சக்தி சக்திதாசன்

sakthi

 

 

 

 

 

 

 

 

அன்பினியவர்களே !

வாரம் ஒன்று ஓடி விட்டது. வாழ்வின் நீளம் கூடி விட்டது. இதோ உங்களுடன் அடுத்த மடலில் கலப்பது மகிழ்வைத் தருகிறது.

காலத்தின் நீரோட்டத்தோடு மக்களின் வாழ்வின் தேவைகளும் மாறுதலடைந்து கொண்டு வருகிறது.

உலகப் பொருளாதார மாற்றம், சர்வதேச வியாபாரத் தொடர்புகள். நாடுகளுக்கிடையேயான பயண இலகுவாக்கல் என்பன மக்களின் தேவைகளையும் திரிபடையப் பண்ணி இருக்கிறதே இன்றைய யதார்த்தமாக இருக்கிறது.

மக்களின் தேவைகளை மையப்படுத்தியே நாட்டின் அரசியல் களம் வகுக்கப்படுகிறது. மக்களின் அத்தியாவசியத் தேவைகளின் பூர்த்திகளை வெவ்வேறு அரசியல் கட்சிகள் தாம் எவ்வகையில் கையாளப் போகின்றன என்பதை எவ்வகையில் அம்மக்களுக்குத் தெளிவு படுத்துகிறார்கள் என்பதிலும், அவ்வரசியல் விஞ்ஞாபனத்தை மக்கள் எவ்வளவு தூரம் நம்புகிறார்கள் என்பதிலும்இவ்வரசியல் கட்ச்சிகள் தம் பிரச்சாரத்தை மையப்படுத்துகிறார்கள்.

இங்கிலாந்தில் ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் மாத நடுப்பகுதியில் இங்கிலாந்துப் பிரதான அரசியல் கட்சிகளின் வருடாந்த மகாநாடு நடைபெறும். அம்மகாநாட்டில் அக்கட்ச்சிகள் தாம் தமது கட்ச்சிகளின் கொள்கைப் பிரகடனங்கள் செய்வது வழக்கம்.

அவ்வாறே ஈவருடமும் லிபரல் டெமகிரட்ஸ் கட்சி தனது அரசியல் மகாநாட்டை நடத்தி இதனை ஆரம்பித்து வைத்தது.

தற்போதைய இங்கிலாந்து அரசு கன்சர்வெடிவ் கட்சியும், லிபரல் டெமகிரட்ஸ் கட்சியும் இணைந்து நடத்தும் ஒரு கூட்டரசாங்கம் என்பது யாவரும் அறிந்ததே.

இக்கூட்டரசாங்கம் பதவியேற்று ஏறத்தாழ மூன்று வருடங்கள் கடந்து விட்டன. பொருளாதார இக்கட்டான சூழலில் உலகப் பொருளாடஹரம் ஆட்டம் கண்டிருந்த நிலையில் பதவிக்கு வந்த இவ்வரசாங்கம் மக்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டிய பல சிக்கலான சட்டங்களை அமுல்படுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன.

தர்போது ஓரளவு சீரடைந்து வரும் இங்கிலாந்துப் பொருளாதார நிலை இன்னமும் மக்களின் வாழ்க்கைத் தர்த்தை உயர்த்தக்கூடிய ஒரு நிலைக்குத் திரும்பவில்லை.

இந்த நிலைமையானது எதிர்க்கட்சியான லேபர் கட்ச்சியை மிகவும் முன்னோக்கித் தள்ளக்கூடிய ஒரு கட்டமாகும். இருப்பினும் அரசியல் அவதானிகளின் எதிர்பார்ப்புகளின் நிமித்தம் லேபர் கட்ச்சி இந்நிலைமையத் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்லத் தவரி விட்டதாகவே அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

கருத்துக் கணிப்பில் ஆளும் அரசியல் கட்சிகளின் கூட்டில் முக்கியமான் கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை விட ஒரு சிறிய அளவிலேயே லேபர் கட்சி முன்னிலை வகிக்கிறது..

இதற்குக் காரணம் லேபர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட் என்பதே பலருடைய கணிப்பாகும். இவர் பலரின் எதிர்பார்ப்பிற்கு எதிராக தனது மூத்த சகோதரரை எதிர்த்து இத்தலைமைப் பதவியை இவர் பெற்றுக் கொண்டது பலருக்கு இவரின் மீது ஒரு தப்பபிப்பிராயத்தைத் தோற்றுவித்திருந்தது என்பது உண்மையே.

அது மட்டுமின்றி ஆளும் கூட்டரசாங்கத்தின் பல இக்கட்டான சூழல்களில் இவர் தனது திறமையினால் அதைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ளத் தவறி விட்டார் என்பதுவும் இவர் மீதுள்ள மற்றுமோர் குற்றச் சாட்டாகும்.

இத்தகைய ஒரு இக்கட்டான நிலையில் லேபர் கட்சி தனது முன்னில்லையை ஸ்திரப்படுத்திக் கொள்ளவும், அதன் தலைவரது பதவியை நியாயப்படுத்திக் கொள்ளவும் தனது வருடாந்த மகாநாட்டை மிகவும் எதிர்பார்ப்புகளோடு காத்திருந்தது.

ஆனால் இம்மகாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னாலேயே அம்மகாநாட்டின் முக்கியத்துவத்தைத் திசை திருப்பும் வகையிலே ஒரு நிகழ்வு நடந்தேறியது.

அப்படி என்ன நிகழ்வு என்று எண்ணுகிறீர்களா?

விஷயத்திற்கு வருகிறேன். கடந்த லேபர் அரசாங்கத்தில் இறுதியாக பதவி வகித்த பிரதமர் கோர்டன் பிறவுண் என்பதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். இவர் தனது அரசியல் ஆலொசகராகவும், ஊடகத் தொடர்பாளராகவும் நியமித்து பின்னர் 2009ம் ஆண்டு பதவி நீக்கம் செய்த டாமியன் மக்பிறைட் என்பவர் வெளியிட்ட நூலே லேபர் கட்ச்சிக்கு தலையிடியைக் கொடுத்தது.

ஆமாம் இந்நூலிலே இவர் தான் எவ்வாறு அன்றைய பிரதமர் கோர்டன் பிறவுண் அவர்களது பிரதமர் பதவிக்கு இடையூறு விளைவிப்பவர்களை வீழ்த்தினார் என்பதையும் அதற்குத் தான் எடுத்த அடிகளையும், பின்னிய சீழ்ச்சி வலைகளையும் பற்றி மிகவும் விளக்கமாக குறிப்பிடிருக்கிறார்.

இந்நூலில் இவர் தனது செய்கைகளுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த இவர் தான் இந்நூலை வெளியிட்ட காரணம் அரசியலில் நிகழும் முறையற்ற செயல்களை வெளிக்கொணர்வதன் மூலம் இந்நாட்டின் அரசியல்வாதிகளைச் சுத்தப்படுத்துவதே என்று கூறியிருக்கிறார்.

இந்நூலில் குறிப்பிட்டுள்ள தகவல்களின் படி இத்தகைய நடவடிக்கைகளில் தற்போதைய லேபர் கட்ச்சித் தலைவர், மற்றும் நிதித்துறை பேச்சாளர் ஆகியவர்களுக்கு இருந்த பங்கினைப் பற்றிய கேள்வி எழுந்துள்ளது. அப்படியே அவர்களுக்கு நேரடியாக பங்கு இருந்திருக்காவிட்டாலும் இதுபற்றி எந்த அளவிற்கு அவர்களுக்குத் தெரிந்திருந்தது, அப்படித் தெரிந்திருந்தால் அவர்கள் ஏன் அதைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்னும் கேள்விகளே தற்போதைய லேபர் கட்ச்சித் தலைமைத்துவத்துவதற்கு தலையிடியைக் கொடுத்துள்ளன.

சாதாரண வாக்காளப் பொதுமக்கள், எந்தக் கட்சியிலும் அங்கத்துவம் வகிக்காதவர்கள் ம்னங்களில் இது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பி விட்டிருக்கும் என்தில் எதுவித ஜயமுமில்லை.

அரசியல்வாதிக்க்க்கள் மக்களுக்குச் சேவை வெய்ய மக்களிடையே இருந்து புறப்பட்டவர்கள் என்னும் வகையில் அவர்கள் மீது மக்களுக்கு பெரும் மதிப்பு இருந்து வந்தது உண்மையே.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் அது மேலைத்தேசமாகட்டும் அன்றிக் கீழைத் தேசமாகட்டும் தாங்கள் மக்களுக்காக என்பதை மறந்து அரசியல்வாதிகள் மக்கள் தங்களுக்காக எனும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்று எண்ணவே தோன்றுகிறது.

தமது பதவிகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர்கள் எத்தகைய மட்டத்திற்கும் கீழிறங்கிச் செல்லத் தயங்க மாட்டார்கள் எனபது போலத் தென்படுகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்ச்சியும் தாம் மக்களின் நன்மை கருதி கொண்டுள்ள கொள்கைகளை வழிநடத்த தமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும் என்று எண்ணுவதில் தவறில்லை. அதுதான் யதார்த்தமும் கூட.

ஆனால் அவ்வதிகாரத்தை அடைய அன்றி அடைந்த அவ்வதிகாரத்தைத் தக்க்க்க வைத்துக் கொள்ள அவர்கள் எத்தகிய கீழான செய்கைகளையும் செய்யத் தயங்கமாட்டார்கள் என்று எண்ணும் போது நெஞ்சம் கொஞ்சம் பதறத்தான் செய்கிறது.

காலம் அரசியலைச் சுத்தம் செய்யுமா?… இளம் நெஞ்சங்கள், எமது அடுத்த தலைமுறைதான் இதற்கு விடையளிக்க வேண்டும்.

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…(76)

  1. இங்கிலாந்திடமிருந்து அரசியல் அரிச்சுவடியை இந்தியா கற்றுக் கொண்டதால்தான் நம் நாட்டிலும் அரசியல் கேலிக் கூத்துகள் அங்கு போலவே அரங்கேறுகின்றனவோ?

    இருந்தாலும் மேலை நாடுகளைப் போல அரசியல்வாதிகளின் அந்தரங்க முகத்திரையைக் கிழிக்கும் நூல்களை இந்திய எழுத்தாளனால் எழுத முடியுமா? எழுதிவிட்டு சுதந்திரமாக நடமாடிவிட முடியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *