வணக்கம், வாழியநலம்

கார்த்திகை முதல்நாள்.

கோடானுகோடி ஐயப்ப பக்தர்கள் ஐயனின் தரிசனம் விழைந்து
பரவசத்தோடு துளசிமணிமாலை தரித்து விரதம் தொடங்கும் தினம்!

இந்நன்னாளில் ஐயப்பன் மீது இயற்றப்பட்ட பஞ்சகமும், ஐயனின் எண்ணெய்வண்ண ஓவியமும் இணைப்பாக..

Ayiappan Finished Oil on Canvass 2

அடியொன்றுக்கு ஒற்றெழுத்து நீங்கலாக 21 எழுத்துகள் என்று அமைந்த விருத்தப் பாக்கள்…

பார்க்க, படிக்க, ரசிக்க..

நடைவழி தொடரும்…

சு.ரவி

ஐயப்பன் பஞ்சகம்

சீலமுயர் வாழ்வை யொரு யோகமெனவே பயிலும் சாதகர்தமைக்
காலனொருபோதும் அணுகாதபடி நாளுமவன் காத்தருளுவான்!
நீலமுகி லாடுமலை சோலைபல சூழுமலை நீலிமலையாம்
வாலியணுகாதமலை வாழுமிறை பாதமலர் வாழ்த்துமனமே!

யானெனதிலாத நிலையோடுபல காடுமலை ஏறிவருவார்
தானவர்தம் காவலென வீடுமனை வாசலவன் காத்தருளுவான்!
யானைகள் உலாவுமலை, வானரமி லாதமலை யாளுமரசன்
தேனமர் துழாய் புரளும் தோளழகன் பாதமலர் தேடுமனமே!

எண்ணிய எலாமருளும் ஏழைபங்காளான் சிவபாலன் இவனை
நண்ணும் அடியார்களொருபோதும் நலியாதபடி காத்தருளுவான்
திண்ணிய மரங்கள் உயர் கானகம் அடர்ந்தமலை காந்தமலைமேல்
விண்ணிலெழு ஜோதிமல ரானபர தேவனை விரும்பு மனமே

பூரணை மணாளனவன், புஷ்கலையின் காதலனைப் போற்றுமடியார்
தாரணியில் பேறு,புகழோடு பல காலமுறக் காத்தருளுவான்!
நாரணியும், ஆறணியும் நாயகனும் கூட உருவாகி மலை மேல்
பூரண நிலாவென உலாவும் அவன் பொன்னடிகள் எண்ணு மனமே!

மேதினியில் ஏதிலிகள் தோழனவன் மாமலையைத் தேடுமடியார்
சோதனையுறாதபடி, சோர்வு தழுவாதபடி காத்தருளுவான்!
வேதஒலி சூழுமலை,வேடுவரில் யோகியவள் வாழுமலை மேல்
நாதவடிவானவனை, பூதகண நாயகனை நண்ணு மனமே!

சு.ரவி

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “ஸ்வாமியே சரணம் ஐயப்பா!

  1. Sairam, SvAmi sharaNam.  aintu-malai ANDaruLum ayyan-padam chindayinile, vandaruLa veNDum mozhi tandaruLum Asu-kaviye. May He ever shower His infinite Grace on you.  SvAmi sharaNam, Sairam.

  2. அற்புதம் படமும் பாடலும் தோழா….

    “வீறுபுலி வாகனமு லாவுமுகம் ஒன்று
    வாவருடன் தோழமைகு லாவுமுகம் ஒன்று
    மாறுபடு மோகினிசு மந்தமுகம் ஒன்று
    மேலரவம் பூணுமரன் தந்தமுகம் ஒன்று
    மாறன்வழி போகாமல் மேய்க்கும்முகம் ஒன்று
    ஏறுமடி யார்கள்பயம் போக்குமுகம் ஒன்று
    கூறும்சர ணாகதியை கேளுமுகம் ஒன்று
    கானிலுறை காந்தசப ரீசமணி கண்டா”….

  3. அன்பின் இனிய சங்கர்,
    உங்களுடைய “நீ இல்லாமல் நானில்லையே” தர்பாரி கானடா போலவே இனிமையான பாராட்டுகளுக்கு நன்றி!

    நண்பா,( க்ரேஸி) மோஹன்,

    உன்னுடையசந்தக்கவிதைக்கும், அன்பு வார்த்தைகளுக்கும் நன்றி!

    இந்தப் பதிவுகளில் நான் எழுத இருக்கும் ஐயப்பன் திருப்புகழ்ப் பாடல்களே உனக்கு நான் தெரிவிக்கும் நன்றியாக அமையட்டும்…

    என்றும் நிலைத்த நட்புடன்,

    சு.ரவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *