அமெரிக்க இந்தியர்கள் செய்யும் முறையற்ற செயல்கள்

2

நாகேஸ்வரி அண்ணாமலை

அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் கூரையைப் பிய்த்துக்கொண்டு போகின்றன.  நடுத்தர வர்க்க மக்களால் கூட இதைச் சமாளிக்க முடியவில்லை.  உதாரணமாக அமெரிக்காவில் ஒரு பல்லை எடுப்பதற்கு – அதில் கொஞ்சம் சிரமம் இருந்தால் – $800 – அதாவது இன்றைய டாலர்-ரூபாய் விகிதத்தில் 48,800 ரூபாய் – வசூலிக்கிறார்கள்.  இந்தியாவில் ஒரு கைதேர்ந்த பல் மருத்துவர் ஒரு பல்லை எடுப்பதற்கு 500 ரூபாய் பில் போடுகிறார்.  இப்படி எக்கச்சக்கமாக மருத்துவச் செலவுகள் ஆவதைப் பயன்படுத்திக்கொண்டு நிறைய மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனிகள் தோன்றியிருக்கின்றன.  அவை வசூலிக்கும் கட்டணங்களும் போடும் நிபந்தனைகளும் அமெரிக்க மக்களைத் திணறடிக்கின்றன.  இதைச் சரிசெய்ய எத்தனையோ ஜனாதிபதிகள் முயன்றும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

அமெரிக்காவில் இப்போது நிறையப் பேர் மருத்துவக் காப்பீடு இல்லாமல் இருக்கிறார்கள்.  இதில் சிலருக்கு வேலை இல்லாததால் மருத்துவக் காப்பீட்டிற்குரிய பிரீமியத்தைப் பகிர்ந்துகொள்ள கம்பெனியோ வேலை கொடுத்தவரோ இல்லை.  வேலை இருந்தாலும் தங்கள் பங்குக்குரிய பிரீமியத்தைக் கட்ட சிலரிடம் தேவையான பணம் இல்லை.  இப்போது ஒபாமா எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைப்பதற்கு ஒரு புதிய மருத்துவச் சட்டத்தை (Affordable Care Act) குடியரசுக் கட்சியினரின் மிகுந்த எதிர்ப்போடு 2010-இல் நிறைவேற்றினார்.  இதைக் குடியரசுக் கட்சியினர் ஒபாமாவின் சட்டம் (Obama Care) என்கிறார்கள்.   அதன் சில பகுதிகள் 2014-இல் அமலுக்கு வருகின்றன.  இம்மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து அதற்குரிய ஆயத்தங்கள் ஆரம்பிக்கின்றன.

எப்படியாவது அந்தச் சட்டத்தை வராமல் தடுத்துவிட வேண்டும் என்று குடியரசுக் கட்சியில் ஒரு சிலர் மும்மரமாக முயன்று வருகிறார்கள்.  ஒபாமாவோடு ஜனாதிபதித் தேர்தலில் 2012-இல் போட்டியிட்ட ராம்னி தான் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதவிக்கு வந்த அன்றே அந்தச் சட்டத்தை கிழித்து எறிந்துவிடுவேன் என்று சூளுரைத்தார்.  நல்லவேளை அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறவில்லை.  ஆனால் அதே ஆண்டு அமெரிக்கப் பார்லிமெண்டிற்கு  நடந்த தேர்தலில் கீழ் அவையான காங்கிரஸில் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தது.  இப்போது அதன் தலைவராக இருக்கும் ஜான் பேனர் இந்தக் கட்டத்தில் எப்படியாவது ஒபாமா கொண்டுவந்த மருத்துவச் சட்டத்தை ஒழித்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டு அதைச் செயலாக்கத் துடிக்கிறார்.  அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டிற்கு பணம் ஒதுக்க நடந்து வரும் விவாதங்களில் ஒபாமாவின் மருத்துவச் சட்டத்திற்குப் பணம் ஒதுக்கப் போவதில்லை என்றார்.  ஆனால் ஒபாமா மசியவில்லை.  இப்போது இன்னும் ஒரு வருடம் அந்தச் சட்டம் காத்திருக்கலாம் என்று பேனர் கூறுகிறார்.  2014-ஆம் ஆண்டு நடைபெறப் போகும் காங்கிரஸ் அங்கத்தினர்களுக்கான தேர்தலில் மேலவையான செனட்டிலும் குடியரசுக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைத்தால் அப்போது எளிதாக ஒபாமாவின் சட்டத்தை ஒழித்துக் கட்டிவிடலாம் என்று கணக்குப் போடுகிறார்.  ஒபாமாவின் புதிய மருத்துவச் சட்டத்தினால் ஏற்படும் செலவுகளோடு அரசின் மற்ற செலவுகளுக்கு ஆகும் பணத்திற்கும் ஒப்புதல் அளிக்க மறுக்கிறார்.  அதனால் இப்போது அத்தியாவசிய அலுவலங்கள் தவிர மத்திய அரசின் மற்ற அலுவலகங்கள் மூடிக்கிடக்கின்றன.  இதனால் அமெரிக்காவின் பொருளாதாரம் மட்டுமின்றி உலக நாடுகளின் பொருளாதாரமும் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.  ஆனாலும் ஜான் பேனர் தன் பிடிவாதத்திலிருந்து மாறப் போவதாகத் தெரியவில்லை.  ஒபாமாவும் எப்படியும் தான் மிகவும் பாடுபட்டுக் கொண்டுவந்த மருத்துவச் சட்டத்தை குடியரசுத் தலைவர்கள் ஒழிக்க உடன்படப் போவதில்லை.  இந்த நிலை எவ்வளவு நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை.  வரும் 17-ஆம் தேதி நடக்கவிருக்கும் ‘அமெரிக்கா எவ்வளவு கடன் வாங்கலாம்’ என்ற விவாதத்தில் ஒரு வேளை குடியரசுக் கட்சியினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே சமரசம் ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.  அப்போதாவது ஒரு உடன்பாடு ஏற்படாவிட்டால் நாட்டின் நிலை மிகவும் மோசமாகும் என்று அஞ்சுகிறார்கள்.  மக்கள் மத்தியில் வெறுப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்துவதற்கு எந்தக் கட்சி தான்தான் காரணம் என்று நினைக்கிறதோ அந்தக் கட்சி தன் பிடிவாதத்திலிருந்து கடைசியாகப் பின்வாங்கும்.

மேலே சொன்னபடி ஜனாதிபதி ட்ரூமன் காலத்திலிருந்தே வசதியற்றவர்களுக்கு மருத்துவ உதவி கிடைக்கப் பல முயற்சிகள் நடந்து வந்தன.  ஆனாலும் ஜான்ஸன் காலம் வரை எதுவும் உருப்படியாக நடக்கவில்லை.  1935-இல் ஜனாதிபதி ரூஸ்வெல்ட் கொண்டுவந்த சமூக பாதுகாப்புச் சட்டத்தை (Social Security Act)  ஜான்ஸன் 1965-இல் விரிவாக்கி மெடிகேர் (Medicare), மெடிகெய்ட் (Medicaid) என்ற இரண்டு சட்டங்களை அதனோடு இணைத்தார்.  வறுமையையும் இனத்தின் அடிப்படையில் பொருளாதார வேறுபாட்டையும் ஒழிக்க ஜான்ஸன் செய்த செயல்கள் இவை.  இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதும் முதல் மெடிக்கேர் கார்டை ஓய்வு பெற்ற ஜனாதிபதி ட்ரூமனுக்கும் இரண்டாவது கார்டை அவருடைய மனைவிக்கும் ஜான்ஸன் அளித்தாராம்!

மெடிக்கேர் சட்டத்தின்படி எல்லோருடைய சம்பளத்தில் இருந்தும் 1.45%-ஐ மெடிக்கேர் செலவுகளுக்காக அரசு வசூலிக்கும்.  இன்னொரு 1.45%-ஐ பணிசெய்பவர் வேலைபார்க்கும் கம்பெனி கொடுக்கும்.  தங்களின் கீழ் 25 பேர் வேலைபார்த்தால் அந்தக் கம்பெனி இதைச் செலுத்த வேண்டும்.  தாங்களாகத் தொழில் செய்து வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் வருமானத்தில் 2.9%-ஐ இதற்காக அரசுக்குச் செலுத்த வேண்டும்.  ஒருவருடைய வருமானம் இரண்டு லட்சம் டாலருக்கு மேல் இருந்தால் அவர்கள் 3.8% கட்ட வேண்டும்.  இந்தத் திட்டத்தின் மூலம் பயன் பெறுவதற்கு சில நிபந்தனைகள் உண்டு.  ஒருவர் பத்து ஆண்டுகளாவது வேலைபார்த்திருக்க வேண்டும்.  கணவன் பார்த்திருந்தால் மனைவிக்கும் மனைவி பார்த்திருந்தால் கணவனுக்கும் இதில் பயன் பெற உரிமை  உண்டு.  அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது அமெரிக்காவில் எப்போதும் இருப்பதற்குரிய உரிமம் பெற்றவராகவோ (Green card holder)  இருக்க வேண்டும்.  அவருக்கு வயது 65-க்கு மேல் ஆகியிருக்க வேண்டும்.  மாற்றுத் திறனாளியாக இருந்தால் 65 வயதுக்குக் கீழேயும் இந்தச் சட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.  இதில் சேர உரிமை பெறுபவர்கள் வருடம் தோறும் பிரீமியம் கட்ட வேண்டும்.  சமூகப் பாதுகாப்புத் தொகையிலிருந்து (Social Security Benefits)  (பத்து ஆண்டுகள் வேலைபார்த்த அமெரிக்கர்கள் எல்லோருக்கும் 65 வயதிற்குப் பிறகு அரசு ஓய்வூதியம் போன்ற ஒரு தொகையைக் கொடுக்கிறது.  இதற்கும் சம்பளத்திலிருந்து ஒரு தொகையை (6.2%) அரசு பிடித்துக்கொள்ளும். கம்பெனியும் 6.2% கட்ட வேண்டும்.) இந்தப் பிரீமியத்தைக் கழித்துக்கொண்டு மீதிப் பணத்தைத்தான் கொடுப்பார்கள்.  மெடிக்கேரில்  நான்கு பகுதிகள் உண்டு.  முதல் பகுதி மருத்துவமனையில் சேர்ந்தால் அதற்காகும் செலவுகளுக்காக.  இரண்டாவது பகுதி மருத்துவரிடம் செல்லும்போது ஆகும் செலவுகளுக்காக.  இவை இரண்டும் எல்லோருக்கும் கிடைக்கும்.  மூன்றாவது பகுதி மருத்துவத்தில் ஆகும் விசேஷ செலவுகளுக்காக.  இதற்கு தனியாக பிரீமியம் கட்ட வேண்டும்.  நான்காவது பகுதி மருந்துகளுக்கான செலவுகளுக்காக.  இதில் சேரவும் தனி பிரீமியம் கட்ட வேண்டும்.  மெடிக்கேரில் சேர்ந்துவிட்டாலும் மருத்துவமனைகளுக்கு ஆகும் செலவுகளிலும் மருத்துவர்களைப் பார்க்கும் செலவுகளிலும் ஒரு பங்கைப் பயனாளிகள் கட்ட வேண்டும்.  அமெரிக்க மெடிக்கேர் பயனாளிகள் மெடிக்கேரில் சேர்ந்தாலும் நிறையச் செலவுகள் இருக்கின்றன.  மெடிக்கேர் திட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.

இரண்டாவது சட்டமான மெடிக்கெய்டில் சேருவதற்கு அமெரிக்கக் குடிமகனாகவோ அல்லது அமெரிக்காவில் எப்போதும் இருப்பதற்குரிய உரிமம் பெற்றவராகவோ இருக்க வேண்டும்.  இதற்கு வயது வரம்பு இல்லை.  ஆனால் அவரது வருமானம் வறுமைக் கோட்டிற்குக் கீழே – அதாவது வருஷ வருமானம் $15,000-க்குக் கீழே – இருக்க வேண்டும்.  இப்படிச் சில அடிப்படை விதிகள் இருந்தாலும் யாரை மெடிக்கெய்டில் பயனாளியாகச் சேர்க்கலாம் என்பதை ஒவ்வொரு மாநிலமும் தானாக வரையறுக்கிறது.  மெடிக்கெய்ட் திட்டத்தில் சேர வேண்டும் என்ற கட்டாயம் மாநிலங்களுக்கு இல்லையென்றாலும் இப்போது எல்லா மாநிலங்களும் அதில் பங்கு பெறுகின்றன.  ஒவ்வொரு மாநிலமும் அங்கு வசிக்கும் மெடிக்கெய்ட் பயனாளிகளுக்கான செலவில் பாதியை ஏற்றுக்கொள்கிறது.  மீதிப் பாதியை மத்திய அரசு ஏற்கிறது.  மெடிக்கெய்ட் பயனாளிகள் பெறும் சலுகைகள், வசதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன.  மெடிகெய்ட் பயனாளிகளுக்கு மெடிக்கேர் பயனாளிகள் போல் எந்த விதச் செலவும் இல்லை.

அமெரிக்காவில் நல்ல சம்பளம் பெறும் பல இந்தியர்கள் தங்கள் பெற்றோர்களைத் தங்களோடு வைத்துக்கொள்கிறார்கள்.  அமெரிக்கப் பிரஜைகளாக இருப்பவர்களின் பெற்றோர்களுக்கு விண்ணப்பித்த உடனேயே பச்சைக் கார்டு கிடைத்துவிடுகிறது.  ஐந்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்கக் குடியுரிமையும் கிடைத்துவிடுகிறது.  பச்சைக் கார்டு வைத்திருப்பவர்களின் பெற்றோர்களுக்கும் பச்சைக் கார்டு கிடைத்துவிடும்.  ஆனால் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.  பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் எல்லா உதவிகளும் பெற்றுக்கொள்கிறர்கள், உணவு, உடை, இருப்பிடம் உட்பட.  பிள்ளைகளுக்கும் குழந்தைகளுக்கு ஆயாவாக இருந்து அவர்களை வீட்டில் கவனித்துக்கொள்வது போன்ற தங்களால் ஆன எல்லா உதவிகளையும் செய்கிறார்கள்.  அமெரிக்காவில் ஆயாக்கள் வைத்துக்கொண்டால் எக்கச்சக்க செலவு ஆகும்.  இப்படிக் குடும்பத்தில் அங்கத்தினர்களாக இருந்தாலும் ஒருவருக்கொருவர் நிறைய உதவிகள் செய்துகொண்டாலும்  மருத்துவச் செலவுகளுக்கு மாத்திரம் தனிக் குடும்பமாக ஆகிவிடுகிறார்கள்.  இவர்களே இந்தியாவில் ரேஷன் கார்டில் பெற்றோர் அவர்களோடு வசித்தாலும் வருமானம் இல்லாதவர்கள் என்று சொல்லி அவர்களுக்குத் தனி கார்டுகள் வாங்குவார்களா?  பெற்றோர்களின் வருமானம் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருந்தால் அதற்குரிய சலுகைகளை அவர்கள் பெறும்படி செய்வார்களா?  இருபதாயிரம் டாலர் வருமானம் உள்ள ஒரு அமெரிக்கரால் மெடிக்கெய்டில் சேர முடியாது.  ஆனால் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் டாலர் சம்பளம் வாங்கும் ஒரு இந்தியரின் பெற்றோர்கள் மெடிக்கெய்டில் சேரத் தகுதி பெறுகிறார்கள்.

அமெரிக்காவில் மருத்துவச் செலவுகள் மிகவும் அதிகம் என்பதால் பெற்றோர்களுக்கு ஆகும் மருத்துவச் செலவை மாநிலத்தின் தலையில் கட்டிவிடுகிறார்கள்.  எல்லா மாநிலங்களிலும் இந்தியர்கள் இம்மாதிரிப் பெற்றோர்களை  மெடிக்கெய்டில் சேர்ப்பது நடக்கிறது.  ஒருவருக்கு 500 டாலர் செலவழித்தால் தனிப்பட்ட மருத்துவக் காப்பீட்டுக் கம்பெனியில் மருத்துவக் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம்.  ஆனால் அமெரிக்காவில் வாழும் வசதி படைத்த இந்தியர்கள் அப்படிச் செய்வதில்லை.  அந்த மாநிலத்துக்குரிய மெடிக்கெய்டில் சேர்த்துவிடுகிறார்கள்.  கலிஃபோர்னியா மாநிலத்தில் மெடிக்கெய்ட் பயனாளிகளுக்கு மற்ற மாநிலங்களை விட நல்ல மருத்துவ வசதிகள்  கிடைப்பதாகக் கூறுகிறார்கள்.  அங்குதான் கணினி வல்லுநர்கள் சிலிகான் வேலியில் (Silicon Valley) வேலைபார்க்கிறார்கள்.  நல்ல வசதி படைத்த இந்தியர்கள் இங்கு இருக்கிறார்கள்.  ஆரக்கிள் (Oracle), கூகுள் போன்ற  கம்பெனிகளின் தலைமையகங்கள் கலிஃபோர்னியாவில் இருக்கின்றன.  இந்தக் கம்பெனிகளின் கிளைகளில் வேறு மாநிலங்களில் வேலைபார்ப்பவர்கள் கூட கலிஃபோர்னியாவில் நல்ல மெடிக்கெய்ட் வசதி இருப்பதால் அங்கு தங்கள் வேலை இடத்தை மாற்றிக்கொள்கிறார்கள்.  பெற்றோர்களை மெடிக்கெய்ட் பயனாளிகளாகச் சேர்த்துவிடுகிறார்கள்.  பிள்ளைகள் நல்ல வசதி படைத்தவர்கள் என்றாலும் பெற்றோர்களுக்கு எந்த வித வருமானமும் இல்லாததால் வறுமைக் கோட்டிற்குக் கீழே வருகிறார்கள்.  அமெரிக்கக் கலாச்சாரப்படியும் சட்டப்படியும் ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி, அவர்களுடைய மைனர் குழந்தைகள் மட்டுமே அங்கத்தினர்கள்.  பெற்றோர்கள் குடும்ப அங்கத்தினர்கள் இல்லை.  ஆனால் இந்தியாவில் பெற்றோர்களும் குடும்ப அங்கத்தினர்களாகக் கருதப்படுகிறார்கள்.  அதனால் இந்தியாவில் உள்ள அமெரிக்கக் கம்பெனிகளும் இந்தியாவில் தங்கள் பணியாளர்கள் அவர்களுடைய மருத்துவக் காப்பீட்டில் பெற்றோர்களைச் சேர்ப்பதை அனுமதிக்கிறார்கள்.  அங்கு மருத்துவச் செலவுகள் அமெரிக்காவோடு ஒப்பிடும்போது மிக, மிகக் குறைவு என்பதும் அதற்கு ஒரு காரணம்.

அமெரிக்காவில் மெடிக்கெய்ட் பயனாளிகளில் சிலராவது தாங்கள் வேலைபார்த்தபோது கொஞ்சமாவது மருத்துவச் செலவு நிதிக்கு வரி கட்டியிருப்பார்கள்.  ஆனால் இந்தியர்களின் பெற்றோர்கள் எந்த விதத்திலும் மருத்துவச் செலவிற்கான நிதிக்கு எதுவும் கட்டியதில்லை. அமெரிக்காவில் ஏழைகளுக்காக அரசு இத்தனை வருடங்கள் பாடுபட்டுக் கொண்டுவந்திருக்கும் திட்டத்தை – இப்போது காப்பாற்றுவதற்கு ஒபாமா மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் திட்டத்தை – பணக்கார இந்தியர்களின் பெற்றோர்கள் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ளலாமா?  பல தலைமுறைகளாக அமெரிக்க மண்ணில் உழைத்து அமெரிக்காவின் முன்னேற்றத்தில் பங்காற்றியிருக்கும் அமெரிக்க ஏழைகளைப் போல் புதிதாகக் குடியேறியிருக்கும் வசதியான இந்தியர்களின் பெற்றோர்களும் ஏழைகளுக்கான அரசு நலத் திட்டங்களில் பயன் பெறுவது சரிதானா?  இவர்கள் செயல் சட்டத்திற்குப் புறம்பானது (illegal) இல்லையென்றாலும் அறநெறியற்ற செயல் (unethical)  அல்லவா?

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “அமெரிக்க இந்தியர்கள் செய்யும் முறையற்ற செயல்கள்

  1. மிக நல்ல கட்டுரை.  இது அறநெறியற்ற செயலே.  இதையும்விட இந்திய மருத்துவர்கள் தங்களிடம் வரும் நோயாளிகளுக்கு தேவையற்ற சிகிச்சை அளித்தோ, இல்லை அளித்ததாகப் போலி ஆவணங்கள் தயாரித்தோ மெடிக்கேர், மெடிக்கெய்டில் பணம் கறப்பதும் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.  அந்த தகவல்கள் கிடைத்தாலும் பகிர்ந்து கொள்ளுங்கள் அம்மா. இலவசம் பெறுவதும், ஊழலும் இந்தியர்களின் உடலில் ஊறிப்போயிருக்கிறது போலும். 

    அன்புடன்
    ….. தேமொழி 

  2. ஓரிரு மாதங்களுக்கு முன் சேலத்தில் உள்ள யானை முகத்தானின் பெயர் கொண்ட பிரபலமான தனியார் மருத்துவமனையில் நடந்த நிகழ்வு இது.

    எனது நெருங்கிய உறவினரின் கணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். நோயாளியை உள்ளே படுக்க வைத்துவிட்டு, உடன் சென்றவர் வெளியில் ஒரு தூணின் பின்புறம் மறைவாக அமர்ந்து இருக்கிறார். கூட்டம் இல்லாத நேரம் மற்றும் அவர் அமர்ந்திருப்பதும் பிறருக்கு தெரியாதபடி அமர்ந்து இருக்கிறார்.

    அப்போது அந்தப்பக்கம் வந்த ஒரு மருத்துவ உயர் அதிகாரி, என் உறவினர் அமர்ந்திருப்பதை அறியாமல் இளம் மருத்துவர்கள் இருவரிடமும் கூறிய திருவாசகம் கீழ்க்கண்டவாறு:

    “யாரைக் கேட்டு அந்த பேஷன்ட்டுக்கு எழுதிக் கொடுத்த மாத்திரைகள் எல்லாம் தேவை இல்லை, இரண்டு மாத்திரைகள் மட்டும் போதும் என்று சொன்னீர்கள்.இப்படி எல்லாம் நீங்கள் கூறினால் உங்களுக்கு சம்பளம் எப்படிக் கொடுப்பது? வந்திருக்கும் நோயாளிகளுக்கு முடிந்த வரையில் அதிக மருத்துவ சோதனைகளுக்குப் பரிந்துரை செய்து அதிக மருந்துகளை எழுதிக் கொடுத்தால் மட்டுமே நாம் மருத்துவமனையை நடத்த முடியும்”

    ஏதோ சினிமா உரையாடல் என்று கருத வேண்டாம். இது முழுக்க முழுக்க உயர் மருத்துவம் படித்த ஒரு மருத்துவரின் வாயில் இருந்து உதிர்ந்த முத்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *