அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 16 – லூவ்ரெ அருங்காட்சியகம் (Louvre Museum), பாரிஸ், ப்ரான்ஸ்

0

சுபாஷிணி ட்ரெம்மல்

டான் ப்ரவுனின் ‘டாவின்சி கோட்’ படம் பார்த்த பலருக்கு ரோபர்ட் லேங்க்டன் பாரிஸுக்கு வந்து முதலில் செல்லும் அந்த மாபெரும் அருங்காட்சியகக் கட்டிடம் ஞாபகம் இருக்கலாம்.   இப்படத்தில் ஏறக்குறை இறுதிக் காட்சிகளில் வருகின்ற  ஒரு கட்டிடத்தின் முன்புறத்தில் கண்ணாடியால் ஆன ஒரு பிரமிட் முன்புறத்தில் அமைந்திருப்பது போல இருக்க, அதனை வியப்புடன் பார்த்து தான் தேடிக் கொண்டிருக்கும் பொருள் அங்குதான் இருக்கின்றது என நினைத்துக் கொண்டு லேங்டன் மலைத்துப் போய் நிற்கும் காட்சியையும் பலர் இன்னமும் ஞாபகத்தில் வைத்திருக்கலாம். உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் அருங்காட்சியகத்துக்குத்தான் அழைத்துச் செல்லவிருக்கின்றேன்.

 Lovre_Suba1

லூவ்ரெ அருங்காட்சியக வளாகம் (2010)

652,300 அடிப்பரப்பில் ஒரு கட்டிடம். அப்படியென்றால் எவ்வளவு விரிவான ஒரு கட்டிடம் இது என்பதை கற்பனை செய்து பாருங்கள். உலகின் மிகப் பிரசித்தி பெற்ற, அதிகம் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு அருங்காட்சியகம் லூவ்ர என்பதும் ஒரு சிறப்புச் செய்தி.  http://en.wikipedia.org/wiki/List_of_the_most_visited_museums_in_the_world விக்கிபீடியாவின் இப்பக்கத்தின் நிலவரப்படி, உலகின் மிக அதிகமாக வருகையாளர்கள் வந்து செல்லும் அருங்காட்சியகத்தில் முதலிடம் பெறும் அருங்காட்சியகமாக இது திகழ்கின்றது. வருகையாளர் பட்டியல் குறிப்புப்படி வருடத்திற்கு 8 மில்லியன் வருகையாளர்களைச் சந்திக்கும் ஒரு கட்டிடம் இது என்றால் இதன் பெருமையை ஓரளவு ஊகித்து அறிந்து கொள்ளலாம் அல்லவா?.

லூவ்ரெ அருங்காட்சியகத்துக்கு 2010ம் ஆண்டில் முதன் முதல் செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. ஆனால் சென்ற போது மதியமாகியிருந்ததால் முழுமையாக இந்த அருங்காட்சியகத்தை நான்  பார்க்க முடியவில்லை. இரண்டறை மணி நேரங்கள் மட்டுமே இந்த மாபெரும் வரலாற்று சிறப்பு மிக்க கட்டிடத்தில் செலவிட முடிந்தது. முழுமையாக  மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும். அதற்கு ஒரு முழு நாள் நிச்சயமாக ஒதுக்கத்தான் வேண்டும். காலையிலிருந்து மாலை வரை இங்கு இருந்தால் தான் அனைத்தையும் பார்க்க முடியும். அது கூட போதாதோ என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

 Lovre_Suba2

நுழைவாயிற்பகுதி (2010)

லூவ்ரெ கட்டிடத்தைப் பற்றிய ஒரு அறிமுகம்.

இவ்வருங்காட்சியகம் செவ்வாய்க்கிழமை தவிர்த்து ஏனைய நாட்கள் காலை 9:30 லிருந்து பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும். இந்த அருங்காட்சியகத்தின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமாகிய http://www.louvre.fr/en சென்று எந்த நாட்களில் எத்தனை மணி வரை திறந்திருக்கும் என்ற விபரங்களை அறிந்து கொண்டு உங்கள் பயணத்தை முடிவு செய்துகொள்ளலாம். இதே வலைப்பக்கத்தில் அவ்வப்போது நடைபெறும் கண்காட்சிகள் பற்றிய விபரங்களும் இந்த அருங்காட்சியகம் பற்றிய தகவல்களும் நிறைந்திருக்கின்றன.

லூவ்ர அருங்காட்சியகத்தின் உள்ளே உள்ள கலைப்பொருட்களை காண்பதற்கு முன்னர் இந்தக் கட்டிடத்தைப் பற்றி ஓரளவு அறிமுகம் தருவதும் தேவை என்று நினைக்கின்றேன். இன்று அருங்காட்சியகமாக இருக்கும் இக்கட்டிடம் அடிப்படையில் 2ம் பிலிப்ஸ் 12ம் நூற்றாண்டில் கட்டிய ஒரு அரண்மனையாகும். தற்போது இருக்கும் முழு கட்டிடமாக அது ஆரம்பத்தில் இல்லை. 17ம் நூற்றாண்டில் பல புதிய பகுதிகளை மன்னர் 14ம் லூய்ஸ் இணைத்து விரிவாக்கினார்.  இவரது காலத்தில் தான் இந்தக் கட்டிடம் அரச குடும்பத்தின் அரும்பொருட்களைக் காட்சிக்கு வைக்கும் ஒரு அருங்காட்சியகமாக உருவெடுத்தது. பின்னர் ப்ரெஞ்ச் புரட்சியின் போது இக்கட்டிடம் பொதுமக்களுக்கான அருங்காட்சியகமாக உருவாக வேண்டும் என்று முடிவாகியது.

அருங்காட்சியகமாக 1793ம் ஆண்டு ஆகஸ்ட் 10ம் திகதி 537 ஓவியங்களுடன் இக்கட்டிடம் பொதுமக்களுக்குத் திறந்து வைக்கப்பட்டது.  நெப்போலியனின் காலத்தில் மேலும் பல அரிய பொருட்கள் இங்கே சேர்க்கப்பட்டன.  ஆகையினால் அக்காலகட்டத்தில் இந்த அருங்காட்சியகம் நெப்போலியன் அருங்காட்சியகம் என்ற பெயருடனேயே விளங்கியது. நெப்போலியன் பிற நாடுகளிலிருந்து கொண்டு வந்த பொருட்களை இந்தக் கூடத்தில் வைத்து தனது நாட்டிற்குப் பெறுமை தேடிக்கொண்டார்.  மட்ரிட்டில் உள்ள அரச மாளிகையின் அருங்காட்சியகத்தில் ஒரு பகுதியில் வெள்ளிப் பாத்திரங்களின் தனிக்காட்சிப்பகுதி உள்ளது. அங்கு சென்று வந்த போது நான் வாசித்து அறிந்து கொண்ட ஒரு வாசகம் தான் இப்போது எனக்கு ஞாபகம் வருகின்றது. போர்காலத்தில் ஸ்பெயினில் நெப்போலியனும் அவன் படைகளும் ஸ்பெயின் அரச மாளிகையிலிருந்து பல வெள்ளிப் பொருட்களை சூரையாடிச் சென்றனராம். அந்த வெள்ளிப் பாத்திரங்களை உருக்கி போருக்குத் தேவையான பொருளாதாரத்தை பலப்படுத்தினராம். இப்படி போரினால் இழந்த பல அரும் பொருட்கள் பற்றிய கதைகள் அவ்வப்போது நாம் அறிவது தானே!

 Lovre_Suba3

அருங்காட்சியகத்தின் உட்பகுதி வளாகம்  (2010)

பேரரசர்கள் 18ம் லூய்ஸ், 10ம் சார்ல்ஸ் காலத்திலும் தொடர்ந்து பல விலைமதிப்பற்ற பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் இணைந்தன.

 தற்போதைய நிலவரப்படி ஏறக்குறைய 35,000 காட்சிப் பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் நிறைந்திருக்கின்றன. இக்காட்சிப் பொருட்கள் பலதரப் பட்டவை. எகிப்திய நாகரிகத்தின் சான்றுகளின் காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப்பகுதி உள்ளது. கிரேக்க நாகரிகத்தின் காட்சிப் பொருட்களுக்காக  ஒரு தனிப்பகுதி; இஸ்லாமிய காட்சிப் பொருட்களுக்காக ஒரு தனிப் பகுதி; சிற்பங்களுக்காக ஒரு பகுதி; ஓவியங்களுக்காக ஒரு பகுதி இப்படி பலப் பல பகுதிகள். அனைத்து பகுதிகளுக்கும் நான் செல்லவில்லை. சென்று வந்த பகுதிகளில் என் மனதில் ஆழப்பதிந்த பகுதிகளில் உள்ள அருங்காட்சிப் பொருட்களைப் பற்றி சொல்லாமல் இருக்கமுடியாது. அத்தகவல்களில் சில பற்றிய பதிவாக அடுத்த பதிவு அமையும்.

முதலில்  நாம் அறை எண் 6க்குச் செல்வோமா? அங்கு தான்  டாவின்சியின் மோனா லிஸா இருக்கின்றாள்.

தொடரும்…!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *