குறவன் பாட்டு – 20

This entry is part 19 of 26 in the series குறவன் பாட்டு

களிறுகள் பலாக்கனி உண்ணுதல்

 

தாமரை இலையின் வடிவம் கொண்டு,

சாமரம் வீசும் செவிமடல் இரண்டும்,

வாரணத் தலைவனின் வெம்மை நீக்க,

சேவகம் செய்யும் பணிப்பெண் டீரோ!                                                                                                      161

 

நீண்டிருக்கும் கவைக் கோலால், தரையில்

நின்றுகொண்டே கனிபறிக்கும் மனிதன் போல,

நீண்ட குழல் கரம் நீட்டி,

நறுமணப் பலாவைக் களிறுகள் பறிக்கும்!                                                                                              162

 

துணி துவைக்கும் பெண்கள் போல,

தனிக் கரத்தில் காம்பைப் பற்றி,

கனி துவைத்துச் சுளை பிரித்து,

இனி துண்டு களிறுகள் களிக்கும்!                                                                                                 163

 

குயில்களின் கயமை

 

செங்குண்டு மணிபோலக் கண்கொண்டு, தீக்

கங்குண்டு வெந்தது போல் உடல்கொண்டு,

பொங்கிடும் இன்னிசைக் குரல் கொண்ட,

சங்கீதக் குயிலின் சிறுமதியை அவளறிவாள்!                                                                                     164

 

காக்கைக் கூட்டில் கயமையாய், அடை

காக்கும் தாய்மை மனமின்றி முட்டையை,

மாற்றாந் தாயிடம் விட்டுப் பறந்தது,

தாலாட்டுப் பாடாத இன்னிசைக் குயில்!                                                                                                   165

 

முட்டையி லிருந்து முதலில் வெளிப்பட்ட,

செங்கண் குஞ்சு பின்னங் கால்களால்,

கொட்டையை உந்தித் தள்ளும் வண்டெனப்பிற,

முட்டையைக் கீழே தள்ளி யது!                                                                                                                    166

 

கூட்டில் இருந்து விழுந்த முட்டையை,

மண்ணில் விழும்முன் குறத்தி பிடித்தாள்!

உச்சியிலி ருக்கும் கூட்டில் இருந்து,

முட்டையை எடுக்கும் சூட்சமம் அறிந்தாள்!                                                                                         167

 

 
 
பறவைகள் அம்பாகப் பாய்தல்
 
வானம் என்னும் வில்லில் இருந்து,

சீறிப் பாயும் அம்பைப் போல,

சிறகை மடித்துப் பறவைகள் கூட்டம்,

நீரில் பாய்ந்து மீன்களைப் பிடித்தன!                                                                                                   168

 

தலைமேலாய் உடல்திருப்பி மலம் கழிக்கும்,

மலைக்குகை வெளவால்போல், உடல்திருப்பி மீனோடு,

தலைநிமிர்த்தி மேல்நோக்கி பறவைகள் பாய்ந்தேறி

அலையில்லா ஏரிவிட்டு அகன்றவானை அடைந்தன!                                                                  169

சச்சிதானந்தம்

கவிஞர்

Series Navigation<< குறவன் பாட்டு – 19குறவன் பாட்டு-21 >>
Share

About the Author

has written 64 stories on this site.

கவிஞர்

5 Comments on “குறவன் பாட்டு – 20”

 • தேமொழி wrote on 6 December, 2013, 12:39

  ///மாற்றாந் தாயிடம் விட்டுப் பறந்தது,
  தாலாட்டுப் பாடாத இன்னிசைக் குயில்! ///

  இனிமையாகப் பாடத் தெரிந்து என்ன பயன்?  தாலாட்டுப் பாட மனமில்லையே இன்னிசைக் குயிலுக்கு, நல்லதொருகோணம், அருமை …அருமை கவிஞரே.  

  அன்புடன்
  ….. தேமொழி 

 • தனுசு
  தனுசு wrote on 7 December, 2013, 12:10

  யானையும், குயிலும் வாழும் வாழ்க்கை விவரித்து வந்த கவிதை, இன்னும் காட்டின் அருமைகள் தொடரட்டும்.

 • செண்பக ஜெகதீசன்
  -செண்பக ஜெகதீசன்... wrote on 7 December, 2013, 14:20

  தாமரை இலையாய்
  சாமரம் வீசிடும் தங்கள் கவிதை,
  அந்த மலராளுக்கேற்ற காணிக்கை..
  வாழ்த்துக்கள்…!

 • சச்சிதானந்தம் wrote on 8 December, 2013, 9:51

  வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் வழங்கியுள்ள நண்பர்கள் திரு.செண்பக ஜெகதீசன், திரு.தனுசு மற்றும் திருமதி தேமொழி அனைவருக்கும் என் நன்றிகள்

 • kalaiarasan wrote on 25 December, 2014, 19:02

  Chachi…send me an email with your mobile number..

Write a Comment [மறுமொழி இடவும்]

Security Question: (* Solve this math to continue) *


Copyright © 2015 Vallamai Media Services . All rights reserved.
வல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.