ஆண் – பெண் நட்புறவு கட்டுரையின் கருத்துக்கான எதிர்வினை

6

ஜோதிர்லதா கிரிஜா

அன்பு மிக்க பவளா அவர்களுக்கு.

வணக்கம்.

எனது இம்மடலை வல்லமையில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளுகிறேன்.

ஆண் – பெண் நட்புறவு கட்டுரை 

 

வல்லமைக் குழுவினரில் செல்வன் எனும் அன்பர் எனது “ஆண்-பெண் நட்புறவு” எனும் கட்டுரைக்குச் செய்திருந்த விமரிசனத்தையும் அதன் கீழே உங்கள் முத்தாய்ப்பையும் கண்டு வருந்தினேன். திரு செல்வன் அவர்களின் எதிரொலி என்னை வியாபுறச் செய்யவில்லை. யாரேனும் இப்படி எழுதுவார்கள் என்பது நான் எதிர்பார்த்ததுதான். நான் பெண்ணியவாதி என்பதால், என்னைத் தாக்கும் வாய்ப்புக்குச் சிலர் காத்திருப்பார்கள் என்பது அனுபவ வாயிலாக நான் அறிந்ததே! தாக்கட்.டும். அது அவர் உரிமை. ஆனால், சம்பந்தாசம்பந்தமில்லாமல் கருத்துச் சொல்லலாமா? என் கட்டுரைக்கும் பெண்ணுரிமைக்கும் என்ன சம்பந்தமாம்?

கட்டுரையோடு தொடர்பற்ற முறையில் இப்படிச் சிலர் எழுதுவார்கள் என்பது எனது அனுபவமாதலால், நம் முன்னோர்கள் ஆண்-பெண் நட்பைக் காலங்காலமாக எதிர்த்து வந்துள்ளது முழுவதுமாய் ஏற்கத்தக்கதன்று என்றும், ஆணுக்கு எதிராய் நான் சொல்லப்போகும் கருத்தை ஏற்கெனவே இருக்கக்கூடிய என்னைப்பற்றிய கணிப்பின் அடிப்படையில் விமர்சித்தல் சரியாக இருக்காது என்பதையும் அதன் முதல் பாராவிலேயே குறிப்பிட்டிருந்தேன்.

அப்படியும் இப்படி ஒரு விமரிசனம்! “ஆண்வெறுப்புத்தான் பெண்ணியம் எனும் நிலை மாறவேண்டும்” எனும் அர்த்தமற்ற தலைப்பு! பெரும்பாலான ஆண்களின் குரூர ஆதிக்கத்தையும், ஒருதலைப்பட்சமான சட்டங்களையும் எதிர்த்து நான் எழுதிவருவது பல ஆண்களுக்குப் பிடிக்காமல் போவதில் வியப்படைய ஏதுமில்லை!

”ஆண் நண்பர்கள் அனைவரும் வன்னுகர்வு செய்பவர்கள் என்பது போல் எழுதி இருப்பது சரியல்ல” என்று இந்த அன்பர் எழுதுகிறார். அப்படி எங்கே சொன்னேன்?! அப்படி ஒரு கருத்தே எனக்குக் கிடையாது. அதனால்தான் நல்ல ஆண்களின் மனம் புண்படும் எனக்கருதி, ‘இதுதான் பொதுவாக ஆண்களின்இலட்சணம்” என்று சொன்னேன். ‘பொதுவாக’ என்றால், அனைவரும் என்று பொருளா? நற்சிந்தனையும் உயரிய எண்ணங்களும், பெண்களை நுகர்பொருளாய்ப் பார்க்காமல் சகமனிதர்களாய்ப் பார்க்கும் நியாய உணர்வும் கொண்ட சிலருக்கு இந்த உண்மை கசக்கும்தான் என்றும் கட்டுரையின் இறுதியில் கூறியும் உள்ளேன். ஆபத்தில் இருக்கும் பெண்ணைக் காப்பாற்றத் தங்கள் உயிரையே தியாகம் செய்யும் ஆண்களும் உண்டு என்றும் குறிப்பிட்டிருந்தேனே!

என்கட்டுரை பெண்ணுரிமை பற்றியதே இல்லையே.

அடுத்து, பவளா அவர்களே, உங்கள் முத்தாய்ப்புக்கு வருவோம்.

“உண்மைதான், செல்வன். பெண்ணியம் என்பதற்கு ஆண்வெறுப்பு என்பதல்ல பொருள். தகப்பன், கணவன், சகோதரன், மகன் என்ற உறவுகளுடன்தான் ஒரு பெண் பாதுகாப்பாக, அமைதியாக வாழ முடியும் என்பதே சத்தியம். மொத்த ஆண்களையும் குறை சொல்லுவது நியாயமில்லை என்பதே என் கருத்தும்” என்கிறீர்கள். “ஆணாதிக்க வெறுப்பு” என்பது அநீதியாக ஆதிக்கம் புரியும் ஆண் மீதான வெறுப்பாகத்தானே மாறும்? அவ்வாறு செய்யாத ஆண்களை ஏன் வெறுக்க்ப் போகிறார்களாம்? பெண் மீது தகாத முறையில் ஆதிக்கம் செய்பவர்கள்தானே பெண்ணியம் என்பதற்கே ஆட்சேபிப்பார்கள்?

அடுத்து, என் கட்டுரையில் எங்கேனும், தகப்பன், கணவன், சகோதரன், மகன் ஆகியோரின் பாதுகாப்பு ஒரு பெண்ணுக்குத் தேவையில்லை என்று சொல்லியிருக்கிறேனா? நீங்களே சொல்லியுள்ளது போல் இவர்களுடன் வாழ்வதுதான் பாதுகாப்பானது. துளியும் ஐயமில்லை. ஆனால், யாரிடமிருந்து பாதுகாப்பு, பவளா அவர்களே? பிற ஆண்களிடமிருந்துதானே! உங்களையும் மீறி உண்மை வந்துவிட்டது.

எந்தப் புற்றில் பாம்பு இருக்கும், எதில் எறும்பு. இருக்கும் என்பது தெரியாதாகையால், ஒரு பெண் ஆண் நண்பர்களைத் தொலைவில் வைத்துப் பழகவேண்டும் என்றுதானே சொன்னேன்? இதில் என்ன தப்பைக் கண்டீர்கள்?

வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது. ஆனால் அவ்விதழின் ஆசிரியர் பொறுப்பில் உள்ளவர் பொருத்தமற்ற தலைப்பில் கூறப்பட்ட – சம்பந்தமே இல்லாத – கருத்துக்குத் தமுக்கு அடிப்பதும், நான் எழுதவே எழுதாத ஒன்றைக் கற்பித்து அதற்குப் பதில் சொல்லுவதும் முறைதானா? செல்வன் அவர்களின் கருத்தோடு நிறுத்தி யிருந்தால், கணினி முன் இடுப்புக்கடுக்க உட்கார்ந்துகொண்டு இதை எழுதும் தொல்லையை மேற்கொண்டிருந்திருக்கவே மாட்டேன். நீங்களும் அதை அங்கீகரித்து, என் கட்டுரையோடு தொடர்பே அற்ற கருத்தைச் சொன்னதால்தான் இந்தக் கடிதம்.

இதை வரி விடாமல் வெளியிட்டால் நல்லது. சுருக்குவதாயின் போடவே வேண்டாம்.

என்றென்றும் நட்புடன்

ஜோதிர்லதா கிரிஜா

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “ஆண் – பெண் நட்புறவு கட்டுரையின் கருத்துக்கான எதிர்வினை

  1. அக்கா,
     
    இந்த மடல் வந்ததற்கான, மூல கட்டுரையான “ஆண், பெண் நட்புறவு” படித்தேன்…
     
    எழுதியவர் என்ன மனநிலையில் எழுதுகிறார் என்பது முக்கியமல்ல. அது படிப்பவரை எப்படிச் சேர்கிறது என்பதே முக்கியம்.
     
    கண்டிப்பாக, ஆண் பெண் நட்புறவு கட்டுரை சொல்ல வருவது, ஆண் என்பவன் பெண்களைப் போகப் பொருளாய் பார்ப்பவன் என்பதும், கிழவனோ, குமரனோ, மணமானவனோ, பள்ளி /கல்லூரி மாணவனோ, சிறுவனோ, இவ்வனைவரிலும் பெரும்பாலோர் பெண்ணை உடலுறவு சார்ந்த துய்பொருளாகத்தான் பார்க்கிறார்கள் என்பதுமான கருத்தைத் தான்.
     
    இதனையே செல்வன் அவர்கள், “ஆண் நண்பர்கள் எல்லாரும் வன்னுகர்வு செய்வார்கள் என்பது மாதிரி எழுதியிருப்பது சரியல்ல” எனக் குறிப்பிட்டுள்ளார்.
     
    இதில் என்ன பிழை இருக்கிறது. உண்மையில் கட்டுரையாளர் படிப்பவர்களுக்கு கொண்டு சென்று கொடுத்த கருத்தானது பெரும்பாலும் செல்வன் அண்ணாவின் புரிதலை ஒத்ததாகத் தான் இருக்கிறது/இருக்கும். இதற்காக கருத்து சொன்னவர்களை ஏதோ தங்கள் மேல் முன்விரோதம் கொண்டவர்கள் போல கருதி கட்டுரை வெளியிடுவது தனது எழுத்தின் மீதான புரிதலை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.
     
    படிப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரு கருத்தை எழுதியவரின் கோணத்தில் பார்க்காமல் வேறு திசையில் புரிந்து கொள்கிறார்கள் என்றால் அது எழுதுபவரின் எழுத்து நடை குற்றமே அன்றி படிப்பவரின் குற்றமாகாது.
     
    தான் சொல்ல வந்த கருத்தை தான் புரிந்த விதத்தில். தனது கட்டுரையை படிப்பவர்களிடம் சேர்ப்பதில் தான் எழுத்தாளனின் எழுத்து வெற்றி பெறுகிறது.
     
    நிற்க…
     
    எனது நண்பர்கள் பலரும் கீழ்சாதிக் காரர்களே. இருந்தாலும் நான் சாதி பாகுபாடு பாராமல் பழகுவது போல பெரும்பாலும்  இல்லை எனச் சொல்வதிலும், எனது நண்பர்கள் பலரும் ஆண்களே, ஆனால் ஆண்கள் பெரும்பாலும் பெண்களைப் போகப் பொருளாகப் பார்க்கிறார்கள் எனச் சொல்வதிலும் மறைமுகமாக தனது வன்மத்தை காட்டும் இயல்பு புரியாத அளவிற்கு இன்றைய வாசகர்கள் இல்லை.
     
    மேலும், புத்திசாலிப் பெண்களே சில சமயம் ஆண்களிடம் ஏமாந்து விடுகிறார்கள் எனச் சொல்லி விட்டு, தனக்கு ஆண் நண்பர்கள் அதிகம் என ஒருவர் சொல்கிறார் என்றால் அது தன்னை அதிபுத்திசாலி என நினைத்துக் கொள்வதாலா…
     
    இன்னும் பல விவாதக் கருத்துகள் அந்த குறிப்பிட்ட கட்டுரையில் காணக் கிடைக்கிறது.
     
    இருந்தும் முற்றாக ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்கிறேன். கட்டுரை ஆண் என்பவர்கள் பெரும்பாலும் அயோக்கியர்கள் அவர்களிடம் இருந்து பெண்கள் தூரமாகவே இருக்க வேண்டும் என்ற ஒற்றைக் கருத்தைச் சொல்ல சுற்றி சுற்றி பல விதங்களில் ஆண்களைப் பெண்கள் ஒதுக்கி வைக்க வேண்டும் வகையில் கருத்துகளை அள்ளித் தெளித்திருக்கிறார் என்பதைத் தவிர அந்த குறிப்பிட்ட கட்டுரையில்  ஒரு விஷயமும் இல்லை…
     
    விவாதிக்க கட்டுரை எழுதியவர் தயார் என்றால் மேலும் பேசத் தயார்…

  2. திருமதி ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு, 
    வணக்கம். சிறுபிள்ளைப் பருவத்தில் கல்கண்டு இதழில் உங்கள் கட்டுரைகளைப் படித்துச் சுவைத்ததோடு சரி. பிற்காலத்தில் கதை இலக்கியங்கள் படிப்பது குறைந்துபோயிற்று. 
    இந்த உங்கள் கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது! பலருக்கும் பிடிக்காமல் போகும், அதில் வியப்பில்லை!!!
    பலவகைப் பரிமாணங்களை மிக அழகாக உங்கள் கட்டுரை சுட்டுகிறது. ஆனால் … குண்டுச்சட்டியில் சுகமாகக் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கும் ஆட்களுக்கோ, புலம்பெயராமல் தான் பிறந்து வளர்ந்த தன்வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து வெத்திலை எச்சில் துப்பும் பிறவிகளுக்கோ, தான்தான் ideal பிறவி என்ற கற்பனையில் நடமாடும் பிறவிகளுக்கோ, இன்ன பிறருக்கோ உங்கள் கட்டுரை பிடிக்காது, உங்கள் கருத்தும் புரியாது!! 
    எல்லாரும் தம்முடைய தனித்தனி வாழ்வில் உங்கள் கட்டுரைக் கருத்துகள் எவ்வளவில் பொருந்தும் என்று பார்ப்பார்கள்; உடனே உங்கள் கருத்தைப் புறந்தள்ளிவிட வாய்ப்பு மிகுதி; ஏனென்றால் அவரவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் சுகம் அப்படி. ஒவ்வொருவரும் தனியாக அடிபடும்போது கொஞ்சம் வலி புரியும். 
    இப்படிக்கு,
    ராஜம்

    குறிப்பு: பின்னூட்டம் இடும் இடத்தில் வண்ணப்போட்டி என் முதிய கண்களுக்கு ஒத்து வரவில்லை. Security Question என்ற இடத்தில் அழுத்தமான சரஸ்வதி நிறத்துப் பின்னணியில் ஒரு கேள்வியை மேக நிறத்தில் போட்டு … இதென்ன சோதனை? பவளஶ்ரீ + அண்ணாகண்ணன் காண்க. நல்லதொரு UI வல்லுநரைப் பயன்படுத்துக. 

  3. ஜோதிர்லதா கிரிஜா அவர்களின் எழுத்தை 10 வயது முதல் மாலைமதியில் படித்து வந்தவன் என்ற முறையில் இந்த கட்டுரை எனக்கு மிகவும் ஏமாற்றம் அளித்த ஒன்று. அவரது வாசகனாக தான் அந்த கருத்தை எழுதினேன். கொள்வதும், தள்ளுவதும் அவரது விருப்பம்.

    கட்டுரையில் உள்ள சில கருத்துக்கள்:

    Quote:ஜோதிர்லதா கிரிஜா

    “…பத்து வயதுச் சிறுவர்கள் கூட நம்பத்தகுந்தவர்கள் அல்லர் என்பதே உண்மை

    ‘எல்லாத்துக்கும் சின்னவன்; ஆனா, கல்யாணத்துக்கு மட்டும் பெரியவன்’ என்பதாய் ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. இது பற்றிய அறிவால்தான் நம் பெரியவர்கள் ‘ஆம்பளப் பசங்களோட வெளையாண்டா, காது அறுந்து போகும்’ என்று பெண் குழந்தைகளை அச்சுறுத்தி வந்தார்கள் போலும்.

    ஒரு பெண்ணோடு பழகும் போது ‘இவள் ஒரு பெண்’ என்கிற நினைவையும் நினைப்பையும் அகற்றி அவளை ஒரு நண்பணைப் பார்ப்பது போல் ஒரு தோழியாக மட்டுமே பார்ப்பவர் ஆண்களில் அரிது என்பதே கசப்பான உண்மை.

    ஆனால், ஆண் இவ்விஷயத்தில் தந்திரமானவன். நம்ப வைத்துக் கழுத்தறுப்பவன். தன்னைப் புரிந்துகொண்டு பெண் தன்னைத் தவிர்த்துவிடுவாளோ என்னும் உணர்வால், சிறு அத்து மீறல்களைக் கூடத் தவிர்த்துக் கண்ணியவானைப் போல் நடப்பதில் (நடிப்பதில்) மிகுந்த கவனம் காட்டி அவளது நன்மதிப்பைச் சம்பாதித்த பின் பிரபஞ்சன் குறிப்பிட்ட அந்த ஐந்து இளைஞர்களைப் போல் மிகக் கீழ்த்தரமாக நடந்து கொள்ளுபவன். தன் உண்மையான தன்மையை அவளுக்குக் காட்டிக்கொடுக்கக் கூடிய சிறு அத்து மீறல்களைஅவன் செய்ய மாட்டான்! தோதான வாய்ப்பின் போது, எடுத்த எடுப்பிலேயே வன்னுகர்வுதான்! அந்த வாய்ப்பையும் அவனே ஏற்படுத்திவிடுவான்….” Unquote

    பத்து வயது சிறுவனை வன்புணர்ச்சியாளனாக பார்க்க சொல்லும் கட்டுரையை என்னவென்று ஏற்றுகொள்வது? இதில் உள்ள அறிவுரையை ஏற்று 10 வயது பையனுக்கு பாடம் சொல்லிகொடுக்கும் ஆசிரியை, அறிவுரை சொல்லும் எதிர்வீட்டு 20 வயது பெண் எல்லாரும் அவனை வன்புணர்ச்சியாளானாக கருதி விலக்கினால் அந்த சிறுவன் எந்த அளவில் பாதிப்புக்கு உள்ளாவான்?

    அதுபோக விளக்க மடலில் “இதுதான் பொதுவாக ஆண்களின் இலட்சணம்” எனும் கருத்தை வலியுறுத்துகிறார். சில ஆண்கள் விதிவிலக்காக இருக்கலாம் எனவும் கூறுகிறார்.

    பொதுவாக “ஆண்களின் லட்சணமே இதுதான்.அவர்களின் பிறவிகுணமே இதுதான். தருமபுத்திரன் மாதிரி சில விதிவிலக்கு இருக்கலாம், பத்து வயது பையனை கூட நம்ப வேண்டாம்” என ஒரு பெரிய எழுத்தாளர் எழுதினால் வாசகர்களான நாஙக்ள் எல்லாம் என்னவென அதை புரிந்துகொள்வது? ஆண்கள் எல்லாம் “பொதுவாக வன்புணர்ச்சியாளர்கள்” இல்லை. மனிதர்கள் எல்லாரும் பொதுவாக நல்லவர்கள் தான். ஆண்களுக்கு பெண்களின் நட்பும், வழிகாட்டலும் கட்டாயம் தேவை. பெண்களுக்கும் அதுபோல் ஆண்களின் நட்பும், வழிகாட்டலும் அவசியம். அதனாலேயே அக்கருத்தை எழுதினேன். கொள்வதும், தள்ளூவதும் எழுத்தாளரது விருப்பம்.

  4. ஆண் வெறுப்புதான் பெண்ணியம் எனும் நிலை மாறவேண்டும். 

    On Friday, August 23, 2013, Selvan Kovai wrote:
    ஆண் நண்பர்கள் எல்லாரும் வன்னுகர்வு செய்வார்கள் என்பது மாதிரி எழுதியிருப்பது சரியல்ல.

    உண்மைதான் செல்வன். பெண்ணியம் என்பதற்கு ஆண் வெறுப்பு என்பதல்ல பொருள். தகப்பன், கணவன், சகோதரன், மகன் என்ற உறவுகளுடன் தான் ஒரு பெண் பாதுகாப்பாக அமைதியாக வாழ முடியும் என்பதே சத்தியம். மொத்த ஆண்களையும் குறை சொல்வதில் நியாயமில்லை என்பதே என் கருத்தும்.

    அன்புடன்
    பவளா

    அன்பின் திருமிகு ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு,

    வணக்கம்.  முதலில் தங்களிடம் ஒரு விசயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் வல்லமை இதழின் ஆசிரியர் என்ற முறையில், வல்லமை ஆசிரியர் மின்னஞ்சல் முகவரியில் வந்து எந்த கருத்தையும் சொல்லவில்லை. தங்களுடைய அன்பார்ந்த வாசகி என்ற முறையில்தான் என்னுடைய சொந்த முகவரியில் வெறும் பவளாவாக வந்து என் கருத்துகளை சொன்னேன். இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமே என்பதை அந்த இடத்தில் சொல்லியிருக்க வேண்டும். தவறியதற்கு வருந்துகிறேன். 

    ஒரு எழுத்தாளர் ஒரு படைப்பை எழுதி முடித்து அது வாசகரை சென்றடைந்தவுடன் அது அவர்களுடைய மனதில் எப்படி பதிகிறதோ அதை வைத்துத்தான் அவர்களுடைய புரிதலும், அதற்கான மறு மொழிகளும் இருக்கும் என்பது தாங்கள் அறியாதது அல்ல. அந்த வகையில் திரு செல்வன் ஒரு கருத்தைச் சொன்னபோது அதில் எனக்கு உடன்பாடு இருந்ததால் ஒரு சாதாரண வாசகியாக என் கருத்தையும் பகிர்ந்துகொண்டேனே தவிர மற்றபடி தங்களை குறை கூறும் விதமாக அல்ல என்பதை உறுதியுடன் கூறுகிறேன். விவாதம் என்று வரும்போது அவரவர்கள் திறந்த மனதுடன் அவரவர் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ற வகையில் கருத்துக்களை பகிர்ந்துகொள்வதே இயல்பு என்றுதான் நினைக்கிறேன். அந்த வகையில் செல்வன் அவர்களும், நானும் பொதுவான எங்கள் கருத்தை முன்வைத்தோம். தாங்கள் இதை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை என்பதே என் கருத்தும். எந்த வகையிலாவது தங்கள் மனதை என் சொற்கள் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருந்துகிறேன். தாங்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

    அன்புடன்
    பவளா

  5. This article assumes “Every man is bad, unless proven otherwise”, which is against the principle of Justice. And that is plain injustice to all males and all females too, because it just beguiles gullible females into suspecting good men.

    ஒருத்தன் கெட்டவன் என்ற நினைப்புடன் பழகினால், அவனுடைய குணக்கேடு தான் கண்ணுக்குத் தெரியும். அவன் யதார்த்தமாக சொல்லும் வார்த்தை, செய்யும் செயல் கூட தீய நோக்கத்துடன் செய்வதாகத் தான் தெரியும். அப்படிப் பட்ட பார்வை உடைய பெண்களை நான் சந்திக்காமல் இருக்கவே விரும்புகிறேன். தேவையற்ற புகார்களை தவிர்க்கலாம். ஏனெனில் அவர்களைத் திருப்திப் படுத்த முடியாது. They only need an excuse to accuse you of harassment.
     
    ஆண்கள் எல்லாரும் கெட்டவர்கள் என்றும் பத்து வயசுப் பிள்ளையையும் விட்டு வைக்காமல் தவறாக சித்தரித்து விட்டு, சில விதிவிலக்குகள் இருக்கலாம் என்றும் சொல்வது, பிரச்சினை வராமல் தப்பித்துக் கொள்ள போடும் small print disclaimer போலத்தான் தெரியுமே அன்றி, அதில் உண்மை தெரியாது. உண்மையும் இல்லை. நான் ஒரு ஆண். பிறந்தது முதல் பெண்களோடு பழகி வருகிறேன். நான் எந்தப் பெண்ணையும் எதுவும் செய்யவில்லை. எனது நண்பர்களும் செய்யவில்லை. நான் இப்படி ஒரு கட்டுரையைப் படித்தால் கோபம் வருமா வராதா?

    பொத்தாம்பொதுவாக சேற்றை வாரி ஆண்கள் மீது இறைத்து விட்டு, விதி விலக்குகள் உண்டு என்று பூசி மெழுகுவது  தக்கதன்று. 

    For the sake of argument:
    சில பெண்கள் கணவனுக்கு உண்மையாக இல்லாமல் இருக்கலாம். மக்கள் தொகையை வைத்துப் பார்க்கையில், சதவிகிதம் குறைவாக இருந்தாலும் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். துரதிர்ஷ்ட வசமாக ஒரு குறிப்பிட்ட ஆண்மகன் சந்தித்த பெரும்பான்மையான பெண்கள் அப்படி நெறி தவறியும் இருந்திருக்கலாம். அதற்காக அவன், பெண்கள் பொதுவாக நெறி தவறுவார்கள், ஆனால் கணவருக்கு உண்மையான சில நல்ல பெண்களும் உண்டு என்று எழுதினால் இந்த எழுத்தாளர் பொங்கியெழ மாட்டாரா? பெரும்பான்மையான பெண்கள் சபிக்க மாட்டார்களா? மாதர் சங்கங்கள் வழக்கே போடும்! இதை argumentகாக தான் சொன்னேனே ஒழிய இது எனது கருத்து அல்ல.

    எந்த ஒரு சாராரையும் பொத்தாம்பொதுவாக நல்லவர்கள் என்றோ கெட்டவர்கள் என்றோ ஒதுக்க இயலாது.

    பொதுவாக ஆண்களிடம் எச்சரிக்கையாக இரு எனபது நியாயம் தான். நானும் எனது தங்கையிடம் சொல்லுவது தான். அதற்காக எல்லா ஆண்களும், அடக்கும் பத்து வயசு பையன் கூட உன்னை கெடுத்து விட வாய்ப்புண்டு, என்று எல்லாம் சொல்லுவது அபத்தம், அநீதி. பூமாதேவி பொறுக்க மாட்டாள். அடுக்காது. பத்து வயசுப் பையனுக்கு தனது பாலுறுப்புப் பற்றியே சரியாக தெரிந்து இருக்காது. testosterone அளவு கம்மியாக இருக்கும். அதிகம் விந்தே இல்லாத அவன் எங்ஙனம் பெண்ணைப் புணர்வான்? எங்கோ ஒன்று நடந்திருக்கும். அது பொது விதி அல்ல. பச்சையாக சொன்னதால் நானும் பச்சையாக சொல்ல வேண்டி இருக்கிறது. எழுத விருப்பம் இல்லை, கட்டுரையால் நிர்பந்திக்கப் பட்டு எழுதுகிறேன்.

    This rather biased article was quite a hefty wielding of the tar brush against males. Disclaimers and token eye washes that quote exceptions hold no water and are no excuses. 

    It is not the reader’s fault if he does not comprehend the words of the writer as she intended them to be. If anything, it only shows the dubious writing skills of the latter in as much as her inability to impress upon the reader what she has thought in her mind, the way she thought of it. No fault can attach itself to the reader. 

    This article was vitriolic and venomous, laden with nothing but unnecessary alarm against every man. 

    This assumes “Every man is bad, unless proven otherwise”, which is against the principle of Justice.

    விஞ்ஞானி என்ற முறையில் சில கேள்விகள்:

    எழுத்தாளர் உலகில் உள்ள அனைத்து ஆண்களையும் அறிவாரா? பொதுவாக ஆண்கள், பத்து வயசுப் பையன்கள் உட்பட காம எண்ணம் உள்ளவர்கள் என்று சொன்னதற்கு என்ன ஆதாரம்? அவருடைய sample set என்ன? என்ன survey எடுத்தார்? அந்த ஆய்வின் population யார்? methodology என்ன கடைப்பிடித்தார்? என்ன data analysis செய்தார்? அதன் error சதவிகிதம் என்ன? எந்த சஞ்சிகையில் இது வெளிவந்தது? இதையெல்லாம் கேட்க ஆவலாக உள்ளோம். எழுத்தாளர் கூற வேண்டும். இது இல்லை என்றால் கூட ஆண்கள், அவர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று கேட்க மாட்டோம். அதனால் எங்களுக்கு ஆக வேண்டியது எதுவும் இல்லை. இனி இந்த மாதிரி அவர் எழுதாமல் இருப்பது நல்லது. அவர் எழுத்தைப் படிக்கும் வெகுளிப் பெண்கள் அதை நம்பாமல், ஆண்களுடனான கண்ணியமான உறவுகளில் நிம்மதியை அடைவார்கள். 

    நன்றி.

    பணிவன்புடன்,
    புவனேஷ்வர்

  6. //வாசகர்கள் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கட்டும். அது பற்றிய கவலை எனக்குக் கிடையாது. //

    ஓஹோ! அப்படியா? என்ன அஹங்காரம்!

    ஒரு கட்டுரையைப் படிக்க தனது பொன்னான நேரத்தைச் செலவிடும் வாசகர்களுக்கு அதை விமர்சிக்க, பாராட்ட, எதுவும் சொல்லாமல் இருக்க முழு உரிமை உண்டு. யாரும் விலக்கல்ல. இந்த statement இதுகாறும் தங்களது எழுத்துக்களை படித்து வந்த வாசகர்களை disregard செய்து, அவமானப் படுத்துவதாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *