இப்படியும் சில மனிதர்கள்! – 5

0

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

சாமிநாதன் மகள் திருமணம் முடிந்து ஓரிரு மாதங்கள் ஆகியிருக்கும். சென்னை அண்ணா சாலையிலிருந்த எனது அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். காலை மணி 11 இருக்கும். அப்போது எனக்கு ஒரு டெலிபோன் கால் வந்தது. எடுத்துப் பேசினேன். யாரோ ஒரு பெரியவர் தன்னை மாம்பலத்தில் ‘தில்’ வீட்டுக்கு அருகில் வசிப்பவர் என்றும், இங்கு வந்து தில்லும் திவானாவும் மருமகளை, அதாவது சாமிநாதனின் மகளைப் படுத்தும் பாட்டை வந்து பார்த்துவிட்டுப் போகும்படியும் சொன்னார். சார், நீங்க சாமிநாதனையே வரச் சொல்லியிருக்கலாமே என்றேன். அவர் சொன்னார், இதையெல்லாம் பார்த்தா அவர் தாங்க மாட்டார். மூன்றாவது மனிதர்களாகிய நாங்களே மனம் நொந்து உங்களுக்குப் போன் செய்கிறோம் என்றால், மகளைப் பெற்றவர் மனம் என்ன பாடுபடும் என்றார். ஆம், அதுவும் உண்மைதான் என்று எண்ணிக்கொண்டு, என் மேலதிகாரியிடம் போய் ஒரு அவசர காரியமாக வெளியில் போக வேண்டியிருக்கிறது இன்று நான் லீவ் எழுதிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். அங்கு நான் மட்டும் போவது நல்லதா என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே என் நண்பன் ராஜாவின் நினைவு வந்தது. அவன் என்னைவிட தடாலடியாக நடந்து கொள்வான், பயம் என்பதே தெரியாதவன், அவனைக் கூப்பிட்டுக் கொண்டு உடனே மாம்பலம் விரைந்தோம்.

அங்கு தில் வீட்டு வாசலில் ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு நாங்கள் இருவரும் உள்ளே நுழைந்தோம். திவானாதான் எதிர் கொண்டு வந்தாள். வழக்கம் போல சாய்ந்து சாய்ந்து தேர் அசைவதைப் போல வந்து நின்றுகொண்டு, வாங்கோ, சம்பந்தி மாமாவோட ஃபிரண்டா, என்ன சங்கதி? என்றாள். ஒண்ணுமில்லை சாமிநாதன் பெண்ணைப் பார்த்துட்டுப் போக வந்தோம், அவ எங்கே என்றேன்.

“அவ பைஷ்டை, தூரமணாள் உள்ள இருக்கா, அவளைப் பார்க்க முடியாதே” என்றாள் திவானா.

“ஏன்? நாங்க எட்ட இருந்தபடியே பார்த்துப் பேசிட்டுப் போயிடறோம். இது என் ஃபிரண்ட் ராஜா. இவன் தங்கைக்கு சீமந்தம். அவ உங்க மாட்டுப்பெண்ணுக்கு நெருங்கின தோழி. அவ நேரிலே போய் அழைச்சுட்டு வரச் சொல்லியிருக்கா, அதனால அவகிட்டே பேசிட்டுப் போயிடறோம். கூப்பிடுங்கோ” என்றேன்.

“அதான் சொன்னேனே. அவ கொல்லைல இருக்கா, அவளை இன்னும் ரெண்டு நாளைக்குப் பார்க்க முடியாது” என்றாள்.

“சரி, மாமா எங்கே” என்றேன்.

“அவர் கே.கே.நகர் வரையில் போயிருக்கார், எப்போ வருவார்னு தெரியாது” என்றாள்.

சரி, மயிலே மயிலே என்றால் இறகு போடாது என்று கோபத்தோடு நான் வேகமாகக் கொல்லைப் புறம் போகத் தொடங்கினேன். திவானா குறுக்கே வந்து கையை நீட்டிக் கொண்டு நின்றாள். “நான் போகக்கூடாதுன்னு சொல்றேன், நீங்க பாட்டுக்குப் போறேளே, மாமாவும் ஆத்திலே இல்லை, நீங்க போயிட்டு அப்புறமா வாங்கோ, இப்போ நீங்க அவளைப் பார்க்க முடியாது” என்றாள்.

நான் வரும் வேகத்தைப் பார்த்துவிட்டு அந்த அம்மாள் கையை விலக்கிக் கொண்டாள். இல்லாவிட்டால் என் கை அவள் மீது பட்டு அவள் மடி கெட்டுவிடும் என்ற பயம் அவளுக்கு. நான் கொல்லைப் புறம் போனேன், கொல்லை வாயில்படி தாண்டினவுடன் ஐந்துக்கு நான்கு ஒரு குளியல் அறை, அதையடுத்து ஐந்துக்கு மூன்றில் கழிவறை இருந்தது. குளியல் அறைக் கதவு ஒருக்களித்து சாத்தப்பட்டிருந்தது. நான் வந்த காலடி ஓசை கேட்டு சாமிநாதனின் பெண் கதவைத் திறந்து என்னைப் பார்த்தாள். அவள் முகம் வெளிறி இருந்தது. மாமா! என்றாள் என்னைப் பார்த்ததும் தீனமான குரலில். எனக்கு நெஞ்சை அடைத்தது, கண்கள் கண்ணீரால் நிரம்பி பார்வை மங்கியது.

“என்னடா கண்ணு, ஏன் இங்கே வந்து உட்கார்ந்திருக்கே, வீட்டுக்குள் உனக்கு இடம் கிடையாதா?” என்றேன்.

அதற்குள் திவானா அங்கு வந்து சேர்ந்தாள். இது என்ன அக்கிரமமா இருக்கு. நீங்கபாட்டுக்குச் சொல்லச் சொல்ல கேட்காம இங்கே வந்து அவகிட்டே பேசிண்டு நிக்கறேள். நான் மாமாவுக்குப் போன் போட்டு வரச்சொல்றேன். இதை சும்மா விடமாட்டேன் என்று மிரட்டினாள்.

சரி மாமி, அவரையும் கூப்பிடுங்கோ. நானும் போலீசைக் கூப்பிடறேன். மருமகளை இப்படிக் கொடுமை செஞ்சா மூணு வருஷம் உள்ளே போகணும், தெரியுமா உங்களுக்கு என்றேன். திவானாவின் சுரத்து குறைந்தது. அதுக்கு இல்லை, தூரமணா இருக்கற இடத்துல வந்து ஆம்பிளைங்க பேசறது கூடாது. சாஸ்திரம் சம்பிரதாயம்னு ஒண்ணு இருக்கோன்னோ என்றாள் பணிவாக.

ஒரு சாஸ்திரத்தையும் நான் மீறல்ல. ஒழுங்கா முறையா எங்க குழந்தையை சுகம் விசாரிச்சுட்டுப் போகத்தான் போறோம். என்று சொல்லிக்கொண்டே, நீ வெளியே வாம்மா நான் இருக்கேன் என்றேன்.

சாயம் போன ஒரு பழம் புடவை, தலை விரிந்த கோலம், பாழ் நெற்றி இந்த தோற்றத்தில் அவள் வெளியே வந்தாள். சின்னஞ்சிறு குழந்தையாக இருந்தபோது அவளை தூக்கிக் கொண்டு கடைத்தெரு, கோயில் என்றெல்லாம் சுற்றியிருக்கிறேன். எப்போதும் சிரிப்பும், கலகலப்புமாக இருக்கும் அந்தக் குழந்தையா இது? இன்று பழைய பஞ்சாங்கத்திடம் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறதே என்ற நினைவு என் வயிற்றைப் பிசைந்தது.

“என்னடா, சாப்பிட்டியா, ஏன் இப்படி ஒரேயடியா கண் குழிவிழுந்து கிடக்கறே?” என்றேன். திவானா உள்ளே போய்விட்டாள். இந்தப் பெண்ணைப் பார்த்தால் தீட்டாம்.

பொங்கி வந்த அழுகையை அடக்கிக் கொள்ள முயன்றும் அவளால் முடியவில்லை. ஓவென்று கதறி அழுதாள். முன்பின் பழக்கமில்லாத முறையில் இவளை ஒரு கொல்லைப்புற குளியலறையில் அடைத்து வைத்திருப்பதை மூன்றாம் மனிதனான என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாதபோது அந்தக் குழந்தை என்ன செய்யும். அங்கு தான் படும் பாட்டையெல்லாம் தைரியமாக என்னிடம் சொன்னாள்.

காலையில் ஒரு டம்ளர் காப்பியை வெளியில் வைத்து எடுத்துக் கொள் என்று சொல்லிவிட்டு திவானா உள்ளே போய் கதவை தாளிட்டுவிடுவாளாம். பகல் 12 மணிக்கு ஒரு தட்டில் சோறும் அதில் மோர் ஊற்றி வெளியில் வைத்துவிட்டு, திவானா உள்ளே போய் கதவை அடைத்துக் கொண்ட பிறகு இவள் வெளியே வந்து தட்டை எடுத்துக் கொண்டு போய் சாப்பிட வேண்டுமாம். யார் கண்ணிலும் படும்படி வெளியே வரக்கூடாதாம். யாரிடமும் பேசக்கூடாதாம். இப்படி நடப்பது யாருக்கும் தெரியக்கூடாதாம்.

குளியல் அறைக்கு வெளியே வந்தால் அடுத்த கட்டடத்திலுள்ள ஒரு ஃபிளாட்டின் வராந்தா பகுதி. அங்கு இருக்கும் ஒரு பெரியவர் திவானா வீட்டில் இல்லாத சமயம், என்ன இப்படியெல்லாம் நடக்கிறதே, நீ உன் அப்பாவுக்குச் சொல்லி அனுப்பக்கூடாதா, இல்லையென்றால் அவர் டெலிபோன் நம்பரைக் கொடு நான் போன் செய்து சொல்கிறேன் என்றாராம். வேண்டாம் அப்பா தாங்கமாட்டார் என்று என் நம்பரைக் கொடுத்தாளாம்.

எனக்கு கோபம் தலைக்கேறியிருந்தது. ராஜாவைப் பார்த்தேன். அவன் கோபத்தில் ஆடிப்போயிருந்தான். இந்த திவானா பேயை இப்போதே அடித்துப் போட்டுவிடலாமா என்றான். வேண்டாம் பொறு என்றேன். பெண்ணை நீ வாயில்புறம் வா என்றேன், அவள் வேண்டாம் மாமியார் திட்டுவாள் என்று பயந்தாள். நீ வா, நான் இருக்கிறேன் என்று அவளை வீட்டையொட்டி இருக்கும் பாதை வழியாக வாயிற்புறம் வரச்சொன்னேன். வாசல் வராந்தாவில் அவளை உட்காரச் சொன்னேன். பயந்துகொண்டே அவள் வந்து உட்கார்ந்தாள். திவானா டெலிபோனில் யாரோடோ பேசினாள். பிறகு கோபத்தில் உள்ளே கூண்டுப்புலி போல சுற்றிச்சுற்றி வந்தாள்.

திவானாவை மாமி இங்கே வாங்கோ என்று அழைத்தேன். வேண்டா வெறுப்பாக வந்து என்ன என்றாள். குழந்தையை நான் சாமிநாதன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகிறேன். அவள் குளித்த பிறகு இரண்டு நாட்கள் கழித்துக் கொண்டு விடச் சொல்லுகிறேன். இதுபோல சாக்கடை வாயிலில் பழைய சோறு சாப்பிட்டு, கொசுக்கடியில் அவதிப்பட அவளுக்குப் பழக்கமில்லை என்றேன்.

ஏன் நாங்கள் அப்படித்தான் இருந்தோம். என் மாமியார் அந்த மூணு நாளும் அவா கண்ணுல படாம பாத் ரூமிலதான் இருக்கச் சொல்லுவா, நாங்கல்லாம் இருக்கலியா, இவ மட்டும் என்ன ஒசத்தி என்றாள்.

உங்க காலம் வேற. நீங்க படிக்கல, பள்ளிக்கூடம்கூட போகல. இவ அப்படியா? இவ ஒரு போஸ்ட் கிராஜுவேட். உங்களுக்கு சமையல் சாப்பாடு இதைத்தவிர ஒண்ணும் தெரியாது. குழந்தை வீணை வாசிப்பா, வாய்ப்பாட்டு கச்சேரி செய்யற அளவுக்கு திறமை இருக்கு, கம்ப்யூட்டர் திறமை இருக்கு, காலேஜில இவ வாங்கியிருக்கிற பரிசையெல்லாம் இங்கே கொண்டு வந்தா உங்க வீட்டிலே இடமே இருக்காது, அவ்வளவு இருக்கு. அவளைப் போயி, வீணையைக் கொண்டு போய் குப்பையிலே எறியறமாதிரி செஞ்சிருக்கேளே, இது அநியாயமா படல. உங்க பெண்ணுன்னா இப்படிப் பண்ணுவேளா என்றேன்.

என் பெண்ணையும் மூணு நாள் ஒதுங்கிதான் இருக்கச் சொல்லுவோம் என்றாள்.

எங்கே பாத் ரூமிலேயா? என்றேன். திவானா பதில் சொல்லவில்லை. அப்போது அடுத்த வீட்டு ஃபிளாட்டில் இருக்கும் பெரியவர் அங்கு வந்தார். சார், இவா குடும்பப்பிரச்சினையிலே நான் தலையிடறதுக்கு மன்னிச்சுடுங்கோ. இங்க நடக்கறத நான் மாடியில இருக்கற என் வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கேன். இதுபோல அக்கிரமம் எங்கேயும் நடக்காது சார். குழந்தை சாப்பிட்டு ரெண்டு நாள் ஆறது. அது வாயைத் திறந்து ஒரு வார்த்தை சொல்லல. எனக்குச் சாப்பிட உட்கார்ந்த நெஞ்சைப் பிழியறது. இப்படி ஒரு குழந்தை இங்கே பட்டினி போட்டுட்டு, நாம் சாப்பிடறதான்னு என் நெஞ்சுல தண்ணிகூட இறங்கல. இப்பவே இவளை அழைச்சுண்டு போயிடுங்கோ, இல்லைன்னா நானே போலீசுக்குத் தகவல் கொடுப்பேன். இவா பொண்ணை வாசல் ரூமில் சாதாரணமா இருக்கச் சொல்லுவா. இதைப் போல பாத் ரூமிலே இல்லை என்றார். அவர் துணிச்சல் எனக்கு பிடித்திருந்தது.

திவானா ஒண்ணும் சொல்ல முடியாமல் விழித்தாள். நான் திடமாகச் சொன்னேன். மாமி, இனி ஒரு நிமிஷம்கூட இவளை இங்கே விட்டு வைக்க மாட்டேன். இப்பவே சாமிநாதனை இங்கே வரவழைத்து, அவன் பெண்ணை அவன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொல்றேன். உங்க பிள்ளைக்கு ஒரு விஷயமும் நீங்க சொல்றதில்ல. அவரும் நீங்க நாட்டுப்பெண்ணை நன்னா நடத்தறதா நினைச்சுண்டு வேலைக்குப் போறார். உண்மை ஒரு நாள் வெளிவந்தே தீரும். இன்னமும் பத்தாம் பசலித்தனமா பெண்களைக் கொடுமைப் படுத்தறதை நிறுத்தலைன்னா நீங்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கும். இவ வீட்டுக்குப் போயிட்டுத் திரும்ப வந்ததும், இவகிட்டே வம்பு செஞ்சீங்கன்னு தெரிஞ்சா பிரச்சினை போலீஸ் ஸ்டேஷன்லதான் தீர்வுக்கு வரும். உங்க புருஷன் வந்தா சொல்லிடுங்க.

சாமிநாதனுக்கு போன் செய்தேன். அவன் அவசரமாக பதறிக்கொண்டு ஓடிவந்தான். விஷயத்தை சாங்கோபாங்கமாகச் சொல்லி புரியவைத்து அவனுடன் அவன் பெண்ணை அனுப்பி வைத்தேன். நானும் ராஜாவும் எங்கள் ஸ்கூட்டரை எடுக்கப் போனபோது, அவர்கள் வீட்டு வாயிற்கதவு சாத்தி மூடப்பட்டிருந்தது. திவானாவின் முகம் மட்டும் ஒரு ஜன்னலுக்குப் பின்புறமாக நிழலாடியது.

(​தொடரும்)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *