குறவன் விற்பனைக்காக நகரம் செல்லுதல்

 

கானகம் அனுப்பிய தூதுவனாக, குறவன்

மாநகர் நோக்கி நடந்து சென்றானே,

தூவனம் ஈந்த பொருட்களை ஏந்தி,

நாணயமாக விற்க வந்தானே!                                                                                                                178

 

வேலை நிமித்தம் நகரம் நாடி,

மேலை நாட்டிலும் கிடைக்காப் பொருட்களை,

ஏழைக் குறவன் ஏந்திக் கொண்டு,

கூவிக் கூவி விற்றிட வந்தான்!                                                                                                                  179

 

தேனைச் சுமந்து தெருவில் நடந்து,

தெள்ளமு தென்று சொல்லி விற்றான்!

பூனைப் புனுகைச் சுமந்து கொண்டு,

காற்றில் நறுமணம் பரப்பி வந்தான்!                                                                                                          180

 

யானை மயிரை முறுக்கிக் கட்டித்

தாயத் தாக்கித் தோளில் சுமந்து,

தாய்மார்க் கெல்லாம் விற்பனை செய்தான்!

நோய்நொடி நீக்கும் நம்பிச் செய்தான்!                                                                                                      181

 

காலைகடந்து பிற்பகல் வரவே, மண்

பானைக் கலத்தில் சுமந்து வந்த,

மீனை அவித்துச் செய்த உணவை

மீதம் இன்றிச் சுவைத்து உண்டான்!                                                                                                            182

 

மீனுண்ட மயக்கத்தில் மரத்தின் நிழலில்,

கானைக் கடந்து நடந்த களைப்பில்,

ஏனைக் கவலைகள் எல்லாம் மறந்து,

கண்கள் மூடிக் குறவன் துயின்றான்!                                                                                                     183

 

தூக்கம் கலைந்த குறவன் மீண்டும்,

தன்உடைமை எல்லாம் தூக்கிக் கொண்டு,

ஊக்கம் கலையா உள்ளத் துடனே,

ஊருக்குள்ளே விற்றிட வந்தான்!                                                                                                                   184

 

தோகை விரித்து ஆடிய மயில்கள்,

உதிர்த்த தோகை எடுத்துக் கொண்டு,

ஈகை குணத்துடன் எதிரில் வந்த,

சிறுவர்க் கெல்லாம் கொடுத்து மகிழ்ந்தான்!                                                                                          185

 

இறந்த மயில்களின் தோலை உரித்து,

நிறைந்த கொழுப்பினைச் சேகரம் செய்து,

சிறந்த முறையில் பக்குவம்செய்து, தீயில்

எரிந்த புண்ணுக்கு மருந்தாய்க் கொடுத்தான்!                                                                                       186

 

புலிப்பல் விற்பனை செய்தல்

 

பழுப் பேறியபுலியின் பல்லைத் தங்கள்,

கழுத் தேறிடும் நகையில் ஏற்ற,

செழித் தாடிடும் செல்வம் கொண்டோர்,

விழிப்போடு உயர்விலை தந்தனரே!                                                                                                            187

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *