சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. கவிஞர் கண்ணதாசன்

1

கவிஞர் காவிரி மைந்தன்

மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

அண்மையில் இன்றைய பிரபலமான கவிஞர் ஒருவரோடு உரையாடும்போது.. கண்ணதாசனைப் பற்றி பேச்சு வந்தது.  அவரும்தன் பங்கிற்கு.. கண்ணதாசன் கூட மெட்டுக்காக சில நேரங்களில் வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொடுத்திருக்கிறார் என்றார்.  நானும் அதை மறுப்பதற்கு ஆதாரமின்றி அமைதியாக இருந்தேன்.

ஆம்.. அண்ணன் ஒரு கோவில் திரைப்படத்தில் இடம்பெற்ற  ‘மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை

சமீபத்தில் சென்னையைச் சார்ந்த திரு.பரசுராமன் அவர்கள் எழுதிய கண்ணதாசன் பாடல்களில் கடவுள் தத்துவங்கள் என்கிற நூலைப் படித்த போது, இந்தப் பாடலுக்கு முழுமையான விளக்கம் கண்டேன்.. ஆனந்தம் கொண்டேன்.

‘பூமாலையும் பாமாலையும் தந்த ஆண்டாள், கோ எனப்படும் பசுக்களைக் மேய்த்த கோபாலன் எனும்கண்ணன் அன்றி வேறுயாரையும்  திருமணம் வேண்டேன் என்றவள். அவளைப்போல் நீயும் யாரையாவது விரும்புகிறாயா சொல், உன்னுடைய அந்த அன்புத்துணையை நான் சீக்கிரமாய் அமைத்துத் தருகிறேன்’ என்று சூசகமாய் கேட்கிறான்,அன்பு அண்ணன் தன் தங்கையிடம்.

தமிழை ஆண்டாள் என கோதைக்குப் பெயர் கொடுத்த கண்ணதாசன் எதற்கு அப்படிக் கூறினார் எனப்பார்த்தால் …..

நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உள்ள நாலாயிரம் பாடல்களில் தமிழுக்கே உரிதான ழ என்பதை அதிக அளவில் உபயோகப்படுத்தியது

ஆண்டாள்தான். திருப்பாவையில் ஆழிமழைக் கண்ணா எனும் பாடலில் ‘ழ’கரம் அதிகம் .11தடவை ‘ழ’ உபயோகப் படுத்தப்பட்டுள்ளது.

“கோதை ஆண்டாள் தமிழை  ஆண்டாள்” என்கிற சொற்ப்ரயோகத்தைப்  பயன்படுத்தியிருக்கிறார் என்றால்..  கவிஞரின் தமிழ் ஆளுமை.. அறிவு..  எத்தனை  ஆழங்கால் பட்டது என்பதை இன்னும் சொல்லவும் வேண்டுமோ?

அடுத்து….

தோகைமீனாள் பூவை ஆனாள்

சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்

மாலை கண்டாள் கோவில் கொண்டாள்

மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள்

தென்றல் தொட்டு ஆட‌

கண் சங்கத்தமிழ் பாட

தன் மக்கள் வெள்ளம் கூட

காவல் கொண்டாள்

இந்தவரிகளில் கண்ணதாசன் திருவிளையாடல் புராணத் தகவல்களான அம்பிகையின் திருமணப்பருவம்

சொக்கேசன் துணையோடு ஊர்கோலம்போனாள் என்பது, திக்விஜய யாத்திரையின் போது சிவபெருமான் கூடவந்தது,திருமணம் நடந்தது, அம்பிகையின் அரசாட்சி இவைகளைக் கூறுகிறார்.  மதுரை என்றதும் சங்கம் வளர்ந்ததமிழ்,மீனாட்சி என்றதும் மாணிக்க மூக்குத்தி இவை யாவும் இடம்பெற்றுள்ளன.

அம்பிகை திக்விஜய யாத்திரையின்போது பரமேஸ்வரனும் உடன் போனார் என்ற தகவல் திருவிளையாடல்புராணத்தில் ஆழ்ந்த பயிற்சி உள்ளவர்களுக்கு) மட்டுமே தெரியும். இத்தகவலை ‘சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்’ என அமைத்து பாமர மக்களிடமும் கொண்டு சென்ற கண்ணதாசனின் கவித்துவம் நம்மை வியக்க வைக்கிறது!

மாப்பிள்ளை தேடக்கிளம்பிய அண்ணன்,மீனாட்சி கல்யாணத்தையும் ஆண்டாள் கல்யாணத்தையும் சொல்வதாக கண்ணதாசன் அமைத்திருப்பதில் மற்றொரு காரணமும் உண்டு.

மீனாட்சிகல்யாணத்தில் மாப்பிளையான பரமேஸ்வரன் மீனாட்சியுடன் மதுரையிலேயே தங்கிவிட்டார் (அதாவது மாமனார் வீட்டோடு)

ஆண்டாளோ புகுந்தவீடு போய் விட்டாள் (திருவரங்கம்)

‘அம்மா உனக்கு வீட்டுமாப்பிள்ளையாக பார்க்கட்டுமா அல்லது நீ மாப்பிளைவீட்டுக்குப் போகிறமாதிரியா, எப்படிப் பார்க்கட்டும்?’ என்று உள் அர்த்தமுடன் கேட்பதான கருத்துகொண்டது.

எப்படி இருந்தாலும் சரி கல்யாணம் நல்லபடியாக நடக்கவேண்டும்; அதுமட்டுமல்ல கல்யாணத்துக்குப் பிறகு

தன் தங்கை எப்படி இருக்கவேண்டும்? எப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை சொல்ல நினைக்கிறான் அண்ணன்.

ராமரும் சீதையும் வாழ்ந்த வாழ்க்கை நினைவுக்குவருகிறது.

ராமரும் சீதையும் திருமணம்முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். தந்தை சொல்லைக் காப்பதற்காக ராமன்

வனவாசம்போக வேண்டியதாகிவிட்டது. சீதை கொஞ்சமும் வருத்தப்படாமல் கணவனுடன் காட்டிற்குப் போனாள். ராவணன் தூக்கிச்சென்று அசோகவனத்தில் சிறைவைத்தான். அப்போது உடல்கள் பிரிந்தனவே தவிர உள்ளங்கள்பிரியவில்லை. ராவணவதம் முடிந்து ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. லவன் குசன் என்று இரு குழந்தைகள்பிறந்தார்கள்.

இவ்வளவு நிகழ்ச்சிகளும் அண்ணன் மனதில் ஓடுகின்றன. தன்மனத்து எண்ணங்களை தங்கையிடம் சொல்கிறான் அவளும் அப்படி வாழவேண்டுமென்று..

மாலை சூடி வாழ்ந்த‌ வேளை

வ‌ன‌வாச‌ம் போனாலும்

பிரியாத‌ சீதை

ராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம்

லவ‌னாக‌ குசனாக‌

உருவான‌ கீத‌ம்

கண்ணதாசனின் இந்த வரிகளில் வேறு அற்புதமான தகவல்களும் அடங்கி உள்ளன. நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருப்பதைப்போல கல்யாணம் முடிந்ததும் ராமரும் சீதையும் வனவாசம் போகவில்லை. 12 ஆண்டுகள் சேர்ந்திருந்தனர்.  அதன்பிறகுதான் வனவாசம் .

மாலை சூடிவாழ்ந்த வேளை என்கிறார் கண்ணதாசன்,

இனி அந்த வரிகளில் ராமரைப்பற்றி ஏதும் சொல்லவில்லையே என்பவர்களுக்கு கன்ணதாசன் பதில் சொல்கிறார்.

‘வேளை’ என்ற வார்த்தைக்கு மன்மதன் என்ற பொருளும் உண்டு; வேளை காலத்தையும் குறிக்கும்.

மன்மதன் போன்ற அழகு வாய்ந்த ராமனை வனவாசம் போனாலும் பிரியாத சீதை எனும் அர்த்தமும் வருகிறது.

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் அவைகளை உறுதியுடன் சமாளித்து வாழ்ந்து வழிகாட்டிய அவர்களின் வாழ்க்கையை, அவர்களின் குழந்தைகளான் லவனும் குசனும் ராமாயணம் என்ற பெயரில் கீதம் இசைத்தது (ஜகம் புகழும் புண்ய கதை ராமனின் கதையே) நாம் அறிந்ததே  இத்தகவல்!

ராம நாமம் தந்தராகம்

லவனாக குசனாக

உருவான கீதம்

என்றுதெரிவிக்கப படுகிறது.

அற்புதத்திலும் அற்புதமான வரிகள் இவை .சாதாரண தகவலை ஒருபாமரனின் மனதிலும் ஆழப்பதியுமாறுசெய்த கண்ணதாசனின்

ஆன்மீக அனுபவத்தை எண்ணி வியக்காமல் இருக்கமுடியாது.

ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு விதமாக.. ஆம்.. காதல் திருமணம்,  வீட்டோடு மாப்பிள்ளை, சுயம்வரம் .. இதில் எந்தவிதம் உனக்கு கணவன் வேண்டும் என்கிற கேள்வியை உள்வைத்து, முத்தாய்ப்பாக கண்ணதாசன் முத்திரை பதிக்கிறார்…

     மாமன் என்று சொல்ல ஓர் அண்ணன் இல்லை அங்கே..

     அந்த அண்ணன் உண்டு இங்கே அள்ளிவழங்க..

 

ஆண்டாள் திருமணம், மீனாட்சி திருமணம், சீதா திருமணம்..  

மீனாட்சி ஆண்டாள் சீதை மூவருக்கும் அண்ணன்கள் கிடையாது. ஆனால் உனக்கோ நான் இருக்கிறேன், உன்குழந்தைகள் என்னை மாமன் என அழைக்க, அவர்களுக்கு நான் எல்லாவற்றையும் வாரி வழங்குவேன் என்று அண்ணன் சொல்லிமுடிக்கிறான்.

கண்ணதாசனின் அற்புதமான பாடல்களில் ஒன்று இது!

வயிற்றுக்காக இட்டு நிரப்பி  கண்ணதாசன் எழுதிய பாடல் என்று குறிப்பிட்ட இந்தப் பாடலில் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கிறதென்றால்..  அவ்வாறு குறிப்பிட்ட இன்றைய கவிஞரின் அறியாமையைத்தான்  எண்ண வேண்டியுள்ளது.   உலக அளவில் தேடினாலும் உவமை சொல்ல முடியாத ஒரே கவிஞர் அல்லவா கண்ணதாசன்!!

மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 
பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
நல் அன்புத்துணை தேடி நான் த‌ருவேன் 
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

சூடிக் கொடுத்தாள் பாவை ப‌டித்தாள் 
சுட‌ராக‌ எந்நாளும் தமிழ் வானில் ஜொலித்தாள் 
கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள் 
கோபால‌ன் இல்லாம‌ல் க‌ல்யாண‌ம் வேண்டாள் 
கன்னித்தமிழ் தேவி மைகண்ணண் அவ‌ள் ஆவி 
தன் காத‌ல் ம‌ல‌ர் தூவி மாலையிட்டாள் 

தோகை மீனாள் பூவையானாள் 
சொக்கேச‌ன் துணையோடு ஊர்கோல‌ம் போனாள் 
மாலை க‌ண்டாள் கோவில் கொண்டாள் 
மாணிக்க‌ மூக்குத்தி ஒளிவீச‌ நின்றாள் 
தென்றல் தொட்டு ஆட‌ 
கண் சங்கத்தமிழ் பாட 
தன் மக்கள் வெள்ளம் கூட 
காவல் கொண்டாள் 
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 

மாலை சூடி வாழ்ந்த‌ வேளை வ‌ன‌வாச‌ம் போனாலும் 
பிரியாத‌ சீதை 
ராம‌நாமம் த‌ந்த‌ ராக‌ம் ல‌வ‌னாக‌ குச‌னாக‌ 
உருவான‌ கீத‌ம் 
மாம‌ன் என்று சொல்ல‌ ஒர் அண்ண‌ண் இல்லை அங்கே 
அந்த‌ அண்ண‌ண் உண்டு இங்கே அள்ளி வ‌ழ‌ங்க‌ 

மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 
அன்புக்கோர் எல்லை உன்னைப்போல் இல்லை 
பொன் வ‌ண்ண‌ ர‌தமேறி இம்மண்ணில் எங்கும் ஓடி 
நல் அன்புத்துணை தேடி நான் த‌ருவேன் 
மல்லிகை முல்லை பொன்மொழிக்கிள்ளை 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் நடிகை சுமித்ராவும் இப்பாடலில் முழுவதுமாய் வியாபிக்க ..  ஒளிப்பதிவும்… மெல்லிசை மன்னரின் இன்னிசையும் ஒன்றை ஒன்று மிஞ்சுகின்றன பாருங்கள்.. கேளுங்கள்..

சிவாஜி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான அண்ணன் ஒரு கோயில் .. இது

http://www.youtube.com/watch?v=GrmF1PIPT78

கவியரசர் பாட்டுத் திறனைப்  பரிமாறி மகிழ்வோம்!

என்றும் அன்புடன்..

காவிரிமைந்தன்
(மு.இரவிச்சந்திரன்)
கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்கம் (பம்மல்)
சென்னை 600 075
தற்போது – துபாய்.
00971 50 2519693
kaviri2012@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை.. கவிஞர் கண்ணதாசன்

  1. காலத்தால் அழிக்க முடியாத கவிதை, கட்டுரை, காவியம் படைத்த கவியரசு கண்ணதாசன் அவர்களின் முத்தான பாடல் வரிகளை மிக சிறப்பாக எடுத்துக்காட்டி உள்ள பாங்கு மிக சிறப்பனது. கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்” என்கிற சொற்ப்ரயோகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் என்றால்.. கவிஞரின் தமிழ் ஆளுமை.. அறிவு.. எத்தனை ஆழங்கால் பட்டது என்பதை இன்னும் சொல்லவும் வேண்டுமோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *