செய்ய ஏற்பாடு செய்தோம். சேகர் மிகவும் உத்சாகமான பேர்வழி. ஊம், ஜமாய்த்துடுவோம், கவலையை விடுங்க என்று சொல்லி அதே போல சிறப்பாக ஏற்பாடு செய்து விட்டார். எங்களிடம் அறுபது எழுபது பேர் வருவோம் என்று சொல்லியிருந்த சம்பந்தி வீட்டார் நாங்கள் ரயில் செலவை ஏற்றுக் கொள்கிறோம் என்றதும், ஆன மட்டும் அந்த அறுபது எழுபது பேரை அழைத்து வர முயன்றார்கள். ஆனால் அது அவர்களால் முடியவில்லை. முடிவில் இருபத்தி எட்டு பேர்தான் தேறினார்களாம். அவர்களுக்கு சென்னையிலிருந்து கும்பகோணத்துக்கும், திரும்ப திருமணத்துக்கு மறுநாள் இரவு ரயிலிலும் டிக்கெட் பதிவு செய்து அனுப்பினோம். அதன் பிறகு பல முறை டெலிபோன் செய்து அவர்கள் பயணத்தில் சிலருக்குப் பதில் வேறு நபர்களையும், திரும்ப வருவதற்கு இருவருக்கு சென்னைக்குப் பதிலாக பெங்களூருக்கும் டிக்கெட் வாங்கச் சொன்னார்கள். நாங்களும் சிரமத்தைப் பார்க்காமல் அவர்கள் முகம் கோணாமல் எல்லாவற்றையும் செய்து முடித்தோம்.

மறுநாள் காலை ஐந்து மணிக்கு சென்னை ரயில் வருகிறது. மாயூரத்திலிருந்து சாமிநாதன் மைத்துனன் பேசினான். அவர்களுக்கு மாயூரம் ரயில் நிலையத்தில் டிபன் காப்பி கொடுத்தாயிற்று. சிலர் பல் தேய்க்க வேண்டுமென்று தாமதப்படுத்தியதால், இரண்டு பையன்கள் டிபன் வகையறாவுடன் ரயிலில் கும்பகோணம் வந்து கொண்டிருக்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கும் அவர்கள் டிபன் பரிமாறிவிட்டு கும்பகோணத்திலிருந்து கிளம்பும் பாசஞ்சர் வண்டியில் மாயூரம் திரும்பி விடுவார்கள் என்றும் சொன்னான். மயூரா லாட்ஜுக்கு எவ்வளவு பில் என்று கேட்டேன். அவன் சொன்னான், சேகர் கோபப்படுகிறார். உங்களுக்கு பணத்துக்காகவா இதைச் செய்தேன், சாமிநாதன் பல வருஷப் பழக்கம் அதனால் செய்தேன். போய் பணத்தை அவனிடமே கொடுத்து விடு என்று சொல்லிவிட்டார். அவரும் இன்றே கல்யாணத்துக்கு வந்து சேர்வதாகச் சொன்னார் என்றான். இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியத்தில் மூழ்கிப் போனேன். சென்னையில் இப்படி யாராவது சொல்வார்களா? இது மாயவரம், இந்த மண்ணின் பாரம்பரிய விருந்தோம்பல் இன்னும் மறைந்துவிடவில்லை. வாழ்க சேகர் என்று வாழ்த்தினேன்.

நாங்கள் ஐந்து மணிக்கு வரும் ரயிலுக்காக நான்கு மணிக்கே ஸ்டேஷனுக்கு வந்து உட்கார்ந்திருந்தோம். அங்குள்ள ஐ.ஆர்.ஆர்.இல் நல்ல காப்பி கிடைக்கும். கும்பகோணம் காப்பி என்பது இதுதானோ? நல்ல மணமுள்ள காப்பி, நாங்கள் சாப்பிட்டோம். ரயில் வருவதற்கான பரபரப்பு ஏற்பட்டது. நாங்கள் எழுந்து கொண்டோம். அவர்கள் எந்த பெட்டியில் வருகிறார்கள் என்றேன். எஸ் 2 என்றான் சாமிநாதன். அந்த வண்டி நிற்குமிடம் பார்த்துப் போய் நின்று கொண்டோம். வண்டி வந்து நின்றது. பிளாட்பாரம் அல்லோலப் பட்டது. எஸ் 2 விலிருந்து கூட்டம் இறங்கியது. ஆண், பெண் குழந்தைகள் என்று இருபத்தெட்டு பேர். அவர்கள் ஒவ்வொருவரும் இரண்டு மூன்று லக்கேஜ் எடுத்துக் கொண்டு இறங்கினர். கடைசியாக ரெட்டை மண்டை இறங்கினார். அவரை இரண்டு பேர் கைத்தாங்கலாக இறக்கி விட்டனர். அவர்கள் அவருடைய மகன்களாம். பிற்பாடு அறிமுகம் ஆனது. எல்லோரையும் மகிழ்ச்சியோடு வாங்கோ, வாங்கோ என்று அழைத்தோம். அப்படி யாரையாவது அழைக்க விட்டுவிட்டால் அதுவே பிறகு பெரிய குற்றமாக ஆகிவிடும். சம்பந்தி வீட்டாரை வாங்கோன்னு கூப்பிட வேண்டாமோ, வந்து கொடிமரம் மாதிரி நின்னா போதுமா என்பார்கள். நாங்களும் நாணல் புல் போல வளைந்து குனிந்து வணங்கி வரவேற்றோம். சம்பந்தி விரோதம் கூடாதல்லவா?

இவர்களையெல்லாம் மண்டபத்துக்கு அழைத்துச் செல்ல ஒரு வேன், ஒரு அம்பாசிடர் கார் ஏற்பாடு செய்திருந்தோம். இரண்டு முறை வேன் ஆட்களை ஏற்றிக் கொண்டு மண்டபத்தில் விட்டுவிட்டு வந்தது. காரில் மாப்பிள்ளை பையன், அவன் அப்பா, அம்மா, ரெட்டை மண்டை இவர்கள் உட்கார்ந்தார்கள். எல்லோரும் போன பிறகு சாமிநாதனும் நானும் நாங்கள் வந்திருந்த ஆட்டோவில் பின்னாலேயே பயணித்து மண்டபத்தை அடைந்தோம்.

அங்கு சம்பந்திகள் அவர்களுக்கு ஒதுக்கியிருந்த அறைகளில் கொண்டு போய் சாமான்களை வைத்துவிட்டு மைய ஹாலுக்கு வந்தனர். சம்பந்தி ‘தில்’ சொன்னார், இடம் போறாது. சாமான்கள் வைக்கவே இடமில்லை. இதுல எப்படி படுத்துக்கறது. இங்கே பக்கத்தில ஏதாவது நல்ல லாட்ஜ் இருந்தா நாலைந்து ரூம் போட்டுடுங்க. எங்க ஆபீசிலிருந்து பெரிய ஆபீசர்கள் எல்லாம் நாளைக்குக் காலைல வரா, அவாளுக்கு இங்கே தங்க முடியாது என்றார். சாமிநாதன் முழித்தான். நான் ஓடிப்போய் ஏ.ஆர்.ஆர். லாட்ஜில் நான்கு ஏ.சி. ரூம் புக் பண்ணிவிட்டு வந்தேன். இன்னிக்கு வேண்டுமானால் உங்களில் சிலர் அங்கு போய் தங்கிக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களுக்கு புக் பண்ணியிருக்கேன் என்றேன். சம்பந்தி ‘தில்’ சரி பார்க்கிறேன், நாலு ரூம்தானா, ஊம் பார்ப்போம், எங்களுக்குன்னு ஒரு காரை ஏற்பாடு செஞ்சுடுங்கோ, நாங்க போக வர தேவைப்படும் என்றவாறு உட்கார்ந்தார்.

அப்போது ரெட்டை மண்டை அங்கு வந்தார். சாமிநாதன் சார்! இதோ பாருங்கோ எனக்கு டயபடீஸ், காப்பில சக்கரை கூடாது என்றார். அதுக்கென்ன சமையல்காரர் கிட்டே சொல்லிடறேன். உங்க காப்பில சர்க்கரை வேண்டாம்னு என்றான் சாமிநாதன். ஊகூம். இங்க வந்திருக்கிற நாலைந்து பேருக்கும் டயபடீஸ், அதனால கேட்டுக் கொடுங்கோ என்றார். ஆகா, அப்படியே ஆகட்டும் என்று சமாளித்தோம்.

ஊம் இன்னொரு விஷயம். எனக்கு காலம்பற ஒம்பது மணிக்குச் சாப்பிடணும். இல்லைன்னா பி.பி. ஏறிடும். அதனால நீங்க பாட்டுக்கு பத்து மணிவரை டிபன் போடறேன்னுட்டு இட்லி போட்டுண்டிருந்தா எனக்குச் சரிவராது. எனக்கு மட்டுமாவது கொஞ்சம் சாதம், மிளகு ஜீரகம் தட்டிப் போட்டு கொஞ்சம் ரசம், மனத்தக்காளி வத்தல் குழம்பு இதைத் தயார் செஞ்சுடச் சொல்லுங்கோ. நான் போய் ஸ்நானம் பண்ணிட்டு வரேன். சரி! இங்கேருந்து காவேரி எத்தனை தூரம் என்றார்.

எனக்குக் கடுப்பு வந்தது. இதோ ஐந்து தப்படி வைத்தா காவேரிதான் சொல்லத் துடித்தேன். ஆனால் பாவம்! சாமிநாதன், அவனால் சொல்ல முடியுமா? ரெண்டு கிலோ மீட்டர் இருக்கும், மடத்துத் தெரு வழியா போனா, காவேரி பழைய பாலத்துக்கிட்டே படித்துறை இல்லைன்னா மேலக்காவேரிக்குப் போகணும் அப்படி என்றான். சரி சரி அது எனக்குச் சரிப்பட்டு வராது நான் இங்கேயே பாத் ரூமிலே ஸ்நானம் பண்றேன் என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இவ்வளவையும் பார்த்து புன்னைகை மன்னனாக நின்று கொண்டிருந்த ‘தில்’ எதுவும் பேசவில்லை. அவருடைய செளகரியங்களை ‘திவானா’ கச்சிதமாகக் கவனித்துக் கொண்டாள். ஒரு டம்ளரில் காப்பி கொண்டு வந்து டபராவில் ஆற்றி ஆற்றி தில்லிடம் கொடுத்தாள். மாத்திரைகளைக் கொண்டு வந்து கொடுத்து, சாப்பிடுங்கோ, மறந்து போயிட்டா அப்புறம் கஷ்டப்படறது யாரு என்று ஆதங்கப்பட்டாள். நல்ல பதி, நல்ல பத்தினி என்று நினைத்துக் கொண்டேன்.

ரெட்டை மண்டை ஸ்நானம் முடித்து வந்தார். நெற்றியில் சுண்ணாம்பு அடிப்பது போல பட்டையாக விபூதி. சாப்பாட்டுப் பகுதியில் பலர் அப்போதுதான் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ரெட்டை மண்டை ஓர் ஓரத்தில் போய் உட்கார்ந்து கொண்டார். சர்வர் ஒருவன் ஒரு வாழை ஏட்டைக் கொண்டு வந்து அவர் முன் வைத்தான். அவருக்கு வந்ததே கோபம். என்னடா மரியாதை இது. சம்பந்தின்னா ஒரு நுனி வாழை இலை கிடையாதா, இப்படித்தான் மரியாதை செய்யறதா என்று கத்தினார்.

சாமிநாதன் அலறி அடித்துக் கொண்டு ஓடிப்போய் அவருக்கு ஒரு நுனிவாழை இலையைக் கொண்டு வந்து போட்டான். சாட்டையிடம் போய் சுவாமி, இவருக்கு ஆனவரை சாதம் ரசம் போட்டு எழுப்பிவிடுங்கள், இல்லைன்னா நம்மை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார் என்று கெஞ்சினான். அதற்கு சாட்டை வெங்கட்டராமன், நீ போ சாமிநாதா நான் பார்த்துக்கறேன். என் சர்வீசிலே இவரைப் போல ஆயிரம் பேரைப் பார்த்துட்டேன் என்றார் குறும்புச் சிரிப்போடு. எனக்கு என்னவோ பயமாக இருந்தது. சாட்டை ஏதாவது குறும்பு பண்ணி ரெட்டை மண்டையை ஒரு வழி பண்ணிடுவார்னு எனக்குத் தோன்றியது.

நீ வா சாமிநாதா, நாம போய் வந்திருப்பவங்களை கவனிக்கலாம் என்று அழைத்துக் கொண்டு போனேன். அங்கு ஏ.சி.டி.ஓ. கிருஷ்ணன், ஐ.ஓ.பி. மணி, எஃப்.சி.ஐ. மணி இவர்களெல்லாம் வந்திருந்தனர். அவர்களை நாங்கள் குசலம் விசாரித்துக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் டைனிங் ஹால் பக்கத்திலிருந்து ஒரு புயல் உருவாகி அது மேலும் வலுப்பெற்று முன் மண்டபம் வரை வந்து சேர்ந்தது. என்னப்பா அங்கே ஒரு புயல் என்றேன் நான். சாமிநாதன் ஆடிப்போய்விட்டான். அந்த ரெட்டை மண்டைதாம்பா இப்போ என்ன ஆச்சோ தெரியலையே என்று அங்கு ஓடினான். நான் போகவில்லை. அங்கேயே உட்கார்ந்து விட்டேன்.

சிறிது நேரத்தில் முகமெல்லாம் வியர்வையோடு சாமிநாதன் வந்தான். என்ன நடந்தது என்றேன். ரெட்டை மண்டைக்கு மோர் போடும்போது மோர் பாத்திரத்தில் சர்க்கரை இருந்ததாம். மோர் சாதம் இனிக்கிறதாம். தனக்கு டயபடீஸ்ன்னு சொல்லியும் மோர்ல சர்க்கரை போட்டு கொடுத்துவிட்டான். எனக்கு மட்டும் கொடுத்து விட்டால் பரவாயில்லை. அதோ, அவாளும் டயபடீஸ். இப்படிப் பண்றதுதான் மரியாதையா. யோவ், சாமிநாத ஐயர் இங்கே வாரும், என்னய்யா இது, இப்படித்தான் நடந்துக்கறதா என்று கத்தினாராம்.

பயந்துகொண்டு ஓடிவந்து விட்டான் சாமிநாதன். நீ அங்கே போகாதே. அவரே இங்கு வரட்டும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றேன். அவன் பயந்தது போலவே மோர் சாதத்தைச் சாப்பிடாமல் கை கழுவிக்கொண்டு ரெட்டை மண்டை அங்கு வந்து சேர்ந்தார். எங்களையெல்லாம் பார்த்ததும் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டது போல இருக்கிறது. ஆஹா ஓஹோ என்று முழக்கமிட்டார். நான் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே, சாமிநாதனை அங்கிருந்து போய்விடும்படி ஜாடை காட்டினேன். அவனும் புரிந்து கொண்டு நகர்ந்து விட்டான்.

“என்ன சுவாமி! எல்லாம் நல்லபடியாத்தனே நடந்துண்டுருக்கு. எதுக்கு இப்போ இப்படிக் கூச்சல்” என்றேன்.

“என்னய்யா நீ பிரண்டு. மோர்ல சர்க்கரையைப் போட்டு பரிமாறறான்” என்றார்.

“என்ன சுவாமி அதிசயமாயிருக்கு, உப்புதானே போடுவா, அதுதான் உமக்கு ஒத்துக்காதே, ரத்த அழுத்தம் இருக்கறதால, பின்னே எப்படி சர்க்கரை போடுவா” என்றேன்.

“என்னய்யா விளையாடுறீரா? நான் போட்டான்னு சொல்றேன், நீர் என்னவோ எகத்தாளமா பேசறீரே!” என்றார்.

ஒரு சினிமாவில் ரஜனி காந்திடம் குள்ள மனிதன் ஒருவர் வந்து, நான் இப்போ நெனச்சாலும் கல்யாணத்தை நிறுத்திடுவேன் என்று அலம்பல் பண்ண, ரஜினி தன் சட்டைக்குள் கைவிட்டு பாம்பையும், பேண்ட் பாக்கெட்டிலிருந்து தேளையும் எடுத்து அவர் முன் போட்டு, முளைச்சு இன்னும் மூணு இலை விடலை, நீ என்னை பயமுறுத்திறியா, ஏதாவது பேசினா இதையெல்லாம் எடுத்து உன் வேஷ்டிக்குள் விட்டுடுவேன்” என்பார். எனக்கு அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது. ஆகா, அதுதான் சரியான வழி என்று ஒரு முடிவுக்கு வந்தேன்.

“ஓய் ஸ்வாமி! இதுவரை நான் சாமிநாதனுக்காக பொறுத்துண்டிருந்தேன். வந்ததும் வராததுமா நீர் இப்படி கலாட்டா செஞ்சா நாங்க சும்மா பார்த்துண்டிருக்க மாட்டோம். இது சென்னை இல்லை. இது கும்பகோணம். இது எங்க இடம். நீர் முன்னே பின்னே கல்யாணம் செஞ்சு பார்த்திருந்தா இப்படி ஒண்ணுமில்லாததுக்கெல்லாம் கூத்தடிக்க மாட்டீர். என்னய்யா குடிமுழுகிப் போச்சு இப்போ. சர்க்கரை போட்டிருந்தா சாதத்தை ஒதுக்கிட்டு, புதுசா போடச்சொல்லி, சர்க்கரை இல்லாத மோரைப் போட்டுச் சாப்பிட வேண்டியதுதானே. சம்பந்தி பந்தா பண்ணி கலாட்டா பண்ணலாம்னு நினைச்சீரா, இங்கு கொத்தோடு அறுத்துடுவாங்க, இவங்கல்லாம் இந்த ஊர்க்காரங்கதான். அதனால இடம் பொருள் ஏவல் பார்த்து நடந்துக்கும், அதுதான் உமக்கு நல்லது” என்று கடுமையாக அவரை எச்சரித்தேன். நண்பர்கள் அனைவரும் அதை ஆமோதித்தது போல தலையை ஆட்டினார்கள். இரட்டை மண்டைக்கு இப்போதுதான் உரைத்திருக்கும் போலிருக்கிறது. எழுந்து போய்விட்டது. அதன் பிறகு குரலைக் காணோம்.

சுமார் பதினோரு மணியிருக்கும். என்னப்பா சாமிநாதா ரெட்டை மண்டை சங்காத்தியத்தையே காணுமே எங்கே? என்றேன். இங்கே வா என்று என்னை அழைத்துக் கொண்டு போய் காட்டினான். மண்டபத்தின் ஒரு ஓரத்தில் ஒரு கட்டிலைப் போட்டுக் கொண்டு தலையணை வைத்து அருகில் ஒரு மாமி விசிறி கொண்டு விசிற அனந்த சயனம் செய்து கொண்டிருந்தார் ரெட்டை மண்டை. சுற்றிலும் நாலைந்து பேர் அவர் உடம்புக்கு என்ன என்று குசலம் விசாரித்துக் கொண்டிருந்தனர். கிடக்கட்டும் விடு, தொல்லை விட்டது என்று சாமிநாதனை அழைத்துக் கொண்டு வந்து சேர்ந்தேன்.

சிறிது நேரம் கழித்து ரெட்டை மண்டையின் புதல்வன் ஒருவர் என்னிடம் வந்தார். எங்க அப்பா கல்யாணத்துக்கு வந்திருக்கார் தெரியுமோல்யோ? என்றார். ஆமாம், நான் தானே ரயிலடியிலிருந்து அழைச்சிண்டு வந்தேன். அதற்கு என்ன இப்போ என்றேன்.

இப்போ அவருக்கு உடம்பு சரியில்லை. எங்கே இருக்கார்னாவது ஒங்களுக்குத் தெரியுமா? என்றார்.

ஓ தெரியுமே! அதோ, கட்டிலில் அம்புப்படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மாச்சாரியார் போல படுத்திருக்கிறாரே, அவர்தானே, தெரியும் தெரியும், அவர் உடம்புக்கு ஒண்ணும் இல்லை, மோர்ல சர்க்கரைப் போட்டுச் சாப்பிட்டுடார், அவருக்கு டயபடீஸ் இல்லையா, அதனால உடம்பு சரியில்லாம போயிருக்கும், சரியா போயிடும், கவலைப் படாதேயுங்கோ, என்றேன்.

அவர் என்னை ஒரு முறை முறைத்துவிட்டுப் போய்விட்டார்.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *