பட்டினத்தடிகளின் பாடல்கள் – 7ம் பகுதி

0

தஞ்​சை ​வெ. ​கோபாலன்

என் செயலால் ஆவது யாதொன்றும் இல்லை இனித் தெய்வமே
உன் செயலே என்று உணரப்பெற்றேன், இந்த ஊனெடுத்த
பின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை, பிறப்பதற்கு
முன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே. 1.

இங்கு நடைபெறும் எந்தச் செயலும், நான் எனும் இந்த உயிராலோ அல்லது அவ்வுயிரைத் தாங்கும் உடலாலோ நடைபெறவில்லை, நடப்பது அனைத்தும் இறைவா உன் செயலால் என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன், இந்த ஊனுடம்பைப் பெற்று இந்த பூமியில் நான் பிறந்த பின்னர் செய்த தீச்செயல்கள் எவையும் இல்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். நான் முந்தைய பிறப்புகளில் செய்த தீவினையால் அன்றோ எனக்கு இப்படித் துன்பங்கள் நேரிடுகின்றன.

(இந்த இடத்தில் பட்டினத்தார் இப்பிறவியில் தீங்கு எதையும் தான் செய்யவில்லை என்றும், முற்பிறவியில் செய்த தீவினையால் இப்படி நேர்ந்தது என்று எதைக்குறித்துப் பாடினார் என்பதை விளக்க வேண்டும் அல்லவா? பட்டினத்தார் வரலாற்றில் ஒரு நிகழ்ச்சியை நாம் இப்போது பார்க்க வேண்டும்.

பட்டினத்தார் திருவாரூரிலிருந்து கிளம்பி கொங்கு நாட்டை அடைந்து மெளன விரதம் பூண்டு ஊர் ஊராய் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் ஒரு நாள் இரவில் ஒரு முரடனுடைய வீட்டின் முன்பு நின்று, தான் மெளன விரதம் பூண்டு பேசாமல் இருப்பதால் தன்னிரு கைதட்டி பசிக்குச் சோறு கேட்டார். அந்த முரடனுக்கு என்ன ஆத்திரமோ இவரை யாரென்று அறியாமல் கைதட்டியா சோறு கேட்கிறாய் என்று அவரை தடிகொண்டு நையப் புடைத்து விட்டான். இதனால் பெரிதும் பாதிக்கப்பட்ட சுவாமிகள் இனிமேல் என்னைத் தேடிக் கொண்டு வந்து யாராவது உணவு அளித்தால் அன்றி உணவு உட்கொள்ளுவதில்லை என்று முடிவு செய்து துளுவ நாட்டுக்குச் சென்று அங்கு உஞ்சேனை மாகாளம் சென்று ஒரு விநாயகர் ஆலயத்தில் உட்கார்ந்து கொண்டார்.

அப்படி அவர் அங்கு உட்கார்ந்திருந்த காலத்தில் ஒரு நாள் இரவு, சில திருடர்கள் அவ்வூர் அரசன் பத்திரகிரியின் அரண்மனையில் திருடிக் கொண்டு வரும் வழியில் சுவாமிகள் உட்கார்ந்திருந்த கோயில் விநாயகருக்கு அணிவிக்கவேண்டுமென்று எண்ணி ஒரு விலை உயர்ந்த பதக்கத்தை இருளில் விநாயகர் என்று நினைத்து சுவாமிகளின் கழுத்தில் போட்டுவிட்டுப் போய்விட்டனர். மறு நாள் அரண்மனையில் திருட்டுப் போய்விட்டது என்று காவலர்கள் தேடிக்கொண்டு வரும்போது பிள்ளையார் கோயிலில் நிஷ்டையில் ஆழ்ந்திருந்த சாமியாரின் கழுத்தில் ஒரு பதக்கத்தைப் பார்த்துவிட்டு, இவரைப் பிடித்துப் பெரிதும் துன்புறுத்தினார்கள். மன்னர் முன் விசாரணை நடந்தது. சுவாமியை கழுமரத்தில் ஏற்றிவிடுமாறு மன்னன் கட்டளையிட்டான். இவரை கழுமரத்தருகில் கொண்டு சென்று கழுவிலேற்ற முயற்சி செய்கையில் அவர் இந்தப் பாடலைப் பாடி இறைவனை வழிபட்டார். அந்தக் கழுமரம் தீப்பிடித்து எரிந்து சாம்பலாயிற்று. மன்னன் அவர் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான் என்பது கதை)

திருவேடமாகித் தெருவிற் பயின்றெனைத் தேடிவந்து
பரிவாகப் பிச்சை பகருமென்றானைப் பதம் பணிந்தேன்
கருவாகும் ஓதக் கடற்கரை மேவக் கருதுமென்னை
உருவாக்கிக் கொள்ளவல்லோ இங்ஙனே சிவனுற்றதுவே. 2.

தாருக வனத்தில் சிவபெருமான் பிக்ஷாடனராக மண்டையோடு ஏந்தி தாருக வனத்து முனி பத்தினிகளிடம் பிக்ஷை கேட்டுப் போனது போல நானும் ஆண்டி வேடமிட்டு தெருத் தெருவாய் பிக்ஷை வேண்டி கேட்டுப் பெற்று உண்ணும் நேரம், பரிவோடு என்னை அணுகி பசிக்கிறது அன்னம் கொடு என்று என்னுடைய பிக்ஷை அன்னத்தைப் பங்கிட்டுக் கொள்ள திருவேடமிட்டு வந்த அந்த சிவபெருமானின் தாள் பணிகின்றேன். அப்படி உலகத்துக்கே பிக்ஷை அளிக்கும் சிவன் என்னிடம் வந்து பிக்ஷை கேட்டுப் பெற்ற என்னை தடுத்தாட்கொண்டு இனி பிறவி இல்லாத நிலை அளிக்கவல்லவோ, சம்சார சாகரத்தில் வீழ்ந்து கிடக்கவிருந்த என்னை அவன் தடுத்தாட்கொண்டிருக்கிறான்.

விட்டேன் உலகம் விரும்பேன் இருவினை வீணருடன்
கிட்டேன் அவர் உரை கேட்டும் இரேன் மெய் கெடாத நிலை
தொட்டேன் சுகதுக்கம் அற்றுவிட்டேன் தொல்லை நான்மறைக்கும்
எட்டேன் எனும் பரம் என்னிடத்தே வந்து இங்கு எய்தியதே. 3.

சதுர்மறை எனும் நான்கு வேதங்களுக்கும் எட்டாத பரம்பொருளான ஈசன் என்னைத் தேடி வந்து இங்கு அடைக்கலம் தந்த பிறகு இவ்வுலக பந்த பாசங்களையெல்லாம் விரும்பாமல் அறவே விட்டுவிட்டேன். வீண் வம்பு பேசும் வீணர்களுடனான உறவை நீங்கிவிட்டேன். அப்படிப்பட்டவர்கள் பேசும் பேச்சுக்களையும் காது கொடுத்துக் கேளேன். இப்பிறவிக்கு நன்மை பயக்கும் நிலைமையை அடைந்து விட்டேன். சுகம் துக்கம் எதுவும் என்னை பாதிக்காத நிலையை அடைந்து விட்டேன்.

அட்டாங்க யோகமும் ஆதாரம் ஆறும் அவ(ஸ்)த்தை ஐந்தும்
விட்டேறிப்போன வெளிதனிலே வியப்பொன்று கண்டேன்
வட்டாகிச் செம்மதிப் பாலூறல் உண்டு மகிழ்ந்திருக்க
எட்டாத பேரின்பம் என்னை விழுங்கி யிருக்கின்றதே. 4.

எட்டு அங்கம், அதாவது #அஷ்டாங்க யோகம், *ஆறுவகையான ஆதார நிலைகளையும், @ஐந்து வகையான அவஸ்தை எனும் அனுபவத்தினையும் கடந்து மேலே மேலே உணர்வால் சென்று அந்தப் பரவெளியெனும் சொர்க்கத்தை அடைந்த போது வியப்பான காட்சி கண்டேன். அப்படி வியந்து நின்ற அந்தக் கணத்தில் சந்திர மண்டலத்தினின்றும் பொழியும் அமிழ்த பானத்தை உண்டு களித்தேன். எளிதில் கிடைத்தற்கரிய பேரின்பத்தில் என் நினைவிழந்து மூழ்கிக் கிடக்கின்றேனே.

# அஷ்டாங்க யோகம்: எட்டு அங்கங்களாவன யம, நியம முதலான எட்டு யோகங்கள். அவை
யம, நியம, ஆசன, பிராணாயாம, பிரத்யாகார, தாரண, த்யான, சமாதி ஆகிய யோகங்களாம்.
*6 ஆதாரங்கள்: மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விஸுத்தி, ஆக்ஞை.
@ 5 அவ(ஸ்)தைகள்: ஜாக்கிரம், ஸொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம்.

(யோகம் பயில்வோர் தெரிந்து கொண்டு விளக்கம் பேற வேண்டிய மார்க்கங்கள் மேற்சொன்ன எட்டு அங்க, ஆறு ஆதார, ஐந்து அவஸ்தைகளைக் கடந்து மேலே செல்லுகையில் ஆங்கே பரவேளி தோன்றும். அப்பரவேலி நடுவே வட்டவடிவான ஜோதி, அதனின்றும் தோன்றும் அமிழ்தம் என்றெல்லாம் சொல்லப்படும் அமரத்தன்மை பற்றி சுவாமி குறிப்பிடுகிறார்.)

எரிஎனக்கென்னும், புழுவோ எனக்கெனும், இந்த மண்ணுஞ்
சரிஎனக்கென்னும், பருந்தோ எனக்கெனுந், தான் புசிக்க
நரி எனக்கென்னும், புல்நாய் எனக்கு என்னும், இந்நாறு உடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் இதனால் என்ன பேறெனக்கே. 5.

நம் உயிர் குடியேறி வாசம் செய்யும் இந்த பூத உடலை எப்படியெல்லாம் வளர்த்துப் பாதுகாத்தேன். சோப்பு என்ன, பவுடர் என்ன, வாசனைக்கு செண்ட் என்ன இதன் மேலே விதவிதமாய் உடைகள் என்ன, சிறு சிராய்ப்பு ஏற்பட்டால்கூட அதைப் பார்த்துப் பார்த்து மாய்ந்து போனது என்ன, அப்படிப்பட்ட உடலை விட்டு என் உயிர் நீங்கிய பின் பிணமென பெயரிட்டு, அதிக நேரம் வைத்திருந்தால் நாற்றமெடுக்கும் என்று கொண்டு போய் கொளுத்திட அனைவரும் அவசரப்படும் இந்த உடலைப் பார்த்து அக்னி பலே எனக்கு உணவாகப் போகிறது என்று எண்ணுமாம்; இதை மண்ணில் புதைக்கட்டும் இது எனக்கு உணவாகும் என்று புழு எண்ணுமாம்; மண்ணோ இதோ இந்த உடல் எனக்குத்தான் எனுமாம்; உயரப் பறக்கும் பருந்து சரிதான் இது எனக்குத்தான் எனுமாம்; நரியானது நான் உலாவும் சுதந்திரப் பிரதேசத்துக்குத்தானே இதைக் கொண்டு வரவேண்டும், அப்போது இது எனக்குத்தான் என்று எண்ணுமாம்; கேவலாமான பிறவியான நாய் இருக்கிறதே அதுகூட இது எனக்குத்தான் வேறு யாருக்கு? என்று கேட்குமாம். இப்படி இத்தனை பேர்கள் இந்த நாற்ற உடலுக்குக் காத்துக் கிடப்பது தெரியாமல் நான் இத்தனை காலமும் இதை எப்படியெல்லாம் பேணிப் பாதுகாத்தேன்.

அண்ணல்தன்வீதி அரசிருப்பாகும் அணிபடையோர்
நண்ணொரு நாலு ஒன்பதாமவர் ஏவலும் நண்ணுமிவ்வூர்
துண்என்பசிக்கு மடைப்பள்ளியான சுகமும் எல்லாம்
எண்ணிலி காலம் அவமே விடுத்தனம் எண்ண அரிதே. 6.

நம் உடலானது ஒரு சிற்றூர் என்று எண்ணிக் கொள்ளுங்கள். இந்த சிற்றூரை ஆளும் அரசன் நம்முடைய ஆன்மாவாகும். அந்த அரசன் உட்காரும் சிம்மாசனம் நம்முடைய இதயம். வாழ்வுக்கு உரிய *ஆறு ஆதாரங்கள் வீதிகள், அவைகளில் உலாவி வந்து, வாழ்வியல் தத்துவங்கள் **முப்பத்தியாறையும் படைகளாக எண்ணிக் கொண்டு, அந்த அரசன் பசியாற்றிக் கொள்ள மடைப்பள்ளியாக இவ்வுடலின் வயிற்றைப் பயன்படுத்திக் கொண்டு சுகமடைந்து வாழ்கிறான். இப்படிப்பட்ட வாழ்க்கையை எண்ணிப் பார்ப்பதும் சிறப்பானதே.

(நம் உடலில் ஆறு ஆதாரங்கள் உள. இவற்றைத் சைவ சித்தாந்தத்தில் தாமரை மலராக உருவகம் செய்வர். சக்கரம் எனவும் உரைப்பர். இது நான்கு இதழ் தாமரை வடிவம் உடையது. இதன் வடிவம் நாற்கோணத்தில் முக்கோணம். இதிலிருந்து மற்ற சக்கரங்கள் இயங்குவதால் இதனை மூலாதாரம் என்றார்கள். இங்குதான் குண்டலினி சக்தி இருக்கிறது.இந்த ஆறு ஆதாரங்கள் எவை என்பதை 4ஆவது பாடலில் விளக்கியிருக்கிறோம். (திருமந்திரம் 1704ஆம் பாடல்)

The Saiva Siddhanta analyses the universe into 36 Tattvas (principles). The 36 Tattvas arise from Maya, the material cause of the world. Suddha Maya is Maya in its primal state. From it arise the five pure principles called Siva Tattva, Sakthi Tattva, Sadasiva Tattva, Iswara Tattva and Suddhavidya Tattva. Siva functions through these five pure principles.

என் பெற்ற தாயரும் என்னைப் பிணமென்று இகழ்ந்து விட்டார்
பொன் பெற்ற மாதரும் போவென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன் பெற்ற மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார்
உன் பற்று ஒழிய ஒரு பற்றுமில்லை உடையவனே. 7.

இவ்வுடலை விட்டு உயிர் போயின பின்பு, இதைப் பெற்ற அன்னையும் இதை ‘பிணம்’ என்று சொல்லி விட்டாள்; பொன்னும் பொருளுமாக என்னிடம் பெற்றுக் கொண்ட மனைவி உட்பட பெண்டிரெல்லாம் இதைக் கொண்டு போங்கள் என்று உரைத்து விட்டார்; பெற்ற பிள்ளைகளோ இடுகாட்டில் நீர் நிறைந்த மண் குடத்தைத் தலையில் வைத்துக் கொண்டு இவ்வுடலை மூன்று முறை சுற்றி வந்து அக்குடத்தை பின்புறமாக வீசி குடத்தை உடைத்துவிட்டுப் போய்விட்டார், இப்படிப்பட்ட நிலையில் இறைவா உன்னைத் தவிர எனக்கு இனி பற்றுக்கோடு யார்?

கறையற்ற பல்லும் கரித்துணி ஆடையும் கள்ளமின்றி
பொறையுற்ற நெஞ்சமும் பொல்லாத ஊணும் புறந்திண்ணையும்
தரையிற் கிடப்பும், இரந்து உண்ணும் ஓடும் சகமறியக்
குறைவற்ற செல்வம் என்றே கோல மாமறை கூப்பிடுமே. 8.

மனித வாழ்க்கையில் எது குறைவற்ற செல்வம் தெரியுமா? வெற்றிலை, புகையிலை, சிகரெட், பீடி, பீடா போன்றவற்றைப் போட்டுப் போட்டுக் கறை படிந்த பற்கள் இல்லாமல் பளிச்சென்று விளங்கும் வெள்ளைப் பற்களும், மடிப்பு கலையாத பட்டு பீதாம்பர வஸ்திரங்கள் அன்றி அழுக்குப் படிந்திருந்தாலும் உடலை மறைக்கவோர் ஆடை; வஞ்சமில்லாததும், பொறுமையுள்ளதுமான நல்ல மனம்; தெய்வம் தந்த பூமியே படுக்கையாகவும்; பிச்சை வாங்கி உண்ண ஒரு திருவோடும் ஆக இவைகளே நிரந்தர செல்வம் என்று நம் வேதங்களும் சொல்லுகின்றன.

எட்டுத் திசையும், பதினாறு கோணமும் எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு சோதியை மூடரெல்லாம்
கட்டிச் சுருட்டித் தங்கட் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார்
பட்டப் பகலை இரவென்று கூறிடும் பாதகரே. 9.

இந்த அண்ட பெருவெளியின் எட்டுத் திசைகளிலும், பதினாறு கோணங்களிலும் எங்கும் நீக்கமற நிலவி பரவியிருக்கும் ஜோதி ஸ்வரூபனான பரப்பிரம்மத்தை, அற்புத ஜோதியை உணர்ந்து கொள்ளாத மூடர்கள் அவை பற்றிய சுவடிகளை மட்டும் துணியில் கட்டிக் கயிற்றால் கட்டித் தங்கள் கக்கத்தில் வைத்துக் கொண்டிருப்பார்களே தவிர அந்த உண்மையைப் புரிந்து கொண்டு மனதில் கொள்ளாதவர்கள். இவர்கள் பட்டப் பகலை இரவு என்று கூறிடும் பாதகர்கள் ஆவார்கள்.

(இதன் பொருள் இவ்வண்ட பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கின்ற சர்வ பரிபூரண சச்சிதானந்த பரிபூரணத்தை விளக்குகின்ற சாஸ்திர நூல்களை, புராண, இதிகாசங்களை படித்துப் புரிந்து மனதில் கொள்ளாமல் அந்த சுவடிகளை மட்டும் நூலினால் கட்டித் தங்கள் கக்கத்தில் வைத்துக் கொள்வதால், படித்துப் புரிந்து உணர்ந்து கொண்டதாய் ஆகிவிடுமா? என்பதுதான் கேள்வி. இந்தக் கருத்தை வலியுறுத்தும் ஒரு பாடல் இதோ:

ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்துபோய்
வாடி வாடி வாடி வாடி மாண்டுபோன மானிடர்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே.

தாயுமானவ சுவாமிகளும் “சித்தமிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே” என்று இறைவன் குடிகொள்ளும் இடம் மனமே என்பதை விளக்குவதையும் இங்கு சிந்திக்கலாம்.)

உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து ஐந்துண்டு உரைப்படியே
செருக்கித் தரிக்கத் திருநீறுமுண்டு தெருக்குப்பையில்
தரிக்கக் கரித்துணி ஆடையும் உண்டு எந்தச் சாதியிலும்
இரக்கத் துணிந்து கொண்டேன் குறையேதும் எனக்கில்லையே. 10.

என் நாவு எப்போதும் உரைக்க திரு ஐந்தெழுத்து இருக்கிறது; இறைவனை எண்ணி பெருமைப்பட்டு நெற்றியில் தரிக்கத் திருநீறும் இருக்கிறது; மற்றவர்கள் வீசியெறிந்த கரித்துணி குப்பைமேட்டில் இருக்கிறது நான் எடுத்து உடுத்துக் கொள்ள; பசியெடுத்தால் யார் எவர் எந்த சாதி என்பதைப் பொருட்படுத்தாமல் பிக்ஷை கொள்ளவும் மனம் துணிந்து விட்டேன், பின்னர் எனக்கு என்ன குறை?

(இன்னும் உண்டு)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *