செண்பக ஜெகதீசன்

 

குறளின் கதிர்களாய்… (16)

 

நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
கினத்தியல்ப தாகு மறிவு.
-திருக்குறள்- 452 (சிற்றினம் சேராமை)

புதுக் கவிதையில்…

இருக்கும் நிலத்தின்
இயல்பு போல்
மாறிடும்
தண்ணீரின் தன்மை..

இதுபோல் தான்
சேர்ந்திடும்
இனத்தின் இயல்புபோல்
சேர்கிறது அறிவு
மனிதனுக்கே…!

குறும்பாவில்…

நிலம் மாற்றும் நீரின் இயல்பை,
சேரும் இனம்,
மனிதனின் அறிவை …!

மரபுக் கவிதையில்…

நிலத்தில் வீழும் நீரதுவும்
நிறத்தில் குணத்தில் மாறிடுமந்
நிலத்தின் தன்மை போலவேதான்,
நிலத்தில் மனிதனின் நிலையிதுதான்
கலந்து பேசிப் பழகையிலும்
காணும் மனித உறவினிலும்
பலனாய்க் கிடைக்கும் அறிவதுதான்
பழகும் மாந்தர் இயல்பாமே…!

லிமரிக்…

நிலத்தின் குணத்தில் மாறிவிடும் பார்
நிலத்தில் வந்தே சேர்ந்திடும் நீர்,
மாந்தருள் பழகிடும் கணம்
மாறிடும் அவர்தம் குணம்,
சேர்ந்திடும் மனிதர் அறிவெனவே பார்…!

கிராமியப் பாணியில்…

மழத்தண்ணி மண்ணுல உழுந்தா
மாறிப்போவும்- நல்லா
மாறிப்போவும்..

நெறமில்லாத் தண்ணிக்கும்
நெறம் வருமே- மண்ணு
நெறம் வருமே,
கொணம் வருமே- மண்ணு
கொணம் வருமே..

இந்த
மழத்தண்ணி கததானே
மனுசங் கதயும்,
அவன்
கூட்டுசேரும் மனுசம்போலக்
கொணம் மாறும்- இருந்த
கொணம் மாறும்,
அறிவுமாறும் அறிவுமாறும்
அவனப் போல…!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “குறளின் கதிர்களாய்… (16)

  1. சேரும் இடத்தைப்பொருத்தே சுவை, அது நீராகட்டும் மனிதராகட்டும் எனும் குறளின் கருத்தை அத்தனை கவிதையிலும் தந்த செண்பக ஜெகதீசனின் இன்றைய பதிவில் மரபுக்கவிதை மிக மிக அருமை .

  2. //நெறமில்லாத் தண்ணிக்கும்
    நெறம் வருமே- மண்ணு
    நெறம் வருமே,
    கொணம் வருமே- மண்ணு
    கொணம் வருமே..//

    அருமை. வாழ்த்துக்கள் திரு.செண்பக ஜெகதீசன்.

  3. தொடர்ந்து படித்து, பாராட்டி,
    வாழ்த்திவரும்
    திருவாளர்கள் தனுசு, சச்சிதானந்தம் ஆகியோருக்கு
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *