தமிழ்த்தேனீ

பக்கத்தில் படுத்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் குறட்டை அவர் காதைப் பிளந்தது.

எதுக்கு இப்பிடி குறட்டை விடறா இவ, என்றபடி காமாக்‌ஷியை மெதுவே தொட்டார், சற்றே குறட்டை நின்றது.

சற்று நேரம் கழித்து மீண்டும் அதே குறட்டை ஒலி.

ஹுஹும்  இங்கே தூங்க முடியாது என்றபடி சொக்காயை எடுத்து மாட்டிக்கொண்டு வராந்தாவுக்கு வந்து ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார் சபேசன்.

புகை வளையம் சுழன்றது, அதென்னவோ இந்தப் புகை பிடிக்கும் வழக்கம் தப்போ, தவறோ, சரியோ, இதைப் பிடிக்கும்போது அப்பிடியே சுழல் சுழலா வளையம் விட்டு அந்த வளையம்  சுழன்றுகொண்டே மெதுவே கொஞ்சம் கொஞ்சமாகக் காற்றிலே அலையும் கருமேகம் போல் அலைவதை வேடிக்கை பார்ப்பது அவருக்கு பிடிக்கும்.

அது சரி இந்தக் குறட்டைக்கு மட்டும் ஆண் பெண் பேதமே கிடையாதோ!

எல்லாரையும் ஆட்டிவைக்கறதே என்று நினைக்கையில் அவருக்கு ஒரு புறம் சிரிப்பாக வந்தாலும்  மறு புறம் கோவமாக வந்தது.

அவராலே ஒரு சின்ன சத்தம் கேட்டாக்கூட தூங்க முடியாது, மேலே ஏதாவது  பட்டாக் கூட முழிப்பு வந்துடும். ரொம்ப சென்சிட்டிவ் என்ன செய்யறது அவர்  வாங்கி வந்த வரம் அப்படி.

வாயைத் திறந்து கொண்டு தூங்குவதால்தான் குறட்டை வருகிறது; அது அவ்வளவு ஆரோக்கியமுமல்ல என்று பல முறை அவளுக்கு சொல்லியாயிற்று.

அவளைச் சொல்லியும் குத்தமில்லே!  காலையிலே எழுந்ததுலேருந்து ஏதாவது வேலை செஞ்சிண்டே இருக்கா  படுக்கும் போது அலுத்துப் போறது பாவம்.

சரி ஏதாவது நல்ல டாக்டரை கன்ஸல்ட் பண்ணலாம் என்று நினைத்தபடி இன்னமும் ஆழமாக  குறட்டையைப் பற்றி சிந்திக்கத் ​தொடங்கினார்.

சுரீரென்று விரலில் யாரோ சூடு போட்டார்கள். ‘ஆ’ என்று கத்தினார்.

கையில் இருந்த சிகரெட் கங்கு அவர் விரலைப் பதம் பார்த்திருக்கிறது.

‘சீ ‘என்றபடி அதைத் தூக்கி எறிந்தார்.

சில நேரங்களில் இப்படித்தான் பல விஷயங்களை தூக்கிப் போடணும்னு தோணும். தூக்கியும் போடுவோம். ஆனால் நிரந்தரமா தூக்கிப் போட முடியாது.

சிகரெட்டை மட்டும் இல்லை, பலவற்றை, இது ஒரு அவஸ்தை வாழ்க்கையில், தீர்மானமில்லாத வாழ்க்கை.

குறட்டை விடுவதற்கு முக்கிய காரணம் வாய்வழியே மூச்சு விடுவதாகும். இதனால் உள் நாக்கு அதிர்வதையே குறட்டை என்கிறோம். மேலும் அடினாய்ட்ஸ் வளர்ச்சி அல்லது மூக்கு வழியில் சிறிதளவு அடைப்பு அல்லது வேறு காரணத்தால் வாய் வழியே மூச்சு விட நேரிடலாம். இதன் காரணமாக குறட்டை விட நேரிடலாம்.”  என்று விக்கி பீடியாவில் படித்தது நினைவுக்கு  வந்தது.

முதல்லே இவளை டாக்டர்கிட்ட காட்டணும்  என்று நினைத்துக் கொண்டு திரும்பினார்  .

சரி போய்ப் படுத்துக்கலாம் தூக்கம் வருகிறதான்னு பாப்போம் என்று தீர்மானித்து  மறுபடியும் போய்ப் படுத்தார் .

புரண்டு புரண்டு படுத்தவர் தாகம் எடுக்கறா மாதிரி இருக்கு. லைட்டைப் போட்டா  இவ கத்துவா தூக்கம் கலைஞ்சு போச்சுன்னு. சரி, இருட்டிலேயே  தண்ணீர் பாட்டிலை தேடி கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு  மறுபடியும் வந்து படுக்கலாம் என்று இருட்டிலேயே துழாவித் துழாவி கட்டிலருகே வந்தவர்   கட்டிலின் கால் மேலே இடித்துக்கொண்டு ‘ஆ ஆ’  என்று வலி தாங்க முடியாமல்  கத்தினார்.

பேசனும் காமாக்‌ஷியும் குடும்ப வைத்தியர் சௌந்தர்ராஜனினின் எதிரே உட்கார்ந்திருந்தனர்.

டாக்டர்  சௌந்தர்ராஜன் சொல்லிக் கொண்டிருந்தார், “இதோ பாருங்கோ  நல்லா செக் பண்ணியாச்சு; எதுவும் ப்ரச்சனை இல்லே, சாதாரணமா குறட்டை விடறது சகஜம்தான், படுக்கும் போது நாம வாயைத் திறந்துண்டு தூங்கக் கூடாதுன்னு நெனைச்சுண்டு படுத்துக்கணும். நாம  மனசைக் கட்டுப் படுத்தினா எதை வேணா ஜெயிக்கலாம்.

மூக்காலே மூச்சு விட்டாலே குறட்டை நின்னுடும். வேற எதுவும் பயப்படறா மாதிரி இல்லே” என்றார்.

“அது இல்லே டாக்டர் இவர் விடற  குறட்டையைக் கூட சமாளிக்கலாம், ஆனா  தூக்கத்திலே நடக்கறாரு இவரு, இவர் தூக்கத்திலேயே எழுந்து,  எங்க வீட்டு நாயி இருக்கே டாமி  அதைக் கட்டிப் போடற இடத்துலே போயி நிக்கறாரு.

அதுகிட்ட போயி அன்பாத் தடவிக் குடுக்கறாரு. ஏற்கெனவே அதுக்கு இவரைப் பார்த்தாலே ஆகாது; கடிச்சு வைக்கப் போறதேன்னு பயமா இருக்கு டாக்டர்.

இப்போ பாரு குறட்டை நின்னு போச்சு  அப்பிடீன்னு அதுகிட்டே ஏதோ பேசிண்டு இருக்காரு பாதி ராத்திரியிலே.

அது உர் உர்ன்னு கத்துது.

தூக்கத்திலே நடக்கற வியாதிக்கு ஏதாவது மருந்து குடுங்க, இவரை எப்பிடியாவது  குணப்படுத்துங்க டாக்டர்” என்றாள் காமாக்‌ஷி.

சுபம்

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “வளையம்

  1. வீட்டுக்கு வீடு வாசப்படி. கட்டிலுக்குக் கட்டில் குறட்டை!

  2. குறட்டை விடுதல் பற்றி ’வல்லமை’யில் தங்கள் ’அஷ்டோத்திர சத’ படைப்பினைப் படித்து ரசித்தேன்.
    ஒரு முறை ஹவ்ரா மெயிலில் விசாகபட்டிணம் செல்லும் போது சக பயணி ஒருவர் பயங்கரமாகக் குறட்டை விட்டு அடியேனின் தூக்கத்தை கலைத்து விட்டார். அடுத்த நாள் காலையில் வண்டி விஜயவாடா சேர்ந்தது. இருவரும் காபியை சுவைத்தவாறு பேச ஆரம்பித்தோம்.
    மெள்ள நான் அவரது முன்னிரவு குறட்டையைப் பற்றி பிரஸ்தாபித்தேன். பொறுமையாக என் புகாரைக் கேட்டபின், “ஐயா, நீங்கள் சொல்கிறீர்கள், நான் சொல்லவில்லை. அதுதான் வித்தியாசம்” என்று ஒரு போடு போட்டார்.
    அன்புடன்
    ஸம்பத்

  3. ஹாஹாஹா, இந்தக் குறட்டை விடுவதில் மன்னர்கள் எல்லாம் இருக்காங்க.  எங்க சொந்தக்காரர் ஒருத்தரோட குறட்டையிலே பக்கத்து வீட்டிலே இருக்கிறவங்க கூடத் தூங்க முடியாது! :))))

    கடைசியில் அவருக்குத் தூக்கத்தில் நடக்கும் வியாதினு சொல்லிட்டீங்களே? 

  4. குறட்டை விடுபவர்கள் அரட்டைக்கெல்லிகள் என்று சொல்கிறார்களே, நிசமா?

  5. குறட்டை பிடிக்காது, ஆனால் இந்தக்குறட்டை ரசிக்கவைத்தது.

Leave a Reply to innamburan

Your email address will not be published. Required fields are marked *