குன்றக்குடி அடிகள்

32. ஒழுக்கமுடைமை

மனிதனை வளர்ப்பது ஒழுக்கம். மனிதனை உயர்த்துவது ஒழுக்கம். ஒழுக்கம் என்ற சொல் மக்கள் மன்றத்தில் பரவலாகப் பேசப்பெறுவதே. தீய பழக்கங்கள் வேறு; ஒழுக்கம் வேறு. தீய பழக்கங்களை ஒழுக்கதிற்குள் அடக்கலாம். ஆனால் ஒழுக்கதிற்குள் தீய பழக்கம் வராது. கள்ளுண்ணல் முதலிய குற்றங்கள் தீயபழக்கங்கள் இந்தக் குற்றங்கள் ஒழுக்கக் கேடுகள் அல்ல.

ஒழுக்கம் – ஒழுகுதல். மற்றவர்களுடன் மோதாமல் மற்றவர்களுக்குத் தீங்கு நேராமல் நடப்பது – வாழ்வது ஒழுக்கமுடைமை. “உலகத்தோடு ஒட்ட ஒழுகல்” ஒழுக்கம் என்றும் திருக்குறள் கூறுகிறது. மனிதன் ஒரு சமூகப் பிராணி. மனித வாழ்வு ஒரு சமூக வாழ்வு. மனிதனின் சமூக வாழ்வுக்குத் தீங்கு செய்வனவெல்லாம் தீய பழக்கம். ஒழுக்கக்கேடு தவிர்க்கத்தக்கது.  மனிதனைச் சமூக வாழ்வில் நிலைபெறச் செய்வனவெல்லாம் ஒழுக்கமுடைமை.

“உலகம் வேண்டுவது ஒழுக்கமே!
சுயநலம் தீய ஒழுக்கம்!
சுயநலம் அற்றதே நல்லொழுக்கம்!”

என்றார் விவேகானந்தர். சுயநலம் தீய ஒழுக்கம். பொது நலத்திற்கு எதிரான சுயநலம் தீய ஒழுக்கம், பொது வாழ்வைச் சிதைக்கும் சுயநலம் தீய ஒழுக்கம்.

நாம் தமிழர்கள், நாம் இந்தியர்கள், நாம் மனிதர் என்ற நியதிக்கேற்ப ஒழுகத் தவறுதல் கூடாது. தமிழர்களாகவும் இந்தியர்களாகவும் மனிதர்களாகவும் வாழ்வதே நல்லொழுக்கம்.

நாடுகள் சுதந்திரம் பெற்றபின் “குடிமைப் பயிற்சி” என்பது மலிந்து வருகிறது. குடிமைப் பண்பு என்றால் என்ன? ஒருவர் வாழும் ஊரோடு ஒத்திசைந்து வாழ்தல் குடிமைப் பண்பு. இனம், மொழி, சாதி, மதச் சண்டைகள் போடுதல் தீயொழுக்கமாகும். எல்லோரும் ஒரு குலம்; எல்லோரும் ஓர் இனம் என்று எண்ணுதல் நல்லொழுக்கமாகும்.

நல்லொழுக்கம் நாட்டின் குடிகளைத் தழீஇயதாக விளங்கும். நல்லொழுக்கத்தை ஒருமைப்பாடு என்று கூறினாலும் கூறலாம். மனிதகுல ஒருமைப்பாடே நல்லொழுக்கம். எல்லா உயிர்களிடத்திலும் எத்துணையும் பேதமுறாது, மகவெனப் பல்லுயிரையும் ஒக்கப் பார்த்து ஒழுகுதலே ஒழுக்கம்.

குடிமைப் பண்பிலாதார்,ஒருமைப்பாட்டுணர்வு இலாதார்.  உலகந்தழீஇய செந்தண்மை இலாதார் ஒரு நாட்டின் குடிமக்களாதல் இயலாது. ஏன்? அவர்கள் மனிதக் கணக்கில்கூட வரமாட்டார்கள். அவர்களை இழிந்த பிறப்பு என்று ஏசுகிறார் திருவள்ளுவர்.

ஒன்றே குலம்; எல்லோரும் ஒருகுலம்; எல்லோரும் ஓர் இனம். ஒப்புரவுடன் ஒத்திசைந்து வாழ்தல், உலகம் உண்ண உண்ணல், உலகம் உடுத்த உடுத்தல், வாழ்வித்து வாழ்தல் – இதுவே ஒழுக்கம்.

இந்த ஒழுக்கம் வளர, உழைத்து உண்ணுதல். உண்பித்து உண்ணுதல் என்ற நடைமுறை துணை செய்யும்.

இந்த நல்லொழுக்கதிற்குப் பகையான ‘பிறர் பங்கைத் திருடுதல்’, பிறர் வருந்த வாழ்தல் ஆகியன தவிர்க்கப் பெறுதல் வேண்டும்.

ஒழுக்கமே மானுடத்தின் விழுப்பம்; சிறப்பு. ஒழுக்கமுடைய உலகம் வளரும்! வாழும்!

 

 

 

 

 

 

_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *