மாறி வரும் சமுதாயத்தில் பொருளாதார மாற்றங்கள்

0

பவள சங்கரி

தலையங்கம்

நம்முடைய பொருளாதாரத்தை பெரிதாகப் பாதிப்பு ஏற்படுத்துவதில் முக்கியமானது அந்நிய முதலீடுகள் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள். அந்நிய முதலீடுகள், ஒரு சிலவற்றைத் தவிர, பெரும்பாலும் முதலீட்டாளர்களின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே, ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பின்னாட்களில் இதனால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்ற வல்லுநர்களின் எச்சரிக்கையையும் மீறி முதலீடுகள் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ரூபாயின் மதிப்பை ஏற்றுவதும் , இறக்குவதும் அந்த முதலீட்டாளர்களின் கையில் போய்விடுகிறது. இதைத் தடுப்பதற்கு நமது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்யப்படும் எரிபொருள் போன்ற அனைத்துப் பொருள்களும் இன்று விலையுயர்ந்து இருப்பதால், பணவீக்கமும் அதிகரித்து பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக, நமது நாட்டில் 40 சதவீதத்துக்கும் மேல் உள்ள நடுத்தர வருவாய்ப் பிரிவு மக்கள் தங்களது வருமானத்திற்குள் அத்தியாவசிய செலவுகளுக்காகக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலையிலேயே உள்ளனர். பணப்புழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளதால், நுகர்வோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பிற்கு ஈடாக அமெரிக்க டாலரின் மதிப்பு இன்று ரூபாய் 62.57 ஆக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோலியப் பொருட்கள் உபயோகிப்பதை இதுவரை வரைமுறைப்படுத்தப்படவில்லை. ஒரு ஆண்டிற்கு மிகச் சாதாரணமாக குறைந்தபட்சம் ஒரு லட்சம் ஊர்திகள் அதிகமாகிக் கொண்டிருக்கின்றன. நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பை அதிகம் கரைப்பது இந்த பெட்ரோலியப் பொருட்கள்தான் அல்லவா? வாகன உபயோகிப்பின் பெருக்கத்திற்கு ஏற்ப மாற்று பெட்ரோலியப் பொருட்களை உபயோகிப்பதை ஊக்குவிக்க வேண்டியது தற்போதைய அவசரத் தேவை. இயற்கை எரிவாயுவின் விலை பெட்ரோலைவிட பாதிக்குப் பாதி குறைகிறது. பிரச்சனை இல்லாத வகையில் அந்த இயற்கை எரிவாயுவை உபயோகிப்பதற்கு அதிகமாக ஊக்குவிக்க வேண்டியது அவசியம். நம் இந்தியாவில் கிடைக்கக்கூடிய இயற்கை எரிவாயுவையும் கூட சரியான முறையில் பயன்படுத்தாமல் இருக்கிறோம் நாம். பெட்ரோல் எரிவாயு நகர்ப்புறம் அல்லாத பல இடங்களில் கிடைப்பதில்லை. முதலில் அனைத்துப் பெட்ரோலிய நிலையங்களிலும் இந்த பெட்ரோலிய எரிவாயு கிடைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டியதும் அவசியம். இரண்டாவதாக 1000 சி.சி வரை உல்லாச உந்துகளிலும், இரு சக்கர வாகனங்களில் 125 சிசி வரையிலும் இந்த பெட்ரோலிய வாயு உபயோகிப்பதை ஊக்கப்படுத்தலாம். வாகன தயாரிப்புகளிலும் இதை நடைமுறைப்படுத்துவது நலம். இதற்கான ஆய்வரங்கங்களை அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் வைத்திருக்க வேண்டியதும் அவசியம். அந்த ஆய்வரங்கங்கள் பெட்ரோலிய எரிவாயுவை உபயோகப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில், அதன் பலனும் முழுமையாக மக்களை சென்று அடையும். இந்த இரு விசயங்களிலும் நம் நிதியமைச்சகமும், பெட்ரோலிய அமைச்சகமும் இணைந்து அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் உபயோகிப்பாளருக்கும் அரசாங்கத்திற்கும் மிக மிக பயனுள்ளதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *