சக்தி சக்திதாசன்

 

Begonia Tiger-Jul 13 09 Begonia_tiger

 

 

 

 

 

 

அன்பினியவர்களே !

 

மற்றொரு மடல், மற்றொரு வாரம். இணைவதில் ஈடில்லா மகிழ்ச்சி,

இதோ மாறுதலுக்காக போகோனியா டைகர் ( Bogonia Tiger) எனும் ஒரு கட்டுரையுடன் உங்கள் முன்னே.

என்ன இது புதுவிதமான சமாச்சாரம் ? எதைப் பற்றிய அலசலாகவிருக்கும் என்னும் எண்ணம் உங்கள் மனங்களில் ஓடுவது இயற்கை.

ஆமாம் இது புதுவிதமான தலையங்கம் தான் ஏனெனில் எனது விழிகளினூடக நான் பார்த்த ஒரு காட்சியின் புதிய பரிணாமம் என் மனதினுள் ஏற்படுத்திய உணர்ச்சிப் பிரவாகங்களின் வடிப்பு இது எனலாம்.

சில தினங்களுக்கு முன்னால் எமது இல்லத்திலுள்ள கன்சர்வேட்டரி (conservatory) அதாவது சூரியஒளியின் வெப்பத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் அறையினை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தேன்.

அந்த அறையினுள் பொதுவாக வீட்டினுள் அதாவது வெப்பத்தை விரும்பும் சிறிய செடிகளை வைத்து வளர்ப்பது வழக்கம்.அப்படியான செடிகளில் ஒன்றின் மீது என் பார்வை பட்டது. அதன் பெயர் ஆங்கிலத்தில் போகொனியா டைகர் என்பதாகும்.

என்ன அந்தச் செடியில் அப்படி என்ன பிரமாதத்தைக் கண்டு விட்டாய் என்று நீங்கள் புதிராக என்னை நோக்குவது தெரிகிறது.

ஆத்திரப்படாதீங்க, அவசரப்படாதீங்க சொல்றேன் கொஞ்சம் பொறுங்க . .. .

மனித வாழ்க்கையின் சுழற்சியை, காலத்தின் வேக ஓட்டத்தை அச்செடியின் உருவம் ஏனோ என் மனதில் உருட்ட ஆரம்பித்தது. அந்தச் செடியை அதே இடத்தில் இதன் முன்னால் எத்தனையோ தடவைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் முன்பொருபோதுமில்லாதவாறு என் மனதின் சிந்தனைச் சக்கரத்தை புதுவிதமான திசையில் உருட்ட ஆரம்பித்தது.

 சுமார் 28 வருடங்களுக்கு முன்னால் அப்போது எனக்குத் திருமணமாகி நான்கு வருடங்களிருக்கும், என் மகனுக்கு வயது ஒன்று கூட ஆகவில்லை ( ஓ. . . இப்போது நான் அவனை அண்ணாந்து பார்க்கும்படி வளர்ந்து விட்டானோ ?).

 இரும்பையே கடித்து ஜீரணமாக்கிவிடுவேன் என்னும் மூடத்தனமான தைரியம் அறிவுத்திறனை மறைத்து நிற்கும் இளரத்தம் துடித்து நிற்கும் வேளை.

 எனக்கு நானே முதலாளியாக இருப்பதே உலகத்தில் அதிசிறந்த பணி என்னும் ஒரு பிடிவாதம் மனதில் ஓங்கி வளர்ந்ததினால் சொந்தத்தொழில் நடத்துவதாக எண்ணி பணத்தை விரயம் பண்ணிக்கொண்டிருந்த நேரம்.

 ஒருநாள் காரில் சென்று கொண்டிருந்தபோது ஒரு வீட்டினுள் வளர்க்கும் செடிகள் விற்பனையாகும் கடை ஒன்றின் முன் நிற்கும் போது அங்கிருந்த ஒரு தாவரத்தின் மீது என் பார்வை பதிந்தது. ஏனோ அதை வாங்கி விட வேண்டும் என்னும் அவாவில் அதை வீடு கொண்டு வந்து சேர்த்து விட்டேன்.

எதற்காக இந்தக் கஷ்டமான நிலையில் இந்த அனாவசியச் செலவு என்று என் மனைவி கடிந்து கொண்டாலும் அதை மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்தாள்.

அதே “போகோனியா டைகர்” என்னும் அந்தச் செடிதான் ஏறத்தாழ 28 வருடங்களின் பின்னர் என் பார்வையில் பட்டது.

28 வருடகாலம் என்பது மனிதவாழ்க்கையைப் பொறுத்தவரை பல மாற்றங்களை உள்லடக்கியதாக இருக்கும். அந்தச் செடியின் பார்வையில் எனது வாழ்க்கையில் இவ்விருபத்தைந்து வருடகால வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் எப்படி இருந்திருக்கும் என்று நான் எண்ணத் தலைப்பட்டமையே என்னெஞ்சில் ஏற்பட்ட உணர்ச்சிப் பிரவாகங்கள்.

ஒரு குழந்தையின் தந்தையாக, ஒரு பதின்ம வயதுக் குழந்தையின் தந்தையாக இன்று ஒரு இளம் டாக்டரின் தந்தையாக மாற்றமடைந்த என்னைப்பற்றிய அச்செடியின் பார்வை எத்தகையதாக இருந்திருக்கும்?

அதே சூழலில் எனது மாற்றங்களுக்கு ஈடு கொடுத்து முழுநேர வேலை பார்த்துக் கொண்டு என் மகனின் அன்புத்தாயாக தனது பணியையும் கவனித்துக் கொண்டு , மாலைநேர வகுப்புகளின் தனது பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட எனத்ஹு மனைவியின் மீதான அச்செடியின் பார்வை எவ்வாறு இருந்திருக்கும் ?

அதுமட்டுமா? ஒரு இருபத்திஜந்து வருடகாலம் மனிதன் வாழ்வதென்பதே கடினமாக இருக்கையில் அச்செடி எவ்வாறு இவ்விருபத்தைந்து வருடகாலம் உயிர்தப்பி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதே அதிசயம்தான்.

அச்செடி தனது வாழ்வி அந்திமகாலத்தை அடைகின்றது போலத் தெரிந்தவுடன் அதன் ஒரு கிளையைக் கிள்ளி வேறொரு சிறு தொட்டியில் நாட்டி அதன் அதன் வாழ்வை நீட்டி வைத்த என் மனைவியின் விடாமுயற்சி என்னைத் திகைப்பினுள் ஆழ்த்துகிறது.

என் வாழ்க்கையில் பொறுப்புக்களின் கனத்தைப் புரியாதவனாக கண்மூடித்தனமாகச் செலவு செய்து கொண்ட காணும் புதுவிதமான சாதனங்களை எனதுடையதாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நப்பாசை கொண்டு அலைந்த என்னுள் நிகழ்ந்த மாற்றங்களை அச்செடியின் பார்வையின் கோணத்திலிருந்து நோக்கினால் எவ்வாறு இருக்கும் என்று எண்ணிப்பார்க்கையில் மனமே ஒருமுறை சிலிர்த்துப் போகிறது.

அன்றிலிருந்து இன்றுவரை மூன்று இல்லங்களை மாறி, மாறி வந்த அந்தச் செடியின் மனதில் வித்தியாசமான இல்லங்களில் வித்தியாசமான இடங்களில் தான் தரித்திருந்த நினைவுகள் பதிந்திருக்குமா?

விந்தை மிகு உலகத்தில் விசித்திர வினாக்கள்!…

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

 

http://www.thamilpoonga.com

http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *