முனைவர் அண்ணாகண்ணன்

ஆசிரியர், யாஹூ தமிழ்த் தளம்,

பெங்களூரு

annakannan@gmail.com

——————————————————————————————————-

இதோ, சிறந்த முன்மாதிரி!

புலத்துறை முற்றிய கற்றுத் துறைபோகிய தென்மராட்சி அறிஞர் என்ற அடிப்படையில், மறவன்புலவு க.சச்சிதானந்தன் அவர்களுக்கு விருது வழங்கிப் பாராட்டிச் சிறப்பிக்கும் செய்தி அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.

உலகளாவிய பார்வை கொண்ட சச்சி அவர்களை உலகத் தமிழர் எனப் பல்லோர் உவந்து போற்றுவர். ஐ.நா. நிறுவனத்தில் பணியாற்றியவர். உலகம் முழுதும் ஆழமும் விரிவுமான நட்புக் கொண்டவர். 60க்கும் மேலான நாடுகளுக்குப் பயணித்தவர். 23 அரசுகளுக்கு ஆலோசகராகத் திகழ்ந்தவர். இத்தகையவருக்கு, சொந்த மண்ணில் பாராட்டு. நாட்டுக்கு அரசர் ஆனாலும் தாய்க்குப் பிள்ளை அன்றோ!

சச்சி அய்யா, நுண்மாண் நுழைபுலம் மிக்க ஈழத் தமிழறிஞர்; காந்தளகம் பதிப்பகத் தலைவர்; தனித்துவம் மிக்க தமிழ்நூல்.காம் (http://www.tamilnool.com), தேவாரம்.ஆர்க் (http://thevaaram.org) தளங்களின் நிறுவனர்; உலகம் முழுவதும் சைவத் திருமுறைகளை எடுத்துச் செல்லும் தமிழ்த் தூதர்; தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளுக்குத் தமிழக அரசு ரூ.100 கோடி ஒதுக்கிட முக்கிய காரணர்களுள் ஒருவர், அன்பிற் சிறந்த சான்றோர்;

ஒளி அச்சுக் கோப்பு, நிலவரை என்ற கலைச் சொற்களைப் புதிய பொருளுடன் அறிமுகப்படுத்தியவர்; இலங்கை அரசியல் நிகழ்வுகளின் நோக்கர்; சேது சமுத்திரத் திட்டம் என்கிற தமிழன் கால்வாய்த் திட்டத்தைப் பல முனைகளுக்கும் எடுத்துச் சென்ற கடலியல் வல்லுநர்; தமிழில் காசோலைகளை எழுதி, அதை ஏற்காத வங்கிகளுடன் சட்டபூர்வ – தனி நபர்ப் போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர்; தமிழால் அனைத்தும் முடியும் என்பதை நிலைநாட்டுவதில் உறுதி கொண்டவர்.

ஆஸ்திரேலியாவில் பொங்கல் திருநாள் அன்று சச்சியை உரையாற்ற அழைத்தார்கள். புலம்பெயர் இளையோர் நிறைந்த அந்த அவையில் இவர் ஆற்றிய உரையின் தலைப்பு: The Photosynthesis Day என்பதாகும். எதையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுகுவதில் இவர், சிறந்த முன்மாதிரி. புதிய சிந்தனைகள், ஆக்கப்பூர்வ செயல்திட்டங்கள், பொருள் செறிந்த நுணுக்கமான மொழி நடை….. ஆகியவற்றுடன் மகத்தான ஆளுமையாக நம் முன் நிற்கிறார்.

எழுத்தாளருக்கும் பதிப்பாளருக்கும் இடையிலான உடன்பாடு எப்படி இருக்க வேண்டும்? பதிப்பாளருக்கும் விற்பனையாளருக்கும் இடையிலான உடன்பாடு எவ்வாறு அமைய வேண்டும்? எனப் பலவற்றைத் தமிழில் நேர்த்தியாக எழுதியவர். பதிப்புத் தொழில் உலகம் என்ற மாத இதழில் சீரிய முறையில் பதிப்பக நெறிகளை வரைந்து காட்டியவர். எந்தச் செயலிலும் செம்மையும் முழுமையும் வெளிப்படுமாறு பணியாற்றுபவர்.

சீசெல்சுத் தீவில் பிள்ளையார் கோவிலைக் கட்டியதில் தொடங்கி, மறவன்புலவில் பொங்கல் விழாவை முன்னெடுப்பது வரை, பல்வேறு சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருபவர். முக்கியத்துவம் வாய்ந்த பல நூல்களின் ஆசிரியர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். இவருடன் இணைந்து ‘சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை’ என்ற நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு, எனக்கு அமைந்தது. இவரது தூண்டுதலின் பேரில், ‘காந்தளகம் – 20 ஆண்டுகள்’, ‘தகத்தகாய தங்கம்மா’ ஆகிய நூல்களை இயற்றினேன். இவருடன் 1994 தொடக்கம் இன்று வரை நெருங்கிய நட்பும் உறவும் கொண்டிருப்பது, எனது பேறு.

ஒருவரின் தகுதியை உணர்ந்து, அடையாளம் கண்டு பாராட்டுவது, உண்மையில் அவரை உற்சாகப்படுத்துவதற்காக இல்லை. அதனினும் அதிகமாக, அவரைப் போல நாமும் பணியாற்ற வேண்டும், முன்னேற வேண்டும் எனப் பிறரை ஊக்குவிப்பதற்கே. “தனி மனிதரின் ஆற்றலை முழுமையாக உணராமல், அதைச் சிறப்பாகப் பயன்படுத்தாமல் ஒரு சமுதாயம் இருக்குமானால், அதனால் ஏற்படும் இழப்பு, அந்தத் தனி மனிதருக்கு உரியதில்லை. அந்தச் சமுதாயத்திற்கே உரியது (அகமொழி 13)” என்ற எனது சிந்தனைத் துளியை இங்கே நினைவுகூர்கிறேன்.

அறிஞர் சச்சிதானந்தன் அவர்களைப் பாராட்டுவதன் மூலம், தென்மராட்சி கல்விக் கழகம், தனது வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுகிறது. இதற்காக இந்தக் கழகத்தினருக்கு எனது பாராட்டுகள். சச்சி அய்யாவின் பணியும் புகழும் மேன்மேலும் வளர்ந்திட, எனது உளமார்ந்த வாழ்த்துகள்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *