செண்பக ஜெகதீசன்

 

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா

மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

                -திருக்குறள்- 82 (விருந்தோம்பல்)

 

புதுக் கவிதையில்…

 

அமுதம் கிடைப்பது எளிதில்லை

அதனை உண்பவர்க்கு அழிவில்லை,

அது

சாவா மருந்து-

அமரர்தம் விருந்து..

 

வந்த விருந்தினரை வெளியேயிருத்தி,

வீட்டினுள்

சொந்தமுடன் தான்மட்டும் உண்ண

இந்த அமுதம் கிடைத்தாலும்

வேண்டவே வேண்டாம்…!

 

குறும்பாவில்…

 

விருந்தினரை வெளியிருத்தித் தானுண்ணக்

கிடைத்த சாவுவரா

விண்ணோர் அமுதமும் வேண்டாமே…!

 

மரபுக் கவிதையில்…

 

அமரர் உலகின் உணவதுவாம்

அமுதம் உண்டால் சாவிலையாம்,

நமக்கும் அதுவே கிடைத்தாலும்

நம்மிடம் வந்த விருந்தினர்கள்

தமக்கும் சிறிதும் கொடுக்காமல்

தனியே அவரைப் புறத்திருத்தி

நமக்கு மட்டும் தனித்துண்ண

நலமிகு அமுதும் வேண்டாமே…!

 

லிமரைக்கூ…

 

வைத்துஉண் உன்னுடனே விருந்து,

வேண்டாம்நீ தனித்துண்ணக்

கிடைத்தாலும் அமுதெனும்சாகா மருந்து…!

 

கிராமியப் பாணியில்…

 

ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

விருந்துவந்தா ஒபசரிக்கணும்,

வந்தவர ஒபசரிக்கணும்

ஊட்டுக்குள்ள ஒபசரிக்கணும்,

குடுக்கிறது கூளுண்ணாலும்

கூடயிருந்து ஒபசரிக்கணும்..

 

வெசயம்இதத் தெரிஞ்சிக்கணும்

வௌரமாத்தான் நடந்துக்கணும்,

வந்தவிருந்த வெளியவச்சி

ஊட்டுக்குள்ள நீகுடிக்க

தேவாமுருதம் கெடச்சாலும்

தேவயில்ல தேவாமுருதம்,

சாவுவரா தேவாமுருதம்

தேவயில்ல தேவாமுருதம்..

 

தெரிஞ்சிக்கோ,

ஒபசரிக்கணும் ஒபசரிக்கணும்

விருந்துவந்தா ஒபசரிக்கணும்…!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறளின் கதிர்களாய்… (12)

  1. கிராமிய உபசரிப்பும் விருந்தோம்பலும் அருமையோ அருமை. விருந்துண்ட மன நிறைவு உண்டாகிவிட்டது தங்களின் கவிதை உபசரிப்பில்.

  2. திரு.சச்சிதானந்தம் அவர்களின் கருத்துரைக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *