பிச்சினிக்காடு இளங்கோ 

 

இவையும்
இன்னபிறவும் இருக்கும்
இல்லமாய் மாறியது
கொஞ்சநாட்களாகத்தான்

இரண்டு ஆண்டுகளுக்குமுன்
அந்தவீட்டில்
மனம் திறந்த சிரிப்பில்லை

மகிழ்ச்சி விளைந்த
முகமில்லை

கையில் செலவுக்குப்
பணமில்லை

நிலம் கொஞ்சம்
இருந்தது
மாடும் மனையும்
இருந்தன
சொந்தங்கள் எல்லாம்
உண்டு பெரிதாய்….

ஆனால்
தீர்க்கப்படாத கடன்கள்
பெருகிக்கொண்டே

வழக்கமாய்வரும்
பண்டிகைகளும்
திருவிழாக்களும்
கடனோடுதான் வரும்
கடனோடுதான் போகும்

கடனோடு கொண்டாடி
கடன்படுவதே இயற்கை

மீளவும் வழியில்லை
மீட்பாரும் இல்லை

உழவுத்தொழில்
பண்பட்ட தொழிலே!
பண்பாட்டுத்தொழிலே!
பசிப்பிணிபோக்கும்
மருத்துவமே!
எனினும்

வறுமையை
விடுதலை
செய்யாத தொழில்

வறுமையிலிருந்து
விடுதலையை
வழங்காத தொழில்

நிலத்திற்கு அழகு
நெல்லும் கரும்பும்
சொல்லச் சொல்ல
அழகாக இருக்கும்
கழனியில் காண
கண்களும் மயங்கும்

இது உண்மை
உண்மையிலும் உண்மை

ஆனால்
அங்கே
அந்த
உழவனைக்காண
கவலையாய் இருக்கும்

அவன் முகத்தில்தான்
சோகம்
வலைபின்னியிருக்கும்

அவன் முகம்
சிரிப்பைச் செலவுசெய்ததில்லை

அவன் தேகம்
செழுமையைச் சொன்னதில்லை

கைரேகைகள்
காணாமற்போனக்
கைகளுக்குச்சொந்தக்காரன்

அவன்
உள்ளங்கை வெள்ளை
உள்ளமும் வெள்ளை

அவன்தான்
அரசியல் மையம்
அவனுக்காகத்தான்
அரசும் திட்டமிடும்

எல்லா
நிதி அறிக்கையிலும்
அவனுக்காகவே
அதிகநிதி
அரசு ஒதுக்கும்

ஒதுக்கப்பட்ட
அவனுக்காகத்தான்
நிதி
ஒதுக்கப்பட்டிருக்கும்
ஆனால் ஏனோ
நதிவந்துபாயாத
புஞ்சைநிலமாய் வாழ்க்கை

நீரும் உயர்ந்து
வரப்பும் உயர்ந்தாலும்
அவன்மட்டும் உயரவில்லை

அவன் பொருளை
அவன் விற்கமுடியவில்லை

எவனெவனோவந்து
பறித்துச்செல்லும் பரிதாபம்
(பக்கம் ஐந்து)
விளைநிலம் பார்க்காதவன்
வியர்வை சிந்தாதவன்
வியர்வையை அறியாதவன்
அவன் பொருளை
விலைநிர்ணயம் செய்கிறான்

அவனுக்காக முழங்கியவர்கள்
முன்னேறுகிறார்கள்

அவனுக்காகத்
திட்டமிட்டவர்கள்
திட்டமிட்டு உயர்கிறார்கள்

அவனும்
அவனைப்போன்றோரும்
தேய்கிறார்கள்

உழவு அச்சாணி
உழவன் முதுகெலும்பு
உண்மை
உண்மை
அவன்பாடு
யாரும்
படாதபாடு

இதே நிலை
நீடித்தால்
இதே நிலையில்
நீடித்தால்
அவனால்
நீடித்து வாழமுடியாது

உணர்ந்து
உணர்ந்து
உள்ளம்
நொந்து நொந்து
இருப்பாய் இருக்கும்
ஒரு ஏக்கர்
அரை ஏக்கர் நிலத்தை
அடகுவைத்து
அல்லது விற்று
முகவரிடம் பணம்கட்டி
புறப்படுகிறான்
புறநானூற்றுத்தமிழன்

தொடரும்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *