உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்த சாதனை!

3

பவள சங்கரி

தலையங்கம்

INDIA-SCIENCE-SPACE

நம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ ரூ. 450 கோடி செலவில் தயாரித்துள்ள மங்கள்யான் செயற்கைக் கோள், செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் வகையில் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. சென்ற 3ம் தேதி (நவம்பர், 2013) காலை 6.08 மணிக்கு இதற்கான கவுண்டவுன் தொடங்கியது. செவ்வாய் கிரகத்தை நெருங்க இந்த செயற்கைக் கோள் 78 கோடி கி.மீ தூரம், அதாவது 15 மாதங்கள் வினாடிக்கு 137 கி.மீ வேகத்தில் பயணம் செய்கிறது. சென்ற செவ்வாய்க்கிழமை, 5-11-2013 அன்று பிற்பகல் 2.38 மணிக்கு ,விண்வெளி ஆராய்ச்சியின் பெரும் சாதனையாக அனைத்துலக நாடுகளும் கருதும் இப்பயணம் , ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் ஏவு தளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. 25 ராக்கெட் மூலம் கிளம்பியுள்ளது. இது பதினேழாயிரத்து நானூற்றி பதினைந்து கிலோமீட்டரை 44 நிமிடங்களில் கடந்து, பூமியின் நீள்வட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும். சந்திராயன் 1 திட்டத்தின் மூலம், சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதை ஏற்கனவே இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிரகத்தில் மக்கள் வாழுவதற்குத் தேவையான தண்ணீர் மற்றும் மீத்தேன் என்ற இராசயணப் பொருள் உள்ளதா மற்றும் அதற்கான தட்பவெப்ப நிலை சரியாக உள்ளதா என்பதை தீவிரமாக ஆய்வு செய்வதே இந்த மங்கள்யான் விண்கலத்தின் முக்கியப் பணி. பூமியைச் சுற்றி வலம் வரும் வகையில் மங்கள்யான் விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு பின், செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசைக்குள் சென்று, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் அங்கிருந்தபடியே அதன் மேற்பரப்பு முழுவதையும் உளவு பார்த்து தகவல்களை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருக்கும். 300 நாட்கள் இப்பயணம் தொடர்ந்து, 2014 செப்டம்பர் மாதம் 24ம் தேதி செவ்வாய் கிரகத்திற்கான சுற்றுப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை ஏவியிருக்கும், ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகளின் பட்டியலில் இன்று நம் இந்தியாவும் சேர்ந்திருப்பதும் ஆசியாவிலேயே முதல் நாடு என்ற வகையிலும் விஞ்ஞான வளர்ச்சியிலும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்திருப்பதும் ஒரு இந்தியராக நாம் பெருமைகொள்ள வேண்டிய விசயம். எந்த நாட்டின் உதவியும் இன்றி, முற்றிலும் நம் தொழில்நுட்பத்தைக்கொண்டே இவ்வரிய சாதனையை விஞ்ஞானி, கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான நம் இஸ்ரோ விண்வெளி ஆய்வு மையம் செய்திருக்கிறது. இவ்வரிய சாதனையில், அல்லும், பகலும் அயராது உழைத்து வெற்றி கண்ட விஞ்ஞானிகள் அனைவருக்கும் நம் வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்! இதுவரை 19 விண்கலன்கள் நம் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

INDIA-SCIENCE-SPACE

நம் தமிழ் நாட்டின், நெல்லை மாவட்டத்தின், நாங்குனேரி வட்டம், கோதைசேரி கிராமத்தைச் சேர்ந்த விஞ்ஞானி திரு. சுப்பையா அருணன் மங்கள்யான் செயற்கைகோளின் திட்ட இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் . கோவையில் பி.இ, இயந்திர பொறியியல் வல்லுநர் பட்டம் பெற்ற இவர், 1984ம் ஆண்டு இஸ்ரோ மையத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது பெங்களூருவில் பணியாற்றுகிறார். இவருடைய தந்தை சுப்பையா அவர்கள் கூடங்குளம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர். இவரால் நம் தமிழகமே இன்று பெருமை கொள்கிறது. அவருக்கு வல்லமையின் மனமார்ந்த வாழ்த்துகள்.

நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி – 1 ஏவுகணையும் இன்று காலை வெற்றிகரமாக சோதித்துப்பார்க்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதத்தைச் சுமந்து சென்று தாக்கக்கூடிய இந்த ஏவுகணை ஒடிஷா மாநிலத்தின் கடற்கரைப் பகுதியான பாலாசோர் அருகேயுள்ள வீலர் தீவில் காலை 9.30 மணியளவில், வங்கக் கடலில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என்று அதன் இயக்குநர் எம்.வி.கே.வி. பிரசாத் அவர்கள் தெரிவித்திருக்கிறார். இதற்கும் நம் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்!

படங்களுக்கு நன்றி :

http://news.sky.com/story/1164028/india-mars-probe-mangalyaan-blasts-off

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “உலக அரங்கில் இந்தியாவை தலை நிமிரச் செய்த சாதனை!

  1. சாதனை படைத்து நம்மைத் தலை நிமிரச்செய்த இந்திய விஞ்ஞானிகளுக்கு தலை வணங்குகிறோம்.
    சு.கோபாலன்

  2. செவ்வாய்க் கிழமை அன்று [நவம்பர் 5, 2013] ஆசியாவிலே முதன் முதல் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் “மங்கல்யான்” இந்தியச் சுற்றுளவி பற்றி வல்லமை வாசகருக்கு அறிமுகம் செய்ததற்குப் பாராட்டுகள் பவளா.

    இது மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் சாதனை.  பூமியிலிருந்து 470 மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்யும் செந்நிறக் கோளை அண்டி அதன் ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கி துணைக்கோளைச் சுற்ற வைப்பது ஓர் அரிய இமாலய முயற்சி.  

    இதில் இந்தியா வெற்றி பெற்றால் செவ்வாய்க் கோள் பயணத்தில் உலகில் நான்காவது தேசமாக [ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பா] இந்தியா உன்னத பீடத்தை அடையும்.

    சி. ஜெயபரதன்.

  3. இந்தியர் அனைவரும் பெருமைபடும் செய்தி. அதைனை தலையங்கத்தில் கொடுத்தது பாராட்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *